Friday, February 13, 2009

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இந்தியா ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது, இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
நன்றி: thatstamil.oneindia.in பிப்ரவரி 12, 2009

Sunday, February 08, 2009

மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்

மக்களுக்கு எதிரான வன்முறை - இலங்கைக்கு முதலிடம்

கொழும்பு: உலக அளவில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.இலங்கையின் வட பகுதியில், இலங்கைப் படைகள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையால், பல அப்பாவிப் பொதுமக்கள் தினசரி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட அல்லது காயமடந்த மக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவம் குந்தகம் விளைவித்து வருகிறது.இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி தருவதாக அரசு கூறினாலும் கூட, ஜனவரி மாதம் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் நடவடிக்கைகளில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது. இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் டோடக் ஆகியவை வன்முறை அதிகம் நிறைந்த அடுத்த மூன்று பகுதிகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி: ஏஓஎல் தமிழ்

Saturday, February 07, 2009

தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு

புலிகளுடன் சண்டை என்ற பெயரில் தமிழினத்தையே அழிக்கிறது இலங்கை: கருத்துக் கணிப்பு


சென்னை: விடுதலைப் புலிகளுடன் சண்டை என்ற பெயரில் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தையே இலங்கை அரசு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.பல்வேறு முக்கிய நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இலங்கை விவகாரம் குறித்து லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.இதில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர், விடுதலைப் புலிகளுடன் சண்டை, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழினத்தையே இலங்கை அரசு ஒழித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் ராஜபக்சே அரசு மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தனி ஈழமே தீர்வு - 68%தனி தமிழ் ஈழமே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக கட்சிகள் இலங்கை விவகாரத்தில் தேர்தல் அரசியலே செய்கின்றன. முதல்வர் கருணாநிதி தலைமையில் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகத்தில் எந்தக் கட்சியும் உண்மையான அக்கறையுடன் செயல்படவில்லை எனவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களின் உயிரிழப்பை தடுங்கள்-‍ பான்கிமூன்


ராஜபக்சேவுடன் போனில் பான் கி மூன் பேச்சு

உயிரிழப்பைத் தடுக்க கோரிக்கை


டெல்லி: டெல்லி வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி, அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று இந்தியா வந்தார். பின்னர் இரவு அவர் தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் போர் குறித்து ராஜபக்சேயிடம் கேட்டறிந்தார்.மூனிடம், போர் நிலவரம் குறித்து ராஜபக்சே விளக்கினார். கால் மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவது, மருத்துவமனைகள் மீது இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் வரும் அப்பாவிகளையும் கண்மூடித்தனமாக தாக்குவது குறித்து பான் கி மூன் கேட்டார்.சரமாரியாக வீசப்படும் குண்டுகளால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்தார். ஆனால் பான் கி மூனின் இந்த கேள்விகளுக்கு ராஜபக்சே மழுப்பலான பதில்களையே அளித்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பைத் தடுக்குமாறு அப்போது ராஜபக்சேவிடம் பான் கி மூன் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.பிரணாப் - சோனியாவுடன் ஆலோசனைஇதையடுத்து இன்று வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார்.பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.மூனுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் பங்கினை மூனிடம் தெளிவாக விளக்கினேன். தீவிரவாதிகள் 10 பேர் எப்படி கடல் வழியாக கராச்சியில் இருந்து இந்தியா வந்தனர். அதற்கு பாகிஸ்தான் எப்படி உதவியது போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்.தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதையும், அதில் பாகிஸ்தானியர்கள் இடம்பெற்றிருப்பதற்கும் என அனைத்துக்கும் இந்தியாவிடம் வலுவான ஆதாரம் இருப்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன். அந்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்திருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தானிடம் கேட்டிருப்பதையும், இவ்விஷயத்தில் பாகிஸ்தான் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பாத்துள்ளதையும எடுத்துக் கூறினேன்.குற்றவாளிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை அவர் பாகிஸ்தானிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்டேன் என்றார் பிரணாப்.

இலங்கையில் போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் - போப் வேண்டுகோள்

வாடிகன் சிட்டி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் வகை செய்ய வேண்டும் என்று போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.வாடிகன் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் போப்பாண்டவர் பேசுகையில், சிறிலங்கா அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும்.மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஏஓஎல் தமிழ்