Saturday, February 18, 2006

முஸ்லிம்களுக்கு ஜெயலலிதா செய்த தீங்குகள்

தமிழ் நாட்டுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லிம்களும் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என் கணிப்பின் படி தமிழ் நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளைச் சாராத முஸ்லிம்களும் தி.மு.கவை ஆதரிப்பதை விட அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும் என்பதாலேயே த.மு.மு.க, தி.மு.க ஆதரவுடன் செயல் படுகிறதே தவிர அதன் தலைவர்களும் அ.இ.அ.தி.மு.கவை ஆதரிப்பதையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது மேடைப்பேச்சில் இருந்து தெரிகிறது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பரிசீலனைக்கும், ஜெயலலிதா முஸ்லிம்களிடம் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும், இப்போதும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் நினைவூட்டுவதை என் கடமையாகக் கருதுகிறேன்.


1. பாபர் மசூதியை இடிக்க ஆளனுப்பினார். இராமருக்கு இங்கு கோயில் கட்டாமல் எங்கு கட்டுவது என இந்து வெறியை தூண்டி விட்டார்.

2. குஜராத்தில் மோடி மீண்டும் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது வாழ்த்து தெரிவித்தார். அவரது பதவியேற்பில் கலந்து கொண்டார்.

3. சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை இந்து வெறி அமைப்புகளால் பாராட்டப்படும் வண்ணம் முஸ்லிம் விரோத ஆட்சி செலுத்தினார்.

4. மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் அ.இ.அ.தி.மு.கவை தோற்கடித்ததால் திரும்பப் பெறப்பட்ட பல சட்டங்களில் இச்சட்டமும் திரும்பப் பெறப் பட்டது. இதற்காக தமிழ் நாட்டு வாக்காளர்களைத் தான் பாராட்ட வேண்டும்.

5. வாணியம்பாடி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக ஓர் இந்துவை நிறுத்தினார். அப்போது முஸ்லிம் லீக், அ.இ.அ.தி.மு.கவை கண்மூடித் தனமாக ஆதரித்தது.

6. கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.மு.மு.க, அ.இ.அ.தி.முவை ஆதரிக்க முன் வந்தது. ஆனால், அவர்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொன்னதை, தலித் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என சேர்த்ததாலும், முஸ்லிம்களுக்கு வேட்பாளர் பட்டியலில் போதிய இடம் ஒதுக்காததாலும் அ.இ.அ.தி.மு.கவும் தி.மு.கவும் நேரடியாக மோதும் இடங்களில் தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது த.மு.மு.க எடுத்த மிகச் சரியான முடிவு.



7. கோவையில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவைப்பு போன்ற கலவரத்தின் போதும், குண்டுவெடிப்புகளின் பின்பும் கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசின் கையாலாகத தனத்தையும், முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் இன்னும் மறக்கவில்லை. ஆனால், அப்போது இந்து வெறி தமிழ் நாட்டில் காலூன்ற எம்.ஜி.ஆரும், அவரின் அ.இ.அ.தி.மு.க அரசும், கட்சியுமே காரணம் என்பதை ஒரு முஸ்லிம் அல்லாத ஆய்வாளார் எழுதிய கட்டுரை பல பத்திரிக்கைகளில் வந்தது. கட்டுரை எழுதியவரின் பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அக்கட்டுரையின் மையக்கருத்து எனக்கு ஒருபோதும் மறக்காது.

8. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை எதிர்த்து பேசினார். இன்றளவும், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப் படுவதை தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளைப் போல வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

9. முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் இவரது அமைச்சரவை பல ஆண்டுகள் நடந்தது. இவரது அமைச்சரவையில் இடம் பெறும் முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய தகுதி முஸ்லிம் விரோதப் போக்கு. அன்வர் ராஜா, மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசியதை நாம் மறக்க கூடாது.

10. இவரை இப்போது பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தாலும், ஒருவருமே ஆதரிக்காத போது ஷேக் தாவூது என்பவர் நடத்திய தமிழ் மாநில முஸ்லிம் லீக் என்ற அமைப்பு அ.இ.அ.தி.மு.கவை ஆதரித்தது. அக்கட்சிக்கு ஜெயலலிதா வார்டு மெம்பர் பதவிக்கு கூட இடம் ஒதுக்க வில்லை.

1 comment:

Abu Umar said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு இட்ட அருளடியானுக்கு நன்றி.

முஸ்லிம்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு தனி பதிவாக இட்டால் நன்றாக இருக்கும்.