Tuesday, October 10, 2006

தற்பெருமையும் ஆணவமும்

தற்பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

இப்பூமியில் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை ( ஜன்னத்தை) நாம் சொந்தமாக்கி வைப்போம்; பயபக்தியுடையவர்களுக்கே ( நல்ல ) முடிவு உண்டு. அல்குர்ஆன் : 28 . 83

லுக்மான் ( அலை ) அவர்கள் தனது மகனை நோக்கி :

உன் முகத்தை ( பெருமையோடு ) மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! ( ஏனெனில் ) அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்; அல்குர்ஆன் : 31 . 18

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என ஹாரிஸா இப்னு வஹப் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தன்னைப் போன்று எவரும் உண்டா என்கின்ற மமதை சிலருக்கு வரும் அவர் எப்படிப்பட்டவராக இருப்பரெனில் அதிகப் பணம், உயர் பதவி காரணமாக பகட்டு அதிகரித்து ஆடம்பரங்கள் மிகைத்து அது படாடோபத்தையும், டாம்பீகத்தையும் ஏற்படுத்தி விடும் இப்படிப்பட்டவர்கள் பூமியில் பெருமையாக நடப்பதுடன் பணத்திலும், பதவியிலும் தன்னை விட கீழுள்ள மக்களிடம் முகத்தை திருப்பிக் கொள்வதுடன் அவர்களிடத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆணவம் கொள்வார்கள் இது போன்றவர்களைப் பாரத்து அல்லாஹ் கூறுகிறான்

...நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. 17:37 .

பூமிக்கு மேல் வின்வெளி வரை விஸ்தீரணமாக உயர்ந்து செல்வதற்கும் அதில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும் அவற்றை இறைவன் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், வசப்படுத்திக் கொடுத்தக் காரணத்தினால் தான் மனிதன் அவ்வாறுப் பறந்து சென்று பல சாதனைகள் படைக்க முடிந்தது இதுவும் மனிதனைப் பெரும்பாலும் அகப்பெருமைக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. சந்திர மண்டலத்திற்கே மனிதன் போய் விட்டான் இனி என்ன ? கடவுளாவது , கத்தரிக்காயாவது ? என்று நாஸ்த்திகம் பேசும் அளவுக்கு உண்டு பண்ணியது. இது போன்வர்களைப் பார்த்து பூமியைப் பிளந்து விட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது என்றுக் கூறி மனிதனுடைய அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் சாவு மணி அடித்தான் இன்று வரை எந்த விஞ்ஞானியாலும் பூமியை மலையளவுக்குப் பிளந்து உட்சென்று சாதனைப் படைக்க முடியவில்லை, முடியாது ! இது சத்தியவேதம் கூறும் இறைவாக்கு.

பெருமை, வல்லமை, மேலாதிக்கம், டாம்பீகம், படாடோபம் போன்றவைகள் ஒருவனுக்கு இருக்க வேண்டுமெனில் அது அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் பெருமை எனது மேலாடையாகும், வல்லமை எனது கீழாடையாகும் அதில் எவனாவது ஒருவன் போட்டியிட்டால் அவனை நரகத்தில் வீசுவேன் என அல்லாஹ் கூறுவதாக , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூநியதாக, அரபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : அபூ தாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இவ்வாறு அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதரவர்கள் சுட்டிக்காட்டுவதன் முக்கிய நோக்கம் மனிதன் அவைகளில் எதொன்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுவாகும், அல்லாஹ்வும் இவற்றை தனக்கு உரியது என்றுக் கூறினாலும் நளினத்தையும், மிருதுவானத் தன்மையையும் விரும்புகிறான் .

அன்புள்ள சகோதரர்களே! யாருக்காவது தான் ஒருப் பெரிய பதவியை வகிப்பவன், பணக்காரன் என்கிற சிந்தனை இருந்து அவற்றால் தனக்குக் கீழுள்ளவர்களிடம் அதிகாரம் செய்பவர்களாக இருப்பீர்களேயானால் இப்புனித ரமளான் மாதத்தில் அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே உயர்வானவன் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியன என்ற சிந்தனையை மனதில் வேர் விடச் செய்யுங்கள்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:21 முதல் 24 வரை

நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்

No comments: