வெளிநாடு வாழ் இந்தியர்கள் 50 லட்சம் பேருக்கு வாக்குரிமை
மத்திய அரசு ஆலோசனை
சென்னை, ஜன. 10-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: எந்த நாட்டுக்குச் சென்றாலும் நமது கலாசாரம், பண்பாட்டை மறக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர், தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு நமது கலாசாரத்தை இழந்து விடுமோ என்ற பயத்தில், தாய்நாடு திரும்புகின்றனர். இந்திய கலாசாரத்தை மேம்படுத்த திரைப்படங்கள், விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றை மத்திய கலாசார மேம்பாட்டு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாறு கனிமொழி பேசினார். மத்திய அமைச்சர் வயலார் ரவி, நிருபர்களிடம் கூறியதாவது: மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1,500 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக மலேசியாவில் இருந்து 270 பேரும், அமெரிக்காவில் இருந்து 127 பேரும் பங்கேற்றனர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் பிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் 5 தலைமுறைகளாக வெளிநாட்டிலேயே வாழும் இந்தியர்களுக்கும், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள 50 லட்சம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்து, இந்தியாவில் வாக்குச் சீட்டில் பெயர் இருந்தால் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் தபால் மூலமாக வாக்களிக்க முடியாது. வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்ல ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் நிலை இந்தியாவில் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வரும் பிப்ரவரியில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தவறு செய்யும் ஏஜென்ட்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.
நன்றி: தமிழ் முரசு நாளிதழ் 10 ஜனவரி 2009
No comments:
Post a Comment