Saturday, December 10, 2005

குர்பானிச் சட்டங்கள்

குர்பானியின் பிராணிகள்

நபி(ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது.
அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி)
நூல்கள் : திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின் போது 7 பேர் ஒரு ஒட்டகத்தையும், 7 பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம்
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதி,அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

குர்பானி பிராணிகளின் வயது

"முஸின்னத்" என்ற பருவமுடையத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் "ஜத்அத்" பருவமுடைய பிராணிகளை அறுக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா

முஸின்னத் என்றால் 5 வயதான ஒட்டகத்திற்கும் 2 வயது முடிந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும். ஜத்அத் என்றால் 4 வயதான ஒட்டகத்திற்கும் 1 வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும் என இப்னுல் அஸீர் கூறுகிறார்கள்.

குர்பானி கொடுப்பது ஒட்டகமாக இருந்தால் அது 5 வயது முழுமையாகியதாக இருக்கவேண்டும். ஆடுமாடுகளாக இருந்தால் அவை இரண்டு வயதை முழுமையாகியதாக இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாதிருப்பின் இது போன்ற வயதில் பிராணி கிடைக்காதிருப்பின் நான்கு வயது முடிந்த ஒட்டகத்தையோ, ஒரு வயது பூர்த்தியடைந்த ஆட்டையோ, மாட்டையோ குர்பானி கொடுக்கலாம்.

பிராணிகளை நன்கு பராமரித்தல்

நாங்களும், இதர முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியைக் கொழுக்கச் செய்வோம்
அறிவிப்பாளர் : உமாமா (ரலி)
நூல்கள் : புகாரி

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள், பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். தற்போது மக்கள் பெருமைக்காக செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. (அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது) என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அதாஉ இப்னு யஸார் (ரலி)
நூல்கள் : திர்மிதி, இப்னுமாஜா, அல்முஅத்தா

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் "கல் நெஞ்சன்" என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்) என் அண்டைவீட்டார் என்னை "கஞ்சன்" என்கின்றனர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : இப்னுமாஜா

குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்

கொம்பில், காதில் பாதி அளவோ அல்லது அதை விட கூடுதலாகவோ உடைந்த, அறுபட்டவைகளை (ஆடு, மாடுகளை) குர்பானி கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

நன்கு வெளியில் தெரியும் படியான நோய், நன்கு வெளியில் தெரியும் படியான நொண்டி, கால் எலும்புக்குள் மஜ்ஜை இல்லாத அளவுக்கு ஒடிந்த கால் ஆகிய நான்கு பிராணிகள் குர்பானி கொடுக்க அனுமதிக்கப்படாதது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா

முழுமையாக காதில்லாதவை, அடியோடு கொம்பில்லாதவை, பார்யோ தெரியாதவை, பலவீனத்தால் தானாக எழுந்து நடக்க இயலாதவை, கால் ஒடிந்தவை ஆகியவைகளை குர்பானி கொடுத்திட நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : உத்பா இப்னு அப்தஸ்ஸீலமிய்யி (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவுத்

கொம்பில் பாதி ஒடிந்த பிராணி.
காதில் பாதி அறுப்பட்டது.
தெளிவாகத் தெரியும் படியான மாறுகண் உள்ளவை.
தெளிவாகத் தெரியும் நோய் உள்ளவை.
நன்கு தெரியும் படியான நொண்டி.
கால் எலும்பு முறிந்து விட்ட நொண்டி.
காதில்லாதவை.
கொம்பில்லாதவை.
பார்வையில்லாதவை.
தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை.
இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக்கூடாது.

காயடிக்கப்பட்ட பிராணிகள் கூடும்

காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ராபிஉ (ரலி)
நூல்கள் : அஹ்மத், ஹாகீம்

இரண்டு பெரிய கொம்புகளுடைய நன்கு கொழுத்த இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, பைஹகீ, ஹாகீம்

அறுக்கும் நேரம்

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன். தொழுதுமுடித்து நபி(ஸல்) அவர்கள் திரும்பிய போது, அங்கே எலும்புகளும், அறுக்கப்பட்ட குர்பானி பிராணிகளும் கிடந்தன. தொழுகை முடியும் முன்பே இவை அறுக்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் "தொழும் முன்பு அறுத்தவர் அதே இடத்தில் வேறு ஒன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுக்கவில்லையானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜீன்துப் இப்னு ஸீப்யான் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

தொழும் முன் குர்பானி கொடுத்தால் (அதற்கு பகரமாக) மீண்டும் அறுக்கட்டும் என்று ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்


அறுக்கும் போது கூற வேண்டியவை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளுடைய இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த இரண்டு ஆடுகளின் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டு "பிஸ்மில்லாஹ்" என கூறி "அல்லாஹுஅக்பர்" என்று கூறியும் அவ்விரண்டையும் தன் கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

அறுத்த பிறகும் துஆச் செய்யலாம்

ஆயிஷாவே! கத்தியை கொண்டு வா! அதை கல்லில் நன்கு தீட்டு! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் ஆட்டைப் பிடித்தார்கள். அதை சாய்த்து படுக்க வைத்தார்கள். பின்பு அறுத்தார்கள். பின்பு "பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆல முஹம்மதின், வமின் உம்மதி முஹம்மதின்" என்று கூறினார்கள். குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத்

ஒட்டகத்ததை நிற்க வைத்து அறுக்க வேண்டும்

ஒரு மனிதர் ஒட்டகத்தை படுக்க வைத்து அறுப்பதைக் கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், "அதை நீ எழுப்பி நிற்க வைத்து முஹம்மது (ஸல்) அவர்கள் வழியில் அறுப்பீராக!" என்றார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி இறைச்சியை உண்ணலாம், சேமிக்கலாம்

மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை உண்ண நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். பின்பு உண்ணுங்கள், சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

உரிப்பவருக்கு குர்பானி இறைச்சியோ தோலையோ கூலியாக தரக்கூடாது

நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகங்களை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். அதன் இறைச்சி, தோல், அதன் மீது கிடந்த (கயிறு போன்ற) பொருட்களை தர்மம் செய்யுமாறும், அதை உரித்தவருக்கு அவற்றில் எதையும் கூலியாகக் கொடுக்கவும் கூடாது என்றும் கட்டளையிட்டனர். நாங்கள் அதற்கு தனியாக கூலி கொடுப்போம்.
அறிவிப்பாளர் : அலி (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை

உங்களில் குர்பானி கொடுக்க எண்ணியவர், துல்ஹஜ் பிறையை கண்டால் அவர் தமது நகங்களை, மயிர்களை (குர்பானி கொடுக்கும் வரை) களையக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உம்முஸலாமா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவுத்

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்

அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : இப்னு முத்இம் (ரலி)
நூல்கள் : இப்னுஹிப்பான்

No comments: