Wednesday, November 16, 2005

நோய் நிவாரணம்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பலவிதமான நோய்களை சந்திக்கின்றோம். நோய்க்கு ஆட்படாதவர்கள் இந்த உலகத்தில் காணவே முடியாது. நபிமார்கள் கூட நோயுற்றிருக்கின்றார்கள் என்பதை குர்ஆனின் மூலமும், வரலாறுகள் மூலமும் நாம் காண முடிகின்றது. நோயிற்றிருக்கும் போது நமது நம்பிக்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும். நமது நடவடிக்கைகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் காட்டிய வழிமுறையை தெரிந்துகொள்ள இருக்கின்றோம்.

இந்த நோய் என்பது மனிதனை பண்படுத்துவதற்காக அல்லாஹ்வினால் கொடுக்கப்படுகின்ற ஒரு எச்சரிக்கை. நோய் போன்ற துன்பங்கள் மனிதனுக்கு வருவதில்லை என்றால் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பாளனாக திகழ வாய்ப்பிருக்கிறது. பெரும்பாளானவர்கள் நோய் வந்து படுக்கையில் கிடக்கும் போதுதான் தனக்கு மிஞ்சிய ஒரு சக்தி (கடவுள்) இருக்கின்றான் என்பதை உணருகிறான்.

எத்தனையே பகுத்தறிவு வாதம் பேசியவர்களெல்லாம் நோய் நொடிகளுக்கு ஆட்படும்போது பிரசாதங்களை நோக்கி ஓடக்கூடிய காட்சிகளை பார்க்கின்றோம். கடவுள் நம்பிக்கை என்பது நோய் வரும் பொழுது மாத்திரம் மனிதனுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த உலக வாழ்க்கையில் மூழ்கிபோய் அல்லாஹ்வை மறக்கும் மனிதர்களை இறைவன் தன் கடிவாளத்தை போட்டு சுண்டி இழுத்து "நீ ஒரு பலகீனமானன், நான் நினைத்தேன் என்றால் ஒரே இழுப்போடு உன் கதையை முடித்துவிடுவேன். ஒழுங்கா இருந்துக்கொள். கவனமாக உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்" என்று சொல்கிறானோ என்று தோன்றுகிறது.

நோயாளிகள் அந்த வாய்ப்பை நன்மைகளை கொள்ளையடிக்க கூடிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். கவனக்குறைவாக இருந்துவிட்டால் இந்த நோயே பகிரங்கமான வழிகேட்டில் இணைவைப்பில் தல்லக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிடும்.

"மருத்துவம் செய்யுங்கள். எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கின்றது" என்பது நபிவழி. இஸ்லாமிய மார்க்கம் நோய் வந்தவுடன் கடவுள் இருக்கின்றான் பார்த்துகொள்வான் என்று படுத்து கிடக்கக் கூடிய சித்தாந்தத்தைச் சொல்லவில்லை.

நோய் சடங்குகளை நோக்கியும் மூட நம்பிக்கைகளை நோக்கியும் நம்மை இழுத்துசெல்லும் ஆற்றலுடையது. நோய் வந்தவுடன் ஒரு டாக்டரிடம் செல்வோம், குணமாகவில்லை என்றால் வேறு டாக்டரிடம் செல்வோம். அப்போதும் குணமாகவில்லை என்றால் உடனே ஷைத்தான் வருவான். மனித ஷைத்தான்களை அனுப்பி இது நோய் இல்லை. நோயாக இருந்தால் இவ்வளவு நாளில் குணமாகியிருக்கும். என்னமோ உனக்கு மருந்து மாயம் செய்திருக்கிறார்கள் என்று பயத்தை உண்டாக்கி அதற்கு பறிகாரங்களை சொல்லுவார்கள்.

பாக்டரிடம் போன உடன் தலைவலி நின்றுவிட்டால் தப்பித்தோம். இல்லையென்றால் நோய்பட்ட நிலையில் பலவீனமாக இருப்போம். எங்கிருந்து எது கிடைத்தாலும் பிடித்துகொள்ள கூடிய நிலையில் இருப்போம் கடலில் மூல்க போகிறவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை பிடித்துகொண்டு ஏறிவிடலாமா என்று நினைப்பான். அது துரும்பு என்று அந்த நேரத்தில் தெரியாது. அதே போல் நோயாளிக்கு "தாயத்து போடு, தட்டு எழுதி கரைத்து குடி, தர்காவில் 10 நாளைக்கு படு, வேப்பிளை அடித்து பார்" என்று துரும்புகளை அள்ளிப்போடுவார்கள்.

மருத்துவம் செய்து விட்டு யா!அல்லாஹ் இந்த துன்பத்தை, உன்னுடைய விதியை நான் பொருந்திக் கொள்கின்றேன் என்று நினைக்கும்போது நன்மையை அடைக்கின்றான். மருத்துவத்தை தாண்டி மார்க்கம் காட்டாத வேறு வழிகளில் போகும் பொழுது தான் ஈமானை பரிகொடுக்கும் நிலமைக்கு மனிதன் தள்ளப்பட்டு விடுகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். எவர் தாயத்தை தொங்கவிடுவாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்.

அல்லாஹ் தன் திருமறையில்:

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார். (4:48) என்று கூறுகிறான்.

இன்னொரு ஹதீஸில், (ஷிர்க்கான வார்த்தைகளை கூறி)மந்திரித்தல், தாயத்துகள், (ஏலஸ்கள் கட்டுதல், தாவீசுகள்)திவலாக்கள் ஆகியவையெல்லாமே ஷிர்க்காகும் என அல்லாஹ்வின் தூதர் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹ்மத், அபூதாவூத்

அதனால் எந்த ஒரு கட்டத்திலும் எவ்வளவு நோய் நொடிகளுக்கு ஆட்பட்டாலும் தாயத்து கட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

வேறு என்னசெய்யலாம் என்றால்,

அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தினரோடு வெளியூருக்கு போகின்றார்கள். ஒரு கிராமத்தில் போய் தங்குகிறார்கள். அங்கே சாப்பாடு(விருந்து கேட்கிறார்கள்). அதற்கு அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கொடுக்கவில்லை. அந்த காலத்தில் விருந்து கொடுக்க மறுப்பது பெரிய குற்றம். எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாக அரபு நாட்டில் இருந்தது. அந்த நேரம் பார்த்து அந்த கூட்டத்தின் தலைவனுக்கு தேள் கொட்டிவிட்டது. தேள் கொட்டியவுடன் இவர்களிடம் வருகிறார்கள். உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கின்றதா என்று கேட்கிறார்கள். விருந்து தர மறுத்து விட்டார்கள் இவர்களை சும்மா விடக்கூடாது என்பதற்காக அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் "30ஆடு கொடுத்தால் வைத்தியம் பண்ணுவேன்" என்கிறார். அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். அபுஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் அல்ஹம்து சூராவை ஓதுகிறார்கள். அல்ஹம்து சூரா ஓதியவுடன் விஷம் இறங்கிவிட்டது. சொன்னபடி கொடுத்துவிட்டார்கள் இருந்தாலும் நபித்தோழர்களுக்கு பெரிய சந்தேகம் எப்படி இந்த ஆட்டை சாப்பிடுவது நபியவர்களிடம் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நபியவர்களிடம் இந்த சம்பவத்தை சொன்னவுடன் அல்ஹம்து சூரா ஒரு நோய் நிவாரணி என்பது உனக்கு எப்படி தெரியும் என்றார்கள். (நூல்: புகாரி)

அதேபோல் நபியவர்கள் நோயாளியாகிவிட்டார்கள் என்றால் "குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக்" இந்த இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். ஓதமுடியவில்லை என்றால் ஓத முடிந்தால் ஓதிவிடுவார்கள் ஓத முடியாத அளவுக்கு நோய் இருக்கும் பொழுது நான் ஓதுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நான் ஓதி அவர்கள் கையில் ஊதி அவர்களுடைய கையை கொண்டே உடம்பில் தடவி விடுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இதில் நாம் என்ன விளங்குகிறோம் என்றால் அல்ஹம்து சூரா, குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக் இந்த மாதிரியான சில சூராக்களை நோய் வரும்பொழுது ஓதினோம் என்றால் அல்லாஹ் நிவாரணம் தருவான்.

ஆனால் இந்த ஓதி பார்த்தல் என்பது அதை தொழிலாக செய்வதா? ஒருவரை ஓதுவதற்காக நியமித்து கொண்டு அவரிடம் போவதா என்றால் அப்படி செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவரவர் தான் ஓதிகொள்ள வேண்டும். மற்றவர்கள் எப்போது ஓதலாம் என்றால் ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸில் இதற்கு விளக்கம் இருக்கின்றது. நபியவர்கள் நோய்வாய் பட்டார்களானால் அவர்களே ஓதிகொள்வார்கள். ஓத முடியாத போது மற்றவர்களை ஓத சொல்லவேண்டும்.

ஆனால் நாம் ஊர்களின் என்ன செய்கிறோம். எல்லோருக்கும் அல்ஹம்து சூரா ஓத தெரியும். உடல்நிலை சரியில்லை என்றால் நம்மால் ஓதிகொள்ள முடியும் அந்த நிலையில் இருக்கும் போதும் ஓதுவதற்கென்று ஒரு ஆளை நியமித்து அவர் ஓதினால்தான் குணமடையும் என்கிறபோது ஓதக்கூடிய அந்த ஆளுக்குதான் வெயிட் கொடுக்கின்றோம்.

