Tuesday, April 26, 2005

ஐக்கிய நாடுகள் சபை (UN)

ஐக்கிய நாடுகள் சபை (United Nation Organisation)

உலக சமாதானம், பாதுகாப்பு, சமத்துவம், நாடுகளிடையே நல்லுறவு, பன்னாட்டு சமூகம், அரசியல், பொருளாதாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை நாடுகளுக்கிடையே ஏற்படுத்துவதே இச்சபையின் நோக்கமாகும்.

1944-ல் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், டம்பர்டன் ஓக்ஸ் என்ற இடத்தில் நடந்த நேசநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஐ.நா. சபைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. 1945-ல் அமெரிக்கா சான்-ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரில் நடந்த மாநாட்டின் சாசனத்தில் நேச நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர். 1945 அக்டோபர் 24-ல் ஐ.நா.சபை செயல்படத் தொடங்கியது.

ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ருஷ்யன், சீனம், அரபி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஆறு மொழிகள், ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக உள்ளன. அமைதியை விரும்பும் எந்த நாடும் இதில் உறுப்பினராக சேர முடியும்.

இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இச்சபை தனக்கென தபால் தலைகள் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஐ. நா.வில் 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபை செயல்படத்தொடங்கிய அதே நாளில் சவுதியும் இணைந்துக்கொண்டது. இந்தியா 30-10-1945 அன்றும் பாகிஸ்தான் 30-09-1947 அன்றும் உறுப்பினராக இணைந்தது.

ஐ.நா.சபை ஆறு உள் அமைப்புக்களைக் கொண்டு செயல்படுகிறது.

1.பொதுச்சபை (General Assembaly)
ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதிநிதிகளையும் கொண்டது. உறுப்பு நாடுகளிலிருந்து தலா ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு பொதுசபைக்கு அனுப்பப்படுவார்கள். ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு வாக்குரிமையே கணக்கிடப்படும்.

3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும். இச்சபை வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூடும்.

ஐ.நா.வின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவது, பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, பொருளாதார, சமூக வகை மற்றும் தர்ம கர்த்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, பாதுகாப்பு சபையோடு சேர்த்து பன்னாட்டு நீதி மன்றத்தின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பத போன்றவை இதன் பணிகளில் சிலவாகும்.

2. பாதுகாப்புச் சபை (Security Council)
இது 15 அங்கத்தினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரக்கும் ஒரு வாக்கு உண்டு. இதில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பது அமெரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகும். அதுவல்லாமல் இரண்டாண்டுக்கான பத்து தற்காலிக உறுப்பினர்களையும் கொண்டது.

அல்ஜீரியா, பெனின், பிரேசில், பிலிப்பைன்ஸ், ருமேனியா (பதவி காலம் 2005 இறுதி வரை)

அர்ஜென்டினா, டென்மார்க், கீரீஸ், ஜப்பான், தாஞ்சானியா குடியரசு (பதவி காலம் 2006 இறுதி வரை)

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட 9 ஓட்டுக்கள் வேண்டும். ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இதனைத்தான் வீட்டோ அதிகாரம் (veto power) என்று கூறுவர்.

இதனை வைத்துதான் பல தடவை இஸ்ரேல் என்னும் செல்லப்பிள்ளையை அமெரிக்கா காப்பாற்றி வந்திருக்கிறது. அதாவது இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிராக உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கும்போதெல்லாம் தன்னிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படுத்த விடாமல் தடுத்திருக்கிறது. ஜனநாயகத்தைப்பற்றி வாய்கிழிய பேசுவதெல்லாம் மற்றவர்களுக்காகத்தான் என்பது இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பாதுகாப்பு சபையை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துக்கொண்டு இருக்கிறது.

3. சமூகப் பொருளாதாரச் சபை (Social And Economic Council)
பொதுச்சபையின் பொறுப்பின்கீழ் இயங்கிவரும் இச்சபை, ஐ.நா. சபையின் பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் இதனோடு தொடர்புடைய பணிகளைச் செய்கின்றது.

54 உறுப்புநாடுகளை கொண்டது. பொதுச்சபையின் 3-ல் 2 பங்கு வாக்கு பெரும்பான்பையினால் தேர்ந்தெடுக்கப்படுவர். பதவிக்காலம் 3 ஆண்டு மட்டும்.

4. பொறுப்பாண்மைச் சபை (Trusteeship Council)
சுய ஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இச்சபையில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா இவற்றின் உறுப்பினராகும். தலைமைப்பதவி ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வரும்.

5.பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice)
அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் இந்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. 15 நீதிபதிகள் உள்ளனர். ஆங்கிலமும் பிரஞ்சும் அலுவல் மொழிகள். இந்நீதிமன்றத்தின் கூட்டம் நெதர்லாந்து நாட்டின் திஹேக்கில் நடைபெறும். விரும்பினால் இடம் மாற்றிக்கொள்ளலாம்.

6.செயலகம் (secretariat)
செயலகத்தின் தலைவர் "பொதுச்செயலர்" (Secretary General) ஆகும். இவரே ஐ.நா.வின் தலைமை நிர்வாகி. பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.

தற்போதைய செயலர்:
கோஃபி அனான் (கானா நாட்டைச் சேர்ந்தவர்)

துணை பொதுச்செயலர்:
திருமதி லூயிஸ் பிரச்டீ (கனடா நாட்டைச்சேர்ந்தவர்)

ஐ.நா. பொதுச் செயலாளர்கள் (UN Secretary Generals)
ஐ.நா.வின் பொதுச் செயலாளர்களாக இதுவரை 7 பேர் பதவி வகித்து உள்ளனர். 1945ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா. சபைக்கு 1946ல் முதல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1. டிரைக்வே-லை
இவர்தான் ஐ.நா. முதல் பொதுச் செயலாளர். வருடம் 1946. இவர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்.

2. டாக்காமர்ஸ்க்ஜொல்டு
வருடம்: 1953. இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

3. உதான்ட்
வருடம்: 1961. இவர் பர்மா நாட்டைச் சேர்ந்தவர்.

4. குர்ட் வால்ட்ஹைம்
வருடம்: 1972. இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்.

5. பெரஸ் - டி - கொய்லர்
வருடம்: 1982. இவர் பெரு நாட்டைச் சேர்ந்தவர்.

6. புட்ரோஸ் கலி
வருடம்: 1992. இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்.

7. கோஃபி அன்னன்
வருடம்: 1997 முதல் இன்று வரை பதவி வகித்து வருகிறார். இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர்.

ஐ.நா. அமைப்புக்கள் (UN Associated Agencies)
1.சர்வதேச அணுசக்தி கழகம்.
Intenational Autamic Engery Agency (IAEA)

2.ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசாரக் கழகம்.
United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO)

3.சர்வதேச தொழிலாளர் நிறுவனம்.
International Labour Organsation (ILO)

4.உணவு மற்றும் விவசாய நிறுவனம்.
Food and Agriculture Organisation (FAO)

5.உலகச் சுகாதார நிறுவனம்.
World Health Organisation (WHO)

6.சர்வதேச நிதி நிறுவனம்.
International Monetary Fund (IMF)

7.சர்வதேச சீரமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம்.
International Bank for Reconstruction and Development (IBRD)

8.உலக அளவிலான தபால் கழகம்.
Universal Post Union (UPU)

9.சர்வதேச தந்தி தொடர்புக் கழகம்.
International Telecommunication Union (ITU)

10.உலக வானிலை ஆய்வு.
World Meteorological Organisation (WMO)

11.சர்வதேச கடல் நிறுவனம்.
International Maritime Oraganisation (IMO)

12.உலக அறிவான்மை நிதிக் கழகம்.
World Intellctual Property Organisation (WIPO)

13.சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு.
International Fund for Agriculture Development (IFAD)

14.உலக வணிக அமைப்பு
World Trade Organisation (WTO)

15.ஐ.நா. சர்வதேச குழந்தைகள் கல்வி நிதி அமைப்பு.
United Nations International Children,s Emergency Fund (UNICEF)
முன்பு இப்படி அழைக்கப் பட்ட இந்த அமைப்பு United Nations Childrens Fund என அழைக்கப்படுகிறது.

16.ஐ.நா. மக்கள் தொகைச் செயல்பாட்டு நிதி அமைப்பு.
United Nations Fund for Population Activities (UNFPA)

17.ஐ.நா. மறுவாழ்வளிப்புப் பனிக்கழகம்.
United National Relief and Works Agency (UNRWA)

18.ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம்.
United Nations High Commission for Refugees (UNHCR)

19.ஐ.நா. தொழில் வளர்ச்சி நிறுவனம்
United Nations Industrial Development Organisation (UNIDO)

20. ஐ.நா. வளர்ச்சி திட்டம்
United Nations Development Programme (UNDP)

21.விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி நிறுவனம்.
Intrnational Fund for Agriculture development (IFAD)

22. சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம்.
International Air Transport Association (IATA)

23.சர்வதேச வளர்ச்சிக் கழகம்

24.சர்வதேச நிதிக் கழகம்

Sunday, April 17, 2005

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம்!

பொது மக்களின் ஞாபக சக்தி மிகவும் குறைவு அதைவிடவும் குறைவு அரசியல் வாதிகளின் ஞாபக சக்தி.

1960களில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு அமேரிக்காவுக்கு அதிர வைக்கும் கோரிக்கை ஒன்றை வைத்தது. அமெரிக்கா 1945ல் ஜப்பான் நகரமான ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசியது. மனித சமுதாய வரலாற்றிலே முதன்முதலாக ஒட்டுமொத்த மனித பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் அடாவடி செயலை முழு உலகமும் கண்டித்தது.

அந்த அணுகுண்டை வீசிய பால் டிபேட்ஸ் என்ற அமெரிக்க படைத்தளபதி, ஒரு நாளும் தான் இச்செயலுக்காக எப்போதும் யாரிடமும் பகிரங்கமாக மன்னிப்பையோ அல்லது வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்த தளபதியை தான் 1960ல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்து புதுதில்லிக்கு அனுப்பப்பட்டார். அணுகுண்டை வீசிய படைதளபதியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்ததை கண்டித்து இந்திய கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்க அரசும் இதற்கு செவிசாய்த்து வாபஸ் பெற்றுக்கொண்டது.

அப்போது யாரும் இந்தியாவின் இக்கோரிக்கையால் இருநாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளில் விரிசல் ஏற்படும் என்றும் வெளியுறவு கொள்கைகளின் சுதந்திரம் பாதிக்கப்பட்டதென்றும் கருதவில்லை.

ஆனால் இப்போது மட்டும் நரேந்திர மோடிக்கு கடவுச்சீட்டு (விஸா) அமெரிக்க அரசு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பி.ஜே.பி கட்சியுடன் மற்ற வாய்கிழிய செக்யுலரிசம் பேசும் கட்சிகளும் சேர்ந்து கொண்டு இந்தியதேசத்தின் மான பிரச்சனையாகவும் தேசத்திற்கு நேர்ந்து இழுக்கு போன்றும் மாயை தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த சர்ச்சைக்குள் பிரதமர் மன்மோகன் சிங் வலிய வந்து பாராளுமன்ற அவையிலே அமெரிக்காவின் மேல் அதிருப்தி என்றும் ஜனாநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சருக்கு விஸா மறுப்பு என்பது வேதனையான விஷயம் என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசு சார்பாக வாஷிங்டனை மறு பரிசிலினை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இச்சர்ச்சையில் எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் மௌனமாக இருந்துவிட்டன. கையை கட்டிக்கொண்டு மௌனமாக இவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாஷிங்டன் விஸா வழங்க மறுத்ததை செக்யுலரிசம் விரும்பும் அனைவரும் ஆதரிக்கத்தான் வேண்டும். காரணம் இச்சர்ச்சையில, சட்டஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றவாளிகளை தண்டித்தல், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யாவையும் அடங்கியுள்ளது.

இனவெறி தூண்டும் கிரிமினல்களை தன்னாட்டுக்குள் அனுமதிக்காத செயலை எந்த நாடு செய்தாலும் நம்மை போன்ற மனித உரிமை ஆர்வேலர்கள் வரவேற்கத்தான் வேண்டும். ஏன் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர துடிக்கும் அமெரிக்கா செய்திருந்தாலும் சரியே.

வாஷிங்டன் மோடிக்கு விஸா வழங்க மறுத்திருப்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குறுக்கீடு இல்லை. விஸா வழங்கவோ அல்லது மறுக்கவோ எல்லா நாடுகளுக்கும் உள்ள தனிப்பட்ட உரிமை. வழமையாக இந்தியாவிற்கு வருகை தர விரும்புவர்களின் பல்லாயிர கணக்கான விஸா கோரி வரும் விண்ணப்பங்களை நிராகரித்து கொண்டுதானிருக்கிறது. அதையே தான் அமெரிக்காவும் செய்திருக்கிறது. அமெரிக்காவும் கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர்களோடு செயல்படுபவர்களுக்கும் விஸா வழங்கும் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தது.

வேறெப்போதும் தடி எடுக்காத புதுதில்லி இப்போது மட்டும் மோடிக்கு விஸா வழங்க மறுத்ததை அடிப்படை உரிமையை பறித்தல் என்றும் கொள்கை மீறிய செயல் என்றும் வர்ணித்துள்ளது. விஸா என்பது ஒருவரின் அடிப்படை உரிமையன்று. நவினகால ஹிட்லர் என்று உச்ச நீதி மன்றத்தால் வர்ணிக்கப்பட்ட மோடி, அமெரிக்கா செல்வது தன்னுடைய சொந்த வேலையாக ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்களின் சம்மேளனத்தில் கலந்து கொள்ள தானே தவிர கல்வியாளர்களின் மத்தியில் உரை நிகழ்த்த போகவில்லை.

2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றும், ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தும், இனவெறியர்களை சிறுபான்மையினர் மேல் தூண்டி விட்டும கலவரத்தை கட்டுபடுத்த முடியாமல் பாராமுகமாக நின்ற மோடி அரசின் அட்டூழியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது இந்திய நடுநிலையார்களின் உண்மை கண்டறியும் குழு.

இச்சர்ச்சைக்கு பி.ஜே.பி மேல் அமெரிக்கா கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி என்று சொல்வது முட்டாள்தனம். ஏனென்றால் 2002ல் கலவர உச்சியில் குஜராத் பற்றி எரியும் போது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் வாய் திறக்காமல் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தன. நரவேட்டை முடிந்தப்பின் தன்னை ஜனாதிபதி புஷ்ஷிற்கு நிகராக பீற்றிக்கொண்டவர் தான் மோடி.

அமெரிக்கா தனது மறு அறிக்கையிலும் விஸா வழங்க மறுக்கப்பட்ட முடிவு பி.ஜே.பிக்கோ இந்தியாவிற்கோ எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தியது. தன்னுடைய நடவடிக்கையில் யாதொரு இரட்டை அளவுகோல் இல்லையென்றும் '' மதசுதந்திரத்தை நசுக்குதல் மற்றும் கடுமையாக வரம்பு மீறுதல்' என்ற அடிப்படையிலேயே விஸா வழங்க மறுக்கப்பட்டதென்றும் கூறியது.

இந்தியாவின் மனித உரிமை குழுக்களும் அமேரிக்காவின் மனித உரிமை குழுக்களும் சேர்ந்து மோடியின் இன சுத்தகரிப்பு செயலை http://www.coalitionagainstgenocide.org/ என்ற இணையதளத்தில் தோலுரித்துக் காட்டினார்கள். மேலும் பல வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழுக்கள் ' ''மத துவேஷத்திற்கு திருப்பிவிடப்பட்ட அன்னிய செலவாணி ' என்ற செய்தி அறிக்கையும் தயாரித்து வெளியிட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் க்கு வருகின்ற வெளிநாட்டு பணம் குஜராத் கலவரத்திற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டதென்றும் அலசியது. இனசுத்தகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பு அமெரிக்க கமிஷனின் இரண்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை '' ஒருபக்க சார்புடைய நாடு' என்று அறிவித்தது.

வி.ஆர்.கிருஷ்ணா அய்யர் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் பல இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்ட முழு அறிக்கையைத்தான் அமெரிக்காவின் குடியுரிமை வழங்கல் அமைச்சகம் விஸா வழங்க மறுப்பதற்கு ஆதாரமாக காட்டியது.

மனித இனதிற்கு எதிரான செயலில் ஈடுபட்ட மோடியின் மேல் ஐ.நா சபையின் இனசுத்தகரிப்பு தடை சட்டம் பொருந்தும். கீழ்கண்ட செயல்களில் பகுதியாகவோ முழுமையாகவோ ஏதேனும் ஒன்றை செய்தாலும் என்று அச்சட்டம் கூறுகிறது.

1.ஒரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக கொல்வது...
2. கொடூரமாக உடல் ரீதியான காயத்தை அல்லது மனரீதியான காயத்தை ஏற்படுத்துவது...
3.வாழ்வாதரம் இல்லாமல் அவர்களின் மேல் கடுமையான பாதிப்பை உண்டாக்குவது...

இனசுத்தகரிப்பிலிருந்து சமுதாயத்தை காப்பாற்றுவதும் இனபடுகொலைகளில் ஈடுபடுவோர் எத்தகைய வலிமையுடையவர்களாயிருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிப்பதும் அனைவரின் கடமையாகும். மோடிக்கு ஏற்பட்ட அசிங்கமானது எப்போதே கிடைத்திருக்க வேண்டியது. இறைவன் அநியாயக்காரர்களை சிறிது காலம் விட்டு வைப்பான் இறுதியில் இறைவனின் பிடி இறுக்கமானது. உலகில் மோடியை போன்றவர்கள் எங்கிருந்தாலும் இதே நிலைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே.

சலோபோடன் மிலோசிவிக், பினோட், மோடி போன்ற கொடுங்கோலர்கள் தங்களின் செயலுக்காக வேண்டி விசாரணைக்காக உலகநீதி மன்றத்தின் முன்பு குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டியவர்கள். விஸா மறுப்பு இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றது.

1.குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காலந்தாழ்த்தாமல் நீதி வழங்க வேண்டும்.
2.இத்தகைய சாதீய தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக தேசபக்தியையும் தேசீய சுதந்திரத்தையும் விழுங்கிவிடும் அபாயத்திலிருந்து தடுக்க வேண்டும்.

