சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. மும்பை பள்ளிவாசல் ஒன்றில் தராவீஹ் தொழுகை தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆவதற்கு முன் காவல்துறை தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தது என்ற தகவல் அதில் இருந்தது.
இந்த பிரச்னை நமக்கு ஏற்கனவே பழகிப்போன 8 Vs 20 ஆகத்தான் இருக்கும் என நினைத்து அந்த மின்னஞ்சலை படித்தபோதுதான் விபரம் புரிந்தது, இது 20க்குள்ளேயே 10-10 பிரச்னை என்று. குறிப்பிட்ட அந்த பள்ளிவாசலில் பரெல்வி, தேவ்பந்தி என இரு குழுக்களை சேர்ந்த முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை தங்கள் குழுவைச் சேர்ந்த மவுலானாதான் நடத்த வேண்டும் என வற்புறுத்தியதால் சண்டை மூண்டது. 'ஒவ்வொரு மவுலானாவும் 10, 10 ரக்அத்கள் தொழவைக்கட்டும்' என்ற தேவ்பந்திகளின் சமரச திட்டத்தை பரெல்விகள் ஏற்கவில்லை. கலவரம் மூளக்கூடிய சூழலில் காவல்துறை வரவழைக்கப் பட்டு, ஒரே பள்ளியில் இரு குழுக்களும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தொழுது கொள்வது என்ற சமாதானத் திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.
ஒரே பள்ளியில் தனித்தனியாக தொழுவது என்ற ஏற்பாட்டின் மூலம் அந்த இரு குழுக்களும் சமாதானம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்த தகவலை அறிந்த என்னையும் உங்களையும் போன்ற சாதாரண முஸ்லிம்கள் சமாதானம் அடைந்திருப்பார்களா? என்றால் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தில் ஒரே இறைவன், ஒரே தலைவர், ஒரே வேதம், ஒரே கிப்லா. ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர் தங்கள் ஒரே இறைவனை ஒரே ஜமாஅத்தாக தொழும் விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறது. ஏன் இந்த அவல நிலை?
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், "இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்" (3:103).
மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:"(பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்" (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).
இஸ்லாம் போதித்த ஒற்றுமை, சகோதரத்துவத்தை எல்லாம் நாம் மறந்து விட்டோம். நமது மவுலானா தொழுகை நடத்த முடியவில்லை என்றால் அதற்காக நம் சமுதாயத்தை இரு பிரிவாக பிரிக்கவும் நாம் தயாராகி விட்டோம். அதற்காக மாற்று மதத்தினரின் உதவியை நாடவும் நாம் தயங்க மாட்டோம். சகோதரர்களே, சிந்தியுங்கள்!
பெருமானார் (ஸல்) அவர்கள் லைலத்துல்கத்ர் இரவைப் பற்றி அறிவிப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள், "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான்" அதாவது, இந்தச் சண்டையின் காரணமாக லைலத்துல்கத்ர் பற்றிய அறிவிப்பை நபியவர்கள் மறக்கடிக்கப் பட்டார்கள்.
ஸஹீஹ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸை நாம் அறிவோம். ஒவ்வொரு வருட ரமளானிலும் நம் மார்க்க அறிஞர்கள் இதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கக் கூடிய படிப்பினையை நாம் உணர்ந்திருக்கிறோமா? இரு தனிநபர்கள் சண்டையிட்டுக் கொண்டதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அரிய தகவல் கிடைக்காமல் போய்விட்டது. இன்று இதை நாம் மறந்து விட்டு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நாம் மேலும் என்னென்ன பாக்கியங்களை இழந்துக் கொண்டிருக்கிறோமோ, இறைவனே அறிவான்!
சகோதரர்களே, இந்த அவல நிலையை நிவர்த்திக்க நம்மால் இயன்றதெல்லாம் பிரார்த்தனை ஒன்றுதான். புனிதமிக்க இந்த ரமளானில், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் வேளையில், உங்கள் வழக்கமான பிரார்த்தனைகளுடன் தயவு செய்து இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
"இறைவனே! எங்கள் சமுதாயத்தில் ஒற்றுமை மேம்பட அருள் புரிவாயாக! பிரிவினையைத் தூண்டும் ஷைத்தானிய எண்ணங்களை எங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய உதவுவாயாக! ஆமீன்!"
Thursday, October 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment