Sunday, March 13, 2005

இடைச்செருகல்களில் ஷியாக்களின் பங்கு.

நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான்.
"ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்" என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

"அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்" என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

"நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்" என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்)

"தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை" என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்)

தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது "கதீர்ஃகம்" என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து "இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர்.

"யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும்.
அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)
இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)

ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.

இதை அறிந்த சுன்னத் ஜமாத்தில் உள்ள சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.

''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்)

இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள்.

ஒட்டகப் பயணம் - 1

ஒட்டகம் என்றாலே நமக்கு எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சவூதிஅரேபியாதான். சவூதி என்றாலே பாலைவனம், வெயில், பெட்ரோல், என்று பலருக்கு சிந்தனையில் ஓடினாலும், நம்மவருக்கு விசா, வேலை, வெளிநாடு என்ற எண்ணக் கோடுகள் சிந்தையில் ஊருவதும் உண்டு...

வயசான தாத்தா, பாட்டி என்றால் அவங்களுக்கு ஒரு ஏக்கம் கூட உண்டு.. நம்ம புள்ளைங்க கூட வெளிநாட்டுல சம்பாதிக்கிறாங்க வார வருடமோ அல்லது அடுத்த வருடமோ எப்படியாவது சவூதிக்கு போய் ஹஜ்ஜு செஞ்சிட்டு பாவத்தை எல்லாம் தொலைச்சுட்டு வந்துடனும் என்ற நினைவில் காலத்தை உருட்டுபவர்களும் இருக்கிறார்கள்...எனினும் என் சிந்தையில் உதிப்பது கீழே..தொடர்ந்து வாசியுங்கள்...தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஒட்டகப் பயணத்தின் மூலம் சவூதியின் இயற்கை அமைப்பு, வளங்கள், வாழ்க்கை முறை என்று பல செய்திகளை தெரிஞ்சுக்கலாம்... வாங்க..

உலக வரைபடத்தில் மத்திய கிழக்குப்பகுதியில் அதிகமான பரப்பளவை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது அரேபியத் தீபகற்பம்தான். இந்த அரேபியத் தீபகற்பத்தில் உள்ள வளைகுடா நாடுகளிலேயே பெரிய பரப்பளவு கொண்ட நாடும் சவூதிஅரேபியாதான். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியில் ஜோர்டான், ஈராக் மற்றும் குவைத் நாடுகள் அமைந்துள்ளன. கிழக்குப் பகுதியில் கத்தரும், தென்கிழக்குப் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் ஓமன் நாடும் அமைந்துள்ளன. இதன் தெற்கே ஏமன் நாடும், இதன் மேற்குப் பகுதியில் செங்கடலும் அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் மொத்தப் பரப்பளவு 2,240,000 சதுர கிலோ மீட்டர் (864,900 சதுர மைல்கள்). இதன் தலைநகர் ரியாத்.

சவூதி அரேபியாவில் நகரங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மக்கா, மதீனா, தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான், மற்றும் தபூக் என்று கூறலாம். சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், மலைகளுமே ஆகும்.

குறிப்பாக சவூதி அரேபியாவின் தென்பகுதியை ரப் அல்-காலி என்று அழைப்பார்கள். அதாவது இப்பகுதியானது 6,50,000 சதுர.கிலோ மீட்டர்கள் தொடர்ச்சியாக வறண்ட மணலை மட்டும் கொண்ட பாலைவனப் பகுதியாகக் காணப்படுகிறது. இதில் 56,980 சதுர.கிலோமீட்டர் சிவப்பு நிற மணலாக உள்ளது. உலகிலேயே தொடர்ச்சியான மணலைக் கொண்ட பெரிய பாலைவனமாக இருப்பது ரப் அல்-காலி என்ற சவூதியின் தென்பகுதிதான். உலக வரைபடத்தில் இதை எம்ட்டி குவார்ட்டர் (Empty Quarter) என்று கூட குறிப்பிட்டிருப்பார்கள்.

சவூதிக்கு வான்வழிப் பயணத்தில் வந்தவர்கள் முதன்முதலில் இந்த மணல் கொண்ட பாலைவனமும், மரம், செடி, கொடி, புற், பூண்டு அற்ற மலைகளும் கண்டு வியக்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.

சவூதி அரேபியாவின் உயரமான மலைப் பகுதி என்றால் ஜபல்-சவ்தா என்ற இடம்தான். 3,133 (10,279 அடி) மீட்டர் உயரம் கொண்டது. இது சவூதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கிழக்குப் பகுதியான அல்-ஹஸா மிகவும் தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. அது மிகவும் பெட்ரோல் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. பெட்ரோல் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிப்பது சவூதி அரேபியா என்பது இங்கே குறிப்பிட உகந்தது.

மழை என்பது இங்கே அறிதறிதாய் பொழிவதும் உண்டு. சில சமயம் அது அபாயகரமாய் பெய்வதும் உண்டு.

சவூதியின் தட்பவெட்ப நிலையை எடுத்துக்கொண்டால் உச்சகட்டமான வெயிலும், வரண்ட காற்றுமேயாகும். சவூதியின் தலைநகர் ரியாத்தில் வெப்பநிலையை எடுத்துக்கொண்டால் சராசரியாக ஜனவரி மாதம் முதல் கொண்டு ஜுன் மாதம் வரையிலும் 14.40 செல்சியஸ் முதல் 420 செல்சியஸ் வரையாகும். இருப்பினும் ஜித்தாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 28.80 செல்சியஸ் முதல் 30.60 செல்சியஸ் வரையாகும். இந்திய தட்பவெட்பநிலைக்கு சற்று பொருத்தமாக அமைந்துள்ளது எனில் அது ஜித்தாவின் தட்பவெட்பநிலையே ஆகும். வருடம் முழுவதும் வறண்ட தட்ப வெட்பநிலையே நிலவுவதால் மழையானது வருடத்திற்கு 3 செ.மீட்டருக்கும் குறைவாகவே பொழியும். மற்றபடி சவூதியில் எந்தவிதமான ஜீவநதிகளோ, ஏரிகளோ கிடையாது. நல்ல நீர்நிலைகளோ கிடையாது.

ஒரு இனிய பயணத்தை நோக்கிய ஒட்டகம்... இதுபோன்ற ஒரு சூழலில்... பயணத்தைத் துவங்குமுன், அடுத்த பகுதியில் சவூதியைப் பற்றிய இன்னும் பல செய்திகளைப் பார்த்துவிட்டு தொடரலாம் என்றிருக்கிறேன்.

''நீங்கள் வளமான பகுதியில் பயணம் செய்தால் ஒட்டகம் மேய்வதற்காக அதன் பங்கைக் கொடுங்கள். வறண்ட பகுதியில் பயணம் செய்தால் பயணத்தை விரைவுபடுத்துங்கள் (நீங்கள்) போய்ச் சேர வேண்டிய இடத்தை விரைந்து சென்றடையுங்கள். நீங்கள் பயணத்தில் இரவில் எங்காவது தங்கினால் வழிப் பாதையை விட்டும் அகன்று தங்குங்கள். ஏனெனில் வழிப்பாதை கால்நடைகள், விஷஜந்துகள், தங்கும் இடமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

வாருங்கள்! படியுங்கள்! மகிழுங்கள்! - கருத்துக்களைத் தெரியுங்கள்.
இன்ஷாஅல்லாஹ் - சந்திப்போம் மீண்டும் -

வஸ்ஸலாம்.

மாலிக் கான்.

Thursday, March 10, 2005

நீ எங்கே!...எங்கே!

காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு:

ஒரு பக்கத்தை உடைய "யூசுஃப் இஸ்லாம்" அவர்களுக்கு பத்திரிகைகள் நஷ்ட ஈடு கொடுத்த செய்தியை தாங்கிய எனது பதிவு காணாமல் போய்விட்டது. காணாமல் போகும்போது கறுப்பு மற்றும் நீல கலரில் எழுதப்பட்டிருந்தது. கண்டுபிடித்தால் ஏன் காணாமல் போனது என்று தெரிந்துக்கொண்டு அதனை மட்டும் தெரிவிக்கவும்.
-சலாஹுத்தீன்-

மேலே நான் குறிப்பிட்டிருந்தது. கதை கலந்த நிஜம். சற்று முன் சலாஹுத்தீன் அவர்கள் "யூசுஃப் இஸ்லாம் அவர்களுக்கு பத்திரிகைகள் நஷ்ட ஈடு தொகை கொடுத்தது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார். தற்செயலாக அவர் பதிந்த அதே நேரத்தில் நான் இணைப்பில் இருந்ததால் தெரிந்தது. சிறிது நேரத்தில் அது காணாமல் போய்விட்டது.

காணாமல் போகும் என்று தெரிந்ததால் தொடுப்பினை மட்டும் எடுத்துவைத்துக்கொண்டேன். எழுதுவதற்கு எனக்கும் ஒரு விஷயம் வேண்டுமல்லவா.

அவரின் கட்டுரை கீழே:
-------------------------------------------------------------
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!(மார்ச் 8-ல் http://islamanswers.blogspot.com/ -ல் பதியப்பட்ட இத்தகவல் காணாமல் போய்விட்டது. அதையே இங்கு மறுபதிவு செய்கிறேன்.)

இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சுற்றி வருகிறார். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் உருவாக்கி அறப்பணிகள் செய்து வருகிறார். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இந்த இழப்பீட்டை அவருக்கு அளிக்க வேண்டிய நிலை அப்பத்திரிக்கைகளுக்கு ஏற்பட்டது.

இது பற்றி யூசுஃப் இஸ்லாம் கூறியதாவது: "தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையும், தி ஸன் பத்திரிக்கையும் என்னைப் பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இனி எழுதுவதில்லை என்றும் இதற்கான சட்ட நடவடிக்கைக்குரிய எனது செலவு தொகையோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தருவதாகவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இப்பொதெல்லாம் முஸ்லிம்களைப் பற்றி பொய்யாகவும் அவதூறாகவும் செய்திகளை வெளியிடுவது மீடியாவுக்கு மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்விஷயம் எனக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிட்டதோடு, நான் செய்து வரும் அழைப்புப்பணி, கல்விப்பணிகளுக்கு இடையூறு உண்டாக்கிவிட்டது. இவ்விதம் இழைக்கப்பட்ட தீய விளைவை நேர் செய்வது பெரும்பாலும் சிரமமானதொன்றாகும்" என்று கூறினார் யூசுஃப் இஸ்லாம்.

நன்றி: நம்பிக்கை மாத இதழ் மார்ச் 05
-----------------------------------------------------------------

சப்ஜெக்ட் பெரிதாக இருந்தால் இதுதான் நிலைமை. இதனைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணத்தில் பேச்சு அடிப்பட்டிருக்கிறது.

பிரச்சினை தீர்க்க வழிகள்:
1) தமிழ்மணத்தில் பதிவு செய்த வலைப்பதிவுகளில் பதிந்த கட்டுரைகள் காணாமல் போய்விட்டால் அதனுடைய தொடுப்பினை தேதிவாரியாக கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிற பகுதிக்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு மீண்டும் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யும்போது சப்ஜெக்ட் முன்பு போல் பெரிதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காணாமல் போன விஷயத்தை குறிப்பிட்டு அதனுடைய தொடுப்பினை கொடுத்தால் வாசகர்கள் சடைவடைய மாட்டார்கள்.

2) தமிழ்முஸ்லிமில் காணாமல் போனால் நிர்வாகியை திட்டாமல் மீண்டும் பதிந்துவிடுங்கள்.

அன்புடன்
அபூ உமர்

(இஸ்லாம் ஆன்சர்ஸ் வலைப்பதிவில் மறுபதிவு செய்யுமாறு இதன்மூலம் சலாஹுத்தீனை கேட்டுக்கொள்கிறேன்).

காணாமல் போன இஸ்லாம்ஆன்சர்ஸ் பதிவின் தொடுப்பு கீழே:
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!

