Friday, August 25, 2006

ஈரான் அதிபரின் வலைப்பதிவு!



ஈரான் அதிபர் மஹ்மூது அஹ்மதினஜாத் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறார். தனது முதல் பதிவில், அவரது குடும்பப் பிண்ணனி, அரசியல் சூழ்நிலை போன்றவற்றை மிக நீ......ளமாக விவரிக்கிறார். இறுதியில், 'இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக போய் விட்டது. இனிமேல் இப்பதிவுகளை சுருக்கமாகவும், இனிமையாகவும் ஆக்க முயற்சிக்கிறேன்' என்று டிஸ்க்ளெய்மர் போடவும் தவறவில்லை.

அவரது பதிவை பார்ஸி, ஆங்கிலம், அரபி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் படிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஈரானிய அதிபரின் இந்த மக்கள் தொடர்பு முயற்சி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது போலிருக்கிறது. வேறு யாருக்கு..? இஸ்ரேலியருக்குத்தான்! ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அதிபரின் பதிவை முற்றுகையிட்டு சில மணி நேரங்களுக்கு அதை செயலிழக்கச் செய்தனர். அன்று மாலையே அவரது பதிவு மீண்டும் சீர்படுத்தப் பட்டு விட்டது.

இணையம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி தனது கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என முயலும் அதிபர் அஹ்மதினஜாத் அவர்களின் முயற்சி பாராட்டிற்குறியது!

Saturday, August 19, 2006

அரண் - ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரப் படம்

நேற்று 'அரண்' என்ற திரைப்படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றிய என் விமர்சனத்தை எழுதப் போவதில்லை. இப்படத்தில் வரும் சில காட்சிகளை மட்டும் எழுதுகிறேன். சமீபத்தில் வந்த படங்களில் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக சித்தரித்த படம் இது தான். முந்தைய முஸ்லிம் விரோதப் படங்களை விட பல மடங்கு துவேஷமும், விஷமும் அதிகம். இப்படத்தில் வரும் காட்சிகளை எழுதவே என் கை கூசுகிறது. எனினும், நமக்குள் விழிப்புணர்வு வேண்டும் என்ற அடிப்படையிலேயே எழுதுகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நம் எதிர்ப்பை எப்படி தெரிவிக்கலாம் என சக வலைப்பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

1. காஷ்மீர் போராளிகள், வரிசையாக வரும் ஆண்களின் பிறப்புறுப்பை பார்த்து முஸ்லிமாக இருந்தால் விடுவித்து இந்து ஆண்களை சுட்டுக் கொல்கின்றனர். கதாநாயகனாக வரும் பாத்திரம் ஒரு இராணுவ அதிகாரி. அவன், காஷ்மீர் போராளிகளை சுட்டுக் கொன்று இந்துக்களை காப்பற்றுகிறான் நமக்குத் தெரிந்து ஆணுறுப்பைப் பார்த்து சங்பரிவாரங்களால், முஸ்லிம் இளைஞர்கள் தான் ஷஹீதுகளாகியுள்ளனரே, தவிர இது போன்ற ஒரு சம்பவம் எங்கும் நடந்ததாக கேள்விப் பட்டதில்லை.
2. காஷ்மீரில் ஒரு பள்ளிவாசல் இமாம் ஆயுதங்களை, பள்ளிவாசலில் பதுக்கி வைத்து இருக்கிறார்.
3. காஷ்மீர் போராளி பள்ளி மாணவனிடம் வெடிகுண்டை மறைத்து கொடுத்தனுப்பி, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பேருந்தை வெடிக்கச் செய்கிறார்.
4. காஷ்மீர் போராளிகள், இந்திய முஸ்லிம்களை முஸ்லிம்களே இல்லை என கூறுகின்றனர். இவர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்ததாகக் காட்டப் படுகின்றனர்.
5. காஷ்மீர் போராளி ஒருவன் ஒரு முஸ்லிம் பெண்ணை கெடுத்து விட்டு அதுவும் ஜிஹாத் தான் என வசனம் பேசுகிறான்.
6. நாட்டில் குழப்பம் ஏற்படுத்த கடைசிக் காட்சியில் முஸ்லிம் போராளிகள் ஒரு பள்ளிவாசலை ஏவுகணை வீசி தகர்க்க முயற்சி செய்கின்றனர். கதா நாயகனின் உயிர் தியாகத்தால், பள்ளிவாசல் காப்பாற்றப் படுகிறது.
7. இறுதிக் காட்சியில் முதிய முஸ்லிம் பெண்மணி, நாங்கள் முஸ்லிம்கள் இல்லை. இந்தியர்கள் என வசனம் பேசுகிறாள்.
8. இப்படத்தில் போராளிகளை காட்டிக் கொடுக்கும் ஒரு முஸ்லிம் மட்டும் நல்லவனாக காட்டப் படுகிறான்.
9. காஷ்மீர் போலீஸாரைப் பற்றி காஷ்மீரில் பணியாற்றும் இராணுவ அதிகாரி மிகவும் கேவலமாகப் பேசுகிறான்.
10. இப்படத்தில் வரும் மனித உரிமை இயக்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, இராணுவ அதிகாரியின் கடமைக்கு இடையூறு செய்ய வருபவராக காட்டப் படுகிறார்.

Tuesday, August 15, 2006

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள இணைய தமிழ் முஸ்லிம் வலைப்பதிவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னும் ஐந்து வாரங்களில் ரமலான் நோன்பு வரப்போகிறது. அதற்கு முன்னதாக, இணையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிப்பதையும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர், அடுத்த அமைப்பை விமர்சிப்பதையும் நாம் நிறுத்தினால் என்ன? இந்த வேண்டுகோளை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது, நடுநிலையான வலைப்பதிவர்களுக்கும் வைக்கிறேன். அது போல, நோன்பு காலங்களில் நம் வீடுகளில் இஃப்தார் விருந்துக்கு மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைக்கலாம். இரவில் தராவீஹ் தொழச் செல்லும் போது மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நாமே வலியச் சென்று ஸலாம் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நகமும், சதையுமாய் இருந்த இரு முஸ்லிம் நண்பர்கள் இப்போது ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை. இதற்கு இயக்கச் சண்டையே காரணம். நண்பர்களுக்குள் வேடிக்கையாகப் பேசும் போதும், மாற்று அமைப்புகளை விமர்சிப்பதை ரமலானில் மட்டுமாவது நிறுத்தித் தான் பார்ப்போமே? அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான். நமக்குள் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவான். முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நமக்குள் உள்ள கருத்து மோதல்கள் தடையாய் இருக்கக் கூடாதல்லவா? இந்தக் கருத்துடன் உடன்படும் சகோதரர்கள், இப்பதிவை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மின் அஞ்சல் செய்யலாமே?

Saturday, August 12, 2006

சன் டீவிக்கு நன்றி!

சன் டீவி செய்திகள்

ராணுவ பின்புலமற்ற லெபனானுக்குள் எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த சில இஸ்ரேலின் படை வீரர்களை, ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்த நாள் முதற்கொண்டு, அமெரிக்காவின் ஆசியுடன் இஸ்ரேல் அநியாயமாக போர் தொடுத்து லெபனானைச் சுடுகாடாக மாற்றி வருவதும், அதனை எதிர்த்து இஸ்ரேலிய படையினரிடமிருந்து தனது சொந்த மண்ணைக் காக்க ஹிஸ்புல்லாஹ் போராளிகள் தீவிரமாகப் போராடி வருவதும் யாவரும் அறிந்ததே!

பாலஸ்தீனப் போராளிகளாகட்டும், அல்லது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினராகட்டும், இவர்களைத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றே சன் டிவி செய்திகளில் வழக்கமாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன மக்களின் காதுகளுக்கு சமீப நாட்களாக சன் செய்திகளில் தனது "தீவிர"த்தை நீக்கி "ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர்" என்றே குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் பாரபட்சமற்ற இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் முஸ்லிம் கூட்டுவலைப்பதிவின் மூலம் சன் டிவி நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(நன்றி தெரிவித்தல் என்பது அழகிய இஸ்லாமிய நற்பண்பாக இருப்பதனால், சன் டீவி நிர்வாகத்தினருக்கு நன்றி கூற விரும்பும் சக சகோதரர்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்)