Sunday, January 08, 2006

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

ஐதராபாத், ஜன.8-
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை வழங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

3 நாள் மாநாடு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 4-வது மாநாடு, ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டமும் இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுக்கு இடையே, 2 பிரமுகர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கி, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

ஓட்டுரிமை
"வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை 3 வகையாக பிரிக்கலாம்.அவர்களில் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள், தனி ரகம்.அவர்கள் ஒருபோதும் அந்தநாடுகளின் பிரஜையாக முடியாது.எனவே, அவர்கள், நமது நாட்டில் ஓட்டுரிமை வேண்டும் என்று கோருவது, நியாயமானது.இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.விரைவில் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு இந்தியர்களுக்காக இன்சூரன்சு திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.தங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக பணம் அனுப்ப வசதியாக யு.டி.ஐ. வங்கியுடன் இணைந்து புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனி பல்கலைக்கழகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மற்றொரு நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வசதிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.வெளிநாட்டு இந்தியர்கள் இடையே கல்வி-கலாசார பரிமாற்றத்துக்காக தனி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் மூலம் கடந்த 2001-ம் ஆண்டில் 1,300 கோடி டாலர் அளவுக்கு நமது நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு இது, 2 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து உள்ளது."

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசுகிறார்.


நன்றி: தினத்தந்தி (8-01-2006)

No comments: