Tuesday, November 11, 2008

ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு


ஓபாமா ஆலோசகரின் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு - இந்திய அமைப்பு அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.
சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.
இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.
எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.
தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.
சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.
புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
புஷ்- ஓபாமா முதல் சந்திப்பு:
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாரக் ஓபாமா, முதல் முறையாக தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா அபார வெற்றி பெற்றுளளார். இதையடுத்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் அவர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவர் முதல் முறையாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். பாரக் ஓபாமா, அவரது மனைவி மிச்சல் ஓபாமா ஆகியோரை, புஷ் தம்பதியினர் வாசலி்ல நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் புஷ்ஷும், ஓபாமாவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புஷ்ஷை, ஓபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
Source: Oneindia நன்றி: AOL செய்திகள்

No comments: