Wednesday, April 05, 2006

திருநெல்வேலிக்கே அல்வா [Complete post]

அன்பிற்குரிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்

பாளையங்கோட்டைத் தொகுதியை இ.யூ.மு.லீ.கட்சிக்கு முதலில் ஒதுக்கிய கருணாநிதி, இப்போது வழக்கம்போல் இதயத்தில் மட்டும் இடம் கொடுத்து, தொகுதியைப் பறித்துத், 'திருநெல்வேலிக்கே அல்வா' கொடுத்துள்ளார். அத்தொகுதியில் போட்டியிடும் டி.பி.மைதீன் கானும் முஸ்லிம் தான் என்று திரைக்கதை வசனம் எழுதுவார் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதி.

நம்மைப் பொறுத்தவரை மைதீன் கான் ஆயினும் வேறு மு.லீக். கான் ஆயினும் சட்ட சபையில் கருணாநிதிக் கட்சி உறுப்பினர்தாம். தம் பதவிப் பறிப்பு வழக்கில், முஸ்லிம் லீக் என்பது அரசியல் கட்சி அன்று; ஒரு சமுதாய இயக்கமே என்று நீதி மன்றத்தில் சொல்லித் தம் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார் இ.யூ.மு.லீ. தலைவர் காதர்மைதீன்.எனவே இ.யூ.மு.லீ கட்சி போட்டியிட்டு வென்றாலும் அது தி.மு.கவுக்கே பயன்.

ஆனால் ஒரு முஸ்லிம் கூட்டணிக் கட்சிக்கு அளித்த வாக்குறுதியை மறுத்து வஞ்சித்ததைப் பற்றியே இங்கு விமர்சனம். ஆண்டாண்டு காலமாக வாக்களித்து, வஞ்சித்துப் பழக்கப் பட்ட கருணாநிதி இப்போதும் வஞ்சிப்பதில் வியப்பில்லை. இதைத் தைரியமாக விமர்சித்த ஃபாத்திமா முழஃப்பரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

கருணாநிதியை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகச் சொல்லும் காரணங்களும் ஜெயலலிதாவை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கங்கள் கருணாநிதிக்கு எதிராகச் சொல்லும் காரணங்களும் காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ஜெயலலிதா பாபர் மஸ்ஜிதை இடிக்க ஆள் அனுப்பினார், நரேந்திர மோடியை ஆதரித்தார், ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று கேட்டார், சிறுபான்மையைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால் பெரும்பான்மயைப் பற்றி யார் கவலைப்படுவது என்று கேட்டார் எனப் பல கூறப் பட்டாலும் அவை எல்லாம் ,"நான் ஒரு பாப்பாத்தி" என்று வெளிப்படையாக அறிவித்த ஜெயலலிதாவின் கூற்றுக்கள்/செயல்கள் என்பதை மறந்துவிடக் கூடாது

ஜெயலலிதா தரும் வாக்குறுதிகளை யாரும் நம்பப் போவதில்லை.அவை எல்லாம் ஓட்டுப் பொறுக்கும் தந்திரங்கள் என் அறிவுடையோர் உணர்வர். இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் த.த.ஜ.வும் இதை உணராதிருக்கவில்லை. அனால் அதன் எதிரி த.மு.மு.க கருணாநிதியின் பக்கம் சென்று விட்டதால் இவர்கள் ஜெயலலிதாவின் பக்கம் தள்ளப் பட்டு விட்டனர் என்பதே உண்மை. அவர்கள் அம்மா பக்கம் சென்றிருந்தால் இவர்கள் அய்யன் பக்கம் வந்திருப்பர்.(அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா)

கருணாநிதி அளவுக்கு ஜெயலலிதா முஸ்லிம்களை வஞ்சிக்கவில்லை.அவர் தாம் சார்ந்த இனம்/மதம் இவற்றின் அடிப்படையில் செயல் பட்டார் என்றாலும் கருணாநிதி தமிழுலகுக்குத் தந்ததுபோல், "முஸ்லிம் தீவிரவாதி" என்ற புதுச் சொல்லை ஜெயலலிதா தரவில்லை.ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்த போது வீடு வீடாகப் போய் முஸ்லிம்களைக் காவல்துறை தேடவில்லை - கோயம்புத்தூருக்காகக் கருணாநிதி செய்தது போல..

கோவைக் கலவரமும் அதைத்தொடர்ந்த குண்டு வெடிப்பும் நிகழ்ந்த பின், கையாலாகாத முதல் அமைச்சராக இருந்த கர்ணநிதியைச் சந்திக்கச் சென்ற கோவை ஐக்கிய ஜமா-அத்தார்களிடம் அவமரியாதையாகப் பேசினார். அதைப் போல் ஜெயலலிதா பேசியதாக நான் பத்திரிகைகளில் படித்த நினைவில்லை.

இவற்றையெல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்று நீங்கள் தலையைச் சொறியலாம். முதல் வரியைப் படித்தால் உங்களுக்கும் இது தோன்றும்.

பின்னெ ஒரு கார்யம்

நான் அ.தி.மு.க.உறுப்பினனோ அனுதாபியோ ஆதரவாளனோ அல்லன். த.த.ஜ. உறுப்பினனோ அனுதாபியோ ஆதரவாளனோ அல்லன்.

மேற்சொன்னவற்றைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சொல்லி வருகின்றேன்.

இஸ்லாம்/முஸ்லிம்கள் பெயரால் இயங்கும் எந்த அமைப்புடனும் எனக்குத் தொடர்பில்லை என்ற உண்மையைப் போன்றே எந்த அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில்லை. இங்கே சொல்ல வருவது இஸ்லாம்/முஸ்லிம்கள் பெயரால் இயக்கம் நடத்துவோர் அரசியல் கட்சிகளிடம் ஏன் மீண்டும் மீண்டும் ஏமாறுகின்றனர் என்பதே. ஒரு முஸ்லிம் இருமுறை ஒரே பொந்திலிருந்து கொட்டப்பட மாட்டான் என்பதை ஏன் இவர்கள் மறந்து விட்டனர் என்பதே

மீண்டும் மீண்டும் சமுதாயத்தை அரசியல் கட்சிகளிடம் அடகு வைப்போர் ஏன் இன்னும் திருந்தவில்லை என்ற ஆதங்கமே இதை எழுதக் காரணம்.

- குஞ்ஞாலி மரைக்காயர்

1 comment:

அருளடியான் said...

முஸ்லிம் லீக்கிற்கு கலைஞர் அல்வா கொடுத்ததை நினைத்து நாம் யாரும் வருந்தத் தேவையில்லை. தமிழக முஸ்லிம்கள் அவர் கட்சிக்கு அல்வா கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். அதை காதர் மொகைதீன், ஜவாஹிருல்லாஹ் ஆகிய இரு பேராசிரியர்களாலும் தடுக்க முடியாது.