Monday, January 30, 2006

தினமலர் விஷமம்! நபிகள் நாயகம் மாமிச உணவு உண்ணவில்லையாம்...


லகில் வாழும் ஜீவராசிகளில் இரண்டு வகை உண்டு. மாமிசம் சாப்பிடுபவை. தாவரங்களை சாப்பிடுபவை. மனிதர்களிலும் அவ்வாறே இருவகையினர் உண்டு. இறைச்சி சாப்பிடுபவர்களை அசைவம் என்றும், காய்கறிகள் சாப்பிடுபவர் களை சைவம் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு.

இறைச்சி உணவுகளை சாப்பிட்டால் சக்தி வாய்ந்தவர்களாக, உடல் உரம் கொண்டவர்களாக விளங்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டால் அதிகமாக உடல் உபாதைகள் வர வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இன்று உலகில் ஏராளமானோர் மாமிச உணவு சாப்பிடுபவர்களாகவும், காய்கறி உணவு சாப்பிடுபவர்களில் கூட ஏராளமானோர் இறைச்சி உணவை நோக்கி திரும்பியிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் இழிந்தவர்களாகவும், காய்கறி உணவுகள் சாப்பிடுபவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதும் போக்கு மனுநீதி காலத்தி­ருந்தே நிலவி வருகிறது. உலகில் வேறெங்கும் இத்தகைய நிலை நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உணவு விஷயத்தில் அகிம்சை - ஹிம்சை பிரச்சினைகளை பெரிதாக்கி மக்களை பாகுபடுத்தும் போக்கு இன்னும் மாறக்காணோம்.

சில காய்கறி உணவு பிரியர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து உணவுப் பிரச்சினைகளில் மக்களிடையே பிணக்கை ஏற்படுத்தி வருகின்றன. தினமலரின் வாரமலர் (ஜனவரி 8-2006) இதழில் அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது - பா.கே.ப. என்ற பகுதியில் சில முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோவை பாரதியார் பல்கலைக் கழக உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்ததாக அந்துமணி கூறுகிறார்.

அதில் உள்ள கருத்துக்களை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அசைவ உணவை ஏசு நாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சைவ உணவையே உண்டு வந்தார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் என்றும் புதுமைக்(?) கருத்துக்களை புகுத்தியிருக்கிறார்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவில் கூறப்பட்ட இறைவசனங்களை திரித்துக் கூறி தனது வாதத்திற்கு வலுசேர்க்க முயல்கிறார்.

திருக்குர்ஆனின் அற்புதமான தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தாராளமாக எங்கும் கிடைக்கும் நிலையில் பேராசிரியர் வேதகிரி கணேசன் நுனிப்புல் மேய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், தனது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக திருக்குர்ஆனையும் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றையும் தான் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை புலப்படுத்திவிட்டார்.

பெருமானார் அசைவ உணவுகளையே அதிகம் உண்டு வந்தார்கள் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு. குர்பானி, அகீகா என்று கால்நடைகளை அறுத்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் இறைச்சிகளை பகிர்ந்து வழங்குவதை மதக்கிரியையாகவே செய்ய கற்றுக் கொடுத்த அண்ணல் நபிகளைப் பற்றி முரண்பட்ட கருத்தைக் கூறுவதைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற வேண்டுமென்றால் முத­ல் தனது தரப்பினை வலுவாக்கும் காரணிகளைக் கூற வேண்டும். எதிர் கருத்துக்களை எதிர்த்து தனது தரப்பினை ஆதாரத்துடன் கூற வேண்டும் அதை விடுத்து பொய்களையும், யூகங்களையும், தங்கள் வியூகங்களாக அமைக்கக் கூடாது என்பதை யாராவது இந்த புண்ணியவான்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

நன்றி: மக்கள் உரிமை

இஸ்லாமிய அடிப்படை நெறிகளை நன்கு அறிந்தும், அறியாததுபோல் தனது விஷமத்தை பரப்பி வரும் தினமலரின் உண்மையான "நிறம்" அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற புண்படுத்தல்களை சர்வதேச அளவில் முஸ்லிம்களால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் விடாப்பிடியாக திருந்த மறுக்கும் தினமலரை தமிழுலகமக்கள் ஒன்று சேர்ந்து புறக்கணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Monday, January 23, 2006

மினா விபத்து - "உணர்வு" இதழின் அறியாமை

"மினாவில் நெரிசலைத் தவிர்க்கவும் உயிர்ப்பலியை தடுக்கவும் என்ன வழி?" என்ற தலைப்பில் 20-01-2006 தேதியிட்ட உணர்வு வாரஇதழில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் உண்மைக்கு புறம்பான செய்திகள் இடம்பெற்றிருப்பதால் அதனைச் சுட்டிக்காட்டும் சிறு விமர்சன கட்டுரையே இது.

பொதுவாக ஹாஜிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரழக்கக்கூடாது என்பதற்காகத்தான் பல வசதிகளையும் ஏற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் செய்துள்ளது. அதுதவிர, முஸ்தலிஃபாவில் இரவு தங்கும்போது "நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம்" என நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். எந்த ஒரு ஆத்மாவையும் தன் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை என்பதை கருத்தில்கொண்டு, பிறை 10-ல் கூட்ட நெரிசல் இருந்தால் சூரியன் மறைந்த பிறகு பிற்படுத்தி ஜமராத்தில் கல்லெரியலாம் என்றும், பிறை 11, 12, 13 ஆகிய தினங்களில் கூட்ட நெரிசல் இருந்தால் காலை நேரத்திலேயே ஜமராத்தில் கல்லெரியலாம் என்றும் சவுதி அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதுதவிர விபத்திற்கு காரணம் யார்? என்பதைப்பற்றிய விளக்கமான கட்டுரை இணையத்தில் வெளிவந்துவிட்டதால் அதனைப்பற்றி இங்கு விரிவாக பேச விரும்பவில்லை.

தவறை தட்டிக்கேட்பது பத்திரிக்கையாளரின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அதை சுட்டிக்காட்டுவதை வரவேற்கும் அதே வேளையில் உண்மைக்கு மாற்றமாக தவறான விபரங்களை கூறுவதும் அறியாமையை எழுத்தில் வார்ப்பதும் பத்திரிக்கை தர்மம் அல்ல என்பதை எனது விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

புனித ஹஜ் கடமையின் போது மினாவில் உள்ள ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் உஸ்தா ஆகிய மூன்று இடங்களில் சைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றனர்.

மினாவில் ஜமராத்திற்கு கல்லெறியும் நிகழ்ச்சியை முஸ்லிம்களில் சிலரும் முஸ்லிமல்லாதவர்களில் பலரும் "ஷைத்தானின் மீது கல்லெறியும் நிகழ்ச்சி" என்பதாக தவறாக விளங்கியுள்ளார்கள். அத்தவறுக்கு துணைபோவதுபோல் "சைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும்" என்பதாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

"புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சுமார் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றனர்" என்று சொல்ல வேண்டிய இடத்தில், "ஜமராத்தில் கல்லெறியும் நிகழ்ச்சியில் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்துக்கொள்கிறார்கள்" என்பதாக கூறி கட்டுரையின் முதல் பாராவிலேயே தடுமாறி உள்ளார்.

கல்லெறியச் செல்வதற்கு ஒரு வழியை அமைத்து, வெளியேறுவதற்கு வேறொரு வழியை அமைத்திருந்தால் இந்த நெரிசலும் ஏற்படாது. உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இந்த வசதியை சவுதி அரசு இதுவரை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை என்று தெரியவில்லை.

விபத்து நடந்த கல்லெறியச் செல்லும் இடம் ஒரு வழிப்பாதைதான் என்பதை கட்டுரையாளர் ஏனோ தெரிந்திருக்கவில்லை என்று நமக்கு தெரியவில்லை.


கட்டுரை எழுதியவருக்கு மினாவில் செய்யப்படும் ஏற்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது என்பதை அவரின் எழுத்திலிருந்தே புரிகிறது. இஸ்லாம்/முஸ்லிம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் பொய்யை கலந்து கற்பனை குதிரையை தட்டிவிடும் "தினமலர்" இதழை விமர்சிக்கும் "உணர்வு" வாரஇதழ், உலகமே உற்று நோக்கும் ஒரு இடத்தில் நடந்ததைப்பற்றி எழுதும்போது கவனமாக இருக்க வேண்டாமா?

25 லட்சம் மக்கள் வந்திருக்கும் போது அவர்களை சவுதி காவல் துறையும், ராணுவமும் தக்க பாதுகப்பு தந்து, வரிசையாக செல்ல வைத்திருக்க வேண்டும்.

விஷயம் தெரிந்தவரிடம் கேட்டால் பாதுகாப்பு ஏற்பாடு செய்தார்களா இல்லையா என்பதை கூறுவார்கள். இதற்காக மட்டுமே சவுதி காவல் துறையும், ராணுவமும் உட்பட 60,000 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

25 லட்சம் பேர் வரிசையாக சென்று கல்லெறிந்தால் அனைவரும் கல்லெறிந்து முடிக்கப் பல மாதங்கள் கூட ஆகலாம். ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் பேர் என்று வரிசைப்படுத்தினாலும் குறைந்தது 100 நாட்கள் ஆகும்.

நாடு வாரியாக ஹாஜிகளை பிரித்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்தில் அந்தந்த நாட்டினர் இந்த கிரியை மேற்கொள்ளுமாறு செய்திருக்கலாம். அவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவதால் ஏற்படும் நெரிசலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம். இனியாவது சவூதி அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுரையாளர் அடித்த மெகா ஜோக் இதுதான். மற்றவர்களை "மனோ இச்சை, லூசு, பைத்தியம், மெண்டல்" என (இவர்களின் டான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்) திட்டி தீர்க்கும் இவர்கள், தங்களை திரும்பிப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?

பிறை 10-ல் ஹாஜிகள் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவை வந்தடைய பல மணி நேரங்கள் பிடிக்கும். அதுவல்லாமல் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வரும் ஹாஜிகள் அவரவர்களின் ஏஜெண்ட் பதிவு செய்த வெவ்வேறு முதவ்விஃபில் தங்கியுள்ளனர். ஆக ஒவ்வொரு முதவ்விஃப் டெண்ட் தொகுப்பிலும் பல்வேறு நாட்டினர் தங்கியுள்ளனர். ஜமராத்தில் கல்லெறியும் இடம் மக்காவிலிருந்து மினாவிற்கு நுழையும் ஆரம்ப பகுதியில் இருக்கிறது. மினாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை செல்ல தோராயமாக முக்கால்மணிநேரம் ஆகும். மினாவில் டெண்ட் போட ஏற்பட்ட இடப்பற்றாக்குறையினால், முஸ்தலிஃபாவிலும் டெண்டுகளை நிறுவியுள்ளனர். இதுவல்லாமல் முறையாக அனுமதி பெறாமல் வந்தவர்கள் தங்கியிருப்பது மினாவின் தெருக்களில்தான். இவற்றை சிந்தனையில் போட்டு கட்டுரையாளரின் புதிய ஆலோசனையை நோக்கினால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

ஷைத்தானின் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஒரு அடையாள நிகழ்ச்சி தான். இயலாத சூழ்நிலை ஏற்படும் போது தூரத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத்துப் போட்டு, கடமையை நிறைவேற்றி முடித்து விடலாம்.

"ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதும்", "அரைக்கால் டிரவ்ஷரில் தொடை தெரிய தொழலாம்" போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஃபத்வாக்களின் வரிசையில் புதிய ஒன்று சேர்ந்துக்கொண்டுள்ளதை நினைத்து ஆச்சர்யப் படவேண்டியதில்லை. எனவே, நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்

நெரிசலில் சிக்கி இறப்பவர்கள் மற்றும் காயமடைபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளாகவே இருக்கின்றனர்.

தற்போது இறந்தவர்களில் பலர் வாலிபர்களாகும். இவர்களில் பாதுகாப்புக்கு நின்றவர்களும் அடங்குவர். எனவே கட்டுரையாளர் மினா மற்றும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றை அறியாதது மட்டுமில்லாமல் விபத்தின் விபரங்களைப் படித்துக்கூட தெரிந்துக்கொள்ளாமல் பொதுவான கூட்ட நெரிசலை போன்று நினைத்து கற்பனை குதிரையை தட்டிவிட்டு கட்டுரையை எழுதியுள்ளார் என்பது விளங்குகிறது.

இதை முஸ்லிம் அல்லாதவர்கள் எழுதியிருந்தால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றும் செய்திகளில் ஆயிரத்தில் இதுவும் ஒன்று என்று இருந்துவிடலாம். ஆனால் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் சொல்வதாக கூறிக்கொள்ளும் இவர்கள் வெளியிடுவது, உணர்வுள்ள பத்திரிக்கைக்கு உகந்ததல்ல என்பதை உணர்வார்களா?

Wednesday, January 18, 2006

ஹெச்.ஜி.ரசூலுக்கு எதிர்வினை-2

ஹெச்.ஜி.ரசூலுக்கு எதிர்வினை௨-2

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.
இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

இந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன. (இவ்வாறு இஸ்லாமிய நெறியிலிருந்து பிறழ்ந்த சில முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்தே இஸ்லாமை இரண்டாக்கிப்பார்க்க நினைக்கின்றன ஆதிக்க சக்திகள்).

இதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின.எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற;அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை. (முஹம்மது நபிக்கு ஒரு சிலை வைத்து தர முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் முஸ்லிம்கள் மீதான 'அவாள்களின்' இத்தனை "கரிசனத்"துக்கும் காரணம் என்ற கி.வீரமணியின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது)

சமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயமாக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக' ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும்.

வஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம் தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது.(கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)

இன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.

Tuesday, January 17, 2006

மினாவில் மேம்படுத்தப்படும் ஜமராத் பாலம்!இவ்வருட ஹஜ் நெரிசலில் நடந்த அசம்பாவிதத்தில் 345 பேர் பலியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதும் அறிந்ததே!


ஹஜ் (குறிப்பாக மினாவில் கல்லெறியும்) கிரியைகளின் போது நெரிசலினால் ஏற்படும் உயிர் இழப்பு புதிதல்ல. ஏற்கனவே பல சம்பவங்கள் இங்கே நடந்திருந்தாலும் 16 வருங்களுக்குப்பிறகு ஏற்பட்ட அதிக இழப்பிலான சம்பவம் இதுதான்.

முந்தைய ஹஜ்ஜின்போது நடந்த சம்பவங்களின் பட்டியல்:
8 1979 மெக்காவின் புனித பள்ளியில் நடந்த இரண்டு வார முற்றுகைப் போராட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்
8 1987 நானூறுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் மேற்கத்தியர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டனர்
8 1990 சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் 1426 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 1994 மினாவின் ஜமராத் பாலத்தின் கூட்ட நெரிசலில் 343 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 1997 மினாவின் ஜமராத் பாலம் அருகில் யாத்திரிகர்கள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் இறந்தனர்
8 2001 மினாவின் ஜமராத் பாலத்தின் கூட்ட நெரிசலில் 35 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2003 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 14 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2004 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 251 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்
8 2006 யாத்திரிகர்கள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து 76 பேர் பலியாயினர்.
8 2006 மினாவின் ஜமராத் பாலத்தின் அருகில் கூட்ட நெரிசலில் 345 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர்

பெரும்பாலான இச்சம்பவங்களில் அசம்பாவிதம் நடைபெற்றதற்கு காரணம், யாத்திரிகர்களுக்கு ஹஜ் கிரியைகளின் அடிப்படை செய்முறைகளும், போதுமான பயிற்சியின்மையுமே என்று கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக 4.2 பில்லியன் ரியால் பொருட்செலவில் உருவாக உள்ள, மேம்படுத்தப்பட்ட, அதி நவீன வசதிகளைக்கொண்ட ஜமராத் பாலத்திற்கான கட்டுமானப்பணி வரும் சனிக்கிழமை (21-01-2006) துவங்குகிறது.

புதிய நான்கு அடுக்கு மாடிகளையும், கீழ்த்தளமொன்றையும் கொண்ட இவ்வசதி மூலம் இதுவரை உள்ள குறைபாடுகள் நீங்கும். மூன்று வருட காலத்தில் கட்டி முடிக்கப்படவுள்ள இப்பணியின் முதல் கட்டம் அடுத்த ஹஜ்ஜின் போது தயாராகிவிடும் என்று சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு:
மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (அபூஉமர் அவர்கள் எழுதிய கட்டுரைத்தொகுப்பு)

Sunday, January 15, 2006

நாளைய முஸ்லிம் பெண்

நூல்: நாளைய முஸ்லிம் பெண்
ஆசிரியர்: டாக்டர் யூசுப் அல் கர்ளாவி
மொழிபெயர்ப்பு: எச்.எச்.எம்.ஃ பழீல்
எம்.ஏ.எம். மன்சூர்
வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோயில்
2ஆம் தெரு கே. புதூர்
மதுரை- 625 001
தொலைப்பேசி: 0452 256 9930
மின் அஞ்சல்: mellinam@redifmail.com
பக்கம்: 56 விலை: ரூ. 20


நூலிலிருந்து:

பெண்களை வீட்டிலேயே அடைத்து வைத்தல் குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான ஒரு தண்டனையாக இருந்தது. எனவே சாதாரன நிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் பண்பாக இதைக் கொள்ள முடியுமா?

ஆண்களால் மட்டுமே ஓர் இஸ்லாமிய சமூகம் எழும்புதல் சாத்தியமா? பெண்ணின் முழு நேரமும் முழு நோக்கும் உணவு சமைப்பதற்காகவும், வீட்டை ஒழுங்குபடுத்துவதாகவும், பிள்ளைகளை கவனிப்பதாகவும் கணவனுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்வதாகவும் மட்டும் இருக்கும் போது இலட்சிய வேகத்தையும் போராட்ட உணர்வையும் எவ்வாறு அவளிடமிருந்து எதிர்பார்க்க முடியும்?

Saturday, January 14, 2006

ஹெச்.ஜி. ரசூலின் கட்டுரைக்கு எதிர்வினை

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் திண்ணை இணைய இதழில் 'வகாபிசமும் நவீன முதலாளித்துவமும்' என்ற கட்டுரை எழுதியுள்ளார்.

முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல. மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட. முஹமது நபி(ஸல்) அவர்கள் தானும், தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்? ஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளை குடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்கள் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே. தர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மை தான். அவர்கள் வாழும் பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களின் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.

ஹெச். ஜி. ரசூல் மெக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர் ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின் படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும், அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல. இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும். ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

Sunday, January 08, 2006

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

ஐதராபாத், ஜன.8-
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை வழங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

3 நாள் மாநாடு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 4-வது மாநாடு, ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டமும் இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுக்கு இடையே, 2 பிரமுகர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கி, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

ஓட்டுரிமை
"வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை 3 வகையாக பிரிக்கலாம்.அவர்களில் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள், தனி ரகம்.அவர்கள் ஒருபோதும் அந்தநாடுகளின் பிரஜையாக முடியாது.எனவே, அவர்கள், நமது நாட்டில் ஓட்டுரிமை வேண்டும் என்று கோருவது, நியாயமானது.இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.விரைவில் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு இந்தியர்களுக்காக இன்சூரன்சு திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.தங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக பணம் அனுப்ப வசதியாக யு.டி.ஐ. வங்கியுடன் இணைந்து புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனி பல்கலைக்கழகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மற்றொரு நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வசதிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.வெளிநாட்டு இந்தியர்கள் இடையே கல்வி-கலாசார பரிமாற்றத்துக்காக தனி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் மூலம் கடந்த 2001-ம் ஆண்டில் 1,300 கோடி டாலர் அளவுக்கு நமது நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு இது, 2 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து உள்ளது."

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசுகிறார்.


நன்றி: தினத்தந்தி (8-01-2006)

Saturday, January 07, 2006

பெங்களூரில் ரவிஷங்கர் - ஜாகிர் நாயக் விவாதம்

பெங்களூரில் ரவிஷங்கர்-ஜாகிர் நாயக் விவாதம்


Thursday, January 05, 2006

நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன்நிலமெல்லாம் ரத்தம்

பா.ராகவன்

கிழக்கு பதிப்பகம்
16/37, Karpagambal Nagar
Mylapore,
Chennai 600 004
Tamil Nadu,
INDIA


இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன? பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை? ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால்? ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன? இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை? 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் வலுக்கட்டாயமாகப் பாலஸ்தீன் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்துதான் இந்தப் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது என்றாலும், பாலஸ்தீன் பிரச்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்று. பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகம், இஸ்ரேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்கள், இஸ்ரேலிய உளவு அமைப்பான "மொஸாடின்' செயல்பாடுகள், பாலஸ்தீன் பிரச்னை குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம், யாசிர் அரஃபாத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள் என்று மிக விரிவான களப் பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

விலை: ரூ.300
எடை: 885 கிராம்
ISBN எண்: 81-8368-090-9

ஸகாத் வழிமுறைகள், சட்டதிட்டங்கள்

நூல்: ஸகாத் வழிமுறைகள், சட்டதிட்டங்கள்
தொகுப்பு: எம். எஃப். அலி
மேலாய்வு: முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி
வெளியீடு: தாருல் ஹுதா
விலை: ரூ. 10


முகவரி: 211 லிங்கி செட்டி தெரு
மண்ணடி
சென்னை - 600 001
தொலைப்பேசி: 91- 44 - 2524 7866
கைப்பேசி: 98401 74121
இணையம்: http://www.darulhuda.info
மின் அஞ்சல்: muftiomar@yahoo.com


பொருளடக்கம்

1. ஸகாத் - இஸ்லாமின் தூண்
2. ஸகாத்தின் நோக்கம்
3. ஸகாத் - கட்டாயக் கடமை
4. ஸகாத் கடமையாவதற்கான நிபந்தனைகள்
5. ஸகாத் கடமையாகாதவை
6. ஜகாத் பெறத் தகுதியுடைய 8 பிரிவினர்
7. ஸகாத் பெறத் தகுதியற்றவர்கள்
8. விநியோகிக்கும் வழிமுறைகள்
9. ஸகாத் கொடுக்காதவர்களுக்குப் பயங்கர தண்டனைகள்
10. வருடா வருடம் ஸகாத்

தொகுக்க உதவிய நூல்கள்

1. வறுமை ஒழிப்பில் ஸகாத்தின் பங்கு
2. நபிவழியில் நம் ஸகாத்
3.What you must be known about Islam?

10 பக்கங்களே கொண்ட மிகவும் எளிமையான நூல். அத்துடன் சுவரொட்டியாக ஒட்டி வைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு ஸகாத் விளக்கப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நூல். நடுத்தர வசதியுள்ளவர்கள் குறைந்தது 10 படிகளாவது வாங்கி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசளியுங்கள். நல்ல வசதியுள்ளவர்கள் நூறு படிகள் முதல் ஆயிரம் படிகள் வரை வாங்கி தங்கள் ஊரில் விநியோகிக்கலாம்.

Sunday, January 01, 2006

டாக்டருக்கே டாட்டா காட்டிய நியூமராலஜி ஜோசியர்

பழைய செய்திப்பத்திரிக்கையில் கண்ணில் பட்ட விஷயத்தைப்பற்றி அபூ உமர் எழுதியிருந்தார். நல்ல (அல்லது கெட்ட) பல செய்திகள் இப்படி அவ்வப்போது கண்ணில் படுவதுண்டு. அது போன்ற ஒன்று இங்கே!


Image hosted by TinyPic.com


கேடுகெட்ட இம்மாதிரி ஏமாற்றுபேர்வழிகளிடம் பாமரர்கள் மட்டுமில்லாமல் படித்துப்பட்டம் பெற்றவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால், அடிப்படை நம்பிக்கைகளில் இருக்கும் குறைபாடுதான் காரணம் என்று தோன்றுகிறது.