இது மாத்திரம் அல்லாமல் நோயான நேரத்தில் கேட்கக்கூடிய சில பிரார்த்தனைகளையும் நபி(ஸல்) நமக்கு கற்றுகொடுத்திருக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது கரத்தை அந்நோயாளியின் மீது தடவி, அல்லாஹும்ம ரப்பன்னாஸ், அத்ஹிபில் பஃஸ இஷ்பி அன்தஷ்ஷாஃபீ லா ஷிபாஅ இல்லா விபாவுக ஷிபாஅன் லாயுஹாதிரு ஸக்மா

(பொருள்: இறைவா! மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கிவைப்பாயாக! நோயைவிட்டு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த நோயையும் விட்டு வைக்காது)

என்று கூறுவார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்


அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. அவர்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக! மேலும் "அவூது பிஇஜ்ஜதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு

(பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும், சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்)

என்று ஏழுமுறை கூறுவீராக! நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட துஆக்கள் எல்லாம் யாருக்கு நோய் ஏற்பட்டிருக்கிறதோ அவரும் இந்த துஆயை ஓதலாம். உடல்நலம் விசாரிக்க போகிறவரும் அவருக்காக இந்த துஆவை ஓதலாம். இன்னொரு துஆ.

இன்னொரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மரணத்தின் அறிகுறிகள் தென்படாத ஒரு நோயாளியை ஒருவர் உடல் நலம் விசாரித்து அப்பொழுது, அஸ் அலுல்லாஹல் அளீம், ரப்பல் அர்ஷில் அளீம் அன்யஷ்பியக

(பொருள்: மிகப்பெரியவனான, மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்விடம் உம்மைக் குணப்படுத்தும்படி கேட்கிறேன்) என்று ஏழுமுறை ஓதுவாரேயானால் அல்லாஹ் அவரை அந்த நோயிலிருந்து குணப்படுத்தியே தவிர வேறில்லை). நூல்: அபூதாவூத், திர்மிதி

நாம் ஒருவரை உடல்நலம் விசாரிக்க சென்றால் இந்த துஆக்களை ஓதினால். அல்லாஹ் நிவாரணம் தருவான். இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.

பிறகு நமக்கு நோய் வந்து சிலருக்கு டாக்டர் சொல்லிவிடுவார்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது. மரணத்தின் நிலையை எட்டிவிட்டோம் என்று தெரிந்தால் அந்த நேரத்தில் நிவாரணத்தை கேட்க முடியாது. ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனின் அவருக்கு நேரம் வந்துவிட்டது என்றால் கொஞ்ச நேரம் முந்தவும் மாட்டாது, பிந்தவும் மாட்டாது என்று கூறுகின்றான். அந்த நேரத்தில் நபியவர்கள் என்ன துஆ கேட்டார்கள் என்றால்,

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (தங்கள் மரணத்திற்கு முன் ஏற்பட்ட நோயின் பொழுது ஒரு முறை) என் மீது சாய்ந்தவர்களாக, அல்லாஹும்மஃபிர்லீ வஅர்ஹம்னீ வல்ஹிக்னீ பிர் ரஃபீகில் அஃலா

(பொருள்: இறைவா! என் மீது கருணை காட்டுவாயாக! என் பிழைகளை மன்னிப்பாயாக! மேலான நண்பனின் பக்கம்(உன் பக்கம்) என்னை சேர்த்தருள்வாயாக!)

என கூறியதை நான் செவிமடுத்துள்ளேன். நூல்: புகாரி, முஸ்லிம்.

இன்னொரு ஹதீஸ், ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில் அவர்களின் அருகே ஒரு தண்ணீர் செம்பு வைக்கப்பட்டிருந்தது. அதனுள் நபி(ஸல்) அவர்கள் தங்கள் கரத்தை விட்டுத் தண்ணீர் எடுத்து அதனைத் தங்கள் முகத்தில் தடவிக்கொள்வார்கள். பிறகு அல்லாஹும்ம அஇன்னீ அலா ஹமராதில் மவ்தி, வஸகராதில் மவ்த்

(பொருள்: இறைவா! மரணத்தின் வேதனைகளின் பொழுதும் மரணத்தின் ஸகராத் எனும் மயக்கங்களின் பொழுதும் நீ எனக்கு உதவி செய்வாயாக!)

என்று கூறுவார்கள். இதனை நான் பார்த்துள்ளேன். நூல்: திர்மிதி

மரணத்தின் நிலையை எட்டிவிட்டவர்கள் அதிகம் துஆ செய்யவேண்டும். ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நாம் உடல்நலம் விசாரிக்க செல்லவேண்டும். இது நபியவர்களுடைய சுன்னத். அவருக்காக துஆ செய்ய வேண்டும்.

இன்னொரு ஹதீஸில், அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன். ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல்நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல்நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கு சுவனத்தில் பறித்த பழங்கள் கிடைக்கும். நூல்: திர்மிதி

எனவே அன்பு சகோதர சகோதரிகளே!
இறைவன் எவ்வழியில் நோய்நிவாரணம் தேட அனுமதித்திருக்கிறானோ அவ்வழியில் முயன்று ஈருலக வெற்றியை பெறுவோமாக.

தொகுப்பு: உம்மு உமர்

No comments: