Thursday, April 13, 2006

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு -சோலை

பெரிதாக பார்க்க கீழ்கண்ட Image மீது மவுஸினால் சொடுக்கவும்.



இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வானத்து நிலவா? -சோலை

இஸ்லாமிய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக, தமிழக அரசு ஓர் ஆணையம் அமைத்திருப்பதாக ஒரு பிரசாரம் நடைபெறுகிறது. அப்படி ஓர் ஆணையம் அமைத்ததே / அதற்கான ஆணை வெளியிட்டதே இட ஒதுக்கீட்டிற்கான முதல் வெற்றி என்றும் சிலர் சேதி சொல்கிறார்கள். அவர்கள் அழைப்பிதழைப் பறித்துக்கொண்டு திருமண வீடு சென்று வந்தவர்கள். பூசிக்கொண்ட சந்தன மணத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடவில்லை.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற அமைப்பு ஏற்கெனவே இயங்கி வந்தது. இறுதியாக, நீதிபதி ஆறுமுகம் தலைமையில் அந்த ஆணையம் செயல்பட்டது. 2005_ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதன் பதவிக்காலம் நிறைவு பெற்றது. உடனடியாக ஆணையம் உயிர்ப்பிக்கப்படவில்லை. மூன்று மாதங்கள் கழித்துத் தேர்தலை நினைவில் நிறுத்த, அந்த ஆணையத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.

அந்த ஆணையம் இதுவரை இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி சிந்தித்ததேயில்லை. காரணம், தமிழக அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. எனவே, ஆணையமும் அமைதி காத்தது.

புதுப்பிக்கப்பட்ட ஆணையத்திற்கு, இப்போது தமிழக அரசு ஒரு புதிய பணியை அளித்திருக்கிறது. இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை, அந்த ஆணையத்தின் பரிந்துரைக்கு அரசு அனுப்பும். அதனை அந்த ஆணையம் பரிசீலிக்கும். அவ்வளவுதான்.

எனவே, இந்த ஆணையம் புதிதல்ல. இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்கும்படி, இந்த ஆணையத்தைத் தமிழக அரசு கேட்கவும் இல்லை. இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க ஆணையம் என்று சொல்கிறார்கள். சிறகே முளைக்கவில்லை. எப்படி சிகரத்திற்குப் பறக்க முடியும்?

இஸ்லாமிய மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் சிந்தனையே தமிழக அரசிற்கு உருவானதில்லை. ஆந்திராவில் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜசேகர ரெட்டி அரசு, ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, இஸ்லாமியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்தது. இதனை பி.ஜே.பி. வன்மையாகக் கண்டித்தது. அதனோடு அண்ணா தி.மு.கழகமும் கண்டித்ததை மறந்துவிட முடியாது. இப்படி இட ஒதுக்கீடு அளித்தால், பிற சமுதாயத்தினரும் கேட்பார்களே என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

இன்றைய தமிழக அரசு, பி.ஜே.பி. உறவை முறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அந்த அரசு இந்துத்வா சிந்தனை கொண்டது என்பதற்கு, இந்த அறிவிப்பு ஓர் உதாரணமாகும்.
'இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?' என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் நிருபர்கள் கேட்டனர்.

'69 சதவிகித இட ஒதுக்கீடே வழக்குமன்றத்தில் இருக்கிறது' என்றார் தமிழக முதல்வர். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று எப்போதும் அவர் கூறியதில்லை.
1999_ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், சென்னை கடற்கரைப் பொதுக்கூட்டத்தில், இஸ்லாமிய மக்களுக்கு அவர் இரண்டு உறுதிமொழிகள் அளித்தார்.
'இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி மைய அரசிற்குக் கடிதம் எழுதுவேன்' என்றார்.

'இனி எக்காரணம் கொண்டும் பி.ஜே.பி.யோடு உறவு கொள்ளமாட்டோம்' என்றார்.
இரண்டு உறுதிமொழிகளுமே வங்கக்கடல் காற்றோடு கரைந்துவிட்டது. இன்றுவரை மத்திய அரசிற்கு அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை.

தேர்தல் தீர்ப்பு வெளிவந்ததும், மையத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வர பெரிதும் உதவினார். இஸ்லாமிய சமுதாயம் ஏமாற்றத்தால் நொறுங்கிப்போனது.

தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்ததும் வெகுவேகமாக இந்துத்வாத் திட்டங்களை செல்வி ஜெயலலிதா செயல்படுத்தினார். ஆலயங்களில் அன்னதானம் என்றார். அந்தத் தானம் இந்துத்வாவின் இதயநாதம். பின்னர், அதனை நியாயப்படுத்துவதற்கு இரண்டொரு இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகளிலும் அன்னதானம் என்றார். ஆனால், அதற்கான தேவையை அந்த அமைப்புக்களே நிறைவு செய்துகொள்ளவேண்டும் என்றார்.

எவரும் எதிர்பாராத நேரத்தில், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தார். அதன்பின்னர்தான், அப்படி ஒரு சட்டம் கொண்டு வரும் எண்ணம் நரேந்திரமோடிகளுக்கே ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டத்தில் நியாயப்படுத்திய ஒரே தலைவி ஜெயலலிதாதான். அப்படி ஒரு துணிச்சல் தங்களுக்கு வந்ததில்லை என்று அத்வானி புகழாரம் சூட்டினார்.

அம்மாவின் அமைச்சரவையில் ஒரே ஒரு இஸ்லாமியர் அமைச்சராக வீற்றிருந்தார். இடையில் அவருடைய பதவியும் பறிக்கப்பட்டது. இறுதிவரை இஸ்லாமியர் இடம்பெறாத அமைச்சரவையை அமைத்து, பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார்.
ஆந்திர அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கிய ஒதுக்கீட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு எப்படி இட ஒதுக்கீடு அளிக்கமுடியும்? என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நியாயமான கேள்விதான்.

ஆந்திராவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, அங்கே பிரச்னை எழுந்தது. அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்தானா என்று கணக்கிட வேண்டியிருந்தது. ஆனால், தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்று விட்டனர். அன்சார், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, சேக் என்று பல பிரிவினர், அந்தப் பட்டியலில் அடங்கி இருக்கின்றனர். உருதுமொழி பேசும் இஸ்லாமியர்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கலைஞர் இடம்பெறச் செய்தார். இவர்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை காணவேண்டும்.

எனவே, தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு, இன்னொரு ஆணையம் அமைக்கத் தேவையில்லை. அப்படி ஒரு ஆணையத்தை இன்றைய அரசு அமைக்கப்போவதும் இல்லை. எப்படி வன்னிய சமுதாய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டார்களோ, அப்படி இஸ்லாமியர்களையும் இணைக்கமுடியும். மனம் இருந்தால் மார்க்கம் பிறக்கும்.

ஆனால், கடந்த ஐந்தாண்டுக் காலமாக தமிழக அரசு இந்தத் திசை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. இஸ்லாமியர்களுக்குக் கேரளத்திலும் கர்நாடகத்திலும தனி இட ஒதுக்கீடு உண்டு. அந்த அடிப்படையில், ஒதுக்கீடு அளிப்பது பற்றி தமிழக அரசு சிந்தித்ததே இல்லை.

ஆனால், தேர்தல் நெருக்கத்தில் இஸ்லாமிய அமைப்புக்களுக்குத் தமிழக அரசு ஒரு தகவல் தந்துள்ளது. 69 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதன்மீது தீர்ப்பு வந்தபின்னர், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி பரிசீலிக்கப்படும் என்று அந்தத் தகவல் கடிதம் தெரிவிக்கிறது. பொறுத்திருங்கள். கேழ்வரகில் நெய்வடியும் என்கிறார்கள்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அவசரம் அவசரமாக வாபஸ் வாங்கினார்கள். ஆனால், அதற்கு இன்றுவரை சட்ட வடிவம் கொடுக்கப்படவில்லை.

உண்மையிலேயே இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் எண்ணம் இருக்குமானால், எதற்காக ஆந்திர அரசு இட ஒதுக்கீடு அளித்தபோது எரிந்துவிழ வேண்டும்?
இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு என்பது தமிழகம் சார்ந்த பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களையும் தழுவிய பிரச்னைதான். அப்படி இட ஒதுக்கீடு தரமாட்டோம் என்பதில், மாநில பி.ஜே.பி. அரசுகளும் உறுதியாக இருக்கும். தமிழக அரசும் உறுதியாக இருக்கும். எனவே, இதற்கு அனைத்திந்திய அளவில் தீர்வு காணப்படவேண்டும்.
அதற்கான சரியான வழியில் மன்மோகன்சிங் அரசு முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இன மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. செயல்படுத்தும் முறையில், அதனைப் பரிசீலிக்க ரெங்கநாத்மிஸ்ரா தலைமையில் ஒரு தனி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் பணி நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது.

இந்தியா விடுதலை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார கல்வி நிலை என்ன என்பதே, எவருக்கும் தெரியாது. அதனை ஆராய்வதற்காக நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைதித்திருக்கிறது. இந்தக் குழு செப்டம்பர் மாதத்திற்குள் பரிந்துரை வழங்கவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்களின் கல்வி நிலையை மேம்படுத்த, இன்னொரு குழுவையும் மன்மோகன்சிங் அரசு அமைத்துள்ளது.

ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஏன் செயல்படுத்த முடியவில்லை _ எதிர்நோக்கும் இடர்பாடுகள் என்ன _ அதனை எதிர்கொள்ள அரசியல் சட்டத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நீண்ட விளக்கங்களை அளித்திருக்கிறது. கலைஞர் மூலம் பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த விளக்க அறிக்கையும் மைய அரசின் ஆழ்ந்த பரிசீலனையில் இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அப்படி ஒரு இட ஒதுக்கீட்டை இஸ்லாமிய மக்களோ, கிறிஸ்துவ மக்களோ எதிர்பார்க்கத் தேவையில்லை. சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதுபோல் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைச் செயல்படுத்துங்கள் என்று அவர்கள் டெல்லியின் கதவுகளைத்தான் தட்டவேண்டும். அப்படித் தட்டினால், திறக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் தெரிகின்றன.

இட ஒதுக்கீடு கோரிக்கை எட்டிப்பிடிக்கமுடியாத வானத்து நிலவு அல்ல.

கட்டுரை: சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16-04-2006

3 comments:

அபூ ஸாலிஹா said...

அவசியமான பதிவு, அவசியமான நேரத்தில்.

இப்பதிவை முழுமை செய்ய, குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான இதன்(தொடர்ச்சி)அடுத்த பக்கத்தையும் இணைக்க இயலுமா?

Abu Umar said...

சகோ.அருளடியான் முழு கட்டுரையையும் எழுத்துப்பதிவாக இட்டிருந்தார். தலைப்பின் பெயரை பெரிதாக இட்டிருந்ததாலோ என்னவோ மாயமாய் மறைந்துவிட்டது. மீண்டும் பதிவார் என்று எதிர்பார்க்கிறேன்.

Abu Umar said...

அருளடியான் மீட்டி பதியாததால், முழு கட்டுரையையும் பதிந்துள்ளேன்.