Thursday, January 08, 2009

சென்னை சங்கமம் 2009


சென்னை: அனைவரையும் ஈர்த்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடைபெற முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக கிராமிய கலைகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்,குறிப்பாக சென்னை நகர மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மையம் அமைப்பும், தமிழக சுற்றுலா துறையும் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சங்கமம் என்ற கலை நிகழ்ச்சியை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, ஜனவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், அரங்கங்கள், பூங்காக்களில் நடைபெறவுள்ளது.

முதல்வர் கருணாநிதி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக விளம்பரதாரர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. நிதி நெருக்கடியும் இருந்தது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலையை கருத்தில் கொண்டு, இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் சொந்தப் பணத்தில் இருந்து, ரூ.1 கோடியை அவர் கொடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் இதில் இருந்து கிடைக்கும் வருவாய், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை யாரையும் நம்பி நடத்தாமல், சுதந்திரமாக, எந்த தடையுமின்றி நடைபெற நிதி பிரச்சினை காரணமாக இருக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அதேபோல இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்து ஒரு நிரந்தர நிதி உருவாக்கப்படும்.

சங்ககால உணவுகள்:
இந்த ஆண்டில், சென்னை சங்கமம் மேலும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஜனவரி 10ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரிகள் அம்பிகா சோனி, வயலார் ரவி போன்றோர் வருகிறார்கள். இந்த ஆண்டில் உணவுத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.

இதில், சங்ககாலத்தில் சாப்பிடப்பட்ட கம்பு, சோளம் உள்ளிட்ட உணவு வகைகளும் கிடைக்கும். நெல்லை இருட்டுக் கடை அல்வா, கள்ளிடைக்குறிச்சி முறுக்கு போன்ற பல்வேறு பிரபல உணவு வகைகளும் கிடைக்கும்.

வரும் 13-ந் தேதி, தி.நகர் நைட் என்ற பெயரில் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலை நெடுகிலும் இரவு முழுவதும் கலை விழா நடக்கும். இதற்கு சவுத் உஸ்மான் சாலை வியாபாரிகள் உதவியுள்ளனர். அங்கு பழ விழாவும் முன்னதாக நடைபெறும்.

கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், சென்னை சங்கமம் நடைபெறும் அனைத்து நாள்களிலும் வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் 1,400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில், தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றார் கனிமொழி.

செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் மையம் அமைப்பாளர் ஜகத் கஸ்பார், வரலாற்றறிஞர் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கவிதை பாட வாருங்கள்....:
இதற்கிடையே நிகழ்ச்சி அமைப்பாளர் கவிஞர் யுகபாரதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில்:

இளங்கவிஞர்களை கண்டெடுத்து ஊக்கப்படுத்தும் வகையில் கவிதை பாட வாருங்கள் என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டியை கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.

இதற்கு, கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 13.1.2009 ஆகும். கவிதைகளை, தமிழ்சங்கமம், 31, பொன்னி, குமாரசாமி ராஜாசாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இதில் சிறந்த கவிதைகளை, கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் பேராசிரியர்கள் அடங்கிய குழு தெரிவு செய்யும். அந்த கவிதைகளை தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மாணவர்கள் வாசிக்க, முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு-ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு-ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இத்துடன் மேலும் 10 கவிஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: