Saturday, August 12, 2006

சன் டீவிக்கு நன்றி!

சன் டீவி செய்திகள்

ராணுவ பின்புலமற்ற லெபனானுக்குள் எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த சில இஸ்ரேலின் படை வீரர்களை, ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்த நாள் முதற்கொண்டு, அமெரிக்காவின் ஆசியுடன் இஸ்ரேல் அநியாயமாக போர் தொடுத்து லெபனானைச் சுடுகாடாக மாற்றி வருவதும், அதனை எதிர்த்து இஸ்ரேலிய படையினரிடமிருந்து தனது சொந்த மண்ணைக் காக்க ஹிஸ்புல்லாஹ் போராளிகள் தீவிரமாகப் போராடி வருவதும் யாவரும் அறிந்ததே!

பாலஸ்தீனப் போராளிகளாகட்டும், அல்லது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினராகட்டும், இவர்களைத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றே சன் டிவி செய்திகளில் வழக்கமாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன மக்களின் காதுகளுக்கு சமீப நாட்களாக சன் செய்திகளில் தனது "தீவிர"த்தை நீக்கி "ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர்" என்றே குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் பாரபட்சமற்ற இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் முஸ்லிம் கூட்டுவலைப்பதிவின் மூலம் சன் டிவி நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(நன்றி தெரிவித்தல் என்பது அழகிய இஸ்லாமிய நற்பண்பாக இருப்பதனால், சன் டீவி நிர்வாகத்தினருக்கு நன்றி கூற விரும்பும் சக சகோதரர்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்)

4 comments:

அருளடியான் said...

சன் டிவிக்கு மட்டுமல்ல. ஊடகத் துறையில் நடுநிலை பேணி பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் அனைவருக்கும் நமது ஆதரவு உண்டு. இதில் முஸ்லிமா? அல்லது முஸ்லிமல்லாதவரா? என்ற நிலைப்பாடு இனவாதமாகப் போய்விடும். நடுநிலையா? ஒருசார்பா என்ற நிலைப்பாடே சரி. இன்று இஸ்ரேல் செய்யும் முஸ்லிம்களுக்கு எதிரான போரை நாளை ஒரு முஸ்லிம் நாடு,கிறிஸ்துவர்களுக்கு எதிராகவோ, அல்லது ஷியா முஸ்லிம்களுக்கு எதிராகவோ தொடுத்தாலும் நாம் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும். இணையத் தளங்களில் இந்துத் தீவிரவாதிகள் எழுதும் கட்டுரைகளில், சன்னி முஸ்லிம்கள் அனைவரும், ஷியா முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைக் கண்டிக்க வில்லை என்று எழுதுகிறார்கள். ஆனால், அநீதியான முறையில் ஷியா முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்கள் படுகொலை செய்யப்படுவதையும் நாம் கண்டிக்க வேண்டும். அதுவே நபிவழி என நான் நினைக்கிறேன். ஈராக், ஆப்கன் ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்கப் போரை உலக நாடுகள் கண்டித்த அளவு கூட இஸ்ரேலின் லெபனான் இனப்படுகொலைப் போரைக் கண்டிக்காதது வியப்பு அளிக்கிறது. ஒருபுறம், அநீதியான முறையில் போரிடும் முஸ்லிம் போராளிகள். மறுபுறம், அமெரிக்காவுக்கு அடிபணியும் முஸ்லிம் நாடுகள். இந்த இரண்டிலும் இஸ்லாம் இல்லை. நாம் இவ்விரண்டையுமே ஆதரிக்க முடியாது. இறைவனிடம் உதவி தேடுவோம். இன்றில்லாவிடிலும் நாளை இறை உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

சுல்தான் said...

அருளடியான் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். தவறு எங்கிருப்பினும் தவறாமல், நீதி பிறழாமல் சுட்டிக்காட்ட வேண்டும்.
"ஒருவர் மீதுள்ள வெறுப்பு அவருக்கெதிராக அநியாயம் செய்ய உம்மைத் தூண்ட வேண்டாம்" என்பது நபி மொழி.

Abu Umar said...

சகோதரர்களின் (மேற்கண்ட பதிவு மற்றும் மறுமொழிகளின்) எண்ணங்களை நானும் வழிமொழிகிறேன்.

அபூ சுமையா said...

நல்ல மாற்றம். இம்மாற்றம் அவர்கள் அறிந்து நடந்தது எனில் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே. மட்டுமல்ல முஸ்லிம் சமூகம் இதற்காக நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரம் சமூகத்திற்கு எதிராக இவர்கள் கல்லெறியும் பொழுதும் இதே வேகம் இருக்க வேண்டும் என்பதே என் அவா.

இதே சன் தொலைக்காட்சி லபனான் மக்களை இஸ்ரேல் கொன்றொழித்துக் கொண்டிருந்த வேளையில் மிக முக்கியமான ஒரு செய்தியை கொடுத்தது. அப்பொழுது அதனை எத்தனை பேர் கண்டு கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதாகும்.

//தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை "தீவிரவாதிகள்" என்ற அடைமொழியுடன் முத்திரைக் குத்துவதற்கு பேருதவியாக இருந்த சன் குழுமத்தைச் சார்ந்த சன் நியூஸ் இதே நாள் இதே நேரம் இஸ்ரேலிய தாக்குதலைக் குறித்து கொடுத்த செய்தி மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்தியை எவ்வித ஆராய்ச்சியோ, நடுநிலை சிந்தனையோ இன்றி அப்படியே பிரதிபலிக்கும் கேடுகெட்ட செயலுக்கு தக்க சான்றாகும்.

ஆம். தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியில் (20.07.2006 இரவு 8 மணி செய்தியில்) இஸ்ரேலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியைக் குறித்த செய்தியில் குறிப்பிடும் போது, "ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலில் பதுங்கு குழியில் நடைபெறும் திருமணம்" என்று குறிப்பிட்டனர். மட்டுமல்ல அதனை முழுமையாக காண்பித்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் இஸ்ரேலியருக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

இது போன்ற ஓர் வஞ்சகமும் துவேஷமும் ஒருங்கே நிறைந்த ஒரு மனிதாபிமானமற்ற செய்தியை எங்கும் காண இயலாது.

இவர்கள் இச்செய்தியினை வாசித்த அதே நாளில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான விமானத்தாக்குதலுக்கு குழந்தை, பெண்கள் உட்பட 263 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் லபனானில் கொல்லப்பட்டிருந்தனர். மட்டுமல்லாமல் பெய்ருட் உள்பட பல நகரங்களின் மேல் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையினால் 1 இலட்சத்திற்கும் மேபட்ட பொதுமக்கள் இருப்பிடம் இன்றி வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

ஒரு பக்கம் லெபனானில் சரியான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை முதலிய எவ்வித அடிப்படை உதவியும் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் கிடக்கும் போது மறுபக்கத்தில் இஸ்ரேலில் ஒரு திருமணம் எல்லா பாதுகாப்புடன் உற்சாகமாக நடந்தேறியது தான் இவர்களுக்கு மிகுந்த பரிதாபத்திற்குரிய செய்தியாக தெரிந்திருக்கிறது.//

சமூகத்திற்கெதிராக வேண்டப்பட்டவர்கள் கல்லெறியும் பொழுது அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதும், எப்பொழுதாவது அவர்களின் கடைக்கண் பார்வை சமூகத்தின் மீது விழும் பொழுது "கருணா" சக்ரவர்த்தி என சாமரம் வீச முன் வருவதும் சரியான பண்பா என்று சமூகம் சிந்திக்க வேண்டும்.

தவறை அதே நேரத்தில் கடிவதும் சரியை தகுந்த நேரத்தில் பாராட்டுவதும் மட்டுமே சிறந்த பண்பாகும்.

எப்படியோ நல்லதொரு மாற்றத்தை "கடைக்கண்ணில்" காட்டியிருக்கும் சன் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.