Friday, March 31, 2006

சிறுபான்மையினர் கூட்டமைப்பு முடிவு

ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு!
சிறுபான்மையினர் கூட்டமைப்பு முடிவு!!


சென்ற 22-03-2006 அன்று சென்னை சாந்தோம் உயர்மறை மாவட்ட மேய்ப்புப் பணி மையத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிப் பது என அறிவித்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக அதிமுக அரசு தன் கொள்கையாலும், செயல்களாலும் சிறுபான்மையினர் நலனுக்கு முரணாகவே நடந்துள்ளது. உதாரணமாக மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெறாதது, தேசப் பிதா காந்தியடிகளைக் கொன்றது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சேதான் என்ற வரலாற்று உண்மையை பாடக்குறிப்பில் இருந்து நீக்கியது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு அளிப்பதாக 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த ஜெயலலிதா, அந்த கோரிக்கையை நிறைவேற்றத் தவறியது மற்றும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஜாமீனில் விடுதலை செய்யத் தவறியது என தொடர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை அதிமுக அரசு பறித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள சிறுபான்மை கூட்டமைப்பு, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு, சமயச் சிறுபான்மையினரின் பிற்பட்ட தன்மையைக் கண்டறிய ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அமைத்தது, இராணுவம் உள்ளிட்டவற்றில் முஸ்லிம்களின் பங்கேற்பைக் கண்டறிய ராஜேந்தர் சச்சார் ஆணையம் அமைத்தது, இனப்படுகொலை கலவரங் களைத் தடுக்க 'மதக்கலவரத் தடுப்புச் சட்டம்' இயற்றியது, மற்றும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கிலிருந்து சென்ற வாஜ்பேயி அரசால் விடுவிக்கப்பட்ட அத்வானியை முறையான விசாரணை மூலம் நீதியின் பிடியில் இருந்து தப்ப விடாமல் நீதியை நிலைநாட்டியது என பல்வேறு வகையில் சிறுபான்மை சமூகம் நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு செயலாற்றுவதால் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜெயலலிதாவிற்கு தங்கத் தாரகை விருது அளித்து அதன் மூலமாக சிறுபான்மை மேம்பாட்டு ஆணையத் தலைவரான சில்வா பிரகாஷ், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஷீர், தாவுத் மியாகான், உமர் பாரூக், தர்வேஸ் ரஷாதி, இனாயத்துல்லாஹ் ஆகியோர் 'நடுநிலை வகிக்க வேண்டும்' என்று கூறினர். ஆயினும் கலந்து கொண்டோரில் பெரும்பான்மையினர் சிறுபான்மை கூட்டமைப்பின் தீர்மானத்தை ஆதரித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

செய்தியாளர் சந்திப்பில் சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ, பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பேராயர்கள் எஸ்றா சற்குணம், சேவியர் அருள்ராஜ், சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர், சி.எஸ்.ஐ. திருச்சபை மற்றும் ஈ.எஸ்.ஐ. திருச் சபையைச் சேர்ந்தவர்கள், ஹஸனபர் அலி, ஜிப்ரி காசிம், ஆர்.கே.நூர், கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், வழக்கறிஞர் சிராஜுதீன் மற்றும் கிறிஸ்தவ இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

நன்றி: www.tmmkonline.org

தமிழ் மாநில முஸ்லிம் லீக்

சென்னை, 31 மார்ச் 2006

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எல்லோரும் எள்ளி நகையாடும் விதத்தில் அமைந்துள்ளது. இது போன்ற தேர்தல் நேர அறிவிப்புகளின் மூலம் தி.மு.க.வின் படுதோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு அடுப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. கூறி இருப்பது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலையாகும். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை திசை திருப்பி வெற்றி பெற முயற்சிப்பது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல.
அதேபோல் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறும்பான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று கூறியுள் ளார். இது சிறும்பான்மையின மக்களை அவர் கறிவேப்பிலை யாகத் தான் நினைக்கிறார் என்பதை தெளிவுபடுத்தி உள் ளது. தி.மு.க. இப்போதுதான் புதிதாக ஆட்சிக்கு வருகிறதாப அல்லது சிறுபான்மையின மக்கள் இப்போதுதான் இட ஒதுக்கீடு கேட்கிறார்களா? கடந்த கால தி.மு.க. ஆட்சியின் போதே சிறும்பான்மையின மக்களுக்கு கருணாநிதி இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்?

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்கள் எல்லாம், எங்கள் சமுதாய மக்கள் மனங்களில் ஆறாத காயங்களாக இன்று வரை வேதனை அளித்து வருகின்றன.

கோவை குண்டுவெடிப்பின்போது, பதவியிலிருந்த கருணாநிதி, இஸ்லாமிய மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு, சோதனை என்னும் பெயரில் வீடுகளில் புகுந்து பெண்களை கேவலப்படுத்தி, முஸ்லிம் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்.

குஜராத் கலவரத்தின்போது, இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க. அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட கொடுமைகளை கண்டுக் கொள்ளாமல் மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்த தி.மு.க.தான் இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பாசம் பொங்க பேசுகிறது.

தமிழக முதல்வர் தலைமையிலான அ.இ.அ.தி.முக.வின் 5 ஆண்டு கால பொற்கால ஆட்சியில் எல்லா மதத்தின ரும் ஒன்றுபட்டு அமைதியான வாழ்வை அனுபவித்து உள் ளார்கள். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம் மக்கள் அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பார்கள். இந்த தேர்தலோடு தி.மு.க.வின் சகாப்தம் முடிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நன்றி: மாலை மலர் 31 மார்ச் 2006

Wednesday, March 29, 2006

யார் அப்பன் வீட்டுக் காசு?


தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர் குடும்பம் ஊடகத் துறையில் ஏகாதிபத்தியம் செலுத்துவதை வைகோ போன்ற பல அரசியல்வாதிகளும், எழுத்தாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகளும் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், அரசுப் பணத்தில் டிவிப் பெட்டி வழங்கி, மக்களை தனக்கு அடிமையாக்கும் கலைஞரின் தந்திரம் நரித்தனமானது. 'இலாபம் வரும் வழிகள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்துக்கும். நட்டம் வரும் வழிகள் எல்லாம் தன் கட்சிக்கும் அரசுக்கும்' என்பது தானே கலைஞரின் கொள்கை. யார் அப்பன் வீட்டுப் பணத்தில் இவர் டிவி கொடுக்கிறார். முரசொலி மாறன் குடும்பத்துக்கு இலங்கையில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதாமே? அதை விற்று தமிழ் நாட்டில் டிவி இல்லாத வீடுகளுக்கு நீ டிவிப்பெட்டி கொடுப்பாயா? மக்களின் வரிப்பணத்தில் நீ இலவச டிவிப்பெட்டி கொடுப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை? நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? இதனால் நாட்டின் பொருளாதாரம் உயருமா? உற்பத்தி உயருமா? சன் டிவிக்கு இணைப்பு கொடுப்பதால், உன் வருமானம் உயரும். உன் குடும்பத்தின் வருமானம் உயரும்.

Tuesday, March 28, 2006

சூரிய கிரகணம் - மார்ச் 29, 2006

நாளை (புதன் கிழமை - மார்ச் 29, 2006) ஏற்படப்போகிற சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு இவற்றின் முழு பகுதிகளையும் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளின் அதிகப்படியான இடங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

கீழ்கண்ட படம், கிரகணம் ஏற்படக்கூடிய இடங்களையும் அதன் நேரங்களையும் காட்டுகிறது.

தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கம்

தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

சென்னை, மார்ச். 28-

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
செயற்குழு கூட்டம் தமிழ்நாடு இஸ்லாமிய மக்கள் இயக்க செயற்குழு கூட்டம் சென்னையில் அதன் தலைவர் காயல் ஆர்.எஸ். இளவரசு தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

மீண்டும் முதல்-அமைச்சர்

தி.மு.க. ஆட்சியில் தீவிரவாதிகள் என்னும் இழிச்சொல் திணிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் காவல் கேடயமாக விளங்கி, எங்கள் இளைஞர்களுக்கு சுய தொழில் உதவி, பூரண பாதுகாப்பு, இட ஒதுக்கீட்டுக்குத் தேவையான முகாந்திர வேலைகள் என தன் ஆதரவுக்கரம் கொடுத்து காத்து வருபவர், முதல் - அமைச்சர் ஜெயலலிதா. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதங்கள் இல்லாமல், எல்லோரும் சமம் என்பதை செயல்வடிவில் செய்து காட்டி அனைவரையும் அரவணைத்து காத்து நிற்கும் முதல் - அமைச்சரை செயற்குழு பாராட்டுகிறது.

குடிநீர் பஞ்சத்தை சாதுர்யமாக கையாண்டு வென்ற பாங்கு; மத்திய அரசு பலமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய போதும் பாமரர்க்கு உதவ பஸ் கட்டணத்தை உயர்த்தாமை; மகளிர் முன்னேற்றத்திற்கான மாண்புயர் சேவைகள்; இலவச சைக்கிள் திட்டம்; வெள்ளம், சுனாமி நிவாரணப்பணிகள்; அன்னதான திட்டம்; கட்ட பஞ்சாயத்து, ரவுடி ராஜ்யம், கந்து வட்டியை ஒழித்து, அச்சமற்ற தமிழகத்தை உருவாக்கிய உன்னத மாண்பு; காலியான கஜானாவை கையிலெடுத்து தன் ஆற்றல் மிக்க செயல்வளத்தால், ஆட்சி செய்து தன்னிறைவு தமிழகமாக மாநிலத்தை தலை நிமிர செய்த வல்லமை; என்றும் நல்லதை செய்வோம் அல்லதை சாடுவோம் என நாடு போற்ற நல்லாட்சி செய்து வரும் ஜெயலலிதா மீண்டும் முதல் - அமைச்சராக பொறுப்பேற்க அர்ப்பணிப்பு உணர்வோடு கடமை ஆற்ற தீர்மானிக்கப்படுகிறது.

