Monday, October 17, 2005

இன்னொரு குஜராத் உருவாகிறது!

அண்மையில், குஜராத் மாநில அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. இந்தி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம். ஆங்கில ஏடுகளில் அரைப் பக்க விளம்பரம்.

Image hosted by TinyPic.com

நர்மதா நதியில், முதல்வர் நரேந்திர மோடி நிற்கிறார். ஒரு சொம்புத் தண்ணீரை நதியில் ஊற்றுகிறார். அந்தத் தண்ணீர், புனிதமான சரஸ்வதி ஆற்று நீராம். அந்த ஆறு எங்கே இருக்கிறது? அப்படி ஓர் ஆறு இருந்ததாக வேதங்கள் சொல்கின்றன. கண்டவர்களும் இல்லை. நீராடியவர்களும் இல்லை. சொம்புத் தண்ணீரை ஊற்றி, மோடி ஏதோ சங்கல்பம் செய்கிறாராம். எத்தனை கோடி செலவு? அவருடைய இந்து ராஜ்யத்தில், இப்படி இல்லாத நதிகளெல்லாம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.

குஜராத் சட்டமன்றக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுக்கு ஒரு பலூனைப் பறக்கவிட்டுக் கொண்டு வந்தனர். நரேந்திர மோடியின் திட்டங்களெல்லாம் பலூன் திட்டங்கள்தான். தொட்டால் வெடித்து விடுமென்று சட்டமன்ற வாயிலில் வெடித்துக் காட்டினர்.
அவர்கள் எதற்காகப் பலூன் பவனி நடத்தினர்? மாநிலம் முழுமையும் நவராத்திரி விழாக் கொண்டாட, மோடி நாற்பது கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். தன்னை விட்டு விலகிப் போகும் இந்துத்வ சக்திகளை இழுத்துப் பிடிக்க, கஜானாவைக் காலி செய்கிறார்.

இன்னும் ஆயிரமாயிரம் கிராமங்களுக்குக் குடி தண்ணீர் வசதி இல்லை. சாலை வசதி இல்லை. இந்த நிலையில், நாற்பது கோடி ரூபாய் செலவில் நவராத்திரி விழாவா? என்று காங்கிரஸ் கேட்கிறது. நியாயம்தானே? குஜராத்தில் காங்கிரஸ§க்கு உயிர் வந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரங்களில் இஸ்லாமிய மக்கள் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டனர். கிராமப்புறங்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்களுடைய வீடு, வாசல்களை இன்று வரை சங் பரிவாரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது அந்தப் பரிவாரங்களை மகிழ்விக்க, நவராத்திரி விழா கொண்டாட நாற்பது கோடி ரூபாய் வாரி இறைக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம், இன்னொரு குஜராத்தாக உருவாகி வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரியிலிருந்து அத்வானி ரத யாத்திரை தொடங்கினார். விழா மேடையில் அவருக்கு வலது பக்கம் ஓர் இஸ்லாமியப் பெரியவரும் இடது பக்கம் ஒரு பாதிரியாரும் அமர்ந்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவிலிருந்து, அந்த இஸ்லாமியப் பெரியவரை அத்வானி பிடித்துக்கொண்டு வந்தார். ராஜஸ்தான் பயணத்தின்போது ஆஜ்மீர் தர்காவிற்கும் அத்வானி சென்றார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், இஸ்லாமியப் பெரியவர்களை இன்றைய பி.ஜே.பி. முதல்வர் வசுந்தரா ராஜே அழைத்தார். அவர் ஒரு சமஸ்தானத்து மகாராணி. தன்னை நம்பச் சொன்னார். பி.ஜே.பி.க்கு வாக்களிக்கச் சொன்னார். இஸ்லாமிய மக்கள் குழம்பிப் போயினர். ஆனால், இன்றைக்கு அங்கே, அவர்களுடைய நிலை என்ன?

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி. அம்மணியின் ஆட்சி, கானலில் பெய்யும் மழை. பாலையில் பவனி வரும் நிலவுதான். உண்மையில் அங்கே ஆட்சி செய்வது ஆர்.எஸ்.எஸ்.தான். அதன் தலைவர்கள் பலர் அரண்மனை ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெகுதூரம் விலக்கி வைக்கப்படுகிறார்கள். மெல்லமெல்ல இஸ்லாமியர்கள் எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நிலை அறிய, பிரதமர் மன்மோகன்சிங் ஒரு குழு அமைத்திருக்கிறார். அதன் தலைவர் நீதிபதி ராஜீந்தர் சச்சார். அவருடைய குழு, ராஜஸ்தானில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தது. அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அதிர்ச்சி தரத்தக்கவை.

பில்வாரா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளை விட்டு வந்தால், மீண்டும் திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நகரங்களில் இஸ்லாமியர்கள் சொத்துக்கள் வாங்க முடியாது. அதற்கு பிற சமூகத்தினருக்குக் கடன் உதவி தரும் வங்கிகள், இஸ்லாமியருக்குத் தருவதில்லை.

சொந்தப் பணத்தில் ஜெய்ப்பூரில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க முடியவில்லை. அதற்கான பத்திரங்களோடு சென்றாலும், பதிவு அலுவலகங்கள் பதிவு செய்வது இல்லை. பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் சங்பரிவாரங்கள்தான் ஆட்சி செய்கின்றன. பர்தா அணிந்து வரும் பெண்களுக்குப் பல சரக்கு விற்கக் கூடாது என்பது கடைக்காரர்களுக்கு, அந்தப் பரிவாரங்கள் பிறப்பித்துள்ள கட்டளை. இப்படி அங்கே ஒரு நரகம் உருவாக்கப்படுகிறது.

பி.ஜே.பி. ஆட்சி அமைந்ததும் பள்ளிகளில் உருது மொழி ஆசிரியர்களை நியமிப்பது நின்று போய்விட்டது. இப்போது உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள், இரண்டாவது மொழியாக இன்னொரு மொழியைக் கற்கிறார்கள்.

பில்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் உர்ஸ் ஊர்வலங்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக, அந்த ஊர்வலங்கள் நடைபெறவில்லை. வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் என்று காரணம் கூறி, காவல் துறையே அனுமதி அளிப்பதில்லை.

சங்பரிவார இளைஞர்கள் அனைவருக்கும், விஸ்வ ஹிந்து பரிஷத், சூலாயுதங்களை வழங்கியிருக்கிறது. அந்தச் சூலாயுதங்கள் ஏற்கெனவே குஜராத்தில் ரத்தக் குளியல் நடத்தி விட்டன. இங்கேயும் அவை ரத்த நீராட்டு விழாக்களை நடத்தும். காரணம், இங்கேயும் நீதி நித்திரை போய்விட்டது. ஆஜ்மீர் தர்காவிற்கு வந்து ஆசிர்வாதம் வாங்கிய அத்வானியைக் காணோம்.
தன்னை நம்புங்கள் என்று இஸ்லாமிய மக்களுக்கு வாக்குறுதி அளித்த மகாராணி வசுந்தரா ராஜேயையும் காணோம். இவர்களோடு காங்கிரஸ் கட்சியையும் காணோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது. அப்போது முதல்வராக இருந்த அசோக் கெலாட், இப்போது அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளராக டெல்லியில் வாசம் செய்கிறார். இன்றைக்கும், மக்கள் மன்றத்தில் அவருக்குச் செல்வாக்கு உண்டு. அவர் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

அதனைக் காரணம் காட்டியே ரஜபுத்திரர்கள், ஜாட் இனத்தவர், பிராமணர்கள், இதர முன்னேறிய ஜாதியினரை பி.ஜே.பி. அணி திரட்டியது. அங்கேயும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிகள் நடந்தன. கடைசி நேரத் திருகு தாளங்கள், காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வியைத் தேடித் தந்தன. அத்தோடு, காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. அசோக் கெலாட் போன்று ஒரு தலைவர் இல்லை.

இப்போது, இஸ்லாமிய மக்களுக்கு பி.ஜே.பி. மீது கோபம் கொப்பளிக்கவில்லை. இந்தக் காங்கிரஸ் எங்கே போனது என்று குமுறுகிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதனை மறுப்பதற்கு இல்லை.

மின் கட்டண உயர்வைக் கைவிடக் கோரி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் ஒரு லட்சம் விவசாயிகள், ஒரு வாரம் தர்ணாப் போராட்டம் நடத்தினர். வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியைக் காணோம்.
பி.ஜே.பி. அரசு தங்களுக்குப் பெரும் துரோகம் செய்துவிட்டது என்று ஜாட் இன மக்கள் சல்லடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைக் காணோம்.

இந்தியத் தாய்க்கு இப்போது ஒரு அங்கத்தில் வகுப்பு வெறிப் புற்றுநோய் வந்திருக்கிறது. அந்த அங்கம் ராஜஸ்தான். ஆனால் காங்கிரஸ் கட்சியைக் காணோம். கண்ணில் பட்டால் சொல்லி அனுப்புங்கள்.

நன்றி: குமுதம்.காம்

1 comment:

இப்னு ஹம்துன் said...

முஸ்லிம்கள் யாரையும் நம்பாமல் தங்களுக்குத் தாங்களே எல்லா வழிகளிலும் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இக்கட்டுரையை எடுத்து தந்துள்ள சகோதரர் நன்றிக்குரியவர்.