Saturday, December 16, 2006

மத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்

(தம்)செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன்: 18:103-105)

ஏர்வாடி தர்காவில் கோலாகல விழா

ஏர்வாடியில் நடந்த கோலாகல விழாவில் ஒளி வெள்ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில், பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு விழா நடந்தது.

வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் தாங்கள் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனக் கூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர்.

அலங்கரிக்கும் பொறுப்பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுவதற்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணெய்யை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.

பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்றுக் கொண்ட சந்தனக்கூடு, சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவிலிருந்து வெளியேறியது.

சேனை கட்டிய குதிரைகள் முன்னே செல்ல, அசைந்தாடி வந்த யானையின் பின்னால் அழகோவியமாய் காட்சியளித்த சந்தனக்கூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.
புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வினை கண்டு களித்த பின்னர் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றவாறு கலைந்தனர்.
விழாவினை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முத்துச்சாமி, எஸ்.பி., திருஞானம் ஆகியோர் தர்கா சென்று வழிபாடு நடத்தினர்.

ஏற்பாடுகளை தர்கா இடைக்கால கமிட்டி செயலர் டாக்டர் ஹமீது அப்துல் காதர், கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் தலைவர் பசீர் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.

செய்தி உதவி: ஓசூர்-ஆன்லைன்.காம்

Thursday, December 14, 2006

இராஜாஜியும் மன்மோகன் சிங்கும்

இராஜாஜி, இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்துள்ளார். அப்போது, முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கிடைக்க வழிவகுத்தார். முஸ்லிம்களின் கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதற்கு முஸ்லிம்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த போது, அப்பாடல் பாடுவதற்கான அரசு உத்திரவை திரும்பப் பெற்றார். (நூல் ஆதாரம்: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ் நாடு மற்றும் சென்னை 1930 - 1947 ஜெ.பி.பி. மோரே, வெளியீடு: அடையாளம்)

இன்று இந்திய பிரதமர், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், தேசிய வளர்ச்சிப் பணிகளில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பேசியதற்காக, பா.ஜ.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகின்றனர். 'நாட்டின் வளங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு திறந்து விடப்படலாம். ஆனால், இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பங்கு அளிக்கப் படக்கூடாது' என்பது தான் வந்தேறிகளான சங்பரிவாரங்களின் தேசபக்தியா? ச்சீ! ச்சீ! வெட்கக் கேடு!

நகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்

ந‌கைமுகன் என்ற தேவர் சாதி வெறியன் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாகக் காட்டிக் கொண்டு தமிழ் நாட்டு அரசியலில் அறிமுகமானான். நடிகர் சிவாஜி தனிக் கட்சி தொடங்கிய போது அவருக்கு ஆலோசகராக இருந்தான். டைரக்டர் ராஜேந்தர் தனிகம்பெனி நடத்திய போது அவருடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி அமைத்து தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டான். அப்போது இவர்களுடன் கோமாளி சுப்ரமணிய சாமியும் சேர்ந்து இருந்தான். பின்னர் சிவசேனாவின் சின்னத்துடன் சேப்பாக்கம் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டான். சென்ற முறை கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதில் இவனது பங்கும் உண்டு. நகை முகன் திராவிடத் தமிழர் கழகம், தனித் தமிழர் கழகம் என்ற பெயர்களில் அமைப்புகளை நடத்தினான். 'திராவிடன் வீரம்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தினான். சசிகலாவின் கணவன் நடராஜனுக்கு நெருங்கிய நண்பன். அதானல் பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி கட்சியாகவும், அல்லது மறைமுக உறவுடனும் இருந்துள்ளான். தற்போது, தனித் தமிழர் சேனா என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறான். என்ன பெயரே உங்களுக்கு சிவ சேனாவை நினைவு படுத்துகிறதா? இப்போது இவன் இந்து மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது இவனது கோரிக்கை. தமிழக அரசு இவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவனது அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக முஸ்லிம்களின் அரசியலில் உறவையும், பகையையும் தீர்மாணிப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போது புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்னையில் பங்க் குமார் என்ற வனிய சாதியைச் சேர்ந்த தாதா, போலீஸாரின் என்கௌண்டரால் கொல்லப்பட்டுள்ளான். இவன் ஆள் கடத்தல் பேர்வழி. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்கள் பெற இவனது ரவுடித்தனமே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமையுடன் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில், இவன் சென்னை மாநகரத்தில் பா.ம.கவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தி.மு.க ஆட்சியாளர்கள் அவனை கொன்று விட்டதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக, தி.மு.க ஆட்சியையே கவிழ்த்து விடப்போவதாக ஒரு வன்னிய சாதிவெறியன் பேட்டி கொடுக்கிறான்.

வெங்கடேசப் பண்ணையார் என்ற நாடார் சாதி ரவுடி ஜெயலலிதா அரசில் என்கௌண்டரில் கொல்லப்பட்டான். கருணாநிதி அவனை பெரிய தியாகி போல் சித்தரித்து, அந்த ரவுடியின் மனைவி ராதிகா செல்விக்கு எம்.பி சீட் கொடுத்தார். அந்த பெண்ணும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விட்டார். இது ஆலடி அருணா, ரகுமான் கான் போன்ற தகுதி வாய்ந்த தி.மு.க காரர்களைத் தாண்டி இவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவியாகும்.

டாக்டர் ராமதாஸும் பங்க் குமாரின் மறைவில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். வரும் தேர்தல்களில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பா.ம.கவை கழட்டி விட்டால் தமிழ் நாட்டில் இருந்து துடைத்து குப்பைத் தொட்டியில் வீசி விடலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது.

Sunday, December 10, 2006

இந்து மக்கள் கட்சியை தடை செய்!

தமிழக அரசே!
இந்து மக்கள் கட்சியை தடை செய்!
இந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத் என்ற இந்து பயங்கரவாதியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சி. இவர்கள் இந்து முன்னணியில் இருந்து பிரிந்து வந்தவர்கள். இந்து முன்னணியை விட பயங்கரவாதத்தில் விஞ்சியவர்கள். கோவையில் முஸ்லிம்களை உயிருடன் எரித்த மாபாவிகள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். அப்போது ஜிகாத் கமிட்டியையும், அல் உம்மாவையும் தடை செய்த தமிழக அரசு இந்து முன்னணியையும், இந்து மக்கள் கட்சியையும் தடை செய்ய வில்லை. இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைகளை உடைத்தும் சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் பெரியார் தொண்டர்கள் சில இடங்களில் எதிர்வினையாற்றி உள்ளனர். சமூக பதட்டத்தை தோற்றுவித்துள்ள இந்து மக்கள் கட்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அது போல, தமிழ் நாட்டில் இந்து முன்னணி, சிவ சேனா ஆகிய தேச விரோத செயல்களில் ஈடுபடும் வன்முறை அமைப்புகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் இதனை எளிதாகச் சாதிக்கலாம்.

Thursday, November 30, 2006

மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: பரிந்துரை

மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: கமிட்டி

நவம்பர் 30, 2006

டெல்லி: இஸ்லாமிய மதரஸாக்கள் வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜீந்தர் சாச்சார் கமிட்டியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆராய டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சாச்சார் தலைமையிலான 7 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் நியமித்தது.

அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட சாச்சார் கமிட்டி தனது பரிந்துரையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது. இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே அறிக்கையை சமர்ப்பித்தார்.

சாச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

இஸ்லாமிய மதரஸாக்கள், இஸ்லாமியர்களுக்கு மதக் கல்வியை போதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மதரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள், பட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

மதரஸாக்களில் வழங்கப்படும் பட்டங்கள் மூலம், சிவில் சர்வீஸ் தேர்வுகள், பாதுகாப்பு துறை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

உயர் கல்வி பாடத் திட்ட முறையோடு மதரஸாக்களின் கல்வி முறையை இணைப்பது குறித்து பரிசீலிக்கலாம். இதன் மூலம் மதரஸாக்களில் படிப்பை முடித்து விட்டு வழக்கமான படிப்புகளில் சேர இஸ்லாமிய மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இஸ்லாமியர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கு வசதியாக சம வாய்ப்பு ஆணையத்தை நிறுவ வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், தொகுதி சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குறைந்தது ஒரு இஸ்லாமிய இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டரையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உருது மொழிப் பாடத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

கடந்த 60 ஆண்டுகளில் சிறுபான்மை பிரிவினர் பொதுத் துறைப் பணியில் பரவலாக இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், அரசியலில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. இது இந்திய சமூகத்திலும், அரசியலிலும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும்.

வளர்ச்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்க முடியாத அளவுக்கு அவர்கள் பலவீனமாக உள்ளனர். மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது சமமான அளவுக்கு பங்கேற்கவோ முடியாத நலையில் அவர்கள் உள்ளனர்.

அரசு மற்றும் அரசியலில் இஸ்லாமியர்களும் தீவிரப் பங்காற்றும் வகையிலான மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம்.

அரசு வேலைகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே அரசு வேலை வாய்ப்பு தேர்வுக் குழுக்கள், வாரியங்களில் இஸ்லாமிய சமூகத்தினரையும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் அந்துலே, அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் சிறுபான்மையினர் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Tuesday, November 28, 2006

பாபரி மஸ்ஜிதும், இடது சாரிகளும்

டிசம்பர் 6 . அயோத்தியில் இருந்த முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித், சங் பரிவார் பயங்கரவாதிகளாலும், தேச விரோதிகளாலும் ஷஹீதாக்கப்பட்ட கருப்பு நாள்.
மறக்க முடியுமா அந்த நாளை?
இழக்க முடியுமா நம் இறையில்லத்தை?

இந்தியாவில் உள்ள இடதுசாரி சக்திகளில் பெருமாண்மையினர், பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்கும் இல்லாமல், இந்துக்களுக்கும் இல்லாமல் அருங்காட்சியகமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு வேளை நடந்தால், அது சங்பரிவாரங்களுக்கு பாதி வெற்றியே. இந்திய இடது சாரிகள் அந்த கருத்தை மாற்றிக் கொண்டு பாபர் மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கருத்துக்கு வர வேண்டும். த.மு.மு.க முஸ்லிமல்லாத நடுநிலைச் சக்திகளை இணைத்துக் கொண்டு போராடுவது பாராட்டத் தக்கது. எனினும், ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத் தலைவரின் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடினால் அது இன்னும் வலுவாக இருக்கும். நான் நினைப்பது ஒருவேளை பேராசையாக இருக்கக் கூடும்.

Tuesday, November 14, 2006

பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள்

பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள்
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
முகவரி: 45A இஸ்மாயில் மைதானம்
சென்னை - 600 005
கைப்பேசி: 9442 72500
மின் அஞ்சல்: karuppu2004@rediffmail.com
பக்கங்கள்: 112 விலை: ரூ.55


பின்னட்டைக் குறிப்பு:
பெரியாரை தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இருந்தவரென்றும், அயோத்தி தாசரின் பங்களிப்புகளை மறைத்தவரென்றும் ஒரு திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர். வலுவான பார்ப்பனச் சக்திகள் இதன் பின்னனியில் முகுக்கி விடுகின்றன. உரிய ஆதாரங்கள், ஆய்வுக் கறார்த்தன்மை எதுவுமின்றிப் போகிறப் போக்கில் உதிர்க்கப்பட்ட இந்த அவதூறுகளுக்கு அ. மார்க்ஸ் அவ்வப்போது அளித்த பதில்களின் தொகுப்பு இது. ஏற்கனவே வெளிவந்தவை தவிர இதுவரை வெளிவராத இரு கட்டுரைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அயோத்திதாசர் பற்றிய கட்டுரை பல ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியது.

Wednesday, November 01, 2006

பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்


இக்கட்டுரை, ரைசுதீன் தம்மை ஆழமான‌ சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதற்கும் அவருடைய நேரத்தையும் திறமையையும் சரியான வழியில் ‍- அதாவது ‍- இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை சேர்த்துக் கொள்ளும் வழியில் செலவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப் பட்டதாகும்.

விடாது கருப்பு என்ற வலைப்பதிவில் "ரமலான் மாதத்தில் தவறு செய்யும் இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பில் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ரமளான் "நோன்பு" பற்றி எதிர்மறையாகவும் ரமலான் பற்றிய இஸ்லாமிய சட்டதிட்டங்களை தவறு என்றும் பெரியார்வாதி ஒருவர் வாதிட்டிருந்தார். அப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவுப்பூர்வமாக பல முஸ்லிம் சகோதரர்கள் பதில் அளித்திருந்தார்கள். அப்பதிவின் தலைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் குறுக்கே புகுந்த ரைசுதீன் என்ற முகவைத்தமிழன் "எச்சரிக்கை என்ற தொடரில் இவர் எழுதிவரும் விஷயங்களை தொடுப்புகளுடன் சுட்டிக்காட்டி "முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம்" என்று எழுதினார்.

அதற்கு (சீனியர்) அழகு என்ற அழைக்கப்படும் அதிரையைச் சேர்ந்த "ஜமீல் காக்கா", கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.


//இங்கு முகவைத் தமிழன் என்பவர் ஒரு நெடிய பின்னூட்டமிட்டிருக்கிறார். அது உங்களுடைய பதிவுக்கோ கருவுக்கோ எவ்விதத் தொடர்புமில்லாது மட்டுமின்றி, சுய விளம்பரத்திற்கான பின்னூட்டமாகும். மலிவான சுய விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு சிலர் சித்தமாகவேயுள்ளனர் ‍- நரமாமிசம் தின்பதுவரை. -அழகு//


இதற்குப் பதிலாக முகவைத் தமிழன் என்ற ரைசுதீன் சில கேள்விகளையும், அவதூறுகளையும், கொச்சையான வார்த்தைகளையும் மறுமொழியில் வைத்ததோடு அல்லாமல், (ஜூனியர்) அழகு என்ற கீழை ஜமீல் (ததஜ) என்பவரை எதிர்த்து "பிரித்து மேய்ந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அதிரை ஜமீல் அவர்களை கீழை ஜமீல் என்று மாற்றிவிட்டால், இவர் எழுதியதெல்லாம் சரியாகிவிடுமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய கேள்வி. அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அவைகளை நீக்கிவிட்டு மனம் திறந்த மடல் ஒன்றை (விடாது கருப்பு பதிவில்) எழுதியுள்ளார்.

ரைசுதீன் என்பவர் அவரின் மனக்குமுறலை "விடாது கருப்பு" என்ற பதிவோடு விட்டுவிடாமல் அவரின் வலைப்பதிவிலும் இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார். அதில் ஒரு பத்தி மட்டும் சேம்ப்பிளுக்காக:


//இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். -ரைசுதீன்//


ஆக, ரைசுதீன் என்ற நபர் எழுதிய சம்பந்தப்பட்ட 3 பதிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்:

1) முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம். (அதாவது தவறு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்காதவர்கள், இஸ்லாத்தினைப்பற்றி எந்த வகையில் விமர்சனம் செய்தாலும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாதாம்.)

2) இஸ்லாத்தின் சட்டத் திட்டங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களையும் மிக மோசமாக விமர்சிப்பவர்கள் உருவாக, இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு பதில் கொடுக்கும் முஸ்லிம்களே காரணமாக உள்ளனராம். அதற்குக் காரணம் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க இன்டர்நெட் இசுலாமியர்களின் கருத்தற்ற வாதங்களும் தவறை நியாயப்படுத்த முயல்வதும் தானாம்.

3) தவறு செய்யும் முஸ்லிம் மவ்லவிகளை, முஸ்லிம் என்பதால் முஸ்லிம் எழுத்தாளர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லையாம். இவர் மட்டும்தான் தட்டிக் கேட்கிறாராம். அவ்வாறு இவர் மட்டும் தட்டிக் கேட்கும்போது மற்ற முஸ்லிம்கள் நிறுத்தச் சொல்கிறார்களாம்.

4) இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்குப் பதில் கொடுப்பவர்களில் சிலர் இவரின் அநாகரீகமான எழுத்துக்கள் அடங்கிய விமர்சனங்களை எதிர்ப்பதால், மாற்றுப் பெயரில் வந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பதிவில் முஸ்லிம்களுக்கு எதிராக களம் இறங்கத் தயாராக இருக்கிறாராம்.

5) ரைசுதீனுக்கு இருப்பது திராவிட உணர்வாம். விடாது கருப்புக்கு ஐஸ் வைப்பதுபோல் "முஸ்லிம் பார்ப்பனர்" போன்ற வார்த்தைகளில் முஸ்லிம் வலைப்பதிவர்களை நோக்கித் திட்டியுள்ளார். பார்ப்பனர் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வதற்கு பதில் திராவிடத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வாரா? என்று தெரியவில்லை.


பிரித்து மேய்வது:

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. யுனிகோடு வசதியுடன் கூடிய வலைப்பதிவுகள் பரவலாக மக்கள் பயன்படுத்த தொடங்கிய அந்த கால கட்டத்தில் சில நபர்களால் (வலைப்பதிவுகள், யாஹூ மடலாடற்குழுக்கள், திண்ணை.காம் போன்றவற்றில்) இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டபோது, அதற்காக நேரத்தை ஒதுக்கிய சில சகோதரர்கள் அறிவுப் பூர்வமாக பதிலளித்து வந்தனர். வலைப்பதிவுகளில் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதே வேளையில் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் அவர்களுக்கு வெண்சாமரம் வீசும் ஒரு கூட்டமும் உருவாகியது. எனவே இதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் முயற்சியும் இஸ்லாமிய சகோதரர்களினால் முன்னெடுத்து வைக்கப்பட்டது.

படித்தவர்களும், எழுத்தாளர்களும் அதிகம் புழங்கும் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் இஸ்லாம்பற்றி விவாதிக்கப்பட்டு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மேன்மையான சட்டத்திட்டங்கள் எவை? அதன் மீது புழுதிவாரித் தூற்றுபவர்களின் பொறாமைக்குக் காரணங்கள் எவை? போன்ற விளக்கங்கள் பரவலாக்கப்பட்டதற்கு இஸ்லாத்தின் எதிரிகளே அவர்களையும் அறியாமல் உதவி புரியலானார்கள். ஆனால், இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்ட அதே சிலரின் நடவடிக்கைகளால், இஸ்லாம் வளர்ந்துவிடுமோ என்று பயந்த சிலர், இஸ்லாமியர்கள்தான் இஸ்லாம்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வைத்து, பிறகு அதற்கான பதிலையும் வைத்து இஸ்லாத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற கருத்தை முன்வைத்தார்கள். நபியவர்களை மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்தாலே பொறுக்க முடியாத முஸ்லிம்களால், இது போன்ற மட்ட ரகமான விமர்சனங்கள் வைக்கப்பட மாட்டாது என்பதை காலப்போக்கில் அவர்களே புரிந்துக்கொள்ளலானார்கள்.

நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பெண் பித்தராகவும், இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலமாகவும், வாள் முனையில் இஸ்லாம் பரவியது என்றும் சித்திரிக்க பலர் இணையத்தில் தலையெடுத்த போதுதான் அதற்கு பதில் கொடுப்பதற்காக பலர் உருவானார்கள். தமிழோவியம் என்ற இணைய பத்திரிக்கையில் நபியவர்களை வலிப்பு நோய் உள்ளவராகச் சித்தரித்து ஒருவர் தொடர் எழுதிய போது, அதே தளத்தில் அதற்குப் பதில் தொடரை எழுதிய சகோதரர் போன்றோரை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்.

தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை என்ற கூட்டு வலைப்பதிவில் இடம்பெற்ற இவர் எழுதிய நாகரீகமற்ற எழுத்துக்களை உள்ளடக்கிய "எச்சரிக்கை" என்ற தொடரை ரமளான் மாதத்தில் கண்ணுற்ற சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் பிரதிபலிப்பாக எங்கே என்ன பேசுகிறோம் என்று கூட விளங்காமல், இஸ்லாத்தின் கொள்கைகளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட பதிவில் போய், இவரின் மனக்குமுறல்களுக்கு மருந்து தேடியது, கருப்பு என்ற நபரின் இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை ஆமோதிப்பது போல் உள்ளது.

உதாரணமாக:

//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் ..ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


பின்னி பெடலெடுப்பது

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். நல்ல அனுபவம் இருக்கும். அவரவர் அவருக்கு தெரிந்த வகையில் எழுதுகிறார்கள். இஸ்லாம்பற்றி அறிவு உள்ளவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். இவருக்கு மவ்லவிகளின் தவறுகள் பற்றிய செய்திகள் கிடைத்ததென்றால் அது ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் அதனைப்பற்றி அழகான முறையில் விமர்சனம் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால், விமர்சனம் செய்வதற்கென்று ஒரு எழுத்து நாகரீகமும் எந்த வார்த்தைகள் பயன்படுத்துவது என்ற இஸ்லாமியக் கட்டுப்பாடும் இருக்கின்றது. இவர் எப்படி எழுதினார் என்று நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பெண்கள் விஷயத்தில் வழிதவறிப்போன மவ்லவிகளையும் தனது இயக்கத்தினர் என்பதால் அதனை கண்டும் காணாமல் இருப்பவர்களையும் நாசுக்காக சுட்டிக் காட்டிய பதிவுகள் இல்லாமலில்லை.

முஸ்லிம் சாமியார்களின் லீலைகளை எதிர்க்காதவர் இஸ்லாத்தைப் பற்றி பேசக்கூடாது என்றால், அல்கோஃபர் பகுதியில் இவர் தற்போது சேவைகள் செய்வதாக சொல்லும் இஸ்லாமிய மையங்கள் இவரின் பாணியில் முஸ்லிம் சாமியார்களின் காம லீலைகளுக்கு எதிராக வெகுண்டெழவில்லையே. ஆகையால் அவர்களும்தான் இஸ்லாமிய கொள்கைகளைக் கிண்டலடிக்கும் எதிரிகள் உருவாக காரணமாகிவிட்டார்களோ? அல்லது இவர் எழுதியதுபோல் அவர்களெல்லாம் முஸ்லிம் பார்ப்பனர்களோ?

பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க என்று மற்றவர்களை தூற்றிய இவர்,


//"விடிய விடிய புளு பிலிம் பார்க்கலாம் காலையில் ஜாமானையும் கையையும் கழுவிட்டு டான் மியுசிக்கில் தலைசிறந்த தாயி பேசுகின்றார்" -ரைசுதீன்//


என்றும்


//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் .. ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


என்று எழுதியிருந்தார்.

இவைகள்தானோ "நிதானமான, ஆணவம் இல்லாத, கருத்துள்ள" வாதங்கள். அதுவும் புனித ரமளான் மாதத்தில் இவரால் எழுதப்பட்டவை.


//நேசக்குமார்களும், ஹெச்.ஜி.ரசூல்களும், சல்மாக்களும் அவர்களாக உருவாகவில்லை இந்த சமுதாயத்தின் தோல்வியே இவர்கள் என்பதையும் சமுதாயத்தின் பேரில் ஏற்ப்பட்ட வெறுப்பாலும் இவர்கள் போன்ற ஆனவம் பிடித்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்களின் கருத்தற்ற வாதங்களாலும் தவறை நியாயப்படுத்த முயன்றதாலுமே இவர்கள் உருவாணார்கள் என்பதை இன்று இனையத்தில் என்னை எதிர்த்து கொண்டிருக்கும் இந்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் உணரவில்லை. அதன் விளைவே இத்தனை குழப்பங்களும். -ரைசுதீன்//


என்று எழுதிய ரைசுதீனை நோக்கி நான் வைக்கும் கேள்விகள்:

மேற்கண்ட மூன்று நபர்களும் உருவாகக் காரணமாக இருந்த, ஆணவம் பிடித்த இண்டெர்நெட் இசுலாமிய அறிஞர்களின் கருத்தற்ற வாதம் எது? தவறை நியாயப்படுத்திய விஷயங்கள் எவை? என்று தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடிட்டுக் காட்ட வசதியாக இருக்கும்.

புத்தியுள்ள ஒருவர், இஸ்லாமிய எதிரிகளின் ஆக்கங்களை படித்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் சகோதரர்களின் ஆக்கங்களை படித்தால், யார் யாரை உருவாக்கியவர்கள் என்பது விளங்கும்.

இவர் எழுதும்போது, "பிரித்து மேய்வது", "பின்னி பெடலெடுப்பது" போன்ற வார்த்தைகளை ஹீரோ-தனமாக பயன்படுத்தியிருப்பதால், அவைகளை பதிவின் தலைப்பாக சூட்டியுள்ளேன்.

- அபூ முஹம்மத்
http://tamilmuslimthoughts.blogspot.com

Thursday, October 19, 2006

கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசன் எச்சரிக்கை

ரசிகர்கள் என்ற போர்வையில் மதத்தின் பெயரால் விஷமத்தனம் செய்ய வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு நவ.7-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி இரண்டு தினங்களுக்கு முன் "வாழும் நபிகள் நாயகம் கமல்ஹாசன் வாழ்க" என சென்னையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந் நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் எனது ரசிகர்கள் என்ற பெயருடன் சில விஷமிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தார் மனம் புண்படும் வகையில் என் பெயருடன் இணைத்து சுவரொட்டிகள் வெளியிட்டுள்ளனர்.

எனது ரசிகர்கள் நற்பணியாளர்களாக தங்களை மாற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. விஷமிகளின் செயல் மத, அரசியல் சார்பற்று இயங்கும் எனது நற்பணி மன்றத்தாருக்கும், மதமோ, அரசியல் சார்போ இல்லாமல் வாழும் எனக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும், என்னையும் மனம் புண்படச் செய்யும் இச் செயல்பாடுகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதும், இனி இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும் அவர்களுக்கு நல்லது.

பல காலமாக மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழும் தமிழகத்துக்கும் அதுவே அவர்கள் செய்யும் சேவையாகும். விஷமிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதைவிட எச்சரிக்கை விடுப்பதே நற்பயன் விளைவிக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

நன்றி: hosuronline
கமல் ரசிகர்கள் போஸ்டருக்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு
அக்டோபர் 18, 2006

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நலப் பணிகளை அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதில் நவம்பர் 7ம் தேதி பிறந்த நாள் காணும் நடிப்புலகின் நபிகள் நாயகமே வாழ்த்துகிறோம்! பாலையும் மிஞ்சும் வெள்ளை நிறமே, பாரி வள்ளலும் கெஞ்சும் வள்ளல் குணமே என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ன.

இந்த போஸ்டருக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஹைதர் அலி புகார் கொடுத்தார்.

இதையடுத்து அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இஸ்லாமிய சமூகத்தினர் மனம் நோகும்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து கமல்ஹாசன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டக் கூடாது என்றும் மன்றத்தினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி: thatstamil

Saturday, October 14, 2006

ஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் பிறப்பால் முஸ்லிம். தமிழ் கவிஞர். இவரது 'மைலாஞ்சி' கவிதைத் தொகுப்பிலேயே, இஸ்லாத்தின் அடிப்படையோடு முரண்படும் பல கவிதைகளை எழுதியிருந்தார். இவரது உலறல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர் தன்னை ஒரு மார்க்சிய ஆய்வாளராகக் காட்டிக் கொண்டாலும், பின் நவீனத்துவ அடிப்படையில் இஸ்லாத்தை அணுகி கட்டுரைகள் எழுதுவதாகக் கூறிக் கொண்டாலும், ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தர்கா வழிபாட்டை ஆதரித்தும், இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டை விமர்சித்தும் எழுதுகிறார்.

தர்கா வழிபாடு, கோயில் வழிபாட்டை ஒத்திருப்பதாக முஸ்லிம் அறிஞர்கள் விமர்சிப்பதற்கு, இவர் 'ஹஜ்ஜில் ஒட்டகங்களை பலி கொடுப்பது, கோயில்களில் ஆடு பலியிடுவதை ஒத்திருப்பதாக உலறுகிறார். இவர் தர்கா வழிபாட்டையும், இஸ்லாத்துக்கு முரணான பல அநாச்சாரங்களையும் நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையிலேயே கை வைக்கிறார். ஹெச் .ஜி.ரசூல் 'திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்... ' என்ற தலைப்பில் திண்ணை இணைய இதழின் 12 அக்டோபர் 2006 பதிப்பில் திருக்குர் ஆன், முஹமது நபி(ஸல்) அவர்கள் தன் உள் மனத்திலிருந்து வெளிமனத்துக்குப் பேசியது தான் என்று கூறுகிறார். திருக்குர் ஆன், இறைவன் அருளியது அல்ல. முஹமது நபி(ஸல்) அவர்களின் சொந்தச் சரக்கு என்பது தானே இதன் பொருள்? நவூதுபில்லாஹ். இப்படிப் பட்ட கருத்தை வெளியிடும் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதை இஸ்லாமிய அறிஞர்களிடம் அறிய விரும்புகிறேன். இது போன்ற கருத்து, கிறிஸ்துவர்கள் மூலமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அக்கருத்துக்கு கவிஞர் ஹெச். ஜி. ரசூல் அடிமையாகி இருக்கலாம். அல்லது இவர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலியாகவே இருக்கக் கூடும்.

Tuesday, October 10, 2006

தற்பெருமையும் ஆணவமும்

தற்பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே !

இப்பூமியில் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை ( ஜன்னத்தை) நாம் சொந்தமாக்கி வைப்போம்; பயபக்தியுடையவர்களுக்கே ( நல்ல ) முடிவு உண்டு. அல்குர்ஆன் : 28 . 83

லுக்மான் ( அலை ) அவர்கள் தனது மகனை நோக்கி :

உன் முகத்தை ( பெருமையோடு ) மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! ( ஏனெனில் ) அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்; அல்குர்ஆன் : 31 . 18

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருளினார்கள். நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என ஹாரிஸா இப்னு வஹப் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தன்னைப் போன்று எவரும் உண்டா என்கின்ற மமதை சிலருக்கு வரும் அவர் எப்படிப்பட்டவராக இருப்பரெனில் அதிகப் பணம், உயர் பதவி காரணமாக பகட்டு அதிகரித்து ஆடம்பரங்கள் மிகைத்து அது படாடோபத்தையும், டாம்பீகத்தையும் ஏற்படுத்தி விடும் இப்படிப்பட்டவர்கள் பூமியில் பெருமையாக நடப்பதுடன் பணத்திலும், பதவியிலும் தன்னை விட கீழுள்ள மக்களிடம் முகத்தை திருப்பிக் கொள்வதுடன் அவர்களிடத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆணவம் கொள்வார்கள் இது போன்றவர்களைப் பாரத்து அல்லாஹ் கூறுகிறான்

...நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. 17:37 .

பூமிக்கு மேல் வின்வெளி வரை விஸ்தீரணமாக உயர்ந்து செல்வதற்கும் அதில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும் அவற்றை இறைவன் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், வசப்படுத்திக் கொடுத்தக் காரணத்தினால் தான் மனிதன் அவ்வாறுப் பறந்து சென்று பல சாதனைகள் படைக்க முடிந்தது இதுவும் மனிதனைப் பெரும்பாலும் அகப்பெருமைக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. சந்திர மண்டலத்திற்கே மனிதன் போய் விட்டான் இனி என்ன ? கடவுளாவது , கத்தரிக்காயாவது ? என்று நாஸ்த்திகம் பேசும் அளவுக்கு உண்டு பண்ணியது. இது போன்வர்களைப் பார்த்து பூமியைப் பிளந்து விட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது என்றுக் கூறி மனிதனுடைய அகம்பாவத்திற்கும், ஆணவத்திற்கும் சாவு மணி அடித்தான் இன்று வரை எந்த விஞ்ஞானியாலும் பூமியை மலையளவுக்குப் பிளந்து உட்சென்று சாதனைப் படைக்க முடியவில்லை, முடியாது ! இது சத்தியவேதம் கூறும் இறைவாக்கு.

பெருமை, வல்லமை, மேலாதிக்கம், டாம்பீகம், படாடோபம் போன்றவைகள் ஒருவனுக்கு இருக்க வேண்டுமெனில் அது அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் பெருமை எனது மேலாடையாகும், வல்லமை எனது கீழாடையாகும் அதில் எவனாவது ஒருவன் போட்டியிட்டால் அவனை நரகத்தில் வீசுவேன் என அல்லாஹ் கூறுவதாக , அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூநியதாக, அரபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் : அபூ தாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இவ்வாறு அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதரவர்கள் சுட்டிக்காட்டுவதன் முக்கிய நோக்கம் மனிதன் அவைகளில் எதொன்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுவாகும், அல்லாஹ்வும் இவற்றை தனக்கு உரியது என்றுக் கூறினாலும் நளினத்தையும், மிருதுவானத் தன்மையையும் விரும்புகிறான் .

அன்புள்ள சகோதரர்களே! யாருக்காவது தான் ஒருப் பெரிய பதவியை வகிப்பவன், பணக்காரன் என்கிற சிந்தனை இருந்து அவற்றால் தனக்குக் கீழுள்ளவர்களிடம் அதிகாரம் செய்பவர்களாக இருப்பீர்களேயானால் இப்புனித ரமளான் மாதத்தில் அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே உயர்வானவன் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியன என்ற சிந்தனையை மனதில் வேர் விடச் செய்யுங்கள்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 59:21 முதல் 24 வரை

நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்

Thursday, October 05, 2006

ஒற்றுமை..! கிலோ என்ன விலை?

சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. மும்பை பள்ளிவாசல் ஒன்றில் தராவீஹ் தொழுகை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆவதற்கு முன் காவல்துறை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தது என்ற தகவல் அதில் இருந்தது.

இந்த பிரச்னை நமக்கு ஏற்கனவே பழகிப்போன 8 Vs 20 ஆகத்தான் இருக்கும் என நினைத்து அந்த மின்னஞ்சலை படித்தபோதுதான் விபரம் புரிந்தது, இது 20க்குள்ளேயே 10-10 பிரச்னை என்று. குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பரெல்வி, தேவ்பந்தி என இரு குழுக்களை சேர்ந்த முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை தங்கள் குழுவைச் சேர்ந்த மவுலானாதான் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதால் சண்டை மூண்டது. 'ஒவ்வொரு மவுலானாவும் 10, 10 ரக்அத்கள் தொழவைக்கட்டும்' என்ற தேவ்பந்திகளின் சமரச திட்டத்தை பரெல்விகள் ஏற்கவில்லை. கலவரம் மூளக்கூடிய சூழலில் காவல்துறை வரவழைக்கப் பட்டு, ஒரே பள்ளியில் இரு குழுக்களும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தொழுது கொள்வது என்ற சமாதானத் திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.

ஒரே பள்ளியில் தனித்தனியாக தொழுவது என்ற ஏற்பாட்டின் மூலம் அந்த இரு குழுக்களும் சமாதானம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த தகவலை அறிந்த என்னையும் உங்களையும் போன்ற சாதாரண முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்களா? என்றால் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தில் ஒரே இறைவன், ஒரே தலைவர், ஒரே வேதம், ஒரே கிப்லா. ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர் தங்கள் ஒரே இறைவனை ஒரே ஜமாஅத்தாக தொழும் விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த அவல நிலை?

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், "இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்" (3:103).

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:"(பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்" (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

இஸ்லாம் போதித்த ஒற்றுமை, சகோதரத்துவத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். நமது மவுலானா தொழுகை நடத்த முடியவில்லை என்றால் அதற்காக நம் சமுதாயத்தை இரு பிரிவாக பிரிக்கவும் நாம் தயாராகி விட்டோம். அதற்காக மாற்று மதத்தினரின் உதவியை நாடவும் நாம் தயங்க மாட்டோம். சகோதரர்களே, சிந்தியுங்கள்!

பெருமானார் (ஸல்) அவர்கள் லைலத்துல்கத்ர் இரவைப் பற்றி அறிவிப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள், "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான்" அதாவது, இந்தச் சண்டையின் காரணமாக லைலத்துல்கத்ர் பற்றிய அறிவிப்பை நபியவர்கள் மறக்கடிக்கப் பட்டார்கள்.

ஸஹீஹ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸை நாம் அறிவோம். ஒவ்வொரு வருட ரமளானிலும் நம் மார்க்க அறிஞர்கள் இதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இரு தனிநபர்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. இன்று இதை நாம் மறந்து விட்டு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நாம் மேலும் என்னென்ன பாக்கியங்களை இழந்துக் கொண்டிருக்கிறோமோ, இறைவனே அறிவான்!

சகோதரர்களே, இந்த அவல நிலையை நிவர்த்திக்க நம்மால் இயன்றதெல்லாம் பிரார்த்தனை ஒன்றுதான். புனிதமிக்க இந்த ரமளானில், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் வேளையில், உங்கள் வழக்கமான பிரார்த்தனைகளுடன் தயவு செய்து இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

"இறைவனே! எங்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மேம்பட அருள் புரிவாயாக! பிரிவினையைத் தூண்டும் ஷைத்தானிய எண்ணங்களை எங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய உதவுவாயாக! ஆமீன்!"

Wednesday, October 04, 2006

பிலால் (ரழி)

பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
நூல் அறிமுகம்

நூல்: பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
ஆசிரியர்: ஹெச்.ஏ.எல். க்ரெய்க் (உமர் முக்தார், தி மெஸேஜ் படங்களின் திரைக்கதை ஆசிரியர்)
தமிழாக்கம்: அல் அஸுமத்
வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோவில் தெரு, கே. புதூர், மதுரை - 625 007
தொலைப்பேசி: 0452- 256 9930 மின் அஞ்சல்: mellinambooks@rediffmail.com
பக்கங்கள்:132 விலை: ரூ. 50

முஹமது நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப் படுகின்றனர். முஹமது நபியின் துணைவியரையும், நான்கு கலீஃபாக்களையும் அடுத்து முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப் படும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களே. இந்நூல், பிலால் (ரழி) அவர்களே தன் வரலாற்றை கூறும் விதமாக எழுதப் பட்டுள்ளது. ஹதீஸ்களின் சான்றுடன் எழுதப் பட்டுள்ள இந்நூல் மிகச்சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது. அல் அஸுமத் கலையழகுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிலால் (ரழி) அவர்கள் உமையாவிடம் அடிமையாக இருந்த போது பட்ட சித்திரவதைகளுடன் தொடங்கும் நூல், அவர்கள் முதல் தொழுகை அழைப்பாளராய் நியமிக்கப்படும் வரையுள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நூல் முஹமது நபியின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாகச் சொல்கிறது. முஹமது நபி சந்தித்த போர்க்களங்களும் சற்று விரிவாகவே காட்டப்படுகின்றன.


ஆசிரியர் குறிப்பு:

ஹெச்.ஏ. எல். க்ரெய்க் 1921 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். பத்திரிக்கை ஆசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக விமர்சகராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார். அங்கு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியரானார். இவருடைய ஆரம்பகால படங்கள் 'டினோ டி லாரன்ஸ்' ஸால் தயாரிக்கப் பட்டன. அவை சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன. 'வாட்டர்லூ' என்னும் போர்ப் படத்திற்கும், 'ஆன்சியோ ஃப்ரௌலின் டொக்டர்' ஆகிய வரலாற்றுப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். முஸ்தஃபா அக்காத்தின் புகழ் பெற்ற படங்களான 'உமர் முக்தார் (Lion of the Desert), தி மெசேஜ்
ஆகியவற்றுக்கும் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த க்ரெய்க் 1978 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் ரோமில் காலமானார்.

Sunday, October 01, 2006

தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)

சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, "சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன" என்றும் "அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் "யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது சமரசத்தின் இணைய பதிப்பு, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)

யுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் காணக் கிடைக்கின்றன. மறைந்த யுனிகோடு உமர் அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா? என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.

வேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

தொடரும்..

Saturday, September 23, 2006

இஸ்லாமிய அழைப்பாளர் கையேடு

நூல்: இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும், விளக்கங்களும்
ஆசிரியர்: அ. முஹம்மது கான் பாகவி
வெளியீடு: சாஜிதா புக் சென்டர்
முகவரி: 248 தம்புச் செட்டித் தெரு, முதல் மாடி
மண்ணடி
சென்னை - 600 001
தொலைப்பேசி: 2522 4821

பக்கங்கள்: 136 விலை: ரூ. 40

மவ்லவி அ. முஹமது கான் பாகவி அவர்கள், 1999 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளில் 'முஸ்லிம் முரசு' மாத இதழில் 'இஸ்லாம் - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்' என்ற தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரையின் நூல் வடிவமே இந்த நூல். இந்நூலுக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் அணிந்துரை அளித்துள்ளார். அதன் ஒரு பகுதியே இந்நுலின் பின்னட்டைக் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.

பின்னட்டைக் குறிப்பு:

பெண்ணிய நோக்கிலும், மார்க்சிய பார்வையிலும் இஸ்லாத்தின் நிலைப்பாடுகள் குறித்து விவாத அலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நாளில், இந்நூல் தகுந்த பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.

இஸ்லாத்தின் மீது எதிர்மறைக் கருத்துகளை உருவாக்கிய கீழை, மேலை நாட்டுச் சிந்தனையாளர்களுக்கு, அவர்கள் பக்கமிருந்தே பதில்களைத் தேடி விவாதிக்கும் திறன் இந்நூலுக்கு சிறப்புச் சேர்க்கிறது.

முஸ்லிம்களின் அகவாழ்வு, புறவாழ்வு ஆகியவற்றின் மேல் கற்பிக்கப்பட்டுள்ள களங்கங்களை ஆற்றலோடும், வலுவான சான்றுககளோடும் இந்நூல் அகற்றுகிறது.

திருமறை, நபிமொழிகள், போர்கள், உடன்பாடுகள் ஆகிய எல்லாவற்றிலும் கொட்டப்பட்ட தூசுகளைக் கூட்டித் தள்ளிவிட்டு, துலக்கமுற விளக்கும் ஆசிரியரின் வித்தகம் நூலில் பளிச்சிடுகிறது.

இஸ்லாமிய மார்க்க விற்பன்னர், பேச்சிலும் எழுத்திலும் பழுத்த புலமையாளர் அ. முஹம்மது கான் பாகவி அவர்களின் ஆழ்ந்த மார்க்கப் புலமை பாராட்டுக்குரியது.

Friday, August 25, 2006

ஈரான் அதிபரின் வலைப்பதிவு!ஈரான் அதிபர் மஹ்மூது அஹ்மதினஜாத் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறார். தனது முதல் பதிவில், அவரது குடும்பப் பிண்ணனி, அரசியல் சூழ்நிலை போன்றவற்றை மிக நீ......ளமாக விவரிக்கிறார். இறுதியில், 'இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாக போய் விட்டது. இனிமேல் இப்பதிவுகளை சுருக்கமாகவும், இனிமையாகவும் ஆக்க முயற்சிக்கிறேன்' என்று டிஸ்க்ளெய்மர் போடவும் தவறவில்லை.

அவரது பதிவை பார்ஸி, ஆங்கிலம், அரபி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் படிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஈரானிய அதிபரின் இந்த மக்கள் தொடர்பு முயற்சி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது போலிருக்கிறது. வேறு யாருக்கு..? இஸ்ரேலியருக்குத்தான்! ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் சொல்லி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அதிபரின் பதிவை முற்றுகையிட்டு சில மணி நேரங்களுக்கு அதை செயலிழக்கச் செய்தனர். அன்று மாலையே அவரது பதிவு மீண்டும் சீர்படுத்தப் பட்டு விட்டது.

இணையம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி தனது கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என முயலும் அதிபர் அஹ்மதினஜாத் அவர்களின் முயற்சி பாராட்டிற்குறியது!

நபிகளாரின் சகிப்புத் தன்மை

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இதற்கு முன்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய திருமணங்கள் அனைத்தும் என்ன சூழ்நிலையில் எதைப் பிண்ணனியாகக் கொண்டு நடந்தது என்று எம்மால் முடிந்தளவு எழுதி தெளிவு படுத்தி இருந்தோம் அவற்றைப் படித்தவர்கள் பிறருக்கும் எத்தி வைக்க கடமைப் பட்டுள்ளீர்கள், மேற்கத்தியர்கள் கூறுவது போல் அண்ணல் அவர்கள் பெண்களின் மீது மோகங் கொண்டு தான் பல திருமணங்களை முடித்தார்கள் என்ற கருத்தை முறியடித்தோம் அதற்கு உதாரணமாக அவர்களது மனைவிமார்களிலேயே மிகவும் அழகானவர்களும் இளமையானவர்களுமாக இருந்த அன்னை ஜூவைரியா (ரலி) அவர்களை அவர்களின் அழகின் மீதோ, இளமையின் மீதோ ஆசை கொள்ளாமல் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கு அண்ணல் அவர்களே கனீமத் பங்கில் ஒதுக்கி விடுவதன் மூலம் அண்ணல் அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டு எந்த திருமணத்தையும் முடிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அடுத்து மாற்று மதத்து எதிரிகள் தங்களிடம் சிக்கிக் கொள்ளும் பொழுது சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ளாமல் எதிரிகள் மீது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை சுருங்கப் பார்ப்போம்.

துமாமா (ரலி) அவர்கள்

துமாமா அவர்கள் யமாமா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மதீனாவிலிருந்து வியாபாரம் நிமித்தம், அல்லது சொந்த அலுவல் நிமித்தம் யமாமா வழியாகவும், இன்னும் யமாமாவிலிருந்து சற்று தொலைவில் வேறு வழியாகவும் பயணிக்கக்கூடிய முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களது பொருட்களை சூறையாடுவதுமே அவரது பிரதான பொழுதுபோக்காக இருந்து வந்தது, அந்தளவுக்கு இஸ்லாத்தின் மீது பகையுணர்வு கொண்டவராக இருந்தார்.

இவர் ஒருநாள் மதீனா வழியாக அல்லது மதீனாவிலிருந்து சற்று தொலைவில் பயணிக்கும் போது முஸ்லிம்களால் காணப்பட்டு மதீனாவுக்குள் பிடித்துக் கொண்டு வரப்படுகிறார் மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளியருகே கட்டப்பட்டு அண்ணல் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுகிறது.

கருணையே உருவான காருண்ய நபி (ஸல்) அவர்கள் அவரது அருகில் நெருங்கி வந்து துமாமாவே இப்பொழுது உம்முடைய முடிவு என்ன ? என்று கேட்கிறார்கள்

அதற்கவர்

- நீங்கள் விரும்பினால் என்னை கொலை செய்து விடலாம் , காரணம் அதற்கு நான் முற்றிலும் தகுதியானவனே ! அந்தளவுக்கு முஸ்லிம்களை கொலை செய்திருக்கிறேன்.

- நீங்கள் விரும்பினால் பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு என்னை விட்டு விடலாம் அந்தளவுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை (வியாபாரப் பொருட்களை) சூறையாடவும் செய்திருக்கிறேன்.

- நீங்கள் விரும்பினால் என்னை மண்ணித்து விடலாம், அவ்வாறு மண்ணித்து விட்டால் என்னை ஒரு சிறந்த மனிதராகப் பார்க்கலாம்.

முதலாவது கோரிக்கை : கொலை செய்து விடுவதற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் தான் என்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார் குற்றம் அவர் மூலமே நிரூபிக்கவும் படுகிறது மேலும் தணித்தும் இருக்கிறார் ஒரு பெரும் படையுடன் இருக்க வில்லை கொலைக்குக் கொலை எனும் ரீதியில் அவரை கொலை செய்திருக்கலாம். காரணம் மதீனாவின் ஜனாதிபதியாக அண்ணல் அவர்களே இருக்கிறார்கள் அரசு மூலம் ஆணை பிறப்பித்து அவரை கொலை செய்திருக்கலாம்.

இரண்டாவது கோரிக்கை : பிணைத் தொகையை பெற்றுக்கொண்டு விடுவித்து விடலாம் என்று அவரேக் கூறுகிறார் அந்தளவுக்கு முஸ்லிம் வியாபாரிகளுடைய, முஸ்லிம் வழிப் போக்கர்களுடைய பொருட்களை சூறையாடி உள்ளார் என்பது தெரிய வருகிறது, முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்ததால் ஒருப் பெருந்தொகையை நிர்ணயித்துக் கொண்டு அவரை விடுதலை செய்திருக்கலாம் .

மூன்றாவது கோரிக்கை : மண்ணித்து விட்டு விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய அவரது கோரிக்கையை புறக்கணித்திருக்கலாம் காரணம் விடுவித்தப் பிறகு சொன்ன மாதிரி சிறந்த ஒரு மனிதனாக வாழ்வாரா ? என்பது உறுதியாக கூற முடியாத விஷயமாகும்.

ஆனாலும் அவ்வாறான ஒரு கோரிக்கையை இறுதிக் கோரிக்கையாக அவர் வைத்தப்பின் நபிகளார் அதிலிருந்து பின்வாங்க முடியவில்லை காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இறைத் தூதராக வரவில்லை, மாறாக உலகம் முழுவதுலுமுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் இறைத் தூதுராக அதிலும் இறுதித் தூதராக வந்தவர்கள் என்பதால் துமாமா அவர்கள் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கொலைக்குக் கொலை செய்து விடுவதையோ, பிணைத் தொகையை பெற்றுக் கொள்வதையோ தவிர்த்து விட்டு அவரது மூன்றாவது கோரிக்கையை அண்ணல் அவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முன்வருகிறார்கள். நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. 21:107.

காரணம் ஒருவர் இந்த நிமிடத்திலிருந்து நான் நேர்வழியில் வாழ்ந்து கொள்கிறேன் என்றுக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒரு முறை கந்தக் யுத்தத்தில் எதிரி ஒருவர் முஸ்லிம் போர்வீரரின் வாளின் முனைக்கு நெருங்;கி விட்ட பொழுது நான் முஸ்லிமாகிக் கொள்கிறேன் என்றுக் கூறுகிறார் அதைப் பொருட்படுத்தாமல் அவரைக் கொன்று விடுகிறார் இதை அண்ணல் அவர்களிடம் கூறும் பேர்து; அவரை விட்டிருக்கலாமே அவரை ஏன் கொன்றீர்கள் ? என்று முஸ்லீம் வீரரின் மீது கொபம் கொள்கிறார்கள் வாளின் முனைக்கு நெருக்கமாக வந்தப்பிறகு அவர் உயிருக்குப் பயந்து கூறுவதாக நினைத்து வெட்டி விட்டேன் என்று பதில் கூற அவரது உள்ளத்தை நீங்கள் பிளந்துப் பார்த்தீர்களா ? என்றுக் கூறி அண்ணல் அவர்கள் சஙடகடப் படுகிறார்கள்.

அதனால் துமாமா அவர்கள் உயிருக்கு பயந்து பொய் சொல்வதாக அண்ணலார் அபிப்பிராயம் கொள்ள வில்லை, அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பப் பட்டதால் குற்றம் சாட்டப்பட்டு எதிரியால் குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டு கயிறுகளால் பிணைத்துக் கட்டப்பட்டு நிற்கும் ஒருவர் இஸ்லாத்தின் எதிரி மாற்று மதத்தவராக இருந்தும் என்னை மண்ணித்து விட்டால் சிறந்த மனிதராக வாழ்வேன் என்றுக் கூறிய உறுதி மொழியை ஏற்று அவரது குற்றங்களை மண்ணித்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டு விடும் படி உத்தரவிடுகிறார்கள்.

அவரது கட்டுகள் அவிழ்த்து விடப்படுகிறது அண்ணல் அவர்களுடைய பெருந்தன்மையையும், அவர்கள் உண்மையிலேயே அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாக இறைவனால் அனுப்பபட்ட இறைத்தூதர் தான் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட துமாமா அவர்கள் அவ்விடத்தில் உளூ ( உடல் சுத்தம் ) செய்து விட்டு அண்ணல் அவர்களுடைய கரங்களின் மீது தனது கரங்களை வைத்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்று அன்று முதல் முஸ்லிமாகி விடுகிறார் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தனது குடும்பத்தவர்கள் முழுவதையும் இஸ்லாத்திற்குள் இணைத்து விடுகிறார்.

அவர் தன்னை மண்ணித்து விடும்படி வைத்த மூன்றாவது கோரிக்கையில் சிறந்த மனிதராக வாழ்வேன் என்று மட்டுமேக் கூறினார் மாறாக அவிழ்த்து விடுங்கள் முஸ்லிமாகி விடுகிறேன் என்றுக் கூறவில்லை. இஸ்லாம் வாளால் பரவியது எனும் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் மேற்கத்தியர்கள் முதல் இந்தியாவின் பாஷிச சிந்தனை வாதிகள் வரை மேற்கானும் துமாமா (ரலி) அவர்களுடைய வரலாற்றைப் படித்து தெளிவு பெற கடமைப பட்டுள்ளனர் இஸ்லாத்திற்குள் கட்டாயப் படுத்தி எவரையும் உள்ளே நுழைவிப்பதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை .

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். 2:256

மேற்கானும் திருமறை வசனம் மூலம் இஸ்லாத்தை புரிந்து கொண்டு இஸ்லாத்திற்குள் வருவதை மட்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கிறது, இஸ்லாத்தைப் புரியாமல் வருபவர் இஸ்லாத்திற்குள் வருவதைவிட வெளியில் இருந்து கொள்வதே மேலாகும் அதனால் இஸ்லாம் கட்டயாப்படுத்தி இஸ்லாத்திற்குள் நுழைவிப்பதை ஆணித்தரமாக தடுக்கிறது.

