Wednesday, October 04, 2006

பிலால் (ரழி)

பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
நூல் அறிமுகம்

நூல்: பிலால் (ரழி) - ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு
ஆசிரியர்: ஹெச்.ஏ.எல். க்ரெய்க் (உமர் முக்தார், தி மெஸேஜ் படங்களின் திரைக்கதை ஆசிரியர்)
தமிழாக்கம்: அல் அஸுமத்
வெளியீடு: மெல்லினம்
முகவரி: 9 மாதா கோவில் தெரு, கே. புதூர், மதுரை - 625 007
தொலைப்பேசி: 0452- 256 9930 மின் அஞ்சல்: mellinambooks@rediffmail.com
பக்கங்கள்:132 விலை: ரூ. 50

முஹமது நபியின் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப் படுகின்றனர். முஹமது நபியின் துணைவியரையும், நான்கு கலீஃபாக்களையும் அடுத்து முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப் படும் நபித்தோழர் பிலால் (ரழி) அவர்களே. இந்நூல், பிலால் (ரழி) அவர்களே தன் வரலாற்றை கூறும் விதமாக எழுதப் பட்டுள்ளது. ஹதீஸ்களின் சான்றுடன் எழுதப் பட்டுள்ள இந்நூல் மிகச்சிறந்த இலக்கியத் தரத்துடன் உள்ளது. அல் அஸுமத் கலையழகுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிலால் (ரழி) அவர்கள் உமையாவிடம் அடிமையாக இருந்த போது பட்ட சித்திரவதைகளுடன் தொடங்கும் நூல், அவர்கள் முதல் தொழுகை அழைப்பாளராய் நியமிக்கப்படும் வரையுள்ள அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நூல் முஹமது நபியின் வாழ்க்கை வரலாறையும் சுருக்கமாகச் சொல்கிறது. முஹமது நபி சந்தித்த போர்க்களங்களும் சற்று விரிவாகவே காட்டப்படுகின்றன.


ஆசிரியர் குறிப்பு:

ஹெச்.ஏ. எல். க்ரெய்க் 1921 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். பத்திரிக்கை ஆசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக விமர்சகராகவும் விளங்கினார். 1968 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள ரோமுக்குச் சென்றார். அங்கு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியரானார். இவருடைய ஆரம்பகால படங்கள் 'டினோ டி லாரன்ஸ்' ஸால் தயாரிக்கப் பட்டன. அவை சர்வதேசத் தரத்தைப் பெற்றிருந்தன. 'வாட்டர்லூ' என்னும் போர்ப் படத்திற்கும், 'ஆன்சியோ ஃப்ரௌலின் டொக்டர்' ஆகிய வரலாற்றுப் படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். முஸ்தஃபா அக்காத்தின் புகழ் பெற்ற படங்களான 'உமர் முக்தார் (Lion of the Desert), தி மெசேஜ்
ஆகியவற்றுக்கும் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்த க்ரெய்க் 1978 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் ரோமில் காலமானார்.

No comments: