Saturday, September 17, 2005

இஸ்லாமிய கொள்கை விளக்க வகுப்பு

தலைப்பு:

ஜகாத் கடமையும்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் (T.N.T.J)-ன்

தவறான கொள்கைகளும்



வழங்குபவர்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ


இடம்: இஸ்லாமிக் சென்டர் - முஷ்ரிஃபா, ஜித்தா (சவுதி அரேபியா)
நாள்: 23-09-2005 வெள்ளிக் கிழமை
நேரம்: சரியாக காலை 9 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

மார்க்க கல்வி பெற அனைவரும் வருக!

(குறிப்பு: 29-07-2005 அன்று ஸப்யீன் சென்டரில் நடைபெற்ற ஜகாத் கருத்தரங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் அதன் இரண்டாவது அமர்வாகிய இந்நிகழ்ச்சியில் அவசியம் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)


அன்புடன் அழைக்கும்
இஸ்லாமிய அழைப்பகம் - முஷ்ரிஃபா, ஜித்தா

Tuesday, September 13, 2005

பராஅத் இரவும் ஷஃபானும் (தொகுப்பு)

பாவங்களைத் தடுக்கக்கூடிய கேடயம் நோன்பாக இருக்கின்றது. தனிமையிலும் அல்லாஹுவிற்கு அஞ்சும் இறையச்சத்தை அதிகப்படுத்துவது நோன்பு, இரக்க சிந்தனை, மனக்கட்டுப்பாடு போன்ற உயர்பண்புகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் கடமையான நோன்பின் மாதம் ரமலானை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றோம்..

நபி(ஸல்) அவர்கள் கடமையான நோன்புகளை நோற்பதோடல்லாமல் ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்புகள் நோற்பது, ஆஷுரா, அரஃபா போன்ற நோன்புகள் நோற்றுயிருக்கிறார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் ஏனைய மாதங்களைவிட அதிகமான நோன்புகள் நோற்றிருக்கிறார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் ரமலானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்தையும் முழுமையாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்தை தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை - அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) அவர்கள், ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்றதன் ரகசியத்தை கீழ்வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமலானுக்கும் இடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸாமா(ரலி) , ஆதாரம் : அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா

ஷாஃபான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்றிருக்கிறார்கள். அம்மாதத்தில் அடியானின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. மேலும் ஷஃபான் மாத நோன்புகள் ரமலான் மாத கடமையான நோன்புகளுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைந்துவிடுகின்றன. பசி, தாகம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மனக்கட்டுப்பாடு அதில் கிடைத்துவிடுகிறது. இந்த அடிப்படையில் நாமும் அம்மாதத்தில் நோன்பு நோற்றால் அல்லாஹ்விடத்தில் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். அல்லது ஒவ்வொரு மாதம் பிறை 13, 14, 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பதை வழமையாகக் கொண்டிருந்தால் ஷஃபான் மாதமும் பிறை 15 அன்று நோன்பு நோற்பதில் தவறில்லை.

மாறாக நம் நாடுகளில் மக்கள் குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15-ஆம் நாள் இரவு "பராஅத் இரவு" என்று வணங்கி வருகிறார்கள். அன்று இரவு பள்ளியை வர்ண விளக்குகளால் அலங்கரித்து, இரவு முழுவதும் தொழுது, பகலில் நோன்பு நோற்பதை வணக்கமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். "பராஅத்" இரவு அன்று தொழுது வணங்கினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பான், உணவு, பொருளாதாரம் போன்றவைகளை பெருக்கிக் கொடுப்பான் என்று கருதி அன்றுமட்டும் விசேஷமாக தொழுவதும், பகலில் நோன்பு இருப்பதும் நம்முடைய சமுதாயத்தில் சிலர் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

பராஅத் இரவு அன்று மட்டும்தான் அடியானின் அமல்களை அல்லாஹ் காண்கின்றான் என்றும், அன்றுதான் அடியார்களின் உணவு, பொருளாதாரம் மற்றும் அந்த ஆண்டில் மரிப்பவர்கள் மற்றும் பிறப்பவர்களை தீர்மானிக்கின்றான் என்றும் அன்று விசேஷத் தொழுகைகளை தொழுது வருகிறார்கள். அன்று இரவு மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் சூரா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனத் தவறாகக் கருதிவருகின்றனர். இது முற்றிலும் நபி(ஸல்) அவர்கள் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும் (பித்-அத்தாகும்).

பராஅத் இரவில் தொழுவதும், அன்று பகல் நோன்பு இருப்பதும் சுன்னா என்ற பெயரில் பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும். இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை, பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அஷ்ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஹிழ்ர் அஷ்ஷுகைரி என்ற அறிஞர் தமது அஸ்ஸுனன் வல்முப்ததஆத் அல்முதஅல்லகா பில் அத்காரி வஸ்ஸலாத் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).

இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுவதால் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஹதீஸாகும். இமாம்களான அஹ்மத்(ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது (தவறானது) என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது அல்மௌழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் மிக மோசமான, வெறுக்கத்தக்க இரு பித்அத்களாகும் என இமாம் நவவி(ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே பராஅத் என்றொரு இரவு இல்லை என்பதும் அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும்; அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும் நாம் தெளிவாக அறியமுடிகின்றது.. எனவே பராஅத் என்ற அடிப்படையில் நோன்பு நோற்று இன்னும் வேறுபிற அமல்கள் செய்வதைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக!.

Monday, September 12, 2005

முழு நேரப் பணி மார்க்கப்படி சரியா?

வேறு தொழில் எதுவும் செய்யாமல் மார்க்க அறிஞராக இருந்து மாதச்சம்பளம், ஜகாத், நன்கொடையால் மட்டும் வாழ்வது சரி தானா? இதனை தவறு என்று சொல்பவர்கள் கூட ஓர் இயக்கத்தில் முழு நேர ஊழியராக இருப்பதை சரிகாண்கின்றனர். அவ்வாறு ஒருவர் முழு நேர ஊழியராக இருந்தால், அவரது செலவுகளை அவரது தந்தையோ, சகோதரரோ, வேறு உறவினரோ, நண்பரோ, ஏற்க வேண்டியிருக்கும். இது சரி தானா? அல்லது இயக்கமே அவருக்கு ஊதியம் கொடுக்கலாம். அல்லது, இயக்கத்தின் சில ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இது சரிதானா? ஒரு மனிதன் அதிகபட்சம் ஓர் இயக்கத்தில் ஈராண்டுகளுக்கு முழு நேர ஊழியனாய் இருக்கலாம். அதற்கு மேல், இருந்தால் அவன், இஸ்லாமியப் பிரச்சாராப் பணியே செய்தாலும், அவனது வாழ்க்கை இஸ்லாமிய வழிமுறைப்படி சரிதானா? இறை நேசர்கள் என்று அழைக்கப் படுபவர்களை விமர்சிப்பவர்கள், இந்த முறையை எப்படி நியாயப் படுத்துகிறார்கள்?

வற்புறுத்த வேண்டாமே?

சில சகோதரர்கள், தங்கள் அமைப்புக்கு நன்கொடை வசூலிக்கும் போதும், அல்லது வேறு சில சகோதரர்கள் மதர்சாக்களுக்கு சந்தா, நன்கொடை வசூலிக்கும் போதும் கட்டயப் படுத்துகின்றனர். நடுத்தரமக்கள் என்றால், அவர்களிடம் ஆயிரக்க கணக்கிலும், சற்று வசதியானவர்கள் என்றால் அவர்களிடம் இலட்சக்கணக்கிலும் கேட்கின்றனர். ஒரே நேரத்தில், பல அமைப்புகளுக்கும், பல மதர்சாக்களுக்கும் நன்கொடை கொடுக்க வேண்டியுள்ள சூழலில் வசதியானவர்களே ஆனாலும் ஒவ்வொருக்கும் எப்படி இலட்சக் கணக்கில் நன்கொடை கொடுக்க முடியும். தவிரவும், ஒவ்வொருவரும் ஜகாத் நிதியில் இருந்து உறவினரில் தேவையுடையோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் குறைவான தொகையை ஜகாத்தாகவோ, நன்கொடையாகவோ கொடுத்தால் வசூலிப்பவர்கள் வாங்க மறுக்கின்றனர். இது கொடுப்பவரை அவமதிப்பதாய் உள்ளது. இப்படி வற்புறுத்தி நன்கொடை வசூலிப்பது நபி வழிப்படி சரிதானா? தெரிந்தவர்கள் விளக்குங்கள். இப்பழக்கம் உங்கள் உறவினரிடமோ, நண்பரிடமோ இருந்தால் திருத்துங்கள்.

நன்மையின் வழிமுறைகள்.. (பிரார்த்தனையில்)

பிரார்த்தனையில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் பிரார்த்தனையாகும். நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய திக்ருகளில் மிகச்சிறந்தது

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள்:
அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்கு தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரமும் அனைத்துப்புகழும் அவனுக்குரியதே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பத்திற்குரியது, நான்கு (திக்ருகளாகும்) என ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.

ஸுப்ஹால்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்.
பொருள்:
அல்லாஹ் (சகல குறைகளை விட்டும்) மிகத்தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத்தகுதியுள்ள இறைவன் வேறு யாருமில்லை! அல்லாஹ் மிகப் பெரியவன்!

இந்த திக்ருகளையும் வேறு திக்ருகளையும் உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் திரும்பத் திரும்ப அதிகமதிகம் ஓதுவதுடன் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும் உலக முஸ்லிம்களின் வெற்றிக்காகவும் மனம் உருகப் பிரார்த்தியுங்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திக்ருகள் துஆக்களை எல்லாக்காலங்களிலும் அதிகமாக ஓத வேண்டும்.

அவைகளில் சில பின்வருமாறு.

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.
பொருள்:
அல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாளிமீன்.
பொருள்:
வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகிவிட்டேன்.

லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன்னிஃமது வலஹுல்ஃபழ்லு வலஹுத்தனாஉல் ஹஸனு, லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல்காஃபிரூன்.
பொருள்:
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறில்லை. அவன் ஒருவனைத்தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம்! அருட்கொடைகள் மற்றும் பேருபகாரங்கள் அனைத்தும் அவனுக்கே! அழகிய புகழும் அவனுக்குரியதே! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாருமில்லை. கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!

லா ஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி.
பொருள்:
நன்மை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.
பொருள்:
எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக! (2:201)

உயர்வானவனாகிய அல்லாஹ் (தன் திருமறையில் இவ்வாறு) கூறுகின்றான்.
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள். (40:60)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமென திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Saturday, September 10, 2005

நன்மையின் வழிமுறைகள்.. (தொழுகையில்)

ஜமாஅத்தோடு தொழும் தொழுகையின் சிறப்பு

1. நபி (ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து , அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில்(தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பி செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு (பள்ளிக்கு) வந்தேயாகவேண்டுமென்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) - ஆதாரம் :-முஸ்லிம்

2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்


ஆரம்ப வரிசையில் தொழுவதின் சிறப்பு
பாங்கு சொல்வதிலும், முந்திய வரிசையில் (தொழுவதிலும்) கிடைக்கும் நன்மையை மனிதர்கள் அறிந்து கொண்டால், சீட்டுப்போட்டுத்தான் முதல் வரிசையில் இடம் கிடைக்குமென்றிருப்பினும் சீட்டுப்போட்டாவது அதை அடைந்து கொள்ள முயற்சிப்பார்கள் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :-ஜாபிர் (ரலி) - ஆதாரம் :- முஸ்லிம்

சுன்னத்து தொழுகைகளின் சிறப்பு
ஒவ்வொரு நாளைக்கும் யார் 12 ரக்அத் சுன்னத்து தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை கட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் :-முஸ்லிம்

12 ரக்அத்துக்களின் விபரங்கள் பின்வருமாறு

ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத், லுஹருக்கு முன் நான்கு ரக்அத், லுஹருக்கு பின் இரண்டு ரக்அத், மஃரிபுக்கு பின் இரண்டு ரக்அத், இஷாவுக்கு பின் இரண்டு ரக்அத்

குறிப்பு :- இவைகளுக்கு சுன்னத்துல் முஅக்கதா என்று சொல்லப்படும், அதாவது நபியவர்கள் விடாமல் தொழுது வந்த சுன்னத்து தொழுகைகள். இன்னும் இது அல்லாத முன் பின் சுன்னத்துக்கள் உள்ளன என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் தொழுகையை பேணி நடக்க வாய்ப்பளிப்பானாக,

Saturday, September 03, 2005

வக்ஃபுச் சொத்துக்கள் - இறைவழிச் செலவுகள்

நாயனின் நேசம் நன்மை புரிவோர்க்கே!

1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்!
(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (பிறருக்கு) நன்மை செய்யுங்கள்! (பிறருக்கு நன்மை செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.(2:95)

2) அந்த நாள் வருமுன் ...?
விசுவாசம் கொண்டோரே! எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன் உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (2:254)

3) உயர்தரமானதை உயர்ந்தவன் வழியில்..
விசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் உங்களுக்கு பூமியிலிருந்து நாம் வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நல்லவைகளையே தர்மமாகச் செலவு செய்யுங்கள்!

4) புண்ணிய வழிச் செலவு!... பூரணமாய் ... கூலி!
அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அதன் கூலி உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும்.


வக்ஃபுச் சொத்தெழுதும் வரைமுறைகள்

1) உயர்தரமான தோட்டம்
உமர்(ரலி) அவர்கள் "தம்ஃக்" என்றழைக்கப்பட்ட தம்முடைய சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீட்சைத் தோட்டம். அல்லாஹ்வின் தூதரே! நான் பெற்றுள்ள செல்வங்களிலேயே உயர்தரமான "தம்ஃக்" தோட்டத்தைத் தர்மம் செய்திட விரும்புகிறேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், அதன் நிலத்தை எவருக்கும் விற்கக் கூடாது. அன்பளிப்பாகவும் தரக்கூடாது. அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது. அதன் வருவாய் மட்டுமே செலவிடப்படவேண்டும். என்ற நிபந்தனைகளுடன் தர்மம் செய்துவிடு. என்று கூறினார்கள். எனவே உமர்(ரலி) அவர்கள் அதனை தர்மம்(வக்ஃபு) செய்துவிட்டார்கள்.

அது அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான் முறையில்) உண்பதில், அல்லது விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் குற்றமில்லை, என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

பள்ளிக்கென ... நிலம் வக்ஃபு
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது ... "பள்ளிவாசல் கட்டும்படி" கட்டளையிட்டு விட்டு "பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு விலை சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு அவர்கள் "நாங்கள் விலை கூறமாட்டோம்" அல்லாஹ்வின் மீது ஆணையாக அதன் விலையை நாங்கள் "அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி), ஆதாரம் : புகாரி

வக்ஃபுக்கென பண முதலீடு
ஒருவர் ஆயிரம் தீனார் தங்க நாணயங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவரிடம் அதனை முதலீடு செய்து வியாபாரம் செய்யச் சொல்லி அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் தர்மம் செய்கிறார் இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்திலிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா...? அவர் தர்மத்திற்குரியவர்க்ளைக் குறிப்பிடும் போது ஏழைஎளியவர்களுக்கு தர்மம் செய்யும் படி குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவருக்கு அதிலிருந்து உண்ண அனுமதியுண்டா? என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட அவர்கள் "அனுமதியில்லை" என்று தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பாளர் :அனஸ் பின் மாலிக்(ரலி) ஆதாரம் : புகாரி

குதிரை (வாகனம்) வக்ஃபு
உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்தக் குதிரை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காகச் சந்தையில் நிறுத்தி வைத்திருப்பதாக, உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதரிடம் அந்தக் குதிரையை தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நீங்கள் வாங்க வேண்டாம். "உங்கள் தருமத்தை ஒரு போதும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

வீடு வக்ஃபு
அனஸ்(ரலி) ஒரு வீட்டை வக்ஃபு செய்தார்கள். (மதீனாவிற்கு) வரும் போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். (தானும் பயன்படுத்த உரிமை உண்டு என நிபந்தனையிட்டிருந்ததால்) ஸுபைர்(ரலி) அவர்கள் தம் வீடுகளைத் தர்மம் செய்தார்கள். தமது பெண் மக்களில் விவாகரத்து செய்யப்பட்ட ஒரவருக்கு "நீ இதில் தீங்கிழைக்காமலும், தீங்குக்கு ஆளாகமலும் தங்கலாம். மறுமணம் செய்து தன்னிறைவு பெற்று விட்டால் இதில் தங்க அனுமதியில்லை" என நிபந்தனை விதித்தனர்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), புகாரி

கிணறு வக்ஃபு
யார் "ரூமா" என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃபு செய்து) விடுகிறாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் அதை விலைக்கு வாங்கி தூர் வாரி வக்ஃபாக ஆக்கினார்கள். அறிவிப்பாளர் : அபூ அப்திர் ரஹ்மான்(ரலி), ஆதாரம் : புகாரி

போர்நிதி வக்ஃபு
எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார் படுத்துகின்றாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் (பொருளுதவி செய்து) அப்படையைத் தயார் செய்ய உதவினார்கள். அறிவிப்பாளர்: அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம் : புகாரி
வக்ஃபு நிர்வாகமுறை

உமர்(ரலி) அவர்கள் "வக்ஃபு" செய்த போது "இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து(எடுத்து) உண்பதில் தவறில்லை" எனக் குறிப்பிட்டார்கள். "வக்ஃபு" செய்தவரே கூட அதை நிர்வாகமும் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம், ஆக (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. அறிவிப்பாளர் : அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம்: புகாரி

தொகுப்பு : அதிரை உமர்
யுனிகோடு பதிவு: அபூ உமர்