ஆகவே துமாமா (ரல்) அவர்கள் சிறந்த ஒரு மனிதராக வாழ்வதாக வாக்களிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக்கொண்டு விடுதலை செய்கிறார்கள். அண்ணல் அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்தவரை முஸ்லிம்களை கொன்றொழிப்பதையும் அவர்களது பொருளாதாரத்தை சூறையாடுவதையும் வாடிக்கையாகக் கொண்ட துமாமா (ரலி) அவர்கள் அண்ணல் அவர்களுடைய மண்ணிக்கும் மணப்பான்மையையும், சகிப்புத் தன்மையை நேரில் பார்த்தப் பின் இதற்கு முன்பு தாம் தவறான சிற்தனையில் இருந்ததை உணர்;ந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதுடன் தனது குடும்பாத்தாரையம் ஏற்றுக் கொள்ளச் செய்து இறைநம்பிக்கையாளர்களின் வரிசையில் இணைந்து கொண்டு ரலியல்லாஹூ அன்ஹூ என்கிற சங்கைக்குரிய பட்டத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். . . .

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். 5:119

ஹதீஸ் இடம்பெற்ற நூல்: அபூதாவூத் , அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)அவர்கள்

இறுதியாக நாம் மாற்றுமதத்தவர்கள் மீது வைக்கும் உபதேசம் யாதெனில் தூய்மையான சிந்தனையில் இஸ்லாத்தைப் படியுங்கள் உங்களில் ஒவ்வொருவரும் தூய இஸ்லாத்தை துமாமா (ரலி) அவர்கள் போல் இன்ஷா அல்லாஹ் ஏற்றுக் கொள்வீர்கள்.

அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சகிப்புத் தன்மையை தொடர்ந்து எழுதுவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
adhiraifarook@gmail.com

Saturday, August 19, 2006

அரண் - ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரப் படம்

நேற்று 'அரண்' என்ற திரைப்படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றிய என் விமர்சனத்தை எழுதப் போவதில்லை. இப்படத்தில் வரும் சில காட்சிகளை மட்டும் எழுதுகிறேன். சமீபத்தில் வந்த படங்களில் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக சித்தரித்த படம் இது தான். முந்தைய முஸ்லிம் விரோதப் படங்களை விட பல மடங்கு துவேஷமும், விஷமும் அதிகம். இப்படத்தில் வரும் காட்சிகளை எழுதவே என் கை கூசுகிறது. எனினும், நமக்குள் விழிப்புணர்வு வேண்டும் என்ற அடிப்படையிலேயே எழுதுகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நம் எதிர்ப்பை எப்படி தெரிவிக்கலாம் என சக வலைப்பதிவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

1. காஷ்மீர் போராளிகள், வரிசையாக வரும் ஆண்களின் பிறப்புறுப்பை பார்த்து முஸ்லிமாக இருந்தால் விடுவித்து இந்து ஆண்களை சுட்டுக் கொல்கின்றனர். கதாநாயகனாக வரும் பாத்திரம் ஒரு இராணுவ அதிகாரி. அவன், காஷ்மீர் போராளிகளை சுட்டுக் கொன்று இந்துக்களை காப்பற்றுகிறான் நமக்குத் தெரிந்து ஆணுறுப்பைப் பார்த்து சங்பரிவாரங்களால், முஸ்லிம் இளைஞர்கள் தான் ஷஹீதுகளாகியுள்ளனரே, தவிர இது போன்ற ஒரு சம்பவம் எங்கும் நடந்ததாக கேள்விப் பட்டதில்லை.
2. காஷ்மீரில் ஒரு பள்ளிவாசல் இமாம் ஆயுதங்களை, பள்ளிவாசலில் பதுக்கி வைத்து இருக்கிறார்.
3. காஷ்மீர் போராளி பள்ளி மாணவனிடம் வெடிகுண்டை மறைத்து கொடுத்தனுப்பி, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பேருந்தை வெடிக்கச் செய்கிறார்.
4. காஷ்மீர் போராளிகள், இந்திய முஸ்லிம்களை முஸ்லிம்களே இல்லை என கூறுகின்றனர். இவர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வந்ததாகக் காட்டப் படுகின்றனர்.
5. காஷ்மீர் போராளி ஒருவன் ஒரு முஸ்லிம் பெண்ணை கெடுத்து விட்டு அதுவும் ஜிஹாத் தான் என வசனம் பேசுகிறான்.
6. நாட்டில் குழப்பம் ஏற்படுத்த கடைசிக் காட்சியில் முஸ்லிம் போராளிகள் ஒரு பள்ளிவாசலை ஏவுகணை வீசி தகர்க்க முயற்சி செய்கின்றனர். கதா நாயகனின் உயிர் தியாகத்தால், பள்ளிவாசல் காப்பாற்றப் படுகிறது.
7. இறுதிக் காட்சியில் முதிய முஸ்லிம் பெண்மணி, நாங்கள் முஸ்லிம்கள் இல்லை. இந்தியர்கள் என வசனம் பேசுகிறாள்.
8. இப்படத்தில் போராளிகளை காட்டிக் கொடுக்கும் ஒரு முஸ்லிம் மட்டும் நல்லவனாக காட்டப் படுகிறான்.
9. காஷ்மீர் போலீஸாரைப் பற்றி காஷ்மீரில் பணியாற்றும் இராணுவ அதிகாரி மிகவும் கேவலமாகப் பேசுகிறான்.
10. இப்படத்தில் வரும் மனித உரிமை இயக்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, இராணுவ அதிகாரியின் கடமைக்கு இடையூறு செய்ய வருபவராக காட்டப் படுகிறார்.

Tuesday, August 15, 2006

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள இணைய தமிழ் முஸ்லிம் வலைப்பதிவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னும் ஐந்து வாரங்களில் ரமலான் நோன்பு வரப்போகிறது. அதற்கு முன்னதாக, இணையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிப்பதையும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர், அடுத்த அமைப்பை விமர்சிப்பதையும் நாம் நிறுத்தினால் என்ன? இந்த வேண்டுகோளை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது, நடுநிலையான வலைப்பதிவர்களுக்கும் வைக்கிறேன். அது போல, நோன்பு காலங்களில் நம் வீடுகளில் இஃப்தார் விருந்துக்கு மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைக்கலாம். இரவில் தராவீஹ் தொழச் செல்லும் போது மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நாமே வலியச் சென்று ஸலாம் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நகமும், சதையுமாய் இருந்த இரு முஸ்லிம் நண்பர்கள் இப்போது ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை. இதற்கு இயக்கச் சண்டையே காரணம். நண்பர்களுக்குள் வேடிக்கையாகப் பேசும் போதும், மாற்று அமைப்புகளை விமர்சிப்பதை ரமலானில் மட்டுமாவது நிறுத்தித் தான் பார்ப்போமே? அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான். நமக்குள் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவான். முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நமக்குள் உள்ள கருத்து மோதல்கள் தடையாய் இருக்கக் கூடாதல்லவா? இந்தக் கருத்துடன் உடன்படும் சகோதரர்கள், இப்பதிவை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மின் அஞ்சல் செய்யலாமே?

Saturday, August 12, 2006

சன் டீவிக்கு நன்றி!

சன் டீவி செய்திகள்

ராணுவ பின்புலமற்ற லெபனானுக்குள் எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த சில இஸ்ரேலின் படை வீரர்களை, ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்த நாள் முதற்கொண்டு, அமெரிக்காவின் ஆசியுடன் இஸ்ரேல் அநியாயமாக போர் தொடுத்து லெபனானைச் சுடுகாடாக மாற்றி வருவதும், அதனை எதிர்த்து இஸ்ரேலிய படையினரிடமிருந்து தனது சொந்த மண்ணைக் காக்க ஹிஸ்புல்லாஹ் போராளிகள் தீவிரமாகப் போராடி வருவதும் யாவரும் அறிந்ததே!

பாலஸ்தீனப் போராளிகளாகட்டும், அல்லது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினராகட்டும், இவர்களைத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றே சன் டிவி செய்திகளில் வழக்கமாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன மக்களின் காதுகளுக்கு சமீப நாட்களாக சன் செய்திகளில் தனது "தீவிர"த்தை நீக்கி "ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர்" என்றே குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் பாரபட்சமற்ற இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் முஸ்லிம் கூட்டுவலைப்பதிவின் மூலம் சன் டிவி நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(நன்றி தெரிவித்தல் என்பது அழகிய இஸ்லாமிய நற்பண்பாக இருப்பதனால், சன் டீவி நிர்வாகத்தினருக்கு நன்றி கூற விரும்பும் சக சகோதரர்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்)

Saturday, July 29, 2006

தமிழ் இதழ்கள் - ஆய்வுக் கட்டுரைகள்

தமிழ் திணை இணைய இதழ் ஆதித்தனார் நூற்றாண்டு விழாவையொட்டி, பல்வேறு வகையான தமிழ் இதழ்களையும் பற்றி பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மலர் வெளியிட்டுள்ளது. அச்சு வடிவிலும், சிடி வடிவிலும் வெளியிடப்பட்ட இந்த மலரின் கட்டுரைகளை இணையத்திலும் படிக்கலாம்.

தமிழ் இதழ்கள் - ஆய்வுக் கட்டுரைகள்

Wednesday, July 26, 2006

சமுதாய ஒற்றுமைக்கு சரியான வழி

அல்லாஹ் இப்புவியில் வாழும் மக்கள் மீது சொரிந்திருக்கும் அருட்கொடைகள் ஏராளம். மக்கள் நேர்வழி பெற வேதங்களை வழங்கி இறைத் தூதர்கள் மூலம் வாழும் முறைகளை தெளிவாக்கி தன் படைப் பினங்கள் இப்புவியில் வாழும் காலமெல்லாம் வல்லோனின் கட்டளைகளை ஏவல் விலக்கல்களை விளங்கி நடக்க வேண்டும். மறுமையில் நல்லடியார்களின் தங்குமிடமாகிய நிரந்தர சுவனத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய கருணைக் கொண்டு மனிதனுக்கு வழங்கிய அவகாசமே இப்பூவுலக வாழ்க்கை. ஆனால் மனிதனோ தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி மார்க்கம் கூறும் வழிகாட்டுதல்களை துச்சமென மதித்து தூக்கி எறிந்து விட்டு மயக்கும் மனோஇச்சையால் மதி மயங்கி வசந்தமான வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்குகிறான். நேர்வழி என்று அறிந்த பின்னரும் வழிகேட்டில் வீழ்ந்து இம்மையில் அவன் ஆற்றும் இக்கருமங்களின் பிரதிபலனை மறுமையில் காணவிருக்கிறோம் என்பதை மறந்து செயல்படுகிறான்.

அல்லாஹ் வழங்கிய அருள்மறையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் தெள்ளத் தெளிவாக இச்சமுதாயத்துக்கு விளக்கப்பட்ட பின்னரும் கூட பிரிவுகளில் பிளவுகளில் குளிர் காயும் நிலையையும் பிற சமுதாய மக்களைப் போல ஜாதி குலம் கோத்திரம் என்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பதுடன் ஒருபிரிவு மற்ற பிரிவை தரம் தாழ்த்தி விமர்சிப்பது சண்டையிட்டுக் கொள்வது வரை நடக்கிறது.

இஸ்லாமியர்களைத் தீவிரவாதி என ஊடகங்கள் சித்தரிக்க முற்பட்டிருக்கும் இவ்வேளையில் பிரிவுகளில் ஊறித் திளைக்கும் இச்சமுதாய சகோதரர்கள் மற்றொரு பிரிவினரை நாகூசாமல் தீவிரவாதிகள் என்றும் புல்லுறுவிகள் என்றும் தூற்றும் நிலையைக் காண்கிறோம். மாற்றார் செய்யும் தப்புப் பிரச்சாரங்களுக்கு முறையே பதில் கூற வேண்டிய மார்க்க முன்னோடிகள் கூட இச்செயலை முன்னின்று நடத்துவதுதான் விந்தையிலும் விந்தை.

இப்படி பிளவு பட்டு பல பிரிவுகளாக அமைப்புகளாக ஆகிவிட்ட இந்த சமுதாயம் இனியாவது மேலும் பிளவுபடாமல் இணைந்து ஒற்றுமையாக வாழுமா? என்ற ஆதங்கம் சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இதற்காக என்ன முயற்சிகள் செய்வது?.. அந்த முயற்சிகளின் அடிப்படை எப்படி இருக்க வேண்டும்?.. என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

போலியான ஒற்றுமை நாடகங்கள்..

பிளவு பட்டுப் போன இச்சமுதாயத்தின் முன்னோடிகளில் சிலர் முஸ்லீம்கள் என்ற பெயரளவில் மட்டும் ஒருங்கிணைந்த ஒரு கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இழந்த உரிமைகளைப் பெறுவோம். இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்போம். இனி ஒருபோதும் எங்கள் மேல் எந்த உரிமை மீறலும் நிகழ அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷங்களை முன்னிறுத்தி போலியான ஒற்றுமை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். மாற்றாரின் அரசு பிற சமுதாய மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தம் வலிமையையும் பெருந்திரளான மக்கள் சக்தியையும் காட்டி முஸ்லீம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விட்டனர் என ஊருக்குக் காட்ட நடத்தப்படும் போலி மாயைதான் ஒற்றுமை நாடகம்.

அரசைப் பணியவைக்க ஆளுவோரை மிரட்டகையில் எடுத்த ஆயதம்தான் இந்தப் போலி ஒற்றுமை நாடகம். இந்நாடகத்தால் போலியான பொய்க்கூட்டத்தை உருவாக்க முடியுமே தவிர உள்ளத்தால் ஒன்று பட்டஉயரிய ஒற்றுமை சார்ந்த ஒரு கூட்டத்தை ஒருக்காலும் உருவாக்கவே முடியாது என்பதை இட ஒதுக்கீடு சம்மந்தமாக முதல்வரைச் சந்திக்கும் முன்பு ஒற்றுமை விரும்பிகள் கூறிய கருத்துக்கள் பின்னர் முதல்வரைச் சந்தித்த பின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகள் தொலைக்காட்சி களில் ஒருவரை ஒருவர் கடிந்து கூறிய காரசாரமான கருத்துக்கள் எந்த அளவுக்கு இந்த போலி ஒற்றுமை நாடகம் மக்கள் மத்தியில் முகத்திரை கிழிந்து போனது என்பதற்குச் சான்றுகள். 12அமைப்புகளின் ஒற்றுமைச் சங்கமம் எங்கள் கூட்டம் என்று தம்பட்டமடித்தோர் ஒருவரையொருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டித் தீர்த்து தமது ஒற்றுமையின் வலிமையை ஊருக்கு உணர்த்தினர். அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையின் தீபங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறிக்கொண்டு களமிறங்கி அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அநாகரீகமாகச்செயல்பட்டன.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தேர்தல் முடிவுகள் தோல்வியாய் முடிந்ததை மறைக்க முஸ்லீம்கள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்திகள் அல்ல என்ற உயர்ந்த தத்துவத்தைக் கூறி சமுதாயத்தின் முதுகில் குத்திய முன்னோடிகள்தான் இந்த போலி ஒற்றுமைவாதிகள்.

அரசியல் சாக்கடையில் மூழ்கி அழைப்புப் பணியின் அடிப்படையையே மறந்து அண்ணல் நபிகளாரையும் அம்மாவையும் ஒப்பீடு செய்து தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக்கு மார்க்கத்தை தாரை வார்த்த மகான்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நினைவு கூறக்கூடிய பத்ர் உஹது யுத்தங்கள் இந்த அறிவு ஜீவிகளின் தேர்தல் வெற்றியை உரசிப்பார்க்கும் உறைகல்லானது. ஹுதைபியா உடன்படிக்கை அம்மாவுடனான இவர்களின் உடன்படிக்கைக்கு உதாரணமாகிப் போனது. இப்படி ஏகப்பட்ட சாதனைகள் புரிந்த இவர்கள்தான் இந்த போலி ஒற்றுமையின் அடித்தளங்கள்.

உண்மையிலேயே நமக்குள் ஒற்றுமை மலர வேண்டுமானால் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகள் நீங்க வேண்டும். இன்றைய நிலையில் ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தே அவர் எந்த இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர் செய்யும் வணக்க வழிபாடுகளில் பல்வேறு பிரிவுகள். அவர் செய்யக் கூடிய அமல்கள் (காரியங்கள்) செய்யும் முறையில் பல்வேறு வித்தியாசங்கள். இப்படி முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நம்மிடமே இபாதத் அமல் தோற்றம் என்ற ஒவ்வொரு அம்சத்திலும் நாம் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகள் முரணானதாக உள்ளது. நம்முடைய தோற்றங்கள் நம்மை அடையாளங் காண என்பதை விட நாம் சார்ந்துள்ள இயக்கங்களை அறிந்துகொள்ள என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டது. ஒற்றுமைக்கு எதிரான வேறுபாடு இத்துடன் முடியவில்லை. அல்லாஹ்வின் ஆலயங்களுக்குத் தொழச் சென்றால் அங்கு 4 மத்ஹபுகளை பின்பற்றாதோர் இப்பள்ளியில் தொழ அனுமதியில்லை என்ற வாசகம் தாங்கிய அறிவிப்புகள் தொங்கவிடப் பட்டுள்ளன. அவர்கள்தான் தவறிழைத்து விட்டார்கள் மற்றவர்கள் அறிவாளிகள் என்று பார்த்தால் இவர்கள் தங்கள் பங்குக்கு கொம்பு சீவி விடும் பணியைக் குறைவின்றிச் செய்பவர்கள் என நிரூபித்தனர். மத்ஹபுகளைப் பின் பற்றுவோர் தரீக்காவாதிகள் முஷ்ரிக்குகள் இமாம்களைப் பின்பற்றித் தொழாதே என்ற மார்க்கத் தீர்ப்பை மக்களுக்குத் தந்து தனிப்பள்ளி தனி ஜமாஅத் தனி நிர்வாகம் என தங்களுக்கென கூட்டம் சேர்க்கும் சமுதாயப் பிளவுக்கு வழிவகுத்தனர்.

இவை ஜமாஅத் அமைப்புகள் இயக்கங்கள் என்ற பெயரால் சமுதாயத்துக்கு கிடைத்த போலி ஒற்றுமை முத்திரைகள். அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதனைகள் பேரழிவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தைத் தாக்கும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றும் பணியில் கூட இவர்களின் இயக்கவெறி சராசரி அரசியல்வாதியை விட ஒரு படி மேலே போய் சகோதர இயக்கங்களை .. .. திருடர்கள் கொள்ளையடித்தவர்கள் என கரிந்து கொட்டி தங்கள் காழ்ப் புணர்ச்சியைத் தீர்த்துக்கொள் வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நாங்கள்தான் தஃவாவுக்கு ஒட்டு மொத்த குத்தகை குர்ஆனும் ஹதீஸூம் எங்களின் அடிப்படை என ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்யும் இவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடிய மார்க்க அறிஞர்களை விட மிக மோசமாக ஒத்த கொள்கையையுடைய குர்ஆனை ஹதீஸைப் பின்பற்றக்கூடிய பிற இயக்கங்களைச் சார்ந்த மார்க்க அறிஞர்களுடன் ஒரே மேடையில் அமர்வதைக் கூட தீண்டாமையாக கருதி வெறுத்து ஒதுக்கக் கூடியவர்கள் தேர்தல்களில் அரசியல் பேசும் போது தரீக்காவினை மத்ஹபுகளை ஆதரிக்கும் அவ்லியா விரும்பிகளை அரவணைக்கும் அற்புதம் எழுத்தில் வடிக்க இயலாது. இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகளுடன்தான் இந்த போலி ஒற்றுமை நாடகம் அரங்கேறுகிறது.

ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகள்

பெயருக்கு முஸ்லீமாக இருந்து கொண்டு ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறிந்திராத சிலர் சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் நிலைகளை இன்றும் நாம் காணலாம். பெண்ணுக்கு மஹர் வாங்கி கல்யாணம் செய்யாமல் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவிட்டு சீதனங்கள் சீர் செனத்தியில் குறை என்று குற்றம் பெருகி விவாகரத்தில் முடிந்த விஷயங்கள் நீதிமன்றங்களில் ஜீவனாம்சம் கேட்டு அலையும் அவல நிலை ஒருபுறம். பெண்கள் பர்தா அணிவது அவர்களுக்கு வழங்கப் பட்ட ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என நம் சமுதாயப் பெண்களிலேயே சில பெயர்தாங்கிகள் பெண்கள் சுதந்திரத்துக்குப் பாடுபடுகிறோம் என்ற கூப்பாட்டுடன் சமூக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்றனர். ஆண்கள் ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணை மணந்து மனைவியாக்கும் போது பெண்கள் ஏன் கணவன் இருக்கும் போது மற்றொரு ஆணை மணந்து கணவனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை அறிவுப் பூர்வமானது எனக் கேட்டு சீர்திருத்தக் கருத்துக்களை விதைக்கும் அறிவுஜீவிப் பெண் மணிகள் மற்றொரு புறம். இப்படி பல்வேறு தரப்பிலும் சமுதாய மக்களிடையே ஒற்றுமைக்கு ஊனமேற் படும் நிலைகள் மார்க்கமறியாத மக்களால் நடந்துகொண்டிருந்தாலும் மார்க்கத்தை நன்கு விளங்கிய மார்க்க அறிஞர்கள் கூட ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பணியில் மும்முரமாகத் திகழ்வதைக் கண்டால் ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? என நம்மை திகைக்கவைக்கிறது. இயக்க வெறியில் இந்த அல்லாஹ்வின் பள்ளி யாருக்குச் சொந்தம்? என போட்டியில் இறங்கி நீதிமன்றத்து கதவினைத் தட்டும் பரிதாபநிலை. பள்ளிக்குப் பூட்டு ஒற்றுமை முயற்சிக்கு வேட்டு என்பது இன்றைய சூழ்நிலை.

ஒற்றுமை குலைவதற்குறிய காரணங்கள்..

ஒற்றுமை என்பதன் எதிர்பதம் வேற்றுமை. ஒற்றுமை குலைந்து வேற்றுமை நிலவ முக்கிய காரணியாகத் திகழ்வது கருத்து வேறுபாடு. இதன் பின்னணிகள் அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் இருந்தாலும் ஒற்றுமை குலைய அடிப்படை கருத்து வேறுபாடுதான். ஓற்றுமை தகர்ந்து வேற்றுமை தலை தூக்க 4 கட்ட நிலைகள் நிகழ்கின்றன. அவையாவன:

1. கருத்து சுதந்திரம்
2. எதிர் கருத்து
3. கருத்து திணிப்பு
4. கருத்துப் புறக்கணிப்பு.

இனி முதல் நிலையிலிருந்து இறுதி கட்டம் வரையிலான பரிணாம வளர்ச்சியை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு மார்க்க அறிஞர் ஆய்வில் ஈடுபட்டு ஒரு பிரச்சினைக்குறிய தீர்வை மக்கள் மன்றத்தில் வைக்கிறார். இத்தீர்வுக்கு அவர் தரப்பில் சில நியாயங்களை அவர் குறிப்பிடுகிறார். அவரின் இக்கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள். மறுப்பவர்களும் இருப்பார்கள். ஆய்வு செய்து கூறியவர் யார் என்று பார்க்காமல் என்ன கருத்தைக் கூறுகிறார்? என்று பார்க்க வேண்டும். அது குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றிப்போனால் ஏற்றுக் கொள்வது. இல்லையேல் சரியான கருத்தை அவருக்குத் தெரிவிப்பது. இம்முடிவுதான் ஒற்றுமை நிலைக்க வழிவகுக் கும். ஆனால் நடப்பு நிலைஎப்படியிருக்கிறது? ஆய்வைச் செய்தவர் அவர் தீர்வைச் சொன்னவுடன் இவர் ஒரு சிறந்த மார்க்க மேதை. இவர் சொன்னால் சரியாக இருக்கும். இவர் கூறும் கருத்துக்களை மறுப்பவர்கள் மார்க்கம் அறியாதவர்கள் என்ற நிலை நிலவுகிறது. இதன் விளைவு அந்த அறிஞரின் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் சரியாக இருந்த போதும் புறக்கணிக்கப் படுகின்றன. மேலும் யார் மாற்றுக் கருத்து கூறினாரோ அவர் தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுகின்றார். அவரும் அவரின் தாயார் மனைவி போன்றோர் பகிரங்கமாக அசிங்கமாக தூற்றப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்ட 4 நிலைகளும் சுருக்கமாகக் குறிப்பிட்ட இந்த விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆக ஆய்வின் தீர்வு சரியா தவறா? ஏன்பதைக் கூட விவாதங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்ற சவடால்கள் பிசுபிசுத்துப் போனது. தரீக்காவாதி அவ்லியா விரும்பிகளை நோக்கி விடும் விவாத அறைகூவலில் ஒரு சிறு அளவைக்கூட விவாத விற்பன்னர்கள் ஜக்காத் விஷயத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி இயக்க வெறியில் உழலும் இவர்கள்தான் போலி ஒற்றுமை நாடகத்தின் தூண்கள். மாற்றுக் கருத்துக் கூறுவோரை கண்ணியமின்றி சல்லிக் காசுக்கு சோரம் போனவர்கள், மார்க்கத்தை விட்டு ஓரம் போனவர்கள், கருத்து வாந்தி யெடுத்தவர்கள் என காரசாரமாக விமர்சித்து தங்களைத் தவ்ஹீதின் தென்றல் என வெளிச்சம் போட்டுக் காட்டும் விளம்பர விரும்பிகள்தான் தம்மை சாந்தி மார்க்கம் இஸ்லாத்தின் சகோதரத்துவம் பேணும் நல்லவர்களாக நடித்துவருகிறார்கள். சொல்லப்படுகிற கருத்துக்கு மாற்று கருத்து வராத எந்தப் பிரச்சினையும் நாம் காண்பது அரிது. கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்றுதான் என்பதற்கு கீழ் காணும் ஆதாரங்கள் சான்றுகளாகும்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் கருத்து வேறுபாடுகள்..

வல்ல அல்லாஹ் இப்பூவுலகில் மனிதர்களைப் படைக்க நாடி மலக்குகளிடம் கூறியபோது மலக்குகள் அக்கருத்துக்கு மாற்றமாக தங்களின் ஆட்சேபனையை எப்படித் தெரிவித்தார்கள் என்பதையும் அல்லாஹ் அவர்களுக்கு கூறிய பதிலையும் அருள் மறை ஒளியில் காண்போம்.

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி ''நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்'' என்று கூறியபோது, அவர்கள் ''(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார் கள்; அ(தற்கு இறை)வன் ''நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்'' எனக் கூறினான்.(2:30).

இவ்வசனத்தில் வல்லோன் அல்லாஹ் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறிய மலக்குகளுக்கு
பதிலாக நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் நிச்சயமாக நன்கறிந்தவன் என இரத்தினச்சுருக்கமாகக் கூறுகிறான். (மலக்குகள் தவறிழைக்க மாட்டார்கள். மனிதர்கள் தவறிழைப்பர். தவ்பாச் செய்வார்கள்.)

அல்லாஹ் ஆதமைப் படைத்து பின்னர் அவருக்குச் சிரம்பணியக் கட்டளையிட்ட போது அங்கிருந்த இப்லீஸ் சிரம்பணிய மறுத்ததையும் அவன் ஏன் மறுத்தான் என்பதையும் பார்ப்போம்..

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன் பின், ''ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)'' என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்கு)சிரம் பணிந்தார்கள்; அவன் (மட்டும்) சிரம்பணியக் கூடியவர்களில்ஒருவனாக இருக்கவில்லை..

''நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?'' என்று அல்லாஹ் கேட்டான்; ''நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:11-12).

அல்லாஹ்வின் கட்டளை இப்லீஸால் புறக்கணிக்கப் பட்டதன் காரணத்தை அல்லாஹ்வே தெளிவு படுத்துகிறான். தான் படைக்கப்பட்ட மூலம் மனிதனின் மூலத்தை விடச் சிறந்தது என்ற பெருமை, கர்வம் அவனை சிரம்பணியத் தடுக்கிறது.

(நெருப்புமேல் நோக்கி எரியும். மண் மேல் நோக்கிச் செல்லாது. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் சிரம்பணியக் கூடாது. அதை அல்லாஹ்வே சொன்னாலும் கூட ஏற்கமாட்டேன் என்பது இப்லீஷின் லாஜிக்.)

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இல்லை. அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), 'நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்'' என்று சொல்ல, உமர்(ரலி), 'உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல'' என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக் கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே,

'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது. (புஹாரி :4367 அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி).)

நபி (ஸல் ) அவர்கள் மரணச்செய்தி மக்களிடம் சென்றடைந்த போது நபித் தோழர்களில் சிலர் நபி (ஸல்)அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்று உறுதியாக எண்ணினர். அவர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள்.எவர் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார் என்று கூறுகிறாரோ அவரைக் கொன்று விடுவேன் எனப் பிரகடனம் செய்கிறார்கள். இந்நிலையில் நபிகளாரின் மரணச் செய்தியறிந்த அபூபக்கர் (ரலி) அங்கு வந்து சரியான கருத்ததைக் கூறியதை கீழ் காணும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.

நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்.(புஹாரி:1241 ஆயிஷா(ரலி)).

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் குறித்து

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்:

முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்'' (திருக்குர்ஆன் 3:144)

என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். (புஹாரி :1242 இப்னுஅப்பாஸ்(ரலி).

இச்சம்பவத்துக்குப் பின் இறந்த நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது? என்ற பதிய பிரச்சினை தலைதூக்கியது. கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகள் நடந்தன. இந்நிலையில் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபிமார்கள் எந்த இடத்தில் மரணித்தார்களோ அவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியதும் பிரச்சினை தீர்ந்தது என்பதை நபிமொழிகள் நமக்குணர்த்துகின்றன.

அதன் பின் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரை ஆட்சித் தலைவராக்குவது? என்ற புதிய பிரச்சினை தலைதூக்கியது. நபித்தோழர்கள் முஹாஜிர்கள் அன்ஸாரிகள் என இரு பிரிவுகளாகி ஆட்சித் தலைமைக்கு உரிமை கொண்டாடினர்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்'' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)'' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்'' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.
அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது'' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர்தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்'' என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்து விடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்'' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்'' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)'' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்'' என்றார். உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)'' என்று கூறினேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். (புஹாரி :6830 உமர்(ரலி)கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி).

நபிமார்கள் கூட பிரச்சினைகளை அணுகுவதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்பதற்கு கீழ் காணும் நபிமொழி சான்றாகும்.

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட)நபி ஆதமும்(அலை) நபி; மூஸாவும்(அலை) தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, 'உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், 'நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். 'இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்' என்று இருமுறை கூறினார்கள்'' என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.(புஹாரி: 3409).

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் என்பது ஒரு பிரச்சினையை அணுகும்போது எழுவது இயற்கைதான். ஆனால் அதைத் தீர்த்துக்கொள்வதில் எழும் மற்ற நோய்களாகிய கர்வம் பெருமை இயக்க வெறி சத்தியத்தை மறுத்தல் வழிகேட்டுக்கு அநீதிக்குத் துணைபுரிதல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எழும் பிரச்சினைகளை நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மையில் பார்த்தாலோ பெரும்பான்மையாக உள்ள நாங்கள் சொல்வதுதான் சரி என்று கூறுவதாலோ பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக விரோதமும் வெறுப்பும்தான் வளரும். ஒற்றுமை குலையும். ஆகவே கருத்து வேறுபாடுகள் நீங்க, ஒற்றுமை மலர, இருக்கும் பிரிவுகள் மென்மேலும் கூடாமல் இருக்க, சமுதாயத்தில் சாந்தியும் சமாதானமும் பூத்துக் குலுங்கி சகோதரத்துவம் தழைக்க, அல்லாஹ் கூறும் அழகான வழியைப் பாருங்கள்.

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்.மேலும் அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் நிஃமத்துக்களை (அருட்கொடைகளை) நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(3:103).

இங்கு அல்லாஹ்வின் கயிறு என அருள்மறை வசனம் கூறுவது அல்குர்ஆன் கூறும் உபதேசங்களாகும். ஒற்றுமைக்குச் சான்றாக நபி மொழி கூறும் நல்லுபதேசத்தைக் காணுங்கள்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

மற்றொரு அறிவிப்பில்

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6065 அனஸ்(ரலி).

அருள்மறைக் குர்ஆனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனையும் நமக்கு ஒற்றுமை பற்றி வழங்கிய உபதேசங்களைக் கண்டோம். ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே நமக்குள் எழும் பிரச்சினைகள் எதுவாகயிருந்தாலும் கருத்து வேறுபாடுகள் எதுவாகயிருந்தாலும் நாம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் அடிப்படை குர்ஆன் ஹதீஸாக இருக்கவேண்டும். ஒற்றுமைக்குத் தடைக்கல்லாகயிருக்கும் தனிமனித வழிபாடு அகம்பாவம் கர்வம் பெரும்பான்மை அநீதி அட்டகாசம் போன்றவற்றைத் தூர வீசிவிட்டு சொல்வது யார்? என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்? என்பதைப் பார்ப்பதுடன் சொல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்பதை ஆய்ந்து சரி என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் தவறென்றால் அதை கண்ணியமாக நளினமாகச் சுட்டிக் காட்டுவதும் சரியான அணுகுமுறையாகும். இவன் என்ன சொல்வது? இவனை விட நான் என்ன மார்க்க அறிவில் குறைந்தவனா? என்ற வரட்டுக் கௌரவமும் திமிரும் ஆணவப் பேச்சுக்களும் அறிவீனர்களின் நடத்தையாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நமக்குள் இருக்கும் குரோதங்கள் வெறுப்புகள் ஆகியவற்றை நீக்கி ஒற்றுமை மலர வழிவகுப்பானாக. ஆமீன்.

- நெல்லை. இப்னு கலாம் ரசூல்

Sunday, July 23, 2006

சகோதர வலைப்பதிவரின் சிந்தனைக்காக

முத்துப்பேட்டை வலைப்பதிவில் "டான் டிவியில் ததஜவின் பொய்யான அறிவிப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த பதிவைப் படித்தேன். எனவே, சகோதர வலைப்பதிவர் என்ற முறையில் முத்துப்பேட்டை வலைப்பதிவருக்கு சில விஷயங்களை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

//.. ததஜ எனும் அரசியல் கட்சி டான் தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. வளைகுடா ஐரோப்பாவில் வசிக்கும் மக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நடுவே ததஜவின் நிர்வாகிகளுள் ஒருவரான நாகூர் ஏ.எஸ்.அலாவுதீன் தோன்றி இராப்பிச்சை எடுத்து வருகிறார்.//

மேற்கண்ட விஷயத்தை சொல்லிவிட்டு, கடைசியில் தமுமுகவுக்கு கீழ்கண்டவாறு நன்கொடைகளை கேட்கிறார் இப்னு ஃபாத்திமா அவர்கள்..

//தமுமுக நடத்தும் நிகழ்ச்சியில் பாவம்! எந்த விதமான நன்கொடை கேட்டு விளம்பரம் ஏதும் இடம் பெறுவதில்லை. ஆனால் எமது ஆலோசனை என்னவென்றால், பிச்சை கேட்காத தமுமுகவிற்கு தான் உங்கள் நன்கொடைகள் சென்று சேர வேண்டும். //

ஒருவரை ஒரு காரணத்தினால் இராப்பிச்சை என்று சொன்னவர், மற்றவருக்கு அதே விஷயத்தை செய்யச் சொல்வது நல்ல ஆலோசனையாக இருக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

//அதற்கும் முன்பாக வரக்கூடிய அரை மணிநேர நிகழ்ச்சி தமுமுக நடத்தும் 'பிளாக் அன்ட் ஒயிட் கம்யூனிகேஷன்' நிகழ்ச்சியில் நான்கே விளம்பரங்கள் மட்டும் தான். அவர்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிகிறது. ஏராளமான விளம்பரங்கள் குவிந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற கூப்பாடு வேறு.//

நான்கே விளம்பரங்களை வைத்து பிரச்னையில்லாமல் புரோக்ராம் செய்வதாக எழுதியதால் என்னுடைய கேள்வியில் உள்ள நியாயத்தை சகோதரர் இப்னு ஃபாத்திமா அவர்கள் புரிந்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.


சகோதரரின் சிந்தனைக்காக:

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61-2-3)

..நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன் இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (என்று ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்). (11:88)

நான் நபி(ஸல்)அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன், கியாமத் நாளில் ஒரு மனிதனைக் கொண்டுவரப்படும். அவனை நரகில் போடப்படும். அப்பொழுது அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியே வந்து விடும். அக்குடல்களுடன் அம்மனிதன், செக்கில் கழுதை சுற்றுவது போலச் சுற்றுவான், நரக வாசிகள் அவனிடம் ஒன்று சேருவார்கள். அவர்கள் அவனிடம் கேட்பார்கள்: நீர் நன்மையை ஏவித் தீமையை தடுத்துக் கொண்டிருப்பவராக இருக்கவில்லையா? ஏன்று. அதற்கு அம்மனிதன் கூறுவான்,(ஆம்) நான் நன்மையை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்யவில்லை. நான் தீமையைத் தடுப்பவனாக இருந்தேன். ஆனால் நான் அதனைவிட்டு விலகவில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூ ஜைது உஸாமா பின் ஜைது பின் ஹாரிதா(ரலி)

மற்ற சகோதரர்களின் சிந்தனைக்கு:

பொதுவில் வைக்கப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி பொதுவில் எழுதுகிறேன். இப்பதிவிலிருந்து உங்களுக்கு ஏதாவது படிப்பினை கிடைக்கிறதா என்று பாருங்கள். அதுவே உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் செய்த நற்பயன்களாக இருக்கும்.

Sunday, July 16, 2006

மோடியை தடைவோம் - ஆஸ்மி.

மும்பை - குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மும்பையில் நுழைவதை தடைவோம் என சமாஜ்வாடி கட்சி மஹாராஷ்டிரா மாநில தலைவர் அபூ அஸிம் ஆஸ்மி கூறினார். பிஜேபி மும்பையில் நடத்தவிருக்கின்ற "தீவிரவாத எதிர்ப்பு பேரணி"யில் பங்கெடுக்க திங்கள் கிழமை மோடி மும்பை வரவிருக்கிறார். மோடியின் மும்பை வருகைக்கு எதிராக களமிறங்குவோம் என்றும் மோடி மும்பை வந்தால் அவரை கெரோ செய்வோம் என்றும் ஆஸ்மி கூறினார்.
குஜராத் வதோதரா புகைவண்டி தீவைப்பு சம்பவத்திற்குப் பின் அங்கு நரேந்திரமோடி தலைமையில் நடந்த பேரணிக்குப் பிறகே முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் குஜராத்தில் நிகழ்ந்தது என்பதும் அதில் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஹிந்துத்துவவாதிகள் இனசுத்தீகரிப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஓர் சம்பவத்தை மும்பையிலும் நிகழ்த்த நரேந்திரமோடியின் மும்பை வரவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஏற்றாற் போன்றே சங்க்பரிவாரின் தலைமையான ஆர் எஸ் எஸ்ஸின் இந்திய தலைவர் சுதர்சன் ஆர் எஸ் எஸ்ஸின் இதழான பாஞ்சஜன்யாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகளைக் குறித்து எழுதியுள்ளார். நாட்டில் நடக்கும் எந்த அசம்பாவிதத்தையும் தங்களது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் சீரழிந்த போக்கை பிஜேபியும் அதற்கு துணை போகும் ஆர் எஸ் எஸ்ஸும் இவ்விஷயத்திலும் தெளிவாக கடைபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதன் முதல்படியே பிஜேபி நடத்தப்போகும் மும்பை பேரணி.

இதனை எதிர்த்து தான் சமாஜ்வாடி மஹாராஷ்டிரா மாநில தலைவர் ஆஸ்மி களமிறங்கியுள்ளார். முஸ்லிம்களை மட்டும் குற்றவாளிகளாக கருதிக் கொண்டு நடத்தும் காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். "முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக கருதிக் கொண்டு நடத்தும் விசாரணைகளால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை. 20 கோடி முஸ்லிம்கள் வீதியில் இறங்கினால் ஏற்படும் பின்விளைவுகளை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தமுடியாமல் போகும்." என மேலும் அவர் கூறினார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைக் குறித்தும், புகைவண்டி கலவரங்களைக்குறித்தும், பால்தாக்கரேயின் மனைவி சிலையை களங்கப்படுத்தியதை எதிர்த்து நடந்த சம்பவங்களைக் குறித்தும் மேல்மட்ட புலன்விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

சவூதி அரேபியாவின் லேபர் லா

சவூதி அரேபியாவின் திருத்தியமைக்கப்பட்ட புதிய லேபர் லா (தொழிலாளர் சட்டங்கள்) அமலாக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் 2006, சவூதி அரேபியாவின் புதிய திருத்தி அமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்த புதிய லேபர் லா – வின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. புதிய லேபர் லா-வின் சில அம்சங்கள் பின்வருமாறு.

வெளிநாட்டு பணியாளர்கள் அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் வரையிலான செலவுகள், இகாமா புதுப்பித்தல், வொர்க் பர்மிட் மற்றும் அதைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிப்பிக்கத் தவறினால் அதற்கான தண்டத் தொகை போன்ற அனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களைச் சார்ந்தது ஆகும். இதற்கான செலவுகளை நிறுவனம் பொறுப்பேற்காது.

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது (Sponcership Transfer) அதற்கான செலவுகளை புதிய நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு இறந்துவிட்டால், அவர்கள் உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் செலவு நிறுவனத்தைச் சார்ந்தது. இது குறித்து அவர்களின் ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

புதிதாக பணியில் சேர்ந்தவர்களின் பயிற்சி காலமானது, எல்லா வேலை நாட்களும் கணக்கிடப்படும். இதில் பண்டிகை விடுமுறைகள், நோய் விடுப்பு மற்றும் வாரவிடுப்புகளும் கணக்கிடப்பட்டு பயிற்சி காலத்தில் சேர்ப்பிக்கப்படும்.

உடல் ஊனமுற்றோர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சதவிகிதம் 2 முதல் 4 ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய லேபர் லா-வின் படி பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணியானர்களின் வருட விடுப்பு நாட்கள் 21 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சலுகை 5 வருடம் ஒருவர் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மட்டுமே ஆகும்.

ஒரு நிறுவனத்தில் 2 வருடம் ஒருவர் பணியாற்றியிருந்தாரேயானால் அவர் ஹஜ் என்ற புனித யாத்திரை செல்ல 10 முதல் 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுப்பதற்குத் தகுதிபெற்றவராவார்.

நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படிப்பவர்களுக்கு, அவர்களின் தேர்வு காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிறுவனம் அளிக்க வேண்டும்.

மேலும் பணியாளர்கள் ஒரு வருடத்தில் 20 நாட்கள் சம்பளம் இல்லாமல் நிறுவனத்தின் ஒப்புதலுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால் தக்க மருத்துவச் சான்றிதழுடன் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய நோய் விடுப்பு (Medical Leave) எடுத்துக்கொள்ளலாம். 60 நாட்கள் நோய் விடுப்பு எடுக்க நேரிட்டால் மூன்றில் ஒரு பகுதி சம்பளம் கொடுக்கப்படும். 60 நாட்கள் நோய்விடுப்பில் 30 நாட்களுக்கு சம்பளம் இல்லாமலும் இருக்கலாம்.

இப்புதிய லேபர் லா - பெண்களுக்கு அதிக சலுகைகளை அளிப்பதாக உள்ளன. அவை, ஒரு நிறுவனத்தில் பெண்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்குண்டான ஈட்டுத்தொகை நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் திருமணத்தின் போதும், மகப் பேறுகாலத்தின் போதும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும்.

50 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்க குழந்தைக் காப்பகங்கள் அந்த நிறுவனம் அமைத்துத்தர வேண்டும். 100 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் அமைச்சகம் (Ministry Of Labour) தலையிட்டு குழந்தைகள் காப்பகம் அமைத்துத்தரும்.

லேபர் லா- 14வது பிரிவின் படி கிழக்குப் பிராந்திய தொழிலாளர் அலுவலக இயக்குனர் முஹம்மது அல் ஹம்தான் கூறுகையில் தொழிலாளர் சங்க அலுவகங்களுக்கு (Labour Offiice) அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார். லேபர் அலுவலகங்களில் பெண்களையும் வேலைக்கு நியமனம் செய்யலாம் என்ற புதிய விதியையும் தெரிவித்தார்.

கவுன்சிலர் யாஸிர் இமாம் அல்-கந்தூர் கூறுகையில் இப்புதிய லேபர் சட்ட திருத்தங்கள் முதலில் இருந்த பிரிவு – 16ன் கீழ் அமைந்த 245 ஷரத்துக்கள் அனைத்தையும் இது நிறைவு செய்யும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தப் புதிய லேபர் சட்டத்திருத்தங்கள் பணிபுரிபவருக்கும், பணியில் அமர்த்துபவருக்கும் இடையே பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

-மணவை. அஜீஸ். M.A.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

Saturday, July 15, 2006

2006 உலககோப்பை கால்பந்துப் போட்டி

2006 உலககோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் முந்தைய சாம்பியன் பட்டங்கள் 1934, 1938, 1982 ஆகிய வருடங்களில் ஆகும். எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்-வுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற சமநிலையை தாண்டமுடியவில்லை. கூடுதல் நேரத்திலும் புதிய கோல் எதுவும் இல்லாததால், பெனால்டி சூட் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டிய நிலையில், இத்தாலி 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி உலக சாம்பியன் ஆனது.

மோதிய அணிகளின் விபரங்கள்

ஜூன் 9
ஜெர்மனி 4-2 கோஸ்டா ரிக்கா
போலந்து 0-2 ஈக்குவடார்

ஜூன் 10
இங்கிலாந்து 1-0 பராகுவே
டிரினிடாட் & டொபாகோ 0-0 ஸ்வீடன்
அர்ஜெண்டினா 2-1 ஐவோரி கோஸ்ட்

ஜூன் 11
செர்பியா & மொன்டெநெக்ரோ 0-1 நெதர்லாந்து
மெக்ஸிகோ 3-1 ஈரான்
அங்கோலா 0-1 போர்ச்சுகல்

ஜூன் 12
ஆஸ்ட்ரேலியா 3-1 ஜப்பான்
அமெரிக்கா. 0-3 செக் குடியரசு
இத்தாலி 2-0 கானா

ஜூன் 13
தென் கொரியா 2-1 டோகோ
பிரான்ஸ் 0-0 ஸ்விட்சர்லாந்து
பிரேசில் 1-0 குரோவேஷியா

ஜூன் 14
ஸ்பெயின் 4-0 உக்ரெய்ன்
துனிஸியா 2-2 சவுதி அரேபியா
ஜெர்மனி 1-0 போலந்து

ஜூன் 15
ஈக்குவடார் 3-0 கோஸ்டா ரிக்கா
இங்கிலாந்து 2-0 டிரினிடாட் & டொபாகோ
ஸ்வீடன் 1-0 பராகுவே

ஜூன் 16
அர்ஜெண்டினா 6-0 செர்பியா & மொன்டெநெக்ரோ
நெதர்லாந்து 2-1 ஐவோரி கோஸ்ட்
மெக்ஸிகோ 0-0 அங்கோலா

ஜூன் 17
போர்ச்சுகல் 2-0 ஈரான்
செக் குடியரசு 0-2 கானா
இத்தாலி 1-1 அமெரிக்கா.

ஜூன் 18
ஜப்பான் 0-0 குரோவேஷியா
பிரேசில் 2-0 ஆஸ்ட்ரேலியா
பிரான்ஸ் 1-1 தென் கொரியா

ஜூன் 19
டோகோ 0-2 ஸ்விட்சர்லாந்து
சவுதி அரேபியா 0-4 உக்ரெய்ன்
ஸ்பெயின் 3-1 துனிஸியா

ஜூன் 20
ஈக்குவடார் 0-3 ஜெர்மனி
கோஸ்டா ரிக்கா 1-2 போலந்து
ஸ்வீடன் 2-2 இங்கிலாந்து
பராகுவே 2-0 டிரினிடாட் & டொபாகோ

ஜூன் 21
போர்ச்சுகல் 2-1 மெக்ஸிகோ
ஈரான் 1-1 அங்கோலா
நெதர்லாந்து 0-0 அர்ஜெண்டினா
ஐவோரி கோஸ்ட் 3-2 செர்பியா & மொன்டெநெக்ரோ

ஜூன் 22
செக் குடியரசு 0-2 இத்தாலி
கானா 2-1 அமெரிக்கா.
ஜப்பான் 1-4 பிரேசில்
குரோவேஷியா 2-2 ஆஸ்ட்ரேலியா

ஜூன் 23
சவுதி அரேபியா 0-1 ஸ்பெயின்
உக்ரெய்ன் 1-0 துனிஸியா
டோகோ 0-2 பிரான்ஸ்
ஸ்விட்சர்லாந்து 2-0 தென் கொரியா

ஜூன் 24
ஜெர்மனி 2-0 ஸ்வீடன்
அர்ஜெண்டினா 2-1 மெக்ஸிகோ

ஜூன் 25
இங்கிலாந்து 1-0 ஈக்குவடார்
போர்ச்சுகல் 1-0 நெதர்லாந்து

ஜூன் 26
இத்தாலி 1-0 ஆஸ்ட்ரேலியா
ஸ்விட்சர்லாந்து 0-0 உக்ரெய்ன் - உக்ரெய்ன் வெற்றி 3-0 பெனால்ட்டி முறையில்

ஜூன் 27
பிரேசில் 3-0 கானா
ஸ்பெயின் 1-3 பிரான்ஸ்

ஜூன் 30
ஜெர்மனி 1-1 அர்ஜெண்டினா - ஜெர்மனி வெற்றி 4-2 பெனால்ட்டி முறையில்
இத்தாலி 3-0 உக்ரெய்ன்

ஜூலை 1
இங்கிலாந்து 0-0 போர்ச்சுகல் - போர்ச்சுகல் வெற்றி 3-1 பெனால்ட்டி முறையில்
பிரேசில் 0-1 பிரான்ஸ்

ஜூலை 4
ஜெர்மனி 0-2 இத்தாலி

ஜூலை 5
போர்ச்சுகல் 0-1 பிரான்ஸ்

ஜூலை 8
ஜெர்மனி 3-1 போர்ச்சுகல்

ஜூலை 9
இறுதிச் சுற்று: இத்தாலி 1-1 பிரான்ஸ் (இத்தாலி வெற்றி 5-3 பெனால்ட்டி முறையில்)உலக கோப்பை முந்தைய வெற்றிகள் சில:
2002 லிருந்து 1970 வரை மட்டும்

2002: நடைபெற்ற இடங்கள்: ஜப்பான்-தென்கொரியா
இறுதி சுற்றில் : பிரேஸில் 2 ஜெர்மனி 0
அதிக கோல் எடுத்தவர்: ரொனால்டோ (பிரேஸில்) - 8 கோல்கள்

1998: நடைபெற்ற இடம்: பிரான்ஸ்
இறுதிச் சுற்று: பிரான்ஸ் 3 பிரேசில் 0
அதிக கோல் எடுத்தவர்: Davor Suker (குரோவேஷியா) - 6 கோல்கள்

1994: நடைபெற்ற இடம்: அமெரிக்கா
இறுதிச் சுற்று: பிரேசில் 0 இத்தாலி 0 (பிரேசில் வெற்றி 3-2 பெனால்ட்டி முறையில்)
அதிக கோல் எடுத்தவர்: Hristo Stoichkov (பல்கேரியா), Oleg Salenko (ரஷ்யா) - 6 கோல்கள்

1990: நடைபெற்ற இடம்: இத்தாலி
இறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 1 அர்ஜெண்டினா 0
அதிக கோல் எடுத்தவர்: Salvatore Schillaci (இத்தாலி) - 6 கோல்கள்

1986: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ
இறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 மேற்கு ஜெர்மனி 2
அதிக கோல் எடுத்தவர்: Gary Lineker (இங்கிலாந்து) - 6 கோல்கள்

1982: நடைபெற்ற இடம்: ஸ்பெயின்
இறுதிச் சுற்று: இத்தாலி 3 மேற்கு ஜெர்மனி 1
அதிக கோல் எடுத்தவர்: Paolo Rossi (இத்தாலி) - 6 கோல்கள்

1978: நடைபெற்ற இடம்: அர்ஜெண்டினா
இறுதிச் சுற்று: அர்ஜெண்டினா 3 நெதர்லாந்து 1
அதிக கோல் எடுத்தவர்: Mario Kempes - 6 கோல்கள்

1974: நடைபெற்ற இடம்: மேற்கு ஜெர்மனி
இறுதிச் சுற்று: மேற்கு ஜெர்மனி 2 நெதர்லாந்து 1
அதிக கோல் எடுத்தவர்: Gregorz Lato (போலந்து) - 7 கோல்கள்

1970: நடைபெற்ற இடம்: மெக்ஸிகோ
இறுதிச் சுற்று: பிரேசில் 4 இத்தாலி 1
அதிக கோல் எடுத்தவர்: Gerd Muller (மேற்கு ஜெர்மனி) - 10 கோல்கள்