Thursday, October 19, 2006

கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசன் எச்சரிக்கை

ரசிகர்கள் என்ற போர்வையில் மதத்தின் பெயரால் விஷமத்தனம் செய்ய வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு நவ.7-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி இரண்டு தினங்களுக்கு முன் "வாழும் நபிகள் நாயகம் கமல்ஹாசன் வாழ்க" என சென்னையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந் நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் எனது ரசிகர்கள் என்ற பெயருடன் சில விஷமிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தார் மனம் புண்படும் வகையில் என் பெயருடன் இணைத்து சுவரொட்டிகள் வெளியிட்டுள்ளனர்.

எனது ரசிகர்கள் நற்பணியாளர்களாக தங்களை மாற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. விஷமிகளின் செயல் மத, அரசியல் சார்பற்று இயங்கும் எனது நற்பணி மன்றத்தாருக்கும், மதமோ, அரசியல் சார்போ இல்லாமல் வாழும் எனக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும், என்னையும் மனம் புண்படச் செய்யும் இச் செயல்பாடுகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதும், இனி இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும் அவர்களுக்கு நல்லது.

பல காலமாக மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழும் தமிழகத்துக்கும் அதுவே அவர்கள் செய்யும் சேவையாகும். விஷமிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதைவிட எச்சரிக்கை விடுப்பதே நற்பயன் விளைவிக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

நன்றி: hosuronline
கமல் ரசிகர்கள் போஸ்டருக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு
அக்டோபர் 18, 2006

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நலப் பணிகளை அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில் நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் காணும் நடிப்புலகின் நபிகள் நாயகமே வாழ்த்துகிறோம்! பாலையும் மிஞ்சும் வெள்ளை நிறமே, பாரி வள்ளலும் கெஞ்சும் வள்ளல் குணமே என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ன.

இந்த போஸ்டருக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஹைதர் அலி புகார் கொடுத்தார்.

இதையடுத்து அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இஸ்லாமிய சமூகத்தினர் மனம் நோகும்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டக் கூடாது என்றும் மன்றத்தினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி: thatstamil

Saturday, October 14, 2006

ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பிறப்பால் முஸ்லிம். தமிழ் கவிஞர். இவரது 'மைலாஞ்சி' கவிதைத் தொகுப்பிலேயே, இஸ்லாத்தின் அடிப்படையோடு முரண்படும் பல கவிதைகளை எழுதியிருந்தார். இவரது உலறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர் தன்னை ஒரு மார்க்சிய ஆய்வாளராகக் காட்டிக் கொண்டாலும், பின் நவீனத்துவ அடிப்படையில் இஸ்லாத்தை அணுகி கட்டுரைகள் எழுதுவதாகக் கூறிக் கொண்டாலும், ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தர்கா வழிபாட்டை ஆதரித்தும், இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டை விமர்சித்தும் எழுதுகிறார்.

தர்கா வழிபாடு, கோயில் வழிபாட்டை ஒத்திருப்பதாக முஸ்லிம் அறிஞர்கள் விமர்சிப்பதற்கு, இவர் 'ஹஜ்ஜில் ஒட்டகங்களை பலி கொடுப்பது, கோயில்களில் ஆடு பலியிடுவதை ஒத்திருப்பதாக உலறுகிறார். இவர் தர்கா வழிபாட்டையும், இஸ்லாத்துக்கு முரணான பல அநாச்சாரங்களையும் நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையிலேயே கை வைக்கிறார். ஹெச் .ஜி.ரசூல் 'திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்... ' என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழின் 12 அக்டோபர் 2006 பதிப்பில் திருக்குர் ஆன், முஹமது நபி(ஸல்) அவர்கள் தன் உள் மனத்திலிருந்து வெளிமனத்துக்குப் பேசியது தான் என்று கூறுகிறார். திருக்குர் ஆன், இறைவன் அருளியது அல்ல. முஹமது நபி(ஸல்) அவர்களின் சொந்தச் சரக்கு என்பது தானே இதன் பொருள்? நவூதுபில்லாஹ். இப்படிப் பட்ட கருத்தை வெளியிடும் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதை இஸ்லாமிய அறிஞர்களிடம் அறிய விரும்புகிறேன். இது போன்ற கருத்து, கிறிஸ்துவர்கள் மூலமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அக்கருத்துக்கு கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அடிமையாகி இருக்கலாம். அல்லது இவர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாகவே இருக்கக் கூடும்.

Tuesday, October 10, 2006

தற்பெருமையும் ஆணவமும்

தற்பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

இப்பூமியில் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை ( ஜன்னத்தை) நாம் சொந்தமாக்கி வைப்போம்; பயபக்தியுடையவர்களுக்கே ( நல்ல ) முடிவு உண்டு. அல்குர்ஆன் : 28 . 83

லுக்மான் ( அலை ) அவர்கள் தனது மகனை நோக்கி :

உன் முகத்தை ( பெருமையோடு ) மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! ( ஏனெனில் ) அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்; அல்குர்ஆன் : 31 . 18

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என ஹாரிஸா இப்னு வஹப் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தன்னைப் போன்று எவரும் உண்டா என்கின்ற மமதை சிலருக்கு வரும் அவர் எப்படிப்பட்டவராக இருப்பரெனில் அதிகப் பணம், உயர் பதவி காரணமாக பகட்டு அதிகரித்து ஆடம்பரங்கள் மிகைத்து அது படாடோபத்தையும், டாம்பீகத்தையும் ஏற்படுத்தி விடும் இப்படிப்பட்டவர்கள் பூமியில் பெருமையாக நடப்பதுடன் பணத்திலும், பதவியிலும் தன்னை விட கீழுள்ள மக்களிடம் முகத்தை திருப்பிக் கொள்வதுடன் அவர்களிடத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆணவம் கொள்வார்கள் இது போன்றவர்களைப் பாரத்து அல்லாஹ் கூறுகிறான்

...நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. 17:37 .

பூமிக்கு மேல் வின்வெளி வரை விஸ்தீரணமாக உயர்ந்து செல்வதற்கும் அதில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும் அவற்றை இறைவன் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், வசப்படுத்திக் கொடுத்தக் காரணத்தினால் தான் மனிதன் அவ்வாறுப் பறந்து சென்று பல சாதனைகள் படைக்க முடிந்தது இதுவும் மனிதனைப் பெரும்பாலும் அகப்பெருமைக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. சந்திர மண்டலத்திற்கே மனிதன் போய் விட்டான் இனி என்ன ? கடவுளாவது , கத்தரிக்காயாவது ? என்று நாஸ்த்திகம் பேசும் அளவுக்கு உண்டு பண்ணியது. இது போன்வர்களைப் பார்த்து பூமியைப் பிளந்து விட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது என்றுக் கூறி மனிதனுடைய அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் சாவு மணி அடித்தான் இன்று வரை எந்த விஞ்ஞானியாலும் பூமியை மலையளவுக்குப் பிளந்து உட்சென்று சாதனைப் படைக்க முடியவில்லை, முடியாது ! இது சத்தியவேதம் கூறும் இறைவாக்கு.

பெருமை, வல்லமை, மேலாதிக்கம், டாம்பீகம், படாடோபம் போன்றவைகள் ஒருவனுக்கு இருக்க வேண்டுமெனில் அது அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் பெருமை எனது மேலாடையாகும், வல்லமை எனது கீழாடையாகும் அதில் எவனாவது ஒருவன் போட்டியிட்டால் அவனை நரகத்தில் வீசுவேன் என அல்லாஹ் கூறுவதாக , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூநியதாக, அரபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : அபூ தாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இவ்வாறு அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதரவர்கள் சுட்டிக்காட்டுவதன் முக்கிய நோக்கம் மனிதன் அவைகளில் எதொன்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுவாகும், அல்லாஹ்வும் இவற்றை தனக்கு உரியது என்றுக் கூறினாலும் நளினத்தையும், மிருதுவானத் தன்மையையும் விரும்புகிறான் .

அன்புள்ள சகோதரர்களே! யாருக்காவது தான் ஒருப் பெரிய பதவியை வகிப்பவன், பணக்காரன் என்கிற சிந்தனை இருந்து அவற்றால் தனக்குக் கீழுள்ளவர்களிடம் அதிகாரம் செய்பவர்களாக இருப்பீர்களேயானால் இப்புனித ரமளான் மாதத்தில் அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே உயர்வானவன் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியன என்ற சிந்தனையை மனதில் வேர் விடச் செய்யுங்கள்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:21 முதல் 24 வரை

நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்

Thursday, October 05, 2006

ஒற்றுமை..! கிலோ என்ன விலை?

சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. மும்பை பள்ளிவாசல் ஒன்றில் தராவீஹ் தொழுகை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆவதற்கு முன் காவல்துறை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தது என்ற தகவல் அதில் இருந்தது.

இந்த பிரச்னை நமக்கு ஏற்கனவே பழகிப்போன 8 Vs 20 ஆகத்தான் இருக்கும் என நினைத்து அந்த மின்னஞ்சலை படித்தபோதுதான் விபரம் புரிந்தது, இது 20க்குள்ளேயே 10-10 பிரச்னை என்று. குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பரெல்வி, தேவ்பந்தி என இரு குழுக்களை சேர்ந்த முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை தங்கள் குழுவைச் சேர்ந்த மவுலானாதான் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதால் சண்டை மூண்டது. 'ஒவ்வொரு மவுலானாவும் 10, 10 ரக்அத்கள் தொழவைக்கட்டும்' என்ற தேவ்பந்திகளின் சமரச திட்டத்தை பரெல்விகள் ஏற்கவில்லை. கலவரம் மூளக்கூடிய சூழலில் காவல்துறை வரவழைக்கப் பட்டு, ஒரே பள்ளியில் இரு குழுக்களும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தொழுது கொள்வது என்ற சமாதானத் திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.

ஒரே பள்ளியில் தனித்தனியாக தொழுவது என்ற ஏற்பாட்டின் மூலம் அந்த இரு குழுக்களும் சமாதானம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த தகவலை அறிந்த என்னையும் உங்களையும் போன்ற சாதாரண முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்களா? என்றால் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தில் ஒரே இறைவன், ஒரே தலைவர், ஒரே வேதம், ஒரே கிப்லா. ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர் தங்கள் ஒரே இறைவனை ஒரே ஜமாஅத்தாக தொழும் விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த அவல நிலை?

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், "இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்" (3:103).

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:"(பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்" (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

இஸ்லாம் போதித்த ஒற்றுமை, சகோதரத்துவத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். நமது மவுலானா தொழுகை நடத்த முடியவில்லை என்றால் அதற்காக நம் சமுதாயத்தை இரு பிரிவாக பிரிக்கவும் நாம் தயாராகி விட்டோம். அதற்காக மாற்று மதத்தினரின் உதவியை நாடவும் நாம் தயங்க மாட்டோம். சகோதரர்களே, சிந்தியுங்கள்!

பெருமானார் (ஸல்) அவர்கள் லைலத்துல்கத்ர் இரவைப் பற்றி அறிவிப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள், "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான்" அதாவது, இந்தச் சண்டையின் காரணமாக லைலத்துல்கத்ர் பற்றிய அறிவிப்பை நபியவர்கள் மறக்கடிக்கப் பட்டார்கள்.

ஸஹீஹ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸை நாம் அறிவோம். ஒவ்வொரு வருட ரமளானிலும் நம் மார்க்க அறிஞர்கள் இதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இரு தனிநபர்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. இன்று இதை நாம் மறந்து விட்டு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நாம் மேலும் என்னென்ன பாக்கியங்களை இழந்துக் கொண்டிருக்கிறோமோ, இறைவனே அறிவான்!

சகோதரர்களே, இந்த அவல நிலையை நிவர்த்திக்க நம்மால் இயன்றதெல்லாம் பிரார்த்தனை ஒன்றுதான். புனிதமிக்க இந்த ரமளானில், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் வேளையில், உங்கள் வழக்கமான பிரார்த்தனைகளுடன் தயவு செய்து இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

"இறைவனே! எங்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மேம்பட அருள் புரிவாயாக! பிரிவினையைத் தூண்டும் ஷைத்தானிய எண்ணங்களை எங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய உதவுவாயாக! ஆமீன்!"

Wednesday, October 04, 2006

பிலால் (ரழி)

பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
நூல் அறிமுகம்

நூல்: பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
ஆசிரியர்: ஹெச்.ஏ.எல். க்ரெய்க் (உமர் முக்தார், தி மெஸேஜ் படங்களின் திரைக்கதை ஆசிரியர்)
தமிழாக்கம்: அல் அஸுமத்
வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோவில் தெரு, கே. புதூர், மதுரை - 625 007
தொலைப்பேசி: 0452- 256 9930 மின் அஞ்சல்: mellinambooks@rediffmail.com
பக்கங்கள்:132 விலை: ரூ. 50

முஹமது நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப் படுகின்றனர். முஹமது நபியின் துணைவியரையும், நான்கு கலீஃபாக்களையும் அடுத்து முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப் படும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களே. இந்நூல், பிலால் (ரழி) அவர்களே தன் வரலாற்றை கூறும் விதமாக எழுதப் பட்டுள்ளது. ஹதீஸ்களின் சான்றுடன் எழுதப் பட்டுள்ள இந்நூல் மிகச்சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது. அல் அஸுமத் கலையழகுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிலால் (ரழி) அவர்கள் உமையாவிடம் அடிமையாக இருந்த போது பட்ட சித்திரவதைகளுடன் தொடங்கும் நூல், அவர்கள் முதல் தொழுகை அழைப்பாளராய் நியமிக்கப்படும் வரையுள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நூல் முஹமது நபியின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாகச் சொல்கிறது. முஹமது நபி சந்தித்த போர்க்களங்களும் சற்று விரிவாகவே காட்டப்படுகின்றன.


ஆசிரியர் குறிப்பு:

ஹெச்.ஏ. எல். க்ரெய்க் 1921 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். பத்திரிக்கை ஆசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக விமர்சகராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார். அங்கு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியரானார். இவருடைய ஆரம்பகால படங்கள் 'டினோ டி லாரன்ஸ்' ஸால் தயாரிக்கப் பட்டன. அவை சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன. 'வாட்டர்லூ' என்னும் போர்ப் படத்திற்கும், 'ஆன்சியோ ஃப்ரௌலின் டொக்டர்' ஆகிய வரலாற்றுப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். முஸ்தஃபா அக்காத்தின் புகழ் பெற்ற படங்களான 'உமர் முக்தார் (Lion of the Desert), தி மெசேஜ்
ஆகியவற்றுக்கும் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த க்ரெய்க் 1978 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் ரோமில் காலமானார்.

Sunday, October 01, 2006

தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)

சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, "சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன" என்றும் "அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் "யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது சமரசத்தின் இணைய பதிப்பு, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)

யுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் காணக் கிடைக்கின்றன. மறைந்த யுனிகோடு உமர் அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா? என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.

வேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

தொடரும்..