பிரசாரம்

இயக்க தலைவர் காயல் ஆர்.எஸ். இளவரசு தலைமையில் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி: தினத்தந்தி 28 மார்ச் 2006

ம.தி.மு.க


வைகோ, பொடாவில் கைது செய்யப் பட்ட போது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் அ.இ.அ.தி.முவைத் தவிர அனைத்து கட்சிகளும் கையெழுத்து போட்டன. அவர் ஜாமீனில் வெளிவர வேண்டும் என கலைஞர் உண்மையிலேயே விரும்பினார். இந்நிலையில், வைகோ தன்னை கைது செய்த அ.இ.அ.தி.மு.க அணியில் இடம் பெற்றது அரசியல் சந்தர்ப்பவாதமே. ம.தி.மு.க எம்.பிக்களையும் கணக்கு காட்டி தி.மு.க அதிக மத்திய அமைச்சர்களைப் பெற்றதாக இப்போது வைகோ குற்றம் சாட்டுகிறார். இது உண்மையென்றால், தி.மு.க செய்தது ஒரு மோசடி என்பதில் சந்தேகமில்லை. இவரது புலி ஆதரவு நிலைப்பாடு கூட பொருளாதார ஆதாயத்துக்கானது என இவரிடம் நெருங்கியிருந்து விலகிய நெல்லை இலக்குமணன் குற்றம் சாட்டியுள்ளார். அ.இ.அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்க கூட்டிக் கொடுத்தவர் வைகோ. இனி இவரது தேசிய அரசியல் பா.ஜ.கவை நோக்கியே நகரும். இவர் கட்சியின் முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி. இக்கட்சி, தி.மு.கவுடன் மோதும் இடங்களில், தி.மு.கவிற்கும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் மோதும் இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், பா.ம.கவுடன் மோதும் இடங்களில் மட்டும் ம.தி.மு.கவுக்கும் தமிழ் நாட்டின் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்பது என் கருத்து.

Monday, March 27, 2006

நடிகர் எஸ்.வி. சேகர்

மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் நடிகர் எஸ்.வி. சேகர். இவர் ஓர் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர். முஸ்லிம்களுக்கு எதிரி. பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரி. பச்சைப் பார்ப்பனர். தான் பிறந்த பார்ப்பன சமூகத்தின் நன்மைக்காக பாடுபடுபவர். திராவிடக் கட்சியில் பார்ப்பாத்தியான ஜெயலலதா தலைமைப் பொறுப்பு ஏற்றது எப்படி ஒரு விசித்திரமோ, அப்படி தான் இந்த நடிகரும் திராவிடக் கட்சியில் முன்னணிப் பேச்சாளராகி இருக்கிறார். இவர் காஞ்சி சங்கராச்சாரியின் நெருங்கிய சீடராக இருந்தார். அவர் கைது செய்யப் பட்டதும் ஜெயலலிதாவின் சீடராக மாறி விட்டார். இந்து முன்னணி இராம. கோபாலனுக்கும் இவர் நெருங்கிய நண்பர். இவர் நாடகங்களும் பார்ப்பன பண்பாட்டை தூக்கிப் பிடிப்பவை. இவரது சொல், செயல், சிந்தனை எல்லாமே முஸ்லிம்களுக்கு எதிரானவை. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவர் எதிரானவர். இவரை தோற்கடிக்க வேண்டியது நம் கடமை. மைலாப்பூரில் வசிக்கும் முஸ்லிம் வாக்காளர்கள் இவருக்கு எதிராக தி.மு.க வேட்பாளருக்கு வாக்களியுங்கள். சென்னை மாவட்டத்தின் பிற தொகுதிகளில் இருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் இவருக்கு எதிராக, தி.மு.க வேட்பாளருக்கு வாக்கு சேகரியுங்கள்.

Sunday, March 26, 2006

தமிழக முஸ்லிம்களின் உள்ளக்குமுறல் - 2

தமிழக முஸ்லிம் சமுதாயம் அமைப்பு ரீதியாக தன் பலத்தை வேகமாக உணர்ந்துக்கொள்ளத் தொடங்கியது-காயிதே மில்லத் காலத்திற்கு பிறகு-மிக சமீப வருடங்களில் தான் . அதே வேகத்தில் சைத்தானிய சூழ்ச்சிகளுக்கு பலியாகி 'யார் பெரியவர் நீயா நானா' என்ற போட்டியில் இறங்கியுள்ளவர்களால் சராசரி தமிழக முஸ்லிமுக்கு மனக்கிலேசம் தான் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்பாக பிரிந்தும் பிரித்தும் கிடப்பவர்கள் 'கூட்டணி தர்மங்களு'க்காக நேற்று வரை குற்றம் சுமத்திய அரசியல்வாதியை புகழவும் எதிர்தரப்பை இகழவுமாக - ஒரு குழப்பகொடை வள்ளல்களாகவும் காட்சியளிக்கின்றனர்.

கொள்கை மாறுபாடோ, சொத்துத் தகராறோ-அவரவர் வழி என்று விட்டுவிடலாம். நாளை அல்லாஹுத்தஆலாவிடம் அவரவர் பதில் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன?'தலைவர்'களாக 'வெளிச்சம்' விரும்பி ஒற்றுமையை உடைத்தவர்கள் - தன்னை முன்னிலைப்படுத்தி சமுதாயத்தை பின்னால் தள்ளியவர்கள் - ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய இத்தகு காலத்திலும் 'ஈகோ மோதலில்' சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இரு தரப்பாகப் பிரிந்து இரு அணிகளிலும் இடம் பெறுவதால் 3+3 என்று தொகுதிகள் கிடைக்கிறதே என்று ஒரு சிறு ஆறுதலாவது இருந்தது தான். தி.மு.க அணி முஸ்லிம் அமைப்புகளின் தொகுதி பட்டியல் முதலில் வெளிவந்துவிட அதை எதிர்பார்த்தது போல ஜெயலலிதாவும் அந்த மூன்று தொகுதிகளில் இரண்டை தனது பக்க முஸ்லிம் அமைப்புகளுக்குத் தந்து 'எப்படியாவது அடித்துக்கொண்டு கிடங்களடா' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எதிரியை விடவும் கூட்டணியினரை முதலில் பலி கொடுப்பவர் என்பதை (பி.ஜே.பி. உட்பட) அனைவரும் அறிந்த பாடமே.

கொள்கை சகோதரனுடன் மோத நேரிடுகிற குறிப்பிட்ட அந்த இரு தொகுதிகளையாவது (வாணியம்பாடி, பாளையங்கோட்டை) மாற்றிக்கேட்கும் திறன் கூட நமது 'ஜெ.சார்பு' சகோதரர்களுக்கு இல்லாமல் போனதேன்? வழக்கம் போல வாதத் திறமையால் இதற்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று நினைத்தார்களோ?இப்போதும் காலம் கடந்துப் போகவில்லை. அந்த இரண்டு தொகுதிகளையும் திருப்பிதந்துவிட்டு வேறு இரு தொகுதிகளை 'அம்மா'விடம் கேட்டுப்பெறுவார்களா?

அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும். சமுதாய நலன் என்ற பார்வையுடன் தேர்தல் அரங்கிலாவது ஒன்றுபட்டு போராடக்கூடாதா?

பாட்டாளி மக்கள் கட்சி1. டாக்டர் ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கிய போது, தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் எந்த ஆட்சிப் பொறுப்பிலும் இருக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால், தன் மகன் டாக்டர் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கியதுடன், மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.

2. பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றத்துக்குப் பிறகு வன்னியர்கள் அரசு வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றதும், அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றதும் உண்மை தான். ஆனால், வணிகத்தில் வன்னியர்கள் இன்னும் வளரவில்லை. டாக்டர் அய்யாவின் குடும்பத்தினரைத் தவிர பிற வன்னியர்கள் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர்.

3. டாக்டர் ராமதாஸ் தன் சம்பந்தியை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராய் ஆக்கியுள்ளார்.

4. டாக்டர் ராமதாஸ், எப்போதும் தன் கூட்டணி கட்சிக்கு துரோகமே செய்து வந்துள்ளார். தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக்குடன் பா.ம.க கூட்டணி சேர்ந்தது. மயிலாடுதுறை எம்.பி. சீட்டில் மறைந்த அப்துஸ் ஸமது போட்டியிட்டார். அவருக்கு வாக்களிக்காமல் பா.ம.கவினர் தி.மு.கவைச் சேர்ந்த வன்னிய வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஜான்பாண்டியன், திருமாவளவன், கிருஷ்ணசாமி என தலித் தலைவர்களுடன் மேடையில் தோன்றி செல்வாக்குப் பெற்ற பிறகு அவர்களுக்கு துரோகம் செய்தவர் ராமதாஸ். வாழப்பாடி ராமமூர்த்தியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், கூட்டணிக் கட்சித் தலைவரான அவரையே மக்களவைத் தேர்தலில் தோற்கடித்து, அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியை வெற்றிபெறச் செய்தனர் பா.ம.கவினர். இந்த துரோகத்தில் டாக்டர் ராமதாஸின் நேரடிப் பங்கு உள்ளது.

5. கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியாய் விலகிய போது, கடைசியாய் விலகிய கட்சி பா.ம.கவே.

6. கட்சிக்காகப் பாடுபட்ட பன்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணசாமி, குணங்குடி ஹனீபா, பேராசிரியர் தீரன், பு.தா. இளங்கோவன் உள்ளிட்ட பலர் டாக்டர் ராமதாஸின் குடும்ப அரசியலால் வெளியேறினர்.

இக்கட்சியின் வளர்ச்சி சாதி அரசியலுக்கு வழிவகுக்கும். இக்கட்சி 31 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி 5 இடங்களுக்கு மேல் பெறுவது தமிழ் நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல. தமிழ் நாட்டின் முஸ்லிம் வாக்காளர்கள் இக்கட்சியைப் புறக்கணிக்க வேண்டும். இக்கட்சி போட்டியிடும் இடங்களில் வலுவான மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

சன் டிவி

கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.

2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.
தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பாண்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் துறையைப் பயன்படுத்தி அனைத்து உதவிகளும் செய்தார்.

3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.

4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?


5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. இந்து வெறி நாளிதழான 'தின மலர்' எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. இந்து வெறியர்கள் பரவலாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.

Monday, March 20, 2006

தமிழக முஸ்லிம்களின் உள்ளக்குமுறல் - 1

'இதுதான் இஸ்லாம் ' வலைமனையில் கேட்கப்பட்டதொரு கேள்வியும் அதற்கான பதிலும் தமிழக முஸ்லிம்களின் இன்றைய உள்ளக்குமுறலை அப்படியே படம் பிடித்தாற்போலிருந்தது. நம் வாசகர்களும் அதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பதிலளித்த ஆசிரியரின் அனுமதி பெற்று இங்கு தருகிறேன்.

(இதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவற்றை தயக்கமின்றி எழுதலாம். ஆரோக்கியமான ஒரு கருத்து ப் பரிமாற்றத்தை நமக்கிடையே உருவாக்குவதும் அதனால் தேவையற்ற குழுப்பங்களை களைந்து சமுதாய ஒற்றுமையை முடிந்த அளவு பேணுவதும் என் விருப்பமாகும்).

கேள்வி:
"இந்தியாவின் அழைப்பாளர் பிஜே பற்றி நாம் என்ன முடிவெடுப்பது அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் தவ்ஹீத் கொள்கைக்கு முரணானதா...? "

பதில்:
"ஆம் அப்படித்தான் என்று ஒரேயடியாக நாம் கூறிவிட மாட்டோம். ஏகத்துவ கொள்கை விஷயத்தில் அவரிடம் தீர்க்கமான பார்வை இருந்தாலும் இஸ்லாமிய சட்டங்களை விளங்கும் - விளக்கும் போக்கில் அவரிடம் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இது மனித இயல்புதான் என்றாலும் தவறை சுட்டிக் காட்டினால் ஏற்கும் மனப்பக்குவம் அவரிடம் அற்றுப்போய் விட்டது.

பிறைப்பார்த்தல் - ஜகாத் - முதஷாபிஹாத் பிரச்சனை - சமூகத்தை பிரித்தாலும் இயக்க சிந்தனை - ஏகத்துவம் என்பது முஸ்லிம்களின் கொள்கையாக இருக்கும் போது ஏகத்தவவாதி - தவ்ஹீத்வாதி என்று அடிக்கடி கூறி அவரை பின்பற்றுபவர்களிடம் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி அவர்களை சாராதவர்களெல்லாம் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை உருவாக்குவது என்று பட்டியலிடலாம்.

எந்த மெளலவியும் கவனம் செலுத்தாத - கண்டுக் கொள்ளாத - அக்கறை எடுத்துக் கொள்ளாத அரபு நூல்களையெல்லாம் புரட்டி அதன் கருத்தோட்டங்களை மக்கள் மன்றத்தில் வைத்தவர் பிஜே. கடந்தக்காலங்களில் ஏகத்துவ சிந்தனை தமிழக மக்களிடம் மலர்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் அதற்கான உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்ததாகும். 1990களுக்குப் பின் ஏகத்துவத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லத்துவங்கிய யாராக இருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு வித்தில் பிஜேயிடமிருந்து பாடம் படித்தவர்கள் என்று அடித்து சொல்லலாம். இதை அவர்கள் மறுத்தாலும் அதுதான் உண்மை.

அரபு மதரஸாக்களில் பாடம் படித்து வெளியேறுபவர்களில் ஒரு சதவிகிதத்ததைத் தவிர மற்றவர்கள் உலகக் கல்வியற்றுப் போய் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் சுமையாக கிடந்த காலகட்டங்களில் அதிலிருந்து தனித்துவத்துடன் வெளிபட்டவர் சகோதரர் பிஜே. தன்நம்பிக்கை, அயராத உழைப்பு என்று அவரிடம் இருக்கும் படிப்பினைகள் பிற மெளலவிகளுக்கு வழிக்காட்டக் கூடியவைகளாகும்.

தமிழகத்தின் மொத்த முஸ்லிம்களும் மீடியாவின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என்றால் சந்தேகமில்லாமல் அது பிஜேயின் மீடியா உத்திதான்.

குர்ஆனும் - சுன்னாவும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று இன்றைக்கு ஆயிரம் பேர் பேசினாலும் அதை தமிழர்களின் மனங்களில் ஆழமாக பதிய செய்தவர் பிஜே. இறைவன் அவரது உழைப்பின் வழியாகத்தான் மகா கொடியப் பாவமான இணைவைத்தலிலிருந்து நம் அனைவரையும் மீட்டான் என்பதில் நாங்கள் ஆனந்தம் கொள்கிறோம். புகழுக்குரியவன் இறைவன்.

அதே சமயம் ஆரம்பக் காலத்திலிருந்து அவரிடம் உள்ளக் குறைப்பாடுகளை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. அதில் மிக முக்கியமானது தனக்கு பிடிக்காத யாராக இருந்தாலும் அவர்களை குறைக் கண்டு ஒதுக்குவதாகும். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆரம்பத்தில் அபூ அப்தல்லாஹ், பிறகு ஜாக் என்ற ஒரு இயக்கமும் அதன் நிர்வாகம் முதல் உறுப்பினர்கள் வரை, ஹாமித் பக்ரி, பழ்லுல் இலாஹி, மொய்தின் (முன்னாள் முபீன் ஆசிரியர்) ஸாஜிதா புக் சென்டர் ஜகரிய்யா இவர்கள் அனைவரும் ஏகத்துவ பிரச்சாரத்தில் அவருடன் முன்னணியில் நின்றவர்கள் என்பது மட்டுமின்றி அவருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கியவர்கள். அதன் பிறகு இன்றைக்கு தமுமுக என்ற வலுவான ஒரு மக்கள் இயக்கம், நஜாத்திலிருந்து வெளியேறிய அன்றயை கட்டத்தில் நஜாத் புத்தகத்தை அழிக்க முயற்சி, பின்னர் ஜாக் என்ற இயக்கத்தை துவங்கி அதிலிருந்து வெளியேறி அந்த இயக்கத்தை அழிக்க முயற்சி, அரும்பாடு பட்டு தமுமுக வளர்ந்த பிறகு அதிலிருந்து வெளியேறி இன்றைக்கு அந்த இயக்கத்தை இல்லாமலாக்க தீவிர முயற்சி என்று அவருடைய மனப்பான்மை இதே வழியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. (அவரால் ஒதுக்கப்பட்ட இதர சமுதாய பிரமுகர்களையும் தனி மனிதர்களையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை) அவரால் ஒதுக்கபட்ட அனைவரும் அவரால் குறைப்பாடுள்ளவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்களாவார்கள். அவர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் தான் குறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்று அவர் நினைத்துக் கொள்கிறாரா... தனி மனிதனாக நின்று இவர் பலரை குறைக்காணும் அதே போக்கில் நூற்றுக்கணக்கான கைகள் அவரை நோக்கி குறைப்பாடுள்ளவர் என்று நீள்கிறதே அதற்கு என்ன பதில்? பிறருடைய குறைக்களை சீடிக்களாக போட்டு வெளியிடுபவர் (பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பது குர்ஆன் வசனம்) தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மெளனமாகி விடுகிறார் என்றால் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்குப் பெயர் என்ன? இன்றைக்கு அவருடன் இருப்பவர்களில் ஒரு நான்கு, ஐந்து பேர்களைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள். அவரை தூரத்தில் நின்று பார்த்தவர்கள் இன்றைக்கு நெருங்கி இருக்கிறார்கள். இவர்களும் நாளைக்கு ஒதுக்கப்படுவார்களோ... இறைவன் தான் அறிவான்.

பிஜே சொன்னால் தான் தவ்ஹீத் - பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று கண்மூடித்தனமாக பின்பற்றும் சிறு அளவிளான ஒரு கூட்டம் உருவாகியுள்ளது நிசர்தனமான உண்மை. இதை நன்கு பிஜே அறிந்த நிலையிலும் கண்டிக்காமல் மேலும் வளர்க்கவே விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. 'மனிதன் பகுத்தறிவால் தான் சிறப்புப் பெறுகிறான் அதை என்றைக்கு அவன் இழக்கின்றானோ அன்றைக்கே அவன் தனது நிலையிலுந்து தாழ்ந்து விடுகிறான். எதையும் குர்ஆன் சுன்னாவுடன் உரசிப் பார்த்து சிந்தித்து விளங்குவதே சிறந்த முஸ்லிமுக்கு அடையாளம்" என்ற பாடத்தை பிஜேயிடமிருந்து படித்தவர்களில் ஒரு சாரார் தங்கள் பகுத்தறிவிற்கு பிஜே மூலாம் பூசிக் கொண்டார்கள். குர்ஆன் சுன்னாவை நேரடியாக பார்ப்பதுமில்லை. பிறர் கூறுவது அவர்களுக்கு குர்ஆன் சுன்னாவாக தெரிவதுமில்லை. பிஜே சொன்னால் தான் குர்ஆன், பிஜே சொன்னால் தான் சுன்னா, பிஜே சொன்னால் தான் இஸ்லாம் என்று மத்ஹப் வெறியை விட தீர்க்கமான வெறித்தனத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்கள். அந்த மக்களை நினைக்கும் போது உண்மையிலேயே மனக் கஷ்டமாக இருக்கிறது.

ஓரிறைக் கொள்கை என்ற அந்த ஒரு இறைவனை சார்ந்து நிற்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தவ்ஹீத் கொள்கையில் பிஜேயின் உறுதிபப்பாட்டைத் தவிர மார்க்கத்தை விளங்குவதில் சில குறைப்பாடுகளும், சமூகத்தை கையாளும் விதத்தில் பெருத்த குறைப்பாடும் அவரிடம் உண்டு. அவரது சமுதாயப்பார்வை மிக பலவீனமானது என்பதற்கு சமீபத்திய உதாரணம் அவர் ஆரம்பித்துள்ள புதிய இயக்கம்.

பிஜேயின் அரசியல் பார்வை ஜீரோவாகி விட்டது என்பதற்கு நிறைய உதாரணம் சொல்லலாம். புதிய உதாரணம். ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததாகும். ஜெயலலிதா உட்காரும் மேடையில் கூட அவர் இருக்கும் போது உட்கார மாட்டேன் என்று கொள்கை பேசியவர் இன்றைக்கு தேதி கேட்டு போய் சந்திக்கிறார் என்றால் 'ஒண்ணுமே புரியல அவர் போக்கில' "


இது தொடர்பாக.......

தனிநபர் துதியோ மிதியோ இல்லாத கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன்.

Sunday, March 19, 2006

தமுமுகவும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுகவைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றியும் என் கருத்தை ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். இந்த இரு அமைப்புகளைப் பற்றியும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் விமர்சனம் பலருக்கும் செய்தி மடலாக வந்து படித்து இருப்பார்கள். இவர்களைப் பற்றி பொதுவான விமர்சனங்களும் சில முஸ்லிம் வலைப்பதிவுகளில் படித்தேன். சமநிலைச் சமுதாயம் மாத இதழில் ஏவிஎம் ஜாஃபர்தீன் இவ்விரு அமைப்புகளைப் பற்றியும் வைத்துள்ள விமர்சனம் ஆக்கப் பூர்வமானது. எனவே இவ்விரு அமைப்புகளைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் பிற அரசியல் கட்சிகள் மீதான விமர்சனத்தை தொடர்கிறேன். இவற்றிலும் அ.இ.அ.தி.மு.கவைப் பற்றி போதிய அளவு விமர்சித்து விட்டேன். வாசகர்களின் தகவலுக்காக: தமுமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ இ அ தி மு க கூட்டணிக்கு தன் ஆதரவைத் தெரிவித்து உள்ளது.

இந்திய தேசிய லீக்

இந்திய தேசிய லீக் கட்சிக்கு அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இரண்டு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இக்கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுமா? அல்லது அ.இ.அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடுமா எனத் தெரியவில்லை. இக்கட்சியைச் சேர்ந்த நாகை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் சுனாமி நிவாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்தார். நூற்றுக்கணக்கான பாதிக்கப் பட்டவர்களை தன் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்தார். இறந்தவர்களின் சடலங்களை மதப் பாகுபாடு பாராமல் முஸ்லிம்களின் மண்ணறையில் புதைக்க ஏற்பாடு செய்தார். நான் இத்தொகுதியைச் சேர்ந்தவனாக இருந்தால், இவர் எந்தக் கட்சி சார்பாக போட்டியிட்டாலும், அல்லது சுயேட்சையாக போட்டியிட்டாலும் வாக்களிப்பேன். இவருக்காக வாக்கு சேகரிப்பேன்.

மியாகான் - ஜே.எம். பாப்பா கட்சி

காயிதே மில்லத்தின் பேரன் தாவூது மியாகானும், ஜே.எம் பாப்பாவும் முஸ்லிம் லீக் பெயரிலேயே தனிக்கட்சி தொடங்கி நடத்துகின்றனர். இந்த ஒரு காரணத்துக்காகவே இவர்கள் புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள். தி.மு.க சின்னத்தில் முஸ்லில் லீக் போட்டியிடுவதை விமர்சிக்கும் இவர்களுக்கு அ.இ.அ.தி.மு.கவில் ஓர் இடம் அளிக்ககப் பட்டுள்ளது. இவர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது இரட்டை இலை பச்சை நிறத்தில் இருப்பதால் அது முஸ்லில் லீக் சின்னம் என்று சொல்லப் போகிறார்களா? தாவூது மியா கான் த.மு.மு.கவுடன் நெருக்கமாக இருந்தார். அவர் தேர்தலில் போட்டியிட்டால், த.மு.மு.க அவரை ஆதரிக்குமா? இப்படி விடை தெரியாத கேள்விகள் பல இக்கட்சி மீது நமக்கு உண்டு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் என் விமர்சனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ் நாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகைதீன், எம். பியின் தலைமையில் செயல் படும் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றிய என் விமர்சனத்தை முதலில் பதிவு செய்கிறேன். தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில் இக்கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது, இக்கட்சி மட்டும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட சம்மதித்து உள்ளது. வருங்காலத்தில் தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டி வரும். இவ்வாறு தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய போது, தன் எம்.எல்.ஏ பதவியை துறந்தார். முஸ்லிம் லீக்கின் மறைந்த தலைவர் ஏகேஏ அப்துல் சமது, காங்கிரஸ் சின்னத்தில் மக்களவைக்கு வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றார். அவர், வி.பி. சிங்கிற்கு ஆதரவாக வாக்களித்த போது, தமிழ் நாட்டின் வாழப்பாடி கூ. ராமமூர்த்தி, அப்துல் சமதின் பதவியை பறிக்க வேண்டும் என்று கூறினார். இவையெல்லாம் முஸ்லிம் லீக்கிற்கு தேவையா? மூன்று இடங்களில் தி.மு.க சின்னத்தில் போட்டியிடுவதை விட இரண்டு இடங்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதே மேல்.

Tuesday, March 14, 2006

தமிழகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எம்.எஸ்
தமிழகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எம்.எஸ்:
வைகோவின் தாய்: "பத்து மாசம் உன்னை உள்ளே வச்சிருந்தவ சொல்றேன், அந்த அம்மாவோட கூட்டணி வைக்காதே''

வைகோ: "போம்மா! நீயாவது என்னை பத்து மாசம்தான் உள்ளே வச்சிருந்தே. அந்தம்மா என்னை 19 மாசம் உள்ளே வச்சிருந்தது. அந்தம்மா சொல்றதைத் தான் இனி கேட்பேன்"

நன்றி: கீற்று இணையத் தளம்

Monday, March 13, 2006

அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..(2)

அல்குர்ஆனிலிருந்து.. (தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்)

சிலந்திப் பூச்சியின் வீடு..
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம், சிலந்திப்பூச்சியின் உதாரணம் போன்றது. அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (அல்குர்ஆன் - 29:41)

சாம்பலினைக் காற்று..
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது : அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை - புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது. இதுவே வெகு தூரமான வழிகேடாகும். (அல்குர்ஆன் - 14:18)

ஏடு சுமக்கும் (படித்து அறிய முடியாத) முட்டாள் கழுதை..
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது : ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்;. எந்த சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் - 62:5)

சைத்தானின் பல்டி..
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது. (அவன்) மனிதனை நோக்கி - ''நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் ''நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான். (அல்குர்ஆன் - 59:16)

இவ்வுலக வாழ்க்கையானது..
அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்;. மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்;. (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் - விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது.. ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; - பின்னர், அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே.. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு. (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை - ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் - 57:20)

அறுவடைக்காக காத்திருந்து..
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது. (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளா(விளை)கின்றன. முடிவில் - பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தைப் பெற்றுக் கவர்ச்சியடைந்த பொழுது, அதன் சொந்தக்காரர்கள் - (கதிரை அறுவடை செய்துகொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்;. அச்சமயம், இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் - 10:24)

பாக்கியம் பெற்ற சுவர்க்கவாசி..
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன் இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகைய சுவர்க்கவாசிகள்) - நரகத்தில், எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்குர்ஆன் - 47:15)

(உதாரணங்கள் தொடரும்)

Wednesday, March 08, 2006

அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..(1)

அல்குர்ஆனிலிருந்து.. (தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்)

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்குர்ஆன் - 39:27)


ஈயைக் கூட..
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து (ஒரு ஈ) ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பlலஹீனர்களே. (அல்குர்ஆன் - 22:73)

அற்ப உதாரணத்தின் மூலம்..
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து, தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்;. ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, ''இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?"" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்;. இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப்படுத்துகிறான் - ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (அல்குர்ஆன் - 2:26)

பத்தொன்பது மூலம்..
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் - காஃபிர்களும்: ''அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?"" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்;. அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை, அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் - 74:30-31)


அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி..
அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் - 24:35)

(உதாரணங்கள் தொடரும்...)

Saturday, March 04, 2006

எய்ட்ஸ் நோயைப் பற்றி..

எய்ட்ஸ் நோயைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?

>> எய்ட்ஸ் நோய் மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாகும், குறிப்பிட்ட ஒரு கிருமியே இதற்குக் காரணம். எய்ட்ஸுக்குரிய கிருமி(HIV+) மனிதனின் வெள்ளணுக்களை தாக்குகின்றது. இதனால் சகல நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்திகளை உடல் இழந்து விடுகின்றது.

>> சிலருக்கு இந்த எய்ட்ஸ் நோய் கிருமிகள் இருக்கின்றன. நீண்ட காலம் அந்த நோயின் அடையாளம் அந்த மனிதருக்குத் தென்படாமல் இருக்கும். அதன் காரணமாக இந்த நோய் மற்றவர்களுக்கு பரவக்காரணமாகும்.

எய்ட்ஸ் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் வழிகள்

>> எய்ட்ஸ் உள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் - எய்ட்ஸ் நோயின் அடையாளங்கள் அவர்மீது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் சரியே (இதன் மூலம்தான் 100% - க்கு 90% பரவுகின்றது)
நுகர்ப்பநேரத்தில் அல்லது பிள்ளைப்பேறின் போது அல்லது பால்கொடுக்கும் போதுகூட தாயிடம் உள்ள எய்ட்ஸ் நோய் குழந்தையை தொற்றிக் கொள்ளும்.

>> எய்ட்ஸ் நோயுள்ளவரின் இரத்தம் அல்லது அவரது உடலிலுள்ள ஒன்றை அதை பரிசீலிக்காமல் உடல் ஆரோக்கியமுள்ளவருக்கு பயன்படுத்தும் போது.

>> எய்ட்ஸ் நோயுள்ளவரின் உறுப்புக்களை (இருதயம், கிட்னி போன்றவற்றை) பரிசீலிக்காமல் உடல் ஆரோக்கியமுள்ளவருக்கு பயன்படுத்தும்போது.

>> போதைப் பொருட்களை உட்செலுத்துவதற்காக பயன்படுத்திய ஊசி, முடி இறக்கும் கருவி, பல் துலக்கும் கருவி, சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத பல் வைத்தியரின் கருவிகள் அல்லது காது குத்தும் கருவிகள், முகத்தை அழகுபடுத்தும் கருவிகள், இரத்தம் குத்தி எடுக்கும் கருவி, சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத சீன ஊசிகள் மற்றும் எய்ட்ஸ் நோயுள்ளவரின் இரத்தம்பட்ட பொருட்களை உபயோகிப்பது. (கடைசியாக சொல்லப்பட்ட நான்கு வகைகளில் எய்ட்ஸ் நோய் பரவுவது 100% - ல் 10% தான்)

கீழ்கண்ட காரணங்களால் எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை

>> வேலை செய்யும் இடத்திலோ அல்லது படிக்கும்போது அல்லது எய்ட்ஸ் நோயுள்ளவருக்கு பணிவிடை செய்வதின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை.

>> பாதிக்கப்பட்ட நபருடன் பிரயாணம் செய்வதாலோ அல்லது அவர் பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதாலோ பரவாது.

>> நீச்சல்குளம், கழிவறைகள் மற்றும் குளிப்பறைகளை உபயோகிப்பதன் மூலம் பரவாது.

>> எய்ட்ஸ் நோயுள்ளவருடன் சாப்பிடுவது, குடிப்பது அவர் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சந்திப்பது அல்லது தேவைப்படும்போது அவருடன் சேர்ந்திருப்பதால் பரவாது.

>> தும்மல் மற்றும் இருமலினால் எய்ட்ஸ் பரவுவதில்லை

>> மிருகங்கள் அல்லது விஷஜந்துக்கள் அவரைத் தீண்டுவதால் (இவைகள் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை)

எய்ட்ஸ் கிருமிக்கு மருந்தில்லை, அந்த நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளும்முறை பின்வருமாறு

>> இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வரும்போதே கெட்ட நண்பர்களிடமிருந்து முழுவதுமாக தவிர்ந்து கொள்ள வேண்டும் அவர்களின் முடிஇறக்கும் கருவிகள், பல்துலக்கும் கருவிகள், ஊசி போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது.

>> இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட அனைத்து பாலியல் முறையிலிருந்தும் தூரமாக வேண்டும்.

சுருக்கமாக: அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்!

கண்ணியத்திற்குரிய அல்லாஹுவின் கூற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிப்படையான, இரகசியமான, மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்
(அல்குர்ஆன் 6: 151)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துக் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது
(அல்-குர்ஆன் 17: 32)

வெளியீடு:
சவூதி அரேபியா அரசாங்க சுகாதார அமைச்சு
(ஜித்தா பிராந்திய சுகாதார அமைச்சின் தலைமையகம்)
எய்ட்ஸ் நோய் தடுப்பு உள்நாட்டமைப்பு
தொலைபேசி : 02-648 7140
தொலைநகல்: 02-648 1821

நன்றி: சுவனப்பாதை மாத இதழ்