Monday, January 23, 2006

மினா விபத்து - "உணர்வு" இதழின் அறியாமை

"மினாவில் நெரிசலைத் தவிர்க்கவும் உயிர்ப்பலியை தடுக்கவும் என்ன வழி?" என்ற தலைப்பில் 20-01-2006 தேதியிட்ட உணர்வு வாரஇதழில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் உண்மைக்கு புறம்பான செய்திகள் இடம்பெற்றிருப்பதால் அதனைச் சுட்டிக்காட்டும் சிறு விமர்சன கட்டுரையே இது.

பொதுவாக ஹாஜிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரழக்கக்கூடாது என்பதற்காகத்தான் பல வசதிகளையும் ஏற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் செய்துள்ளது. அதுதவிர, முஸ்தலிஃபாவில் இரவு தங்கும்போது "நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம்" என நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். எந்த ஒரு ஆத்மாவையும் தன் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை என்பதை கருத்தில்கொண்டு, பிறை 10-ல் கூட்ட நெரிசல் இருந்தால் சூரியன் மறைந்த பிறகு பிற்படுத்தி ஜமராத்தில் கல்லெரியலாம் என்றும், பிறை 11, 12, 13 ஆகிய தினங்களில் கூட்ட நெரிசல் இருந்தால் காலை நேரத்திலேயே ஜமராத்தில் கல்லெரியலாம் என்றும் சவுதி அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதுதவிர விபத்திற்கு காரணம் யார்? என்பதைப்பற்றிய விளக்கமான கட்டுரை இணையத்தில் வெளிவந்துவிட்டதால் அதனைப்பற்றி இங்கு விரிவாக பேச விரும்பவில்லை.

தவறை தட்டிக்கேட்பது பத்திரிக்கையாளரின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அதை சுட்டிக்காட்டுவதை வரவேற்கும் அதே வேளையில் உண்மைக்கு மாற்றமாக தவறான விபரங்களை கூறுவதும் அறியாமையை எழுத்தில் வார்ப்பதும் பத்திரிக்கை தர்மம் அல்ல என்பதை எனது விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

புனித ஹஜ் கடமையின் போது மினாவில் உள்ள ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் உஸ்தா ஆகிய மூன்று இடங்களில் சைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றனர்.

மினாவில் ஜமராத்திற்கு கல்லெறியும் நிகழ்ச்சியை முஸ்லிம்களில் சிலரும் முஸ்லிமல்லாதவர்களில் பலரும் "ஷைத்தானின் மீது கல்லெறியும் நிகழ்ச்சி" என்பதாக தவறாக விளங்கியுள்ளார்கள். அத்தவறுக்கு துணைபோவதுபோல் "சைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சி நடைபெறும்" என்பதாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

"புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சுமார் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றனர்" என்று சொல்ல வேண்டிய இடத்தில், "ஜமராத்தில் கல்லெறியும் நிகழ்ச்சியில் 25 லட்சம் மக்கள் வருடந்தோறும் கலந்துக்கொள்கிறார்கள்" என்பதாக கூறி கட்டுரையின் முதல் பாராவிலேயே தடுமாறி உள்ளார்.

கல்லெறியச் செல்வதற்கு ஒரு வழியை அமைத்து, வெளியேறுவதற்கு வேறொரு வழியை அமைத்திருந்தால் இந்த நெரிசலும் ஏற்படாது. உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இந்த வசதியை சவுதி அரசு இதுவரை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை என்று தெரியவில்லை.

விபத்து நடந்த கல்லெறியச் செல்லும் இடம் ஒரு வழிப்பாதைதான் என்பதை கட்டுரையாளர் ஏனோ தெரிந்திருக்கவில்லை என்று நமக்கு தெரியவில்லை.


கட்டுரை எழுதியவருக்கு மினாவில் செய்யப்படும் ஏற்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது என்பதை அவரின் எழுத்திலிருந்தே புரிகிறது. இஸ்லாம்/முஸ்லிம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் பொய்யை கலந்து கற்பனை குதிரையை தட்டிவிடும் "தினமலர்" இதழை விமர்சிக்கும் "உணர்வு" வாரஇதழ், உலகமே உற்று நோக்கும் ஒரு இடத்தில் நடந்ததைப்பற்றி எழுதும்போது கவனமாக இருக்க வேண்டாமா?

25 லட்சம் மக்கள் வந்திருக்கும் போது அவர்களை சவுதி காவல் துறையும், ராணுவமும் தக்க பாதுகப்பு தந்து, வரிசையாக செல்ல வைத்திருக்க வேண்டும்.

விஷயம் தெரிந்தவரிடம் கேட்டால் பாதுகாப்பு ஏற்பாடு செய்தார்களா இல்லையா என்பதை கூறுவார்கள். இதற்காக மட்டுமே சவுதி காவல் துறையும், ராணுவமும் உட்பட 60,000 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

25 லட்சம் பேர் வரிசையாக சென்று கல்லெறிந்தால் அனைவரும் கல்லெறிந்து முடிக்கப் பல மாதங்கள் கூட ஆகலாம். ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் பேர் என்று வரிசைப்படுத்தினாலும் குறைந்தது 100 நாட்கள் ஆகும்.

நாடு வாரியாக ஹாஜிகளை பிரித்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்தில் அந்தந்த நாட்டினர் இந்த கிரியை மேற்கொள்ளுமாறு செய்திருக்கலாம். அவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவதால் ஏற்படும் நெரிசலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம். இனியாவது சவூதி அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுரையாளர் அடித்த மெகா ஜோக் இதுதான். மற்றவர்களை "மனோ இச்சை, லூசு, பைத்தியம், மெண்டல்" என (இவர்களின் டான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்) திட்டி தீர்க்கும் இவர்கள், தங்களை திரும்பிப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?

பிறை 10-ல் ஹாஜிகள் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவை வந்தடைய பல மணி நேரங்கள் பிடிக்கும். அதுவல்லாமல் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வரும் ஹாஜிகள் அவரவர்களின் ஏஜெண்ட் பதிவு செய்த வெவ்வேறு முதவ்விஃபில் தங்கியுள்ளனர். ஆக ஒவ்வொரு முதவ்விஃப் டெண்ட் தொகுப்பிலும் பல்வேறு நாட்டினர் தங்கியுள்ளனர். ஜமராத்தில் கல்லெறியும் இடம் மக்காவிலிருந்து மினாவிற்கு நுழையும் ஆரம்ப பகுதியில் இருக்கிறது. மினாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை செல்ல தோராயமாக முக்கால்மணிநேரம் ஆகும். மினாவில் டெண்ட் போட ஏற்பட்ட இடப்பற்றாக்குறையினால், முஸ்தலிஃபாவிலும் டெண்டுகளை நிறுவியுள்ளனர். இதுவல்லாமல் முறையாக அனுமதி பெறாமல் வந்தவர்கள் தங்கியிருப்பது மினாவின் தெருக்களில்தான். இவற்றை சிந்தனையில் போட்டு கட்டுரையாளரின் புதிய ஆலோசனையை நோக்கினால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

ஷைத்தானின் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஒரு அடையாள நிகழ்ச்சி தான். இயலாத சூழ்நிலை ஏற்படும் போது தூரத்தில் இருந்து ஒரு சிறு கல்லை எடுத்துப் போட்டு, கடமையை நிறைவேற்றி முடித்து விடலாம்.

"ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தால் போதும்", "அரைக்கால் டிரவ்ஷரில் தொடை தெரிய தொழலாம்" போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஃபத்வாக்களின் வரிசையில் புதிய ஒன்று சேர்ந்துக்கொண்டுள்ளதை நினைத்து ஆச்சர்யப் படவேண்டியதில்லை. எனவே, நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்

நெரிசலில் சிக்கி இறப்பவர்கள் மற்றும் காயமடைபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளாகவே இருக்கின்றனர்.

தற்போது இறந்தவர்களில் பலர் வாலிபர்களாகும். இவர்களில் பாதுகாப்புக்கு நின்றவர்களும் அடங்குவர். எனவே கட்டுரையாளர் மினா மற்றும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றை அறியாதது மட்டுமில்லாமல் விபத்தின் விபரங்களைப் படித்துக்கூட தெரிந்துக்கொள்ளாமல் பொதுவான கூட்ட நெரிசலை போன்று நினைத்து கற்பனை குதிரையை தட்டிவிட்டு கட்டுரையை எழுதியுள்ளார் என்பது விளங்குகிறது.

இதை முஸ்லிம் அல்லாதவர்கள் எழுதியிருந்தால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றும் செய்திகளில் ஆயிரத்தில் இதுவும் ஒன்று என்று இருந்துவிடலாம். ஆனால் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் சொல்வதாக கூறிக்கொள்ளும் இவர்கள் வெளியிடுவது, உணர்வுள்ள பத்திரிக்கைக்கு உகந்ததல்ல என்பதை உணர்வார்களா?

2 comments:

அபூ சுமையா said...

இன்ஷா அல்லாஹ் உணர்வுக்கு "உணர்வு" வரும் என எதிர் பார்ப்போம்.

இப்னு ஹம்துன் said...

'உணர்வு' கட்டுரையின் குறைபாடுகளை ஒரு சகோதர முஸ்லிம் என்கிற முறையில் ஆசிரியருக்கு தெரியப்படுத்திவிடுங்கள்