Saturday, October 14, 2006

ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பிறப்பால் முஸ்லிம். தமிழ் கவிஞர். இவரது 'மைலாஞ்சி' கவிதைத் தொகுப்பிலேயே, இஸ்லாத்தின் அடிப்படையோடு முரண்படும் பல கவிதைகளை எழுதியிருந்தார். இவரது உலறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர் தன்னை ஒரு மார்க்சிய ஆய்வாளராகக் காட்டிக் கொண்டாலும், பின் நவீனத்துவ அடிப்படையில் இஸ்லாத்தை அணுகி கட்டுரைகள் எழுதுவதாகக் கூறிக் கொண்டாலும், ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தர்கா வழிபாட்டை ஆதரித்தும், இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டை விமர்சித்தும் எழுதுகிறார்.

தர்கா வழிபாடு, கோயில் வழிபாட்டை ஒத்திருப்பதாக முஸ்லிம் அறிஞர்கள் விமர்சிப்பதற்கு, இவர் 'ஹஜ்ஜில் ஒட்டகங்களை பலி கொடுப்பது, கோயில்களில் ஆடு பலியிடுவதை ஒத்திருப்பதாக உலறுகிறார். இவர் தர்கா வழிபாட்டையும், இஸ்லாத்துக்கு முரணான பல அநாச்சாரங்களையும் நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையிலேயே கை வைக்கிறார். ஹெச் .ஜி.ரசூல் 'திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்... ' என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழின் 12 அக்டோபர் 2006 பதிப்பில் திருக்குர் ஆன், முஹமது நபி(ஸல்) அவர்கள் தன் உள் மனத்திலிருந்து வெளிமனத்துக்குப் பேசியது தான் என்று கூறுகிறார். திருக்குர் ஆன், இறைவன் அருளியது அல்ல. முஹமது நபி(ஸல்) அவர்களின் சொந்தச் சரக்கு என்பது தானே இதன் பொருள்? நவூதுபில்லாஹ். இப்படிப் பட்ட கருத்தை வெளியிடும் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதை இஸ்லாமிய அறிஞர்களிடம் அறிய விரும்புகிறேன். இது போன்ற கருத்து, கிறிஸ்துவர்கள் மூலமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அக்கருத்துக்கு கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அடிமையாகி இருக்கலாம். அல்லது இவர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாகவே இருக்கக் கூடும்.

Thursday, October 05, 2006

ஒற்றுமை..! கிலோ என்ன விலை?

சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. மும்பை பள்ளிவாசல் ஒன்றில் தராவீஹ் தொழுகை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆவதற்கு முன் காவல்துறை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தது என்ற தகவல் அதில் இருந்தது.

இந்த பிரச்னை நமக்கு ஏற்கனவே பழகிப்போன 8 Vs 20 ஆகத்தான் இருக்கும் என நினைத்து அந்த மின்னஞ்சலை படித்தபோதுதான் விபரம் புரிந்தது, இது 20க்குள்ளேயே 10-10 பிரச்னை என்று. குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பரெல்வி, தேவ்பந்தி என இரு குழுக்களை சேர்ந்த முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை தங்கள் குழுவைச் சேர்ந்த மவுலானாதான் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதால் சண்டை மூண்டது. 'ஒவ்வொரு மவுலானாவும் 10, 10 ரக்அத்கள் தொழவைக்கட்டும்' என்ற தேவ்பந்திகளின் சமரச திட்டத்தை பரெல்விகள் ஏற்கவில்லை. கலவரம் மூளக்கூடிய சூழலில் காவல்துறை வரவழைக்கப் பட்டு, ஒரே பள்ளியில் இரு குழுக்களும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தொழுது கொள்வது என்ற சமாதானத் திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.

ஒரே பள்ளியில் தனித்தனியாக தொழுவது என்ற ஏற்பாட்டின் மூலம் அந்த இரு குழுக்களும் சமாதானம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த தகவலை அறிந்த என்னையும் உங்களையும் போன்ற சாதாரண முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்களா? என்றால் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தில் ஒரே இறைவன், ஒரே தலைவர், ஒரே வேதம், ஒரே கிப்லா. ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர் தங்கள் ஒரே இறைவனை ஒரே ஜமாஅத்தாக தொழும் விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த அவல நிலை?

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், "இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்" (3:103).

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:"(பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்" (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

இஸ்லாம் போதித்த ஒற்றுமை, சகோதரத்துவத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். நமது மவுலானா தொழுகை நடத்த முடியவில்லை என்றால் அதற்காக நம் சமுதாயத்தை இரு பிரிவாக பிரிக்கவும் நாம் தயாராகி விட்டோம். அதற்காக மாற்று மதத்தினரின் உதவியை நாடவும் நாம் தயங்க மாட்டோம். சகோதரர்களே, சிந்தியுங்கள்!

பெருமானார் (ஸல்) அவர்கள் லைலத்துல்கத்ர் இரவைப் பற்றி அறிவிப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள், "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான்" அதாவது, இந்தச் சண்டையின் காரணமாக லைலத்துல்கத்ர் பற்றிய அறிவிப்பை நபியவர்கள் மறக்கடிக்கப் பட்டார்கள்.

ஸஹீஹ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸை நாம் அறிவோம். ஒவ்வொரு வருட ரமளானிலும் நம் மார்க்க அறிஞர்கள் இதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இரு தனிநபர்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. இன்று இதை நாம் மறந்து விட்டு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நாம் மேலும் என்னென்ன பாக்கியங்களை இழந்துக் கொண்டிருக்கிறோமோ, இறைவனே அறிவான்!

சகோதரர்களே, இந்த அவல நிலையை நிவர்த்திக்க நம்மால் இயன்றதெல்லாம் பிரார்த்தனை ஒன்றுதான். புனிதமிக்க இந்த ரமளானில், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் வேளையில், உங்கள் வழக்கமான பிரார்த்தனைகளுடன் தயவு செய்து இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

"இறைவனே! எங்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மேம்பட அருள் புரிவாயாக! பிரிவினையைத் தூண்டும் ஷைத்தானிய எண்ணங்களை எங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய உதவுவாயாக! ஆமீன்!"

Wednesday, October 04, 2006

பிலால் (ரழி)

பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
நூல் அறிமுகம்

நூல்: பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
ஆசிரியர்: ஹெச்.ஏ.எல். க்ரெய்க் (உமர் முக்தார், தி மெஸேஜ் படங்களின் திரைக்கதை ஆசிரியர்)
தமிழாக்கம்: அல் அஸுமத்
வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோவில் தெரு, கே. புதூர், மதுரை - 625 007
தொலைப்பேசி: 0452- 256 9930 மின் அஞ்சல்: mellinambooks@rediffmail.com
பக்கங்கள்:132 விலை: ரூ. 50

முஹமது நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப் படுகின்றனர். முஹமது நபியின் துணைவியரையும், நான்கு கலீஃபாக்களையும் அடுத்து முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப் படும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களே. இந்நூல், பிலால் (ரழி) அவர்களே தன் வரலாற்றை கூறும் விதமாக எழுதப் பட்டுள்ளது. ஹதீஸ்களின் சான்றுடன் எழுதப் பட்டுள்ள இந்நூல் மிகச்சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது. அல் அஸுமத் கலையழகுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிலால் (ரழி) அவர்கள் உமையாவிடம் அடிமையாக இருந்த போது பட்ட சித்திரவதைகளுடன் தொடங்கும் நூல், அவர்கள் முதல் தொழுகை அழைப்பாளராய் நியமிக்கப்படும் வரையுள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நூல் முஹமது நபியின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாகச் சொல்கிறது. முஹமது நபி சந்தித்த போர்க்களங்களும் சற்று விரிவாகவே காட்டப்படுகின்றன.


ஆசிரியர் குறிப்பு:

ஹெச்.ஏ. எல். க்ரெய்க் 1921 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். பத்திரிக்கை ஆசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக விமர்சகராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார். அங்கு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியரானார். இவருடைய ஆரம்பகால படங்கள் 'டினோ டி லாரன்ஸ்' ஸால் தயாரிக்கப் பட்டன. அவை சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன. 'வாட்டர்லூ' என்னும் போர்ப் படத்திற்கும், 'ஆன்சியோ ஃப்ரௌலின் டொக்டர்' ஆகிய வரலாற்றுப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். முஸ்தஃபா அக்காத்தின் புகழ் பெற்ற படங்களான 'உமர் முக்தார் (Lion of the Desert), தி மெசேஜ்
ஆகியவற்றுக்கும் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த க்ரெய்க் 1978 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் ரோமில் காலமானார்.

Sunday, October 01, 2006

தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)

சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, "சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன" என்றும் "அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் "யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது சமரசத்தின் இணைய பதிப்பு, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)

யுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் காணக் கிடைக்கின்றன. மறைந்த யுனிகோடு உமர் அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா? என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.

வேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

தொடரும்..