தேசிய சுதந்திரம் என்பது மக்கள் சுதந்திரம். இதில் சுதந்திரம் என்ற பெயரில் இலை தழை வெட்டுவது போல் மக்களை கொய்வதற்கில்லை.சுயலாபத்திற்காக தேசியம் பேசும் அரசியல்வாதிகள் மக்களின் மறதியில் பிழைப்பு நடத்துகின்றார்கள். நவின அரசியலில் தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி அடைகலமாக இருக்கிறது.

Friday, April 15, 2005

புகைத்தடுப்புச் சட்டங்கள்

புகைப்பழக்கம் பரவுவதற்கு எதிரான பன்னாட்டுப் பிரச்சாரம் முனைப்புப் பெறும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

புகைப்பழக்கத்தால் வரும் நோய்களால் உலகில் ஆண்டுக்கு அரைகோடிப்பேர் இறக்கிறார்கள், இந்த எண்ணிக்கை இன்னும் பதினைந்து ஆண்டுகளில் ஒருகோடிவரை உயரலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

அதிலும் குறிப்பாக, இப்படி இறப்பவர்களில் பெரும்பாலானோர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவலை தரத்தக்க விஷயம்.

போன மாதம் புகைப்பழக்கத்துக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

முக்கிய பொதுஇடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பது போன்ற ஏற்கனவே உள்ள பல்வேறு சட்டங்களை இந்த நாடுகள் செயல்படுத்த வேண்டும். மேலும் பீடி, சிகரெட் தயாரிப்பவர்கள் அந்தந்தப் பாக்கெட்டுகள்மீது கடுமையான எச்சரிக்கைகளை அச்சிட வேண்டும்; விளையாட்டுப்போட்டிகள் நடத்த பீடி, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஸ்பான்சர் விளம்பரம் பெறுவதைத் தவிர்க்கவேண்டும் என்பன இந்த உடன்படிக்கையில் உள்ள விஷயங்கள்.

இவை இந்த நிறுவனங்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கும் விஷயங்கள்தான். இந்த உடன்படிக்கையில் இந்தியா, இலங்கை, பிரிட்டன் உள்ளிட்ட 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா போன்ற சில நாடுகள் கையெழுத்திட்டாலும் இதனை முழுமையாக ஏற்கவில்லை.

நன்றி: பி.பி.சி, லண்டன்

புகைப்பழக்கத்தை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்துவதற்கு இச்சட்டங்கள் உதவாது. வேண்டுமானால் அதிகரிப்பது குறையலாமே தவிர, இப்பழக்கத்தை மக்களிடமிருந்து அகற்ற முடியாது.

சுற்றுப்புறம் சிகரெட் புகையினால் மாசுபடிந்து மனிதர்களுக்கு தோற்றுவிக்கும் ஆஸ்மா போன்ற நோயினால் குழந்தைகளும் முதியோர்களும் பாதிப்படைவதும் அவஸ்தையுறுவதும் சொல்லி மாளாது.

மிகக்கண்டிப்பான வீட்டிலும் கூட ஒழிந்து மறைந்து மாடி போன்ற இடங்களிலும் பள்ளிகளில் கழிவறைகளிலும் தம் அடிப்பதை எல்லோரும் அறிவோம்.

சிறுக சிறுக நிறுத்தலாம் என்று சொன்ன எத்தயோ பேர் எண்ணிக்கையை கூட்டித்தான் இருக்கிறார்கள். காரணம் "சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது" என்ற கதைதான்.

இப்பழக்கத்தினால் தாமும் மற்றவர்களும் பாதிப்படைவதால், இதற்காக இறைவன் நம்மை தண்டிப்பான் என்ற நம்பிக்கையிருந்தால் ஒழிய இப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட வாய்ப்பில்லை.

நண்பர்களே உங்களின் கருத்து என்ன?

Tuesday, April 12, 2005

தமிழ் இலக்கணம் கசக்குமா? (பகுதி 1)

பள்ளி பருவத்தில், தமிழ் வாத்தியார் ஒரு வார்த்தையைச் சொல்லி எத்தனை மாத்திரை என்று கேட்டபோது மாத்திரையாய் கசந்த "தமிழ் இலக்கணம்" இப்பொழுது இனிப்பதற்கு காரணம் நானுமொரு இணைய கிறுக்கன் என்பதால்.

அதிகமானோருக்கு பிரச்சினைகள் சந்திப்பிழைகளிலும் ரகர றகர வேறுபாடுகளிலும்தான். படித்ததை எழுதிப்பார்த்தால் நன்றாக மனதில் பதியும் என்பார்கள். அதனால் எழுதிப்பார்க்கிறேன். சிலேட்டில் அல்ல, வலைப்பதிவில்.

நான் மாணவன், நீங்கள் வாத்தியார். தவறு இருந்தால் சொல்லுங்களேன்.

ரகர றகர வேறுபாடுகள்

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு / பாதிப்பங்கு
அறை - வீட்டுப்பகுதி / கன்னத்தில் அடி

ஆர - நிறைய (வயிறார உண்)
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

இரந்தான் - யாசித்தான்
இறந்தான் - செத்தான்

இரை - தீனி / இறைந்துபேசு
இறை - கடவுள் / நீர்இறை

உரை - சொல், பொருள்கூறு
உறை - தலையணை உறை, அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

ஏரி - நீர்நிலை
ஏறி - மேலே போய்

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி, இறைச்சி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம் / வெகுளி

கரை - கடற்கரை
கறை - மாசு

குரை - (நாய் குரைக்கும்)
குறை - குறைபாடு / சுருக்கு

கூரிய - கூர்மையான
கூறிய - சொல்லிய

பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பாரை - கடப்பாரை (Crowbar)
பாறை - கற்பாறை (Rock)

பெரு - பெரிய
பெறு - அடை

பொருப்பு - மலை
பொறுப்பு - உத்தரவாதம்

பொரித்தல் - குஞ்சு பொரித்தல் / வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பொருக்கு - செதிள்
பொறுக்கு - ஒவ்வொன்றாக எடு

மாரி - மழை
மாறி - மாறுதலடைந்து

வருத்தல் - துன்புறுத்தல்
வறுவல் - கிழங்கு வறுவல்

(தொடரலாம்..)

Wednesday, April 06, 2005

ஜாபர் அலியிடம் சில கேள்விகள்!

நேரமின்மை காரணமாக நேசகுமாருடனான விவாதங்களில் பங்குபெற முடியாமலிருந்த என்னை சகோதரர் ஜாபர் விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். சில உண்மைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம்.

திருமறை வசனம் 4:140 சொல்கிறது "(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்" என்று.

நேசகுமாரின் கருத்துக்களை சற்று கவனித்துப் பார்த்தால் அவற்றுள் நிராகரிப்பு, பரிகாசம் ஆகியவற்றை விட, இஸ்லாம் குறித்தான தவறான புரிதல்களும் அது பற்றிய விவாதங்களுக்கு முஸ்லிம்களை அழைப்பதும் புலப்படும்.

இஸ்லாம் குறித்தான அவரது தவறான புரிதல்கள் வாசகர் முன் வைக்கப்படும்போது, முஸ்லிம்கள் அவற்றை இரண்டு வழிகளில் எதிர் கொள்ளலாம்.
1) 'நமக்கென்ன' என்று பேசாமல் இருக்கலாம், அல்லது,
2) அவரது புரிதல்கள் தவறானவை என ஆதாரங்களுடன் கண்ணியமான முறையில் விளக்கலாம்.

முதல் வழியை தேர்ந்தெடுத்தால், நேசகுமாரின் வாதங்களுக்கு யாருமே பதிலளிக்காத சூழ்நிலையில், அவர் சொல்வதே சரி என வாசகர்கள் தீர்மானிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மாறாக, இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்தால் வாசகர்களுல் ஒரு சிலருக்காவது இஸ்லாம் குறித்த சரியான விளக்கங்கள் சென்றடைய வாய்ப்பு இருக்கிறது.

திருமறை வசனம் 16:125 கூறுகிறது: "(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச்சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!"

சகோதரரே! இவற்றுல் நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்?

திருமறை வசனம் 4:140 சொல்கிறது "(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' .

போதுமான விளக்கங்கள் இல்லாமல் திருமறை வசனங்களை பிறர் முன் எடுத்து வைத்து அவை தவறாக விளங்கிக்கொள்ளப் படுவதற்கும், நிராகரிக்கப்படுவதற்கும், பரிகசிக்கப்படுவதற்கும் காரணமாக அமைவது முறைதானா சகோதரரே? சுனாமி பேரிடர் சமயத்தில் நீங்கள் எடுத்து வைத்த வசனங்கள் எத்தகைய விமரிசனங்களுக்கு ஆளானது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையை விட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்து விட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

சகோதரரே! நீங்கள் தமிழ்மணம் மன்றத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் வாதத்தின்படி அங்கு திருமறை வசனங்கள் நிராகரிக்கப்படுகிறது, பரிகசிக்கப்படுகிறது. மேற்கண்ட திருமறை வசனத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு 'சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுபவராக' இருந்தால், தமிழ்மணத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று அறிவித்து விட்டு இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டுமே?உங்களை வெளியேறுங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் முன் வைக்கும் கருத்துக்கள் சரிதானா? என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை யோசனை செய்து பார்க்கத்தான் சொல்கிறேன்.

இயற்கை சீற்றம் இறை சித்தமா? என்ற கேள்வியில் தொக்கி நிற்பது ஈமானின் பலவீனம் என குறிப்பிட்டிருந்தீர்கள். தயவு செய்து தலைப்புடன் நின்று விடாமல் முழு கட்டுரையையும் நிதானமாக படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் இதற்கு தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறேன்.

வஸ்ஸலாம்
- சலாஹுத்தீன்

Sunday, April 03, 2005

முஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம்

தலைப்பின் விளக்கம்:
முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்.. .. ..

நோக்கம்:
உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமான இஸ்லாத்தில், அதனை பின்பற்றுபவர்கள், கல்வி, மீடியா போன்ற விஷயங்களில் தூரநோக்கு பார்வை இல்லாமல் பின்தங்கியே இருப்பது கசப்பான விஷயமாகும். அதிக நாட்களுக்கு பிறகு "அல்-ஜஸீரா" என்ற அரபி செய்தி சேனல் வந்தாலும் அதனையும் முடக்குவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. அப்படியிருந்தாலும் தற்போது அரபிமொழி சேனல்கள் பல வந்துவிட்டன.

ஆனால், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இதுவரை முழுநேர ஆங்கில சேனல் இல்லை. மீடியா என்பது சேனலோடு இல்லாமல் இணையம் மற்றும் இன்னும் பல்வேறு வழிகளில் வியாபித்து இருப்பதும் இனி வியாபிக்க இருப்பதும் அனைவரும் அறிவர். ஆகவே முஸ்லிம்களை தற்போதைய துயில் நிலையிலிருந்து எழுப்பி தன்னைத்தானே சீர்தூக்கி பார்த்து பட்டை தீட்டிக்கொள்வதற்காக நாம் விவாதிக்கலாமா?

கருத்துகளை பதிவு செய்யும் முறை:
1) ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளை பல மறுமொழிகளாக இடலாம்.
2) கருத்துகளை தனி பதிவாக இடவேண்டாம். மறுமொழியாக மட்டுமே இடவேண்டும்.
3) மற்றொருவர் இட்ட கருத்துகளை மறுக்கலாம் அல்லது ஆமோதித்து அதற்கான மேலும் ஆதாரங்களை கொண்டுவந்து வலு சேர்க்கலாம்.
4) ஒரே காரணத்தைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் பல காரணங்களை முன்வைக்கலாம்.
5) கருத்துகளை தாக்கலாம். கருத்து தெரிவித்தவரை அல்ல.
6) நகைச்சுவைக்கு அனுமதி உண்டு. அளவுக்கு மீறினால் மறுமொழியில் கத்தரி வைக்கப்படும்.
7) கருத்துகளை வைப்பது மட்டுமே உங்களின் பணி. தீர்ப்பு மக்கள் கையில்.

இனி உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை தொடங்கலாம்.

Notes:
1) தமிழ்முஸ்லிம் விவாத அரங்கில் உறுப்பினராக இணைந்து எழுது விரும்புகிறவர்கள் tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும்.
2) வாசகனாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து tamilmuslim@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். தேர்வு செய்யப்பட்டால் "வாசகன்" என்ற பெயரில் அக்கருத்துகள் பதிவு செய்யப்படும்.

Saturday, April 02, 2005

நபிவழி ஓர் வரலாற்றுப் பார்வை!

நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழி என்றால் என்ன? நபி வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? நபி வழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனை என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

நபி வழிக்கு அரபியில் ''சுன்னத்'' என்று சொல்லப்படும். இந்தச் சொல்லிற்கு அகராதியில் பொதுவாக ''வழி'' என்று பொருள் இருந்தாலும், இஸ்லாமிய பழக்கத்தில் அது நபி வழிக்குத்தான் பயன் படுத்தப்படுகிறது. அதாவது நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளுக்கு ''சுன்னத்'' என்று சொல்லப்படுகிறது. இவைகளுக்கு ''ஹதீஸ்'' என்று ஒரு மறு பெயர் சொல்லப்படுவதுண்டு, என்றாலும் 'சுன்னத்' என்ற சொல்லிற்கும், 'ஹதீஸ்' என்ற சொல்லிற்குமிடையில் சிறு வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

உதாரணமாக:- ''தனக்கென எதை விரும்புகிறானோ, அதை தனது சகோதரனுக்கும் விரும்பாதது வரை ஒருவன் உண்மை விசுவாசியாகமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ''சொன்னதாக'' அவர்களைப் பற்றி அறிவிக்கப்படுள்ள இந்தச் செய்திக்கு ''ஹதீஸ்'' என்று சொல்லப்படும். இந்தச் செய்தி மூலமாக நமக்குக் கிடைக்கின்ற விஷயம் இருக்கிறதே அது ''சுன்னத்'' அதாவது தனக்கென விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் ஒருவன் விரும்பும்போது நபி (ஸல்) அவர்களின் 'சுன்னத்தை' செயல் வடிவில் பின்பற்றியவனாக ஆகிவிடுகின்றான்.

இதுதான் ''ஹதீஸ்'' என்ற சொல்லுக்கும் ''சுன்னத்'' என்ற சொல்லுக்குமிடையிலுள்ள ஒரு சிறு வேறுபாடு. இவ்விரு சொல்லும் ஒரே பொருளைத்தான் குறிக்கும் என்று சொல்லிக் கொண்டாலும், நன்கு சிந்தித்துப் பார்த்தால் அவ்விரு சொற்களுக்குமிடையில் சிறு வேறுபாடு இருப்பதை உணர முடியும்.

நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியும்.
நபித்தோழர்கள் ஷரீயத் சட்ட விளக்கங்களை திருக்குர்ஆனிலிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதன் விளக்கங்களை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். குர்அனைப் பொறுத்தவரையில் அதிலுள்ள பல வசனங்கள் சுருக்கமானவையாக இருக்கின்றன.

உதாரணமாக:- தொழுகையை எடுத்துக்கொள்வோம், குர்ஆனில் தொழுமாறு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படித் தொழவேண்டும், எந்தெந்த நேரங்களில் தொழ வேண்டுமென்ற விரிவான விளக்கம் அதில் இல்லை. இதுபோன்ற விரிவான, தெளிவான விளக்கங்களை நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுத் தெரிந்து கொண்டார்கள். இவ்வாறே அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்குரிய சட்டங்களைக் குர்ஆனிலிருந்து பெற முடியாதபோது அவற்றின் விளக்கங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் குர்ஆனை மக்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்காகவே நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (திருக்குர்ஆன், 16:44)

(நபியே) மேலும் அவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம். (திருக்குர்ஆன், 16:64)

முஸ்லிம்கள் தமது ஒவ்வொரு மார்க்கப் பிரச்சனைக்கும், நபி (ஸல்) அவர்களை தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக ஆக்கிக் கொள்ளாத வரை நாம் ஒருபோதும் உண்மை விசுவாசிகளாக ஆக முடியாது என்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான்.

(நபியே) உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (திருக்குர்ஆன், 4:65)

மார்க்க சம்பந்தமான எந்தப் பிரச்சனையானாலும் அதனை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயரிலேயே மக்களுக்கு அறிவிக்கிறார்களே தவிர சுய இச்சையாக எதையும் அவர்கள் சொல்வதில்லை. அப்படியே எதுவும் நிகழ்ந்து விட்டாலும் உடனுக்குடன் அல்லாஹ் அதனைத் திருத்திக் கொடுத்த சம்பவங்கள் குர்ஆனிலே காண முடிகிறது.
--------------------------

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான், அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (திருக்குர்ஆன், 3:164)

இவ்வசனத்தின் ஞானம் (ஹிக்மத்) என்று சொல்லப்பட்டிருப்பது ''சுன்னத்'' என்னும் நபி வழியேயாகும் என திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் ஒரு ஹதீஸில் ''நான் வேதமும் கொடுக்கப்பட்டுள்ளேன், அதைப்போன்று ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

அதைப்போன்று ஒன்று என்பதின் பொருள் ''சுன்னத்'' என்னும் நபி வழியான குர்ஆனின் விளக்கமாகும் என அனைத்து ஹதீஸ் விரிவுரையாளர்களும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

''உங்களிடம் ஹதீஸ் வருமானால் அதை குர்ஆனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். குர்ஆனுக்கு ஒத்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை விட்டு விடுங்கள்'' என்று ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது புனையப்பட்ட தவறான ஹதீஸ். இதற்கு ஹதீஸ் நூல்கள் எதிலும் ஆதாரமில்லை. (ஷரஹ் - சுனன் அபூதாவூத்)

நபி வழியை முற்றிலும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்களில் சில..

(நபியே!) நீர் கூறும், ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 3:31

(நபியே!) நீர் கூறும், ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள். 3:32

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். 3:132

எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். 4:13

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். 4:59

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷூஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 4:69.

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. 4:80.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும். 4:170.

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். 5:92

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள். 8:24.

'அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். 24:54.

அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம், இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். 33:31

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். 47:33.

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். 59:7

நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள் இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை தெளிவாக எடுத்துரைப்பதுதான். 64:12.

நபி வழியைப் புறக்கணித்தால் விளைவு என்ன? என்பதை அடுத்து பார்ப்போம்.