Sunday, September 02, 2007

தாவூத் ஷா இஸ்லாமியப் பெரியாரா?

'இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா' என்ற நூலை டாக்டர் அய்யூப் எழுதி நவமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் தாவூத்ஷாவின் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் எழுதுகிறார். ஓர் அறிஞனின் பணியை மக்கள் ஏற்றுக் கொள்வது இறைவனின் நாட்டம் என்பதை இந்நூலாசிரியர் அறியவில்லை போலும். நான் இந்நூலைப் படித்த வரை இவர் இஸ்லாமியப் பெரியார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளக் இயலவில்லை.

1. தாவூத் ஷா தர்கா வழிபாட்டை விமர்சிக்கிறார். ஆனால் கோயில்களுக்கு நிதியுதவி செய்கிறார். கோயில் நிர்வாகிகள் தரும் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கம்பராமாயணச் சொற்பொழிவு செய்கிறார்.

2. பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் தாவூத்ஷா நெருங்கிய தொடர்புடையவர் என்று நூலாசிரியர் பல இடங்களில் எழுதுகிறார். பெரியாரை அவர் சந்தித்த ஒரு நிகழ்வோ, பெரியாருடன் அவர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மாநாடோ சான்றுடன் எழுதப்படவில்லை.

3. தாவூத்ஷா தன் குடும்பத்தினர் காதணி விழா, சுன்னத் செய்யும் விழா போன்றவற்றை நடத்த அனுமதிக்கிறார். அவற்றில் கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து பத்திரிக்கை விளம்பரம் வெளியிடுகிறார்.

4. இரு காதியானி அறிஞர்களுடன் இவருக்குள்ள தொடர்பு காரணமாக 'காதியானி' என விமர்சிக்கப் படுகிறார். இவரை இலண்டனுக்கு அழைத்துச் செல்பவர் ஒரு காதியானி. இவரது ஓராண்டுக் கால லண்டன் வாழ்க்கையைப் பற்றி இந்நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. இது நூலைப் படிக்கும் நம்க்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறைவனே அறிந்தவன்.

5. தாவூத் ஷா ஆபாச நூல்கள் எழுதுகிறார். தன் பத்திரிக்கைகளில் ஆபாசத் தொடர்கதைகளை எழுதுகிறார்.

குர் ஆனுக்கு தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடுவதையும், ஜும் ஆவில் தமிழில் உரையாற்றுவதையும் அக்கால ஆலிம்கள் எதிர்த்ததையும், அவற்றுக்கு எதிராக தாவூத்ஷா போராடியாதையும் இந்நூலின் வழியாக அறிய முடிகிறது. இப்போது இந்நிலை பெருமளவில் மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுதும் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த மாற்றத்துக்கும் தாவூத்ஷாவே காரணம் என்று நூலாசிரியர் கூறுவதை ஒப்புக் கொள்ளமுடியாது.

No comments: