Sunday, July 16, 2006

சவூதி அரேபியாவின் லேபர் லா

சவூதி அரேபியாவின் திருத்தியமைக்கப்பட்ட புதிய லேபர் லா (தொழிலாளர் சட்டங்கள்) அமலாக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் 2006, சவூதி அரேபியாவின் புதிய திருத்தி அமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்த புதிய லேபர் லா – வின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. புதிய லேபர் லா-வின் சில அம்சங்கள் பின்வருமாறு.

வெளிநாட்டு பணியாளர்கள் அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் வரையிலான செலவுகள், இகாமா புதுப்பித்தல், வொர்க் பர்மிட் மற்றும் அதைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிப்பிக்கத் தவறினால் அதற்கான தண்டத் தொகை போன்ற அனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களைச் சார்ந்தது ஆகும். இதற்கான செலவுகளை நிறுவனம் பொறுப்பேற்காது.

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது (Sponcership Transfer) அதற்கான செலவுகளை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு இறந்துவிட்டால், அவர்கள் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் செலவு நிறுவனத்தைச் சார்ந்தது. இது குறித்து அவர்களின் ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்தவர்களின் பயிற்சி காலமானது, எல்லா வேலை நாட்களும் கணக்கிடப்படும். இதில் பண்டிகை விடுமுறைகள், நோய் விடுப்பு மற்றும் வாரவிடுப்புகளும் கணக்கிடப்பட்டு பயிற்சி காலத்தில் சேர்ப்பிக்கப்படும்.

உடல் ஊனமுற்றோர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சதவிகிதம் 2 முதல் 4 ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய லேபர் லா-வின் படி பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணியானர்களின் வருட விடுப்பு நாட்கள் 21 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சலுகை 5 வருடம் ஒருவர் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மட்டுமே ஆகும்.

ஒரு நிறுவனத்தில் 2 வருடம் ஒருவர் பணியாற்றியிருந்தாரேயானால் அவர் ஹஜ் என்ற புனித யாத்திரை செல்ல 10 முதல் 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுப்பதற்குத் தகுதிபெற்றவராவார்.

நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படிப்பவர்களுக்கு, அவர்களின் தேர்வு காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிறுவனம் அளிக்க வேண்டும்.

மேலும் பணியாளர்கள் ஒரு வருடத்தில் 20 நாட்கள் சம்பளம் இல்லாமல் நிறுவனத்தின் ஒப்புதலுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால் தக்க மருத்துவச் சான்றிதழுடன் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய நோய் விடுப்பு (Medical Leave) எடுத்துக்கொள்ளலாம். 60 நாட்கள் நோய் விடுப்பு எடுக்க நேரிட்டால் மூன்றில் ஒரு பகுதி சம்பளம் கொடுக்கப்படும். 60 நாட்கள் நோய்விடுப்பில் 30 நாட்களுக்கு சம்பளம் இல்லாமலும் இருக்கலாம்.

இப்புதிய லேபர் லா - பெண்களுக்கு அதிக சலுகைகளை அளிப்பதாக உள்ளன. அவை, ஒரு நிறுவனத்தில் பெண்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்குண்டான ஈட்டுத்தொகை நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் திருமணத்தின் போதும், மகப் பேறுகாலத்தின் போதும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும்.

50 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்க குழந்தைக் காப்பகங்கள் அந்த நிறுவனம் அமைத்துத்தர வேண்டும். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் அமைச்சகம் (Ministry Of Labour) தலையிட்டு குழந்தைகள் காப்பகம் அமைத்துத்தரும்.

லேபர் லா- 14வது பிரிவின் படி கிழக்குப் பிராந்திய தொழிலாளர் அலுவலக இயக்குனர் முஹம்மது அல் ஹம்தான் கூறுகையில் தொழிலாளர் சங்க அலுவகங்களுக்கு (Labour Offiice) அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார். லேபர் அலுவலகங்களில் பெண்களையும் வேலைக்கு நியமனம் செய்யலாம் என்ற புதிய விதியையும் தெரிவித்தார்.

கவுன்சிலர் யாஸிர் இமாம் அல்-கந்தூர் கூறுகையில் இப்புதிய லேபர் சட்ட திருத்தங்கள் முதலில் இருந்த பிரிவு – 16ன் கீழ் அமைந்த 245 ஷரத்துக்கள் அனைத்தையும் இது நிறைவு செய்யும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தப் புதிய லேபர் சட்டத்திருத்தங்கள் பணிபுரிபவருக்கும், பணியில் அமர்த்துபவருக்கும் இடையே பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

-மணவை. அஜீஸ். M.A.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

No comments: