Saturday, June 09, 2007

புதிய தமிழகத்தை ஆதரிப்போம்!

வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.

கோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.

பா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

No comments: