Friday, June 24, 2005

பிளாக்கரின் உதவியும் உபத்திரவமும்

படங்களை Tinypic மூலம் வலைப்பதிவில் ஏற்றும் முறை பற்றி கடந்த மார்ச் மாதம் ஒரு பதிவு இட்டிருந்தேன். ஆனால் தற்போது பிளாக்கரே படங்களை "பதிவேற்ற வசதி" செய்து தருகிறது. இதனை நண்பர்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. செய்திகளை இடும் அந்த பக்கத்தில் b i என்று எழுதப்பட்டிருக்கும் வரிசையில் என்ற படமும் இருக்கும். அதனை சொடுக்கி பயன்படுத்தி பாருங்கள்.

பிளாக்கரின் இன்னொரு வசதியையும் பலபேர் பயன்படுத்துவதில்லை. நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திகளை வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் வார்த்தைகளை Select செய்த பிறகு என்ற படத்தை சொடுக்கவும். பிறகு கீழ்கண்டவாறு தெரியும்.
உதாரணத்திற்கு
இவ்வளவு வசதிகளையும் வழங்கிய இந்த பிளாக்கரின் உபத்திரவம் என்னவென்றால் புதிதாக பதியும் செய்திகள் மற்றும் மறுமொழிகளில் இட்டவரின் பெயர்கள் யுனிகோடு தமிழில் தெரிவதற்கு பதிலாக "???????" என்று தெரிகிறது.

இப்பிரச்சினையிலிருந்து விடுபட பெயரை ஆங்கிலத்தில் தெரியும்படி மாற்றினேன். புதிய பதிவுகளும், முன்பு தமிழில் பெயர் தெரிந்த பெயர்களும் மாறுகிறதே தவிர "???????" என்று தெரிந்த பதிவுகள் அப்படியேதான் தொடர்கிறது.

இதனை வைத்து சில நண்பர்கள் பிளாக்கர் பிறகு காசு கேட்டாலும் கேட்குமோ என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்றே எண்ணுகிறேன். காரணம் இலவச வலைப்பதிவு அளிப்பவர்களில் இதுவரை பிளாக்கரை தட்டிக்கொள்ள யாரும் இல்லை. படிப்படியாக எத்தனையோ வசதிகளையும் நமக்கு தந்திருக்கிறது. இதனை தருபவர்களும் சாதாரண ஆட்களும் இல்லை. இதுவல்லாமல் வலைப்பதிவு வசதிகளை msn மற்றும் Yahoo உட்பட பல தளங்கள் தர ஆரம்பித்திருக்கிறது. . ஆகவே போட்டிகள் இருக்கும்வரை நமக்கு கவலை இல்லை என நம்புவோமாக.

Monday, June 13, 2005

இணையதளம் ஒன்றை தாக்கல் செய்ய

ஒவ்வொரு தேடு தளமும் இணைய தளங்களை தலைப்புவாரியாக தொகுத்து தருகிறது. இதனை தொகுப்பதற்கு தானாக முன்வரும் நபர்களை அவர்கள் கொடுக்கும் விபரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் http://www.dmoz.org/ தொகுக்கும் குறிப்புகளை வைத்தே பல தேடல்தளங்களும் தமது தொகுப்புகளை வழிநடத்திச் செல்கிறது.

நீங்கள் தமிழில் இஸ்லாம் சம்பந்தமான இணையதளமோ, வலைப்பதிவுவோ நடத்துபவர்களாக இருந்தால் அப்பக்கத்தை தாக்கல் செய்ய இந்த சுட்டியைசொடுக்கி உங்கள் தளத்தின் விபரங்களை இணைக்கவும்.

இஸ்லாம் பற்றிய Dmoz தொகுப்பை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.

வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு

அ) ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் தொலைபேசி வழியாக உதவிக்கரம் நீட்டும் பணி துவங்கியுள்ளது. தொலைபேசி எண்: 01-4881982. இந்த எண் இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும். இந்தியாவின் பல மொழிகளிலும் உரையாடக்கூடிய அதிகாரிகளை வைத்து இந்தச் சேவை செயல்படும்.

தூதரகத்துடன் தொடர்புள்ள அவசர அத்தியாவசியப் பிரச்சினைகளான விபத்து, இறப்பு தொடர்பானவை, கைது, பயணத் தஸ்தாவேஜுகள் தெலைந்து பேனது போன்றவைகளுக்குத் தேவையான உதவிகளை இந்த தொலைபேசிச் சேவை செய்துதரும்.

ஆ) ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழனன்று இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகளை எந்தவிதமான முன்னறிவிப்புகளுமின்றி இந்தியர்கள் சந்தித்து தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் சொல்வதற்கு வசதியாக ரியாத்திலும் ஜித்தாவிலும் திறந்தவெறி அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இ) அனைத்து வளைகுடா நாடுகளிலும் மேற்படிப்புக்கான மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் இம்மூன்று நாடுகளிலும் இந்த மையங்களைத் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வளைகுடா வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக இந்தியக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இணை ஒதுக்கீடான பதினைந்து சதவீதத்தில் ஒன்று புள்ளி மூன்று சதவீதமாக இந்த இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதற்கான குறிப்புகளை பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும், இந்தியத் தொழில் நுட்பக் கல்வியமைப்பிற்கும் அனுப்பியுள்ளது.


மேற்கண்ட தகவல்களை இந்திய வெளி விவகாரத்துறையின் இணை அமைச்சர் இ. அஹமது அவர்கள் 15.06.2004 அன்று ஜித்தா இந்தியத் தூதரக வளாகத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து சில பகுதிகள் என ஒரு சிற்றிதழில் படித்தேன். மேற்கண்ட விஷயங்கள் உண்மையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்த நண்பர்கள் அறியத்தருக.

Saturday, June 11, 2005

கிறிஸ்தவ பிரச்சாரம்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூஸ் வீக் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் ஒகாஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி:

1970ல் ஆசியா கண்டத்தில் உள்ள மொத்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன், 2000ல் அது 300 மில்லியனை எட்டியது. ஆப்ரிக்காவில் 1970ல் 100 மில்லியனாக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2000ல் 300 மில்லியனையும் தாண்டியது.

1966 வாக்கில் 23,300 கிறிஸ்தவ பிரச்சார அமைப்புகள் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இயங்கி வந்தன. அவைகளின் பணியில் உதவி செய்ய 193 பில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவைகளின் அன்றாட பணியில் 3,600 வானொலி மற்றும் டிவி நிலையங்களிலிருந்து 447 மில்லியன் மணி நேர ஒலி, ஒளி பரப்புக்கள் ஒரு வருடந்தோறும் நடைபெறுகின்றன. 10 மில்லியன் பைபிள் பிரதிகளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டனர். 1,130 உலக மொழிகளில் அவர்கள் பைபிளை மொழிபெயர்த்து வினியோகித்தனர்.

உலகெங்கிலும் உள்ள சர்ச்சுகள் 500 பல்கலைகழகங்கள், 104,000 பள்ளிக்கூடங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளன. மேலும் 10,677 துவக்கப்பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இவற்றின் நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. இவை அத்தனையிலும் சுமார் 6 மில்லியன் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை மட்டுமல்லாது 1,500 மருத்துவ நிலையங்களும் சேவையில் உள்ளன. கிறிஸ்துவ பிரச்சாரக் குழுக்கள் மூலம் 3,100 சஞ்சிகைகள், சுற்றறிக்கைகள் மற்றும் மாத இதழ்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இவர்களின் பணியில் மொத்தம் 340 மில்லியன் கம்ப்யூட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர் மயமாக்களுக்காக மட்டும் 1970 வரை 200 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

மேலே தரப்பட்டுள்ள தகவலுக்கு முற்றிலும் மாற்றமாக இஸ்லாமிய அழைப்பு மற்றும் நிவாரண அமைப்புகளால் மேற்படி கிறிஸ்தவ குழுக்கள் செலவிடும் தொகையில் ஒரே ஒரு சதவீதம் மட்டும்தான் கல்விக்காகவும் மற்றொரு சதவீதம் மட்டும் நிவாரணப் பணிகளுக்காகவும் செலவிட முடிகிறது. கிறிஸ்தவ பிரச்சாரம் வறுமையிலும் நோயிலும் வாடும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளின் பெரும்பாலான பொருளாதாரமும், நேரமும் போர்களினாலும், ஆக்ரமிப்புகளினாலும், சீரழிந்து வருகின்ற முஸ்லிம்களின் நிவாரணப் பணிகளிலேயே செலவிடப்படுகிறது. இது போதாதென்று, இஸ்லாமிய அமைப்புகளின் நிதி பற்றாக்குறை வேறு அவைகளின் பட்ஜெட்டை வெகுவாக பாதிக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற அறிக்கையில் இந்த நிதி பற்றாக்குறை 14 லிருந்து 17 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட அதிர்ச்சி தரும் தகவல் என்ன தெரியுமா? உலகின் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்பதுதான்.

1970 லேயே 200 பில்லியன் டாலர்கள் கிறிஸ்தவ பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்றால் 2001ல் அது எத்தனை மடங்கு பெருகி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இஸ்லாமிய அமைப்புகளின் நிலைமையோ அந்தோ பரிதாபம்.. சமீபத்திய தீவிரவாத மற்றும் போர் நடவடிக்கைகளினால் பாரபட்சமின்றி அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் நிதி நடவடிக்கைளும் வல்லரசினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏகத்துவ பிரச்சாரமும், நிவாரணப் பணிகளும் வரலாறு காணாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது.

முஹம்மது ஸலாஹூதீன்
அல்-மதீனா

தகவல்: அப்துல்அலீம் சித்தீக்