Tuesday, March 08, 2005

மத்திய பட்ஜட் தாயாரிப்பு ரகசியம்

மத்திய பட்ஜட் தாயாரிப்பு பணி, புதுடில்லியில் உள்ள நிதியமைச்சகத்தில் உள்ள "குவாரண்டைன்" என்ற வெளியுலக தொடற்பே இல்லாத கட்டுப்பாடு மிக்க ஒரு பகுதியில் தான் நடைபெறும். இதில் 40 பேர் பணியில் இருப்பர். இந்த 40 பேறும் உண்பது, வேலை செய்வது, உறங்குவது இல்லத்தில் நடக்கும் அனைத்து பழக்க வழக்க கடன்களும் குவாரண்டைனுக்குள் தான். அதிகபட்சமாக 45 நாட்கள் வரை பட்ஜட் தயாரிக்கும் பணி நடக்கும். இந்த குவாரண்டைனைச் சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 28 இன்ஸ்பெக்டர்கள், மப்டி உடையில் இருக்கும் 15 இண்டெலிஜென்ஸ் அதிகாரிகள் பட்ஜட் ரகசிய கசிவுகளை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டுவர். இந்த பணி தொடங்கியதும் இப்பகுதிக்கு விசிட்டர்களோ, செய்தியாளர்களோ, இதர அதிகாரிகளோ வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டு விடும், இந்த குவாரண்டைன் உள்ளே மொபைல் போனா, லேண்ட் போனோ உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் மட்டுமே 40 பேருடனும் நேரடி தொடர்பு கொள்ள முடியும். இந்த குவாரண்டைனை குளு குளு வசதி செய்யப்பட்ட "பாதாள அரங்கு" என்றும் அழைப்பர். குவாரண்டைன் வாசிகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் இருந்து தேவையான அளவுக்கு உணவு வந்து சேரும். ஆனால் வைத்து சாப்பிட தட்டுக்கள் தரப்பட மாட்டாது, ஏனெனில் தட்டின் பின்புறம் சில வசனங்களை எழுதி அந்த தட்டை வெளியில் அனுப்பி விட வாய்ப்பு இருக்கிறது. எல்லாமே காகிதத்தில் ஆனவைதான், இதை கூட சாப்பிட்ட பின் அங்கேயே அழித்து விடக்கூடிய இயந்திரங்கள் உண்டு. ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குறிய அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த பாதாள அரங்கிள் அதிகாரிகள் உழைக்கவும் செய்யலாம் ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் விடியலில் தொடங்கும் பணி, நள்ளிரவு வரை நீடிக்கும். இவ்வாறு 50 ஆண்டு காலமாக இந்த பட்ஜட் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது.
(நன்றி : தினமலர்-வார மாலர்)

தொழுகையின் முக்கியத்துவம் (பகுதி 3)

தொழுகையை விட்டவனின் மறுமை நிலை
அஹ்மத், நஸாயி மற்றும் திர்மிதியில் வந்துள்ள நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் தொழுகையைப்பற்றியே மறுமையில் முதலில் விசாரிக்கப்படும் என்று வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு கர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அடியார்களின் செயல்களில் நாளை முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையாகும். அது சரியாக இருந்தால் மற்ற எல்லாம் சரியாக இருக்கும்.

மற்றொரு ஹதிஸில் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றி சொன்னார்கள்"" யார் தொழுகையைப் பாதுகாத்துப் பேணிக்கொண்டாரோ அது அவர்களுக்கு மறுமையில் ஒளியாகவும் ஆதாரமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கும். யார் அதனை பேணிப் பாதுகாத்துக்கொள்ளவில்லையோ அது அவர்களுக்கு மறுமையில் ஒளியாகவும் ஆதாரமாகவும், பாதுகாவலனாகவும் இருக்காது. மறுமையில் ஒன்றுக்கூட்டப்படும் அந்நாளில் அவர்கள் காருன், பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலஃப் ஆகியோர்களுடன் இருப்பார்கள். (ஆதாரம் : அஹ்மத், திர்மிதி, இப்னு ஹிப்பான்)

யார் இந்த காருன், பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலஃப்? நிச்சயமாக இவர்கள் இஸ்லாத்தின் பெரும் எதிரிகள்தாம் என்பதில் நமக்கு சிறிதுகூட சந்தேகம் இருக்கமுடியாது. இத்தகைய கொடியவர்கள் கொடும் வேதனையை அனுபவித்துக் கொண்டு நரகத்தில் நிரந்தரமாக தங்குவார்கள் என நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய கொடும் நரகத்தில் தொழுகையை விட்டவர்களும் தங்கவேண்டும் என்றால், அது எத்தகைய ஒரு பாவமான செயல் என்பதை நம்மால் உணர முடிகிறதா இல்லையா?.

சுவர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்; குற்றவாளிகளைப்பற்றி விசாரித்தும் கொள்வார்கள். ''உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? "" (என்று கேட்பார்கள்.) அவர்கள் (நரகவாதிகள் பதில்) கூறுவார்கள்; ''தொழுபவர்களாக நாங்கள் இருக்கவில்லை"". (அல்குர்ஆன் 74:40-43)

யாராவது கடமையான தொழுகையைத் தொழாமல் அதன் நேரம் முடிந்துவிட்டால் அவர் நிராகரிப்பாளராகிவிட்டார் என்ற விஷயத்தில் எங்களிடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்று உமர், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் இப்னு ஜபல், அபூஹ{ரைரா (ரலி) மற்றும் மற்ற நபிதோழர்களைத் தொட்டும்; இப்னு ஹாதம் (ரஹ்) அறிவிக்கிறார்கள். இந்த செய்தி முந்திரி இமாம் தங்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் குறிப்படுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பிட்டார்கள், நபி தோழர்களின் ஒரு குழுவும் அவர்களுக்கு பின் வந்தவர்களும் யாராவது கடமையான தொழுகையை தொழாமல் அதன் நேரம் முழவதுமாக முடிந்துவிட்டால் அவர் காஃபிராகிவிட்டார் என்ற முடிவை நம்பியிருந்தார்கள். இந்த முடிவை எடுத்தவர்களில் உமர் இப்னு கத்தாப், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், முஆத் இப்னு ஜபல், ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், அபூதர்தா (ரலி) மற்றும் இப்னு ஹன்பல், ஹக்கம் இப்னு உதைபா, அபூ தாவுத் தயாலிசி போன்ற இமாம்கள் பலர் உள்ளடங்கியுள்ளனர்.

தொழுகையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனமே போதுமானதாக இருக்கும்.

இறைவன் கூறுகிறான்,(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 4:102)

(தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்;. (அல்பகரா : 238, 239)

எதிரிகள் நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலை இருந்தால் கூட தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றபோது, உண்மையான முஸ்லிம் எப்படி தொழுகையை புறக்கணிக்க முடியும்? தொழுகை என்னும் கடமையை உணர்ந்து கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் போது சுவன வாழ்வு என்னும் கண்ணியத்தை இறைவன் பரிசாக தருகின்றான்.

(ஈமான் கொண்டவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்) மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த நேரத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன் 23 : 9)

ஆகவே முஸ்லீமான ஒவ்வொருவருக்கும் தொழுகை இன்றியமையாதது. மேலும் நாம் முஸ்லீமான தாய் தந்தையருக்கு பிறந்ததினால் எப்படியாவது சுவர்க்கம் சென்றுவிடலாம் என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக இறைவனின் கடமையை அறிந்து அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதுதான் சுவர்க்கம் என்னும் ஆடையை நமக்கு போர்த்தி இறைவன் நம்மை கண்ணியப்படுத்துவான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எனவே நாம் தொழுகையை குறித்த நேரத்தில் ஜமாஅத்தோடு நபிவழியில் தொழுது, மறுமை கேள்வி கணக்கில் முதலாவதாக கேட்கப்படும் (தொழுகை பற்றிய) கேள்விக்கு பதிலளிக்க தகுதியுடையோராக ஆக்கி அருள்புரிவானாக ஆமின்.

(தொடரும்)