Wednesday, June 28, 2006

கோவை வழக்கில் விடுதலை (முஸ்லிம்கள் தவிர்த்து!)




Source: தினகரன் இ-பேப்பர் (28-06-2006)

Sunday, June 25, 2006

அபூஅப்துல்லாஹ்வும் ஜமாத்துல் முஸ்லிமீனும்

சமூக ஒற்றுமைக்கு ஏற்ற வழி என்ன?

முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை, என்பதை சிந்திக்க ஆரம்பித்த சில அறிஞர்கள் அதற்கு இயக்கங்கள் மட்டும் தான் காரணம் என்பது போன்ற சிந்தனையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதை இன்று தமிழகம் முதற்கொண்டு, உலகில் உள்ள அனைத்து பிரிவுகளும் சொல்கின்றன. உண்மையாகவே ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்திலும் இந்த சமுதாயம் ஒன்று சேராதா! என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. ஆனால், இப்படி பிரிவினை கூடாது என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் சிலர் தாங்களும் ஒரு பிரிவில் இருந்து கொண்டுதான் அத்தகைய கருத்து வலியுறுத்துகிறார்கள். இதுதான் மிகவேதனைக்குறியது. தமிழ் நாட்டில் பிரிவினை கூடாது என்று சொல்லக்கூடியவர்களை சுட்டிகாட்டினால் இதை படிக்கக்கூடிய வாசகர்களுக்கு நன்றாக புரியும் என எதிர் பார்க்கின்றேன். இதனால் பிரிவினை கூடாது என விரும்பும் சகோதரர்கள் அது போன்ற பிரிவிலும் இருந்து தூரமாக இருக்க முடியும்.

தமிழ் நாட்டில் அபூ அப்துல்லாஹ் அவர்கள் மிக நீண்ட காலமாக பிரிவினை கூடாது என்று சொல்லி வருகின்றார்கள். இப்படி சொல்லும் அவர்களின் நிலை என்னவென்றால் அவர்களும் ஒரு பிரிவில் இருகின்றார்கள். இதை தக்க ஆதாரங்களுடன் இன்ஷா அல்லாஹ் பார்போம். இதை படிக்கும் சகோதர்கள் இதை தவறு என்று சுட்டி காட்டினாலும் சரி, அல்லது அபூ அப்துல்லாஹ் அவர்களே இதற்கு தக்க பதில் கொடுத்தாலும் சரி, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ளவும் தாயாராக இருக்கின்றோம்.

முதலில் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை பார்த்து விட்டு, அடுத்து அவர்களின் வாதம் எந்த வகையில் தவறு என்பதை பார்போம்.

உலகில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு இயக்கம் மட்டும்தான் இருக்க வேண்டும், அந்த இயக்கமும் ஜமாத்தே முஸ்லிம்(முஸ்லிமீன்) என்றுதான் இருக்க வேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் இந்த சமுதாயத்துக்கு இட்ட பெயர் முஸ்லிமீன்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார் இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன் இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். - 22:78

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" - 41:33

இந்த இரண்டு வசனத்திலும் இந்த சமுதாயத்துக்கு முஸ்லிம் என பெயரிட்டதாக சொல்கின்றான். இது மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையே நபிமார்கள் தங்களை முஸ்லிம் என்று சொன்னதாக வந்த வசனங்களையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

முஸ்லிமீன் என செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இதைத்தான் எடுத்து வைக்கின்றார்கள். அல்லாஹ் நமக்கு இட்ட பெயர் முஸ்லிம், ஆகையால் முஸ்லிம் அல்லாத பெயர்களில் இருக்க கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கொண்டு இந்த சமுதாயத்தை அறிமுக படுத்தும் போது அது பல பிரிவாகத்தான் காட்டும். ஆகையால், அல்லாஹ் நமக்கு இட்ட பெயரான முஸ்லிம் என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் செயல்பட கூடாது என்று சொல்கின்றார்கள்.

இதை எடுத்து வைத்த அபூ அப்துல்லாஹ் அவர்கள், அவர்களின் தலைமையில் "ஜமாத்துல் முஸ்லிமீன்" என்றும் செயல்படுகின்றார்கள்.

- முதலில் அல்லாஹ் "முஸ்லிம்" என்ற பெயரை மட்டும்தான் இட்டானா? அல்லது வேறு பெயர்களும் இந்த சமுதாயத்துக்கு உண்டா?

- அடுத்து "ஜமாத்துல் முஸ்லிமீன்" என்ற பெயர் மட்டும் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்துமா?

என்ற இந்த இரண்டையும் பார்த்து விட்டால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட "ஜமாத்துல் முஸ்லிமீனுக்கு" சரியான விடை கிடைத்துவிடும்.

அல்லாஹ் "முஸ்லிம்" என்ற பெயரை மட்டும்தான் இட்டானா?

அல்லாஹ் இந்த சமுதாயத்துக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்டமாறி "முஃமின்" "இபாதல்லாஹ்" என்ற பெயர்களையும் இட்டு இருக்கின்றான்.

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

மேலும் நபி(ஸல்) சொன்னார்கள்: அல்லாஹ் எதை கொண்டு என்னை ஏவினானோ, அந்த ஐந்து காரியங்களை கொண்டு நான் உங்களை ஏவுகின்றேன். கூட்டமைப்பும் கேட்கிறதும் கட்டுப்படுவதும் ஹிஜ்ரத் செய்வதும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பாதையில் போரடுவதுமாகும். எவன் கூட்டமைப்பை விட்டு ஒரு சான் விலகி செல்கின்றானோ, அவன் அதற்கு திரும்பாதவரையிலும் இஸ்லாத்தை தன்னுடைய கழுத்தை விட்டு கழட்டியவனாவான். மேலும் எவன் அறியாமை அழைப்பை அழைத்தானோ, அவன் நரக கூட்டத்தை சார்ந்தவன்.

(நாங்கள்) கேட்டோம், அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா?

நபி(ஸல்) சொன்னார்கள், அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே, ஆகையால் முஸ்லிம், முஃமின், இபாதல்லாஹ் என்று எந்த பெயரை சூட்டி அல்லாஹ் உங்களை அழைத்தானோ, அதைக் கொண்டு அழையுங்கள்.

அறிவிப்பாளர் : அல் ஹாரித் அல் அஸிரி(ரலி), நூல்: திர்மிதி-3035,3036, அஹ்மத், இப்ன் குஸைமா, நஸயின் அல் குப்ரா, அபூ யஃலாவின் முஸனத், அல்பானி அவர்களின் ஸஹிஹ் திர்மிதி எண் - 2298

இந்த ஹதீஸ்ஸில் இன்னும் இரண்டு பெயர்களையும் இட்டதாக வந்துள்ளது. இந்த ஹதீஸ் வந்துள்ள முஃமின் என்ற பெயரை வலுபடுத்தும் விதமாக குர்ஆனில் ஒரு வசனமும் உள்ளது.

ஒவ்வொரு நபிமார்களும் அவர்களுடைய சமுதாயத்துக்கு அவர்களில் முதலாவதாக வந்த நபிதான் முதல் முஸ்லிம் ஆவார்கள். இதை குர்ஆனில் பல நபிமார்கள் சொன்னதாக "அன அவ்வலுல் முஸ்லிமீன்" - நான் முஸ்லிம்களில் முதன்மையானவன் என்று வந்துள்ளது. வேறு சில இடங்களில் முஸ்லீமாக மட்டும் மரணிக்க வேண்டும் என்று உபதேசம் மற்றும் துஆக்கள் அடங்கிய வசனங்களை குர்ஆனில் நிறைய இடங்களில் பர்க்கலாம்.

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. -3:67

இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார். யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார் "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்." - 2:132

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர். - 2:133

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). - 6:163

"அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவராக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் நீர் கூறுவீராக). - 39:12

இப்படி பல வசனங்கள் இருந்தாலும் ஒரு வசனத்தில் நான் "முஃமின்" களில் முதன்மையானவன் என்று ஒரு நபி சொல்கின்றார்.

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான் அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான் அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன் நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் முஃமின்களில் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். - 7:143

அதை அடுத்து ஒரு சமுதாயத்தின் தலைமை வகிப்பவரை அந்த சமுதாயத்தின் தலைவர் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் சரியான முறை, ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவருக்கு அமீருல் முஃமினீன் என்று பெயர். முஃமின் என்பது இந்த சமுதாயத்துக்கு இட்ட பெயர் என்பதால் தான் எந்த ஒரு நபித்தோழர்களும் ஆட்சேபனை செய்யவில்லை.

ஆக இந்த சமுதாயத்துக்கு பல பெயர்கள் இருக்கும் போது, முஸ்லிம் மட்டும்தான் அல்லாஹ் இட்ட பெயர் என்று வாதிட்டு அந்த பெயரின் கீழ் ஒன்று சேறுங்கள் என்று சொல்வது அடிப்படை இல்லாதது. பல பெயர்கள் இருக்கும் போது ஒரு பெயர்தான் அல்லாஹ் இட்டு இருக்கின்றான் என்று சொல்வதும் அல்லாஹ்வின் மீது பொய்சொல்வதாக அமையும்.

"ஜமாத்துல் முஸ்லிமீன்" என்ற பெயர் மட்டும் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்துமா?

இது ஒற்றுமைப் படுத்தாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எப்படி சொல்லி இருக்கின்றார்கள் என்றால்,

யார் ஓர் இமாமிடம் பைஅத் செய்து, அவரிடத்தில் கைபிடித்து, உளமார உறுதி வழங்கிவிட்டாரோ, அவர் இயன்றவரை அந்த இமாமுக்கு கட்டுப்படுவாராக. அவருக்கு போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்த போட்டியாளரின் கழுத்தை துண்டித்து விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஆஸ், நூல்: முஸ்லிம்

அமீருக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுபப்பட்டவரவார் (புஹாரி)

யார் தனது ஆட்சியாளரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்து கொள்ளட்டும், ஏனெனில் யார் ஆட்சியாளரை விட்டு ஒரு சாண் அளவு வெளியேரி விட்டாலும் அவர் அறியாமை கால மரணத்தை தழுவுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் – இப்னு அப்பாஸ் நூல்- முஸ்லிம்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள் (4:59)

இந்த மூன்று நபி மொழிகளும் குர்ஆன் வசனமும் நமக்கு தெளிவாக காட்டுகின்றது, அமீர் மூலமாகத்தான் சமூகத்தை ஒன்று படுத்த முடியும் என்பதை. அதனால்தான் ஒரு அமீருக்கு போட்டியாக இன்னொருவர் வந்தால் அவரைக் கொல்லுங்கள் என்று கட்டளை பிறபிக்கின்றார்கள். ஏனென்றால், இன்னொருவர் வரும்போது சமூகம் பிளவுப் பட்டுவிடும் என்பதுதான்.

அடுத்து அபூ அப்துல்லாஹ் அவர்கள் காலம் காலமாக பிரிவினை கூடாது என்று எழுதி வருகின்றார்கள், முஸ்லிம்களை ஒன்று படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களை அதிகமாக ஆட்கொண்டுள்ளது. இதை அந்நஜாத் என்ற அவர்களின் பத்திரிக்கை வழியாக பார்க்கலாம். "முஸ்லிம் ஜமாஅத்" என்ற கட்டுரை அந்நஜாத்தில் வெளியிடப் பட்டு அதை மீண்டும் தனி பிரசுரமாகவும் மக்களிடம் வினியோகம் செய்யபட்டது. அதன் ஒரு பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கட்டுரையை அந்நஜாத்தில் போட்டதன் மூலம் இதை அபூ அப்துல்லாஹ் அவர்களும் ஆதரிக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.


இது எந்த முஸ்லிம் ஜமாஅத்? அபூ அப்துல்லாஹ் தலைமையில் அமைந்த முஸ்லிம் ஜமாஅத்தா? உலகில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப்பட்ட நபிமார்களுடன் ஈமான் கொண்டவர்களை இணைத்து இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான சமூக அமைப்பே ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).

1419 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான இக்கூட்டமைப்பிற்கு தலைவராகவும் இருந்து வழி நடத்தி சென்றவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்கள் மறைவிக்கு பின்னர் நான்கு கலிஃபாக்கள் இக்கூட்டமைப்பிற்கு தலைவராக இருந்து வழிநடத்தியதும் அதற்கு பின்னர் ஏற்பட்ட பிரிவினையும் நாம் அறிந்தவையே.

நபி(ஸல்) அவர்கள் மூலமாக இஸ்லாதின் அடிப்படையில் உருவாக்கிய அக்கூட்டமைப்பின் மூலமே சமூக அமைப்பினையும், சமூக ஒற்றுமையும் ஏற்படுத்திட இயலும்.

இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது. இதுவே உண்மையாகும்.

இயக்கங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களில் சொற்பமானவர்களால் ஏற்றுக் கொள்ளபட்டு இருக்கும், எந்த ஒரு இயக்கமும், அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு அந்த இயக்கமே சமூக அமைப்பு என கூறிட முடியாது. எந்த ஊரை வேண்டுமானாலும் எடுத்து பரிசீலித்துப் பாருங்கள்.

இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க தேசிய லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.M சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.O சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க J.A.Q.H சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க T.M.M.K சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தது என யாரவது கூறிவிட முடியுமா?

எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?


அபூ அப்துல்லாஹ் அவர்கள் முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)-க்கு தலைவராக இருக்கின்றார்கள். அவர்கள் இயக்கம் என்பதற்கு என்ன வரையரை கொடுக்கின்றார்கள் என்றால், எந்த இயக்கமும் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஏற்று இருப்பார்கள். ஒட்டு மொத்த சமுதாயமும் ஏற்று இருக்காது. அப்படி யாரை ஒட்டு மொத்த சமுதாயமும் ஏற்று இருக்கின்றதோ அது தான் சமூக அமைப்பினை ஏற்படுத்த இயலும். இதில் நாம் கேட்க்கும் கேள்வி என்ன வென்றால்,

அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் ஏற்படுத்த பட்ட முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)-ஐ எந்த எந்த ஊரில் ஒட்டுமொத்த மக்களும் ஏற்று இருக்கின்றார்கள்? விளக்குவார்களா அந்த ஜமாஅத்தை சர்ந்தவர்கள்.

அபூ அப்துல்லாஹ் அவர்கள், உலகில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது ஆசியா கண்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது திருச்சியில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது அவர்கள் வாழும் பகுதியில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

குறைந்த பட்சம் அவர்கள் தெருவிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

இந்த எந்த ஒன்றுக்கும் அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைவர் இல்லையென்றால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் யாருக்குத் தலைவர்?

அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட அவர்கள் தெருவில் உள்ள அவர்கள் குடும்பத்திற்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட அவர்கள் வாழும் பகுதியில் உள்ள சிலருக்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட திருச்சியில் உள்ள சிலருக்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட சென்னையில் உள்ள சிலருக்கு தலைவர்

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட தமிழ் நாட்டில் உள்ள சில நுறுபேர்களுக்கு தலைவர்

குறிப்பாக சொன்னால், இன்றைக்கு குர்ஆன் ஹதீஸ் என்று குறைந்த அளவில் மக்களை கூறு போட்டு வைத்து இருப்பவர்களில், குறைந்த எண்ணிக்கையை கொண்ட தலைமை அபூ அப்துல்லாஹ் அவர்களின் தலைமையாக இருக்கலாம்.

எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?


என்று அபூ அப்துல்லாஹ் அவர்கள் கேள்வி கேட்டதன் மூலம், அவர்கள் எந்த ஊரில் உள்ள ஒட்டு மொத்த மக்களை தன் பக்கம் சேர்த்து இருக்கின்றார்கள் என்பதை விளக்குவார்களா? இல்லையென்றால் அபூ அப்துல்லாஹ் அவர்கள் வேறு யாருக்கு அமீர்?

இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது.


அப்படி என்றால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் உருவான ஜமாஅத் முஸ்லிமால் மட்டும் உருவாக்கிட இயலுமா?

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) எந்த ஒரு தனி மனிதராலும் அன்று தோன்றிய அமைப்புமல்ல.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) நேன்று சிலர் கூடி தோற்றுவித்த கழகமுமல்ல.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) இன்று பலர் கூடி உருவாக்கிய இயக்கமுமல்ல.


அபூ அப்துல்லாஹ் அவர்கள் எப்படி தலைவர் ஆனார், என்பதை அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் விளக்குவார்களா?

இல்லை அவரே தன்னை தலைவராக ஆக்கி கொண்டாரா?


கட்டுரையும் குழப்பமும்

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)பிறருக்கு தொல்லை கொடுக்கும் பேரணி கோசங்கள் எழுப்பி பத்திரிக்கையில் விளம்பரம் தேடாமல், விளம்பரத்திற்கு என தனி பத்திரிக்கை நடத்தாமல் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாத்தினை ஏற்று ஒன்றுபட்டு செயல்படுபவர்களையே குறிக்கும்.


உலகத்தேவையை உயர்வென கருதாமல்,
ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாதினை ஏற்றிருப்பவர்கள் இணைந்திருக்கும் கூட்டமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)

இந்த கூட்டமைப்பு இல்லாத ஊர்களில்லை. ஒரே ஒரு தெரு கொண்ட ஊர்களிலும் இக்கூட்டமைப்பு இருக்கவே செய்கின்றது. எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் ஊர் பெயர் எழுதி, அதற்கப்பால் முஸ்லிம் ஜமாஅத் என்று எழுதுவதை நடைமுறையில் காணலாம். முஸ்லிம் மக்கள் மறந்து விட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் சமூக அமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).


உலகில் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் முஸ்லிம் ஜமாஅத்(அல் முஸ்லிமீன்)தான் என்று கட்டுரையாசிரியர் சொல்கிறார்,

அப்படி என்றால்,

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.


இது எந்த முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) என்பதை விளக்குவார்களா?

அபூ அப்துல்லாஹ் தன்னுடைய தலைமையில் உள்ளதும், ஒரு பிரிவினைதான் என்பது வெளியில் தெறிந்து விடக்கூடாது என்பதிலும், அவருக்கு பின்னால் இருக்கும் மக்கள் அதை புரிந்துவிடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

மக்களை இன்னும் போட்டு குழப்பிக்கொண்டு இருக்காமல் அபூ அப்துல்லாஹ் அவர்கள் தனது தலைமையில் ஏற்படுத்தப் பட்ட "ஜமாஅத் முஸ்லிமீனை கலைத்துவிட்டு தனக்கென்று தனி இயக்கமில்லாமலும் பிற இயக்கத்தை சாராமலும் அல்லாஹ் சொல்லுகின்றபடி அழைப்புப் பணி செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - 3:104

- முஹையதீன்

Wednesday, June 21, 2006

முஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே

முஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே

மும்பை : "லோக்சபாவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முஸ்லிம்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர். அதை இந்துக்கள் முறியடிக்க வேண்டும்' என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார்.

சிவசேனா கட்சி துவக்கப்பட்டு நேற்று முன்தினம் 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை முன்னிட்டு நடைபெற்ற கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர் பால் தாக்கரே பேசியதாவது:

லோக்சபாவில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முஸ்லிம்கள் முனைப்புடன் முயற்சி செய்கின்றனர். அதை இந்துக்கள் முறியடிக்க முன்வர வேண்டும். இதற்காக
நக்சலைட்டுகளின் உதவியைக் கூட நாடலாம்.


நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மற்ற தீவிரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் போது, நக்சலைட்டுகளுடன் ஏன் பேசக்கூடாது?
ஆயுதப் படையிலும் போலீஸ் பணியிலும் முஸ்லிம்களுக்கு, இடஒதுக்கீடு செய்யும் யோசனையைக் கூறிய சோனியாவை வன்மையாக கண்டிக்கிறோம். மும்பை மற்றும் தானே மாநகராட்சியில் நமது காவி கொடி தொடர்ந்து பறப்பதற்கு, தொண்டர்கள் பாடுபட வேண்டும்.இவ்வாறு பால் தாக்கரே தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

இதிலிருந்து நாம் பெற வேன்டிய படிப்பினை : நாம் இயக்க
விரோதம், தனிநபர் விரோதம் ஆகியவற்றை நீக்கி ஒன்று பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளிளும் நமது விகிதாச்சாரத்தை அதிகரிக்க முனைய வேன்டும். இதற்கு
நமது அனைத்து இயக்கங்களும் ஒத்துழைக்க வேன்டும்.

Sunday, June 18, 2006

காதர் மொய்தீனை கண்டிப்போம்!



நன்றி: தினகரன் நாளிதழ் - 18 ஜூன் 2006






தமிழ் நாடு இ.யூ.முஸ்லிம் லீக்கின் தலைவரும், திமுகவின் மக்களவை உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொய்தீன், இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கும், தலித்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை மிகவும் அறிவீனமானது. கண்டிக்கத்தக்கது. இஸ்லாத்தில் ஏற்கனவே இருக்கும் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர், தக்னீ போன்ற வேறுபாடுகளையே நாம் களைய வேண்டுமே தவிர, முஸ்லிம்கள் மத்தியில் தலித் என்று ஒரு புதிய சாதியைத் தோற்றுவிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். கிறிஸ்தவர்களின் நிலை வேறு. அவர்களெல்லாம், இந்து மதத்திலிருந்து சாதிகளை மட்டுமல்ல. தீண்டாமை இழிவுகளையும் தமிழ் நாட்டு கிறிஸ்தவ மதத்துக்கு கொண்டுவந்து விட்டார்கள். இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களே, உங்கள் கோரிக்கையை திரும்பப் பெறுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தலித் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தன் தேர்தல் அறிக்கையில் அச்சிட்டதற்காக, தமுமுக அ.இ.அ.தி.மு.கவிற்கு கொடுத்திருந்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றது. முஸ்லில் லீக்கின் இக்கோரிக்கையை தமுமுக, த.நா. தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், தாவூது மியாகானின் முஸ்லிம் லீக், ஷேக் தாவூதின் முஸ்லிம் லீக் போன்ற முஸ்லிம் அமைப்புகளும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டிக்க வேண்டும்.

Saturday, June 17, 2006

மனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை?

த.மு.மு.கவையும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் விமர்சிக்கும் சில இணைய நண்பர்கள் ஏன் மனித நீதிப் பாசறையை (குலாம் முஹமதுவின் விடியல் வெள்ளி குழுவினர்) மட்டும் விமர்சிப்பதில்லை? அல் உம்மா, ஜிகாத் கமிட்டி, சிமி போன்ற தடைசெய்யப் பட்ட முஸ்லிம் இயக்கங்களையும் இவர்கள் விமர்சிப்பதில்லையே? என்ன காரணம்? இது தற்செயலானதா? அல்லது மனித நீதிப் பாசறை, அல் உம்மா, ஜிகாத் கமிட்டி போன்ற அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்புகளுமே ஏற்படவில்லையா? அல்லது இவை தமிழ் முஸ்லிம்களுக்கு மலை போல் குவிந்த நன்மைகளை செய்து விட்டனவா?

மதிமுகவும் பாமகவும் முஸ்லிம்களுக்கு நட்பு சக்திகளா?


இந்திய மக்கள் பேரவை, தன் நட்பு சக்திகளாக பட்டியலிட்டுள்ள கட்சிகளில் மதிமுகவையும், பாமகவையும் சேர்த்துள்ளது. மதிமுக, பத்தாண்டுகளுக்கு முன் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இருந்த போது, அக்கூட்டணியில் பா.ஜ.க இடம் பெற தூது போன கட்சி. அதனால் தான் தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்றியது. பா.ஜ.க கூட்டணி அமைச்சரவையில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஒவ்வொரு கட்சியாய் விலகிய போது கடைசியாய் விலகிய கட்சி, பாமகவே. அக்கட்சிக்கு சிறுபாண்மையினர் நலனை விட பதவி சுகமே பெரிது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் 31 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிமுக்கு கூட இடமளிக்கவில்லை. கடந்த காலத்தில் முஸ்லிம் விரோதமாய் இருந்திருந்தாலும், ராமதாஸ், வைகோ ஆகிய இரு தலைவர்களை விட ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு விரோதமானவர் கிடையாது. எனக்குத் தெரிந்த வரை தமுமுக தலைவர்களும் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை இப்போது முஸ்லிம் விரோதமானவராய் நினைக்கவில்லை. எனவே, இந்திய மக்கள் பேரவை திமுகவைப் போலவே அ,இ.அ.தி.மு.கவையும் தன் நட்பு சக்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்

சில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப் படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைப்பினரிடம் கேட்க விரும்புகிறேன்.


