Monday, September 03, 2007

இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்



மாதந்தோறும் அந்நஜாத்தில் வரும் கருத்தோவியங்களை இனி இணையத்திலும் பார்வையிடலாம். தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம். பதிவிறக்கம் செய்து அச்சிடலாம். மக்களிடையே சிறு வெளியீடுகளாக பரப்பலாம்.


இணையத்தில் அந்-நஜாத் மாத இதழ்

Sunday, September 02, 2007

ஜெயிக்கப் போவது யாரு?

கவிதை: கே. எம். முஹம்மத்
நன்றி: சமரசம் 16 - 31 ஆகஸ்டு 2007

ஹெச்.ஜி. ரசூலை நீக்கியது சரியா?

கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி முஹமது (ஸல்) அவர்களை எதிரிகள் ஊர்விலக்கம் செய்தனர். ஆனால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய நபி முஹமது (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களையோ, இஸ்லாத்துக்கு விரோதமாக நடந்தவர்களையோ ஊர்விலக்கமோ, மதவிலக்கமோ செய்ததாக நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை. தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்னெப்போதையும் விட அதிகமாக பல கொள்கைப் பிரிவுகள், அமைப்பு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவது, அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைப்பது போன்றவற்றை ஏற்காத பள்ளிவாசல் நிர்வாகிகள், அறிவிப்பு பலகைகளை தொங்கவிட்டு முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜமாஅத் நிர்வாகியாகக் குழுவில் இருந்த போது மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறியவிரும்புகிறோம். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சார நாடு. முஸ்லிம்களிடையே நிலவும் கருத்து மாறுபாடுகளை சகிக்காத முஸ்லிம்கள் மாற்று மதத்தினரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்தக் கோணத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். நான்கு மத்ஹப்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளூம் ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், சுன்னத்துல் ஜமாஅத் பேரவையினரும் குர் ஆன், ஹதீஸ் வழியில் செயல்படுபவர்களை மட்டும் காழ்ப்புணர்வுடன் பார்ப்பது ஏன்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஹெச்.ஜி. ரசூலின் எழுத்துக்களில் 'இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை விட, குர் ஆனில் இறைவனின் கூற்றுடன் முஹமது நபியின் கூற்றும் கலந்துள்ளது என்று எழுதியதும், குர் ஆனின் மாற்றுப் பிரதியாக ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டதும் தான் இஸ்லாமிய விரோதமானவை. இதனைப் புரிந்து கொள்ள குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினருக்குப் போதிய படிப்பில்லை. யார் மீதும் மதவிலக்கமோ அல்லது ஊர் விலக்கமோ செயல்படுத்தக் கூடாது. இது போன்ற வழிகாட்டும் குறிப்பை தமிழ் நாடு வக்ஃப் வாரியம், அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும், அனைத்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

தஸ்லிமா நஸ்ரினை தாக்கியது சரியா?

ஆந்திராவில் ஆபாச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தாக்கியுள்ளனர். இச்செயல் முஸ்லிம்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸ், சிவ சேனா ஆகிய வன்முறையாளர்களின் வழிமுறைக்கும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. நாம் ஒருபோதும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தஸ்லிமா நஸ்ரினுக்கு நம் எதிர்ப்பை சட்டரீதியான வழிகளில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இது போன்ற வன்முறை வழிகளைக் கையாளக் கூடாது. வன்முறையாளர்களை நம் ஆலிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கண்டிக்க முன்வர வேண்டும்.

தாவூத் ஷா இஸ்லாமியப் பெரியாரா?

'இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா' என்ற நூலை டாக்டர் அய்யூப் எழுதி நவமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் தாவூத்ஷாவின் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் எழுதுகிறார். ஓர் அறிஞனின் பணியை மக்கள் ஏற்றுக் கொள்வது இறைவனின் நாட்டம் என்பதை இந்நூலாசிரியர் அறியவில்லை போலும். நான் இந்நூலைப் படித்த வரை இவர் இஸ்லாமியப் பெரியார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளக் இயலவில்லை.

1. தாவூத் ஷா தர்கா வழிபாட்டை விமர்சிக்கிறார். ஆனால் கோயில்களுக்கு நிதியுதவி செய்கிறார். கோயில் நிர்வாகிகள் தரும் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்கிறார்.

2. பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் தாவூத்ஷா நெருங்கிய தொடர்புடையவர் என்று நூலாசிரியர் பல இடங்களில் எழுதுகிறார். பெரியாரை அவர் சந்தித்த ஒரு நிகழ்வோ, பெரியாருடன் அவர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மாநாடோ சான்றுடன் எழுதப்படவில்லை.

3. தாவூத்ஷா தன் குடும்பத்தினர் காதணி விழா, சுன்னத் செய்யும் விழா போன்றவற்றை நடத்த அனுமதிக்கிறார். அவற்றில் கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து பத்திரிக்கை விளம்பரம் வெளியிடுகிறார்.

4. இரு காதியானி அறிஞர்களுடன் இவருக்குள்ள தொடர்பு காரணமாக 'காதியானி' என விமர்சிக்கப் படுகிறார். இவரை இலண்டனுக்கு அழைத்துச் செல்பவர் ஒரு காதியானி. இவரது ஓராண்டுக் கால லண்டன் வாழ்க்கையைப் பற்றி இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. இது நூலைப் படிக்கும் நம்க்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறைவனே அறிந்தவன்.

5. தாவூத் ஷா ஆபாச நூல்கள் எழுதுகிறார். தன் பத்திரிக்கைகளில் ஆபாசத் தொடர்கதைகளை எழுதுகிறார்.

குர் ஆனுக்கு தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடுவதையும், ஜும் ஆவில் தமிழில் உரையாற்றுவதையும் அக்கால ஆலிம்கள் எதிர்த்ததையும், அவற்றுக்கு எதிராக தாவூத்ஷா போராடியாதையும் இந்நூலின் வழியாக அறிய முடிகிறது. இப்போது இந்நிலை பெருமளவில் மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுதும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றத்துக்கும் தாவூத்ஷாவே காரணம் என்று நூலாசிரியர் கூறுவதை ஒப்புக் கொள்ளமுடியாது.