1. இந்த அமைப்பின் நிறுவனர் யார்? இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார்? தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்?

2. 'இந்திய மக்கள் பேரவை' என பொதுவான பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர் ஆகலாமா? அல்லது இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான அமைப்பா?

3. இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் முன்னர் ஜனதா கட்சி உடைந்ததும், த.மு.மு.க பிளவுபடாத போது த.மு.மு.கவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இரட்டை உறுப்பினர் நிலையால் சர்ச்சைகள் ஏற்பட்டதும் நாம் அறிந்தது தானே? அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும்? இது பற்றியெல்லாம் செயல் திட்டம் வகுக்கும் போது கவனித்தீர்களா?

4. பழனி பாபாவை தங்கள் வழிகாட்டியாக இந்த அமைப்பை நிறுவியவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டி நமது இறுதித் தூதர் முஹமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. தமிழகச் சூழலில் காயிதே மில்லத் (ரஹ்) போன்ற தலைவர்களின் சிந்தனைகளையும், பெரியார், அ.மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகளையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியலை ஆராயும் 'முஸ்லிம் அரசியல் பரினாம வளர்ச்சி' என்ற நூலை 'அடையாளம்' வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படியுங்கள்.

5. சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா?

6. த.மு.மு.க தோன்றிய போது, முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்தது. இன்றளவும் நிறுத்தவில்லை. இப்போது 'இந்திய மக்கள் பேரவை' பிற முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்கிறது. இது எந்த வகையில் முஸ்லிம்களுக்குப் பயன்படும்? விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா? (எனக்கும் முஸ்லிம் லீக், தேசிய லீக், த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் போன்ற அமைப்புகளின் மீது கருத்து வேறுபாடுள்ளது. அவற்றை ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அவை அப்படியே உள்ளன. அதனால் திரும்ப எழுதவில்லை). இந்திய மக்கள் பேரவையில் அரசியல் அனுபவம் உள்ளவர் யார்?

7. புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்?

Tuesday, June 13, 2006

ஜெ.ஜெயின் அண்ணன், தம்பி - பி.ஜே கோபம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசத் தொடங்கியதும் "அண்ணன் வைகோ அவர்களே" என்று சொன்னதும் மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் காணப்பட்டார் வைகோ. பின்னர் திருமாவளவனை "தம்பி திருமாவளவன்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டார். இந்த பாசமிகு அழைப்புகள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இருவரையும் நெகிழச் செய்தது.

நன்றி : ஓசூர் ஆன்லைன்

உள்குத்து : இவ்வளவு தூரம் தம் கட்டி உணர்வு வாரஇதழில் சட்டசபைக்கு சென்ற சகோதரி "ஜெ" யின் சாதனையை "நமது எம்ஜிஆர்" பத்திரிகையைவிட அதிகமாக கட்டம் கட்டி எழுதியும் கூட தன்னை "அண்ணன்" என்று அழைக்காததால் உண்மையான அண்ணன் பிஜேயும் சகாக்களும் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்தி.


ஜாம் பஜார் ஜக்கு : எலக்சன் உறவு எலக்சனோடு போச்சு, கலைஞரும் அம்மாவும் தங்களுக்கு ஒன்னுதான்னு அண்ணன் சொன்னதா கேள்வி. ஆனால் எதிர்கட்சிக்காரனை விட மோசமா முதல்வரை உணர்வு வாரஇதழில் விமர்சரிப்பது எதுக்குப்பா?

அண்ணன் தங்கச்சி பாசம் இன்னும் முறியலையின்னு காணிக்கறதுக்கானு? மக்கள் பேசிக்கிறாங்கப்பா!!

Sunday, June 11, 2006

புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள்

புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள் யார்?

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பெற்றவர்கள். பிற்காலத்தினர் விளங்கியதை விட அவர்கள் மார்க்கத்தை நன்முறையில் விளங்கியிருந்தனர். அவர்களின் விளக்கங்கள் பிற்காலத்தவர்களின் விளக்கங்களை விட ஏற்றுக் கொள்ளச் சிறந்ததாகும். இதில் ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் சமீப காலமாக த.த.ஜ மட்டும் இதனைத் திரித்து வியாக்கியானம் செய்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.

நபித்தோழர்களின் நிலைபாடு பற்றி ஜாக்கை விமர்சனம் செய்த த.த.ஜ இதே கொள்கையைக் கொண்ட முற்கால அறிஞர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்றோர்களை விமர்சிக்கவில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களை கூறிவருவதுடன் அவர்களின் கொள்கையிலேயே தாங்களும் என்பது போன்று காட்டி வருகின்றது. தாங்கள் 20 வருடமாக இதனையே கூறிவருவதாகவும் ஜாக் மட்டும் கொள்கை மாறிவிட்டதாகவும் கூறி வருகின்றது. நபித் தோழர்களள் பற்றிய இந்த நிலை பாட்டைத் திரித்து ஏதோ நபித்தோழர்களைக் கண்மூடிப் பின்பற்றவேண்டும் என்று ஜாக் கூறியது போன்ற ஒரு மாயையை மக்களிடம் உருவாக்கி வருவது மிகவும் வேதனைக்குரியது.

ஸாக்கிர் நாயக்கையும் பிலால் பிலிப்ஸையும் உமர் ஷரீபையும் கமாலுத்தீன் மதனியையும் நோக்கி சவால் விடும் பி.ஜே அவர்கள் இதே கொள்கையைக் கொண்டிருந்த இப்னு தைமிய்யாவையும் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் இப்னு பாஸையும் விமர்சிப்பதில்லை. ஏன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களையும் தங்களது நூலகங்களிலிருந்து மாற்றுவதில்லை.

மேலும் 20 வருடங்களுக்கு மேலாக இதனையே கூறிவருகின்றோம் என்ற அவர்களது கூற்றிலும் உண்மையில்லை. இது அவர்களின் புதிய நிலை பாடு ஆகவே பல அறிஞர்களாலும் அவர்களது கொள்கை விமர்சிக்கப்படுகின்றது. இது அவர்களின் புதிய நிலை பாடு என்பதற்கான ஏதேனும் சில சான்றுகள்.

"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?" என்பது கடந்த சில ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது. (ஏகத்துவம் செப் - 2005)


அடிக்கோடிட்ட வார்த்தைகளைப் படிப்பவர்களுக்குப்புரியும் ஜக்காத் குறித்த கருத்துவேறுபாடு உலகில் தமிழர்களைத் தவிர எவருக்கும் ஏற்பட்டதில்லை. அது தமிழ் கூறும் முஸ்லிம்களிடம் மட்டும் அதுவும் சில ஆண்டுகளாக (20 வருடங்களுக்கு மேலாகவும் இல்லை) மட்டுமே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த கருத்துவேறுபாட்டுக்கு மூல காரணம் த.த.ஜ வின் மூதறிஞர் என்ற விஷயம் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் குறித்து

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
(ஏகத்துவம் செப் - 2005)


ஆனால் மேற்கண்ட அவர்களது கூற்றுக்கு மாறாக நபித்தோழர்கள் எவ்வளவு மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கீழே படித்தால் புரிந்து கொள்ளலாம்.

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. (ஏகத்துவம் - செப் 2005)


நபித்தோழர்களைக் கண்மூடிப் பின்பற்றக்கூடாது என்னும் கொள்கையைச் சொல்வதற்காக அவர்களிடம் சில விஷயங்களில் ஏற்பட்ட தவறுகளை மிகவும் கண்ணியமாக எடுத்துச் சொல்லியிருப்பார்களானால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் ஜக்காத் விஷயத்தில் நபித்தோழர்கள் கொண்டிருந்த ஒருமித்த நிலைபாட்டை தூக்கி வீச அவர்களிடம் காணப்பட்ட சில்லரைப் பிரச்சினைகளை இமாலயத் தவறுகளாகப் பெரிது படுத்திக் காட்டியவர்கள் போகப்போக அவர்களை விமர்சிப்பதில் தரம் தாழ்ந்து செல்வதைப் பாருங்கள்.

நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.


நீங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை உஸ்மான் (ரழி) அவர்கள் மீறிவிட்டார்களாம். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுவனம் கொண்டு நபி (ஸல்) அவர்களின் திருவாயால் நற்செய்தி கூறப்பட்ட உயிர்த் தியாகி உஸ்மான் (ரழி) அவர்கள் காஃபிர் ஆகி விட்டார்கள் என்றா? (இப்படிப்பட்ட கூற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம்)

உமர் (ரழி), உஸ்மான் (ரழி), ஆயிஷா (ரழி) போன்ற கண்ணியம் மிக்க சஹாபாக்களின் தவறுகளை எடுத்துக்கூறியபின் அதற்கு சான்றாக அவர்கள் ஹதீஸைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறிவிட்டுப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ''நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, ''முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், ''என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, ''இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ''நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, ''இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4740, 6524.

(ஏகத்துவம் - செப் 2005)


சகோதரர்களே! ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு அது தொடர்பான ஹதீஸையும் கூறினால் அவ்விஷயம் தொடர்பானதே என எவராலும் புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் மார்க்கத்தில் புதியவற்றை உருவாக்கினார்கள் என்று கூறிவிட்டு அதற்கு சான்றாக மேற்கண்ட ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. ஆம் விமர்சிக்கப்பட் நபித்தோழர்கள் உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆயிஷா (ரழி) இப்னு மஸ்வூது (ரழி) போன்ற கண்ணியம் மிக்க நபித்தோழர்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியபடி சுவனவாசிகள் என்று ஏற்றுக் கொள்வதா? அல்லது த.த.ஜ சமர்ப்பித்த ஆதாரத்தின் அடிப்படையில் "அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்", என்று கூறுவதா? (அல்லாஹ் இவ்வாறு விளங்குவதிலிருந்து காப்பாற்றுவானாக) சிந்தனையுள்ள தவ்ஹீது வாதிகளே! சிந்தியுங்கள்.

20 வருடத்திற்கு மேல்?

ஸஹாபிகளைக் குறித்த இவர்களின் நிலைபாடு 20 வருடங்களுக்கு மேலாக இல்லை இது இவர்களின் புதிய ஏற்பாடுதான் என்பதற்கு மேலும் சில சான்றுகளாக, ஆரம்பத்தில் இவர்கள் ஆசிரியர் குழுவில் இருந்து வெளியான பத்திரிகைகளிலிருந்து சில ஆதாரங்களை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.

1. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் திருக்குர்ஆனின் ஒரு பகுதியே என்ற சர்ச்சையில்

(புரட்சிமின்னல் ஜூன் 1988 – ஆசிரியர் குழு : கெ. முஹம்மது இக்பால் மதனி, பி.ஜைனுல் ஆபிதீன் உலவி, S. கமாலுத்தீன் மதனி, K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, M.முஹம்மது யூசுப் மிஸ்பாஹி)

ஸஹாபாக்கள் எதைக் குர்ஆன் என்று அறிமுகப்படுத்தினார்களோ அதில் எதனையும் கூட்டவோ குறைக்கவோ நாம் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதனைக்குர்ஆன் என்று அறிமுகம் செய்திருக்க வேண்டும். அபூபக்ரு (ரழி) தொகுத்த குர்ஆனும் உஸ்மான் (ரழி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார்கள். அதுபற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி என்பதற்குப் போதுமான சான்றாகும். (ஜூன் 1988 புரட்சிமின்னல்)


நமது கேள்வி : மேற்கண்ட விஷயத்தில் நபித்தோழர்களின் ஒருமித்த கருத்தை ஆரம்ப காலத்தில் ஏற்றுக் கொண்டீர்கள். இப்போது ஜக்காத் விஷயத்தில் அவர்களது ஒட்டு மொத்த கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதேன்? 20 வருடங்களுக்கு மேலாக இதனையே கூறிக் கொண்டிருந்தோம் என்ற கூற்று உண்மையானால் மேற்கண்ட விஷயத்தில் மட்டும் ஸஹாபாக்கள் பின்பற்றத் தகுந்தவர்களாகி விட்டார்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற கூற்றுப்படி ஏன் செயல்படவில்லை?

2. நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? என்ற சர்ச்சையில்

நபி(ஸல்) அவர்கள் தவிர்க்க இயலாத நேரங்களில் நின்று கொண்டு அருந்தியதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவ்வாறு அருந்துவதை அலீ (ரழி) அவர்களும் பார்த்து பொதுவாக நின்று கொண்டு அருந்தலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். தடை செய்யப்பட்ட ஹதீஸ்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கும். நபி (ஸல்) அவர்களின் தடை அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் ஒருபோதும் அதற்கு மாற்றமாக நபித்தோழர்கள் - குறிப்பாக அலீ (ரழி) போன்றவர்கள் செய்யமாட்டார்கள். (புரட்சிமின்னல் - ஜனவரி 1988 பக்கம் 10)


20 வருடங்களுக்கு மேல் இதனையே கூறிவருகின்றோம் என்றவர்கள் 18 வருடங்களுக்கு முன் அவர்கள் இணைந்திருந் பத்திரிக்கையில் எழுதியது இன்றைய இவர்களின் நிலைபாட்டிற்கு முரணாக உள்ளதே? நபியின் கட்டளைக்கு மாற்றமாக ஸஹாபாக்கள் ஒருபோதும் செயல்படமாட்டார்கள் என்றார்கள் அன்று. நபியின் கட்டளைக்கு மாற்றமாக அவர்கள் நடந்தார்கள் என்று அவர்களை விமர்சிக்கின்றார்கள் இன்று.

ஒருவாதத்தை மக்கள் முன் வைத்து விட்டோம் அதனை நிலை நாட்ட வேண்டும். அதற்காக நபித்தோழர்களை அல்லாஹ்வால் பொருந்தி கொள்ளப்பட்ட, நபி (ஸல்) அவர்களின் வாயினால் சுவனம் உண்டு என்று நன்மாராயம் வழங்கப்பட்ட நபித்தோழர்களை விமர்சிக்கும் இவர்கள், எனது தோழர்களைத் திட்டாதீர்கள் என்ற இறைத் தூதரின் கட்டளையையும் மீறி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், "உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்" என்று துணிந்து அவர்களை விமர்சித்துள்ளனர். தவ்ஹீது வாதிகளே சிந்தனை செய்வீர்! இவர்களை அடயாளம் காண்பீர்! நபி (ஸல்) அவர்கள் வழியை அவர்களது தோழர்கள் பின்பற்றியது போன்று பின்பற்றுவீர்! வெற்றி பெறுவீர்!

நன்றி:
மு. அப்துல்காதிர் தஸ்தகீர்
பஹ்றைன்



விமர்சனம்:
விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி

பதில் விமர்சனம்:
தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்!