Monday, November 24, 2008

சட்டக் கல்லூரி வன்முறை - ஞாநியின் கட்டுரை

சட்டக் கல்லூரி வன்முறை பற்றி அச்சில் முழுமையாக வராமற் போன ஞாநியின் ‘ஓ’ பக்கக் கட்டுரை :

மனசாட்சியுடன் ஓர் உரையாடல்
அல்லது
ரத்தம் ஒரே நிறம். ஜாதி ?

* நேரே பலரும் ரகசியமாகப் பேசுகிற விஷயத்துக்கே வந்துவிடுவோம். சென்னை அம்பேத்கர் அரசினர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய வன்முறை தலித் ஜாதியினரின் வெறியைத் தானே காட்டுகிறது ?
அப்படித்தான் அது நுட்பமாக சித்திரிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மாலை நான் சந்தித்த ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் முதல் படித்த வசதியான அரசு ஊழியர் வரை அந்தக் கருத்தை என்னிடம் எதிரொலித்தார்கள். .........பசங்களுக்கு ரொம்ப எடம் குடுத்துட்டோம் என்ற தொனியிலேயே பலரும் தாழ்ந்த குரலில் பேசினார்கள். நம் சமூகத்தில் பல பிரிவினர்களிடமும் அடிமனதில் இன்னும் தலித் விரோத உணர்ச்சி ஆழமாகப் பதிந்திருப்பதை டி.வி. காட்சிகள் உசுப்பி விட்டன. இது மிக மிகக் கவலைக்குரிய நிலை. சட்டக் கல்லூரி சம்பவத்தில் தலித் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அது முழு உண்மையல்ல.

* முழு உண்மை என்ன ?

முழு உண்மை என்பது அன்றைய சம்பவத்துடன் முடிவது அல்ல. அதைத் தாண்டியும் செல்லக் கூடியது. அதை சந்திக்கும் நேர்மை நமக்கு வேண்டும். படிப்படியாகப் பார்ப்போம். அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் ஜாதித் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். அதற்கான சுவரொட்டிகளில் கல்லூரியின் பெயரில் உள்ள அம்பேத்கர் பெயர் வேண்டுமென்றே விடப்படுகிறது. இதனால் தலித் மாணவர்கள் எரிச்சலடைய இரு தரப்புக்கும் இடையில் நடந்த விவாதங்கள் மோதலாகின்றன. வன்முறை தினத்தன்று தேவர் மாணவர்களும் தலித்தல்லாத மாணவர்களும் ஆயுதம் எடுக்கிறார்கள். தலித்துகளும் ஆயுதம் தூக்குகிறார்கள். எண்ணிக்கை பலம் அன்றைய தினம் தலித் மாணவர்கள் பக்கம் இருந்ததால் கத்தியை விட கம்பு வலுவானதாகி, எதிர் தரப்பு மாணவர்கள் கடும் கொடூர தாக்குதலுக்குள்ளானார்கள். எண்ணிக்கை பலம் மாறியிருந்தால், இதே போன்றக் கொடூரத் தாக்குதலை தலித் மாணவர்கள் அனுபவித்திருப்பார்கள். இதுதான் சம்பவத்தின் முழு உண்மை.
* சம்பவத்தைக் கடந்து செல்லும் முழு உண்மை என்ன ?
சம்பவம் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கு பதில் தேடினால் முழு உண்மையை நோக்கிப் போய்விடலாம். 1. தேவர் ஜெயந்தியை ஏன் கல்லூரி மாணவர்கள் கொண்டாட வேண்டும் ? 2. கல்லூரியின் பெயரில் இருக்கும் அம்பேத்கர் பெயரை ஏன் தவிர்க்க வேண்டும் ?
* ஏன் ?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சமூக, அரசியல் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற கொடூரமான பிரிட்டிஷ் காலச் சட்டத்தை ஒழிப்பதிலும் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டிலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரைத் தமிழகத்தில் பரவச் செய்ததிலும் அவருடைய பங்களிப்பு கணிசமானதுதான். ஆனால் அவர், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக சமூகத்தில் இடம் பிடிக்கவில்லை. ஜாதி மோதல்கள் ஏற்படும்போதெல்லாம், அவர் ஒரு சார்பாகவே செயல்பட்டது என்பது வரலாற்றில் தெளிவாக இருக்கிறது. அதனால்தான் முதுகுளத்தூர் கலவரத்தின்போது காமராஜர் அவரைக் கைது செய்ததை, ஜாதி உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான பெரியார் வரவேற்றார். தலித் சமத்துவ எதிர்ப்பாளராகவே தேவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
* அப்படியானால் பொதுவான கொண்டாட்டத்துக்கு உரிய தலைவர் எனபவர் யார் ?
காந்தியிடமிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். காந்தியுடன் அம்பேத்கர், நேதாஜி, பெரியார் மூவருக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. தலித் விடுதலைக்காக காந்தி முன்வைத்த திட்டம் எதுவும் அம்பேத்கருக்கு உடன்பாடானதல்ல. ஆனால் காந்தியை ஒரு போதும் தலித்துகளை வெறுப்பவராகவோ, எதிர்ப்பவராகவோ, தலித்துகள் மீது பகையுணர்ச்சி கொண்டவராகவோ அவரும் தலித்துகளும் கருதியதில்லை. காந்தியை நிராகரித்த தலித்துகளுக்கு சமமாகவும் அதிகமாகவும் காந்தியை ஏற்றுக் கொண்ட தலித்துகள் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட நிலையில் ஒருபோதும் தேவர் இருக்கவில்லை. எனவே அவரது ஜெயந்தியைக் கொண்டாடுவது என்பது எல்லா ஜாதி மாணவர்களுக்குமான பொது அம்சம் அல்ல.
* ஆனால் அம்பேத்கர் சமூகத்தில் எல்லாராலும் கொண்டாடப்படவேண்டியவர் என்கிறீர்களா ?
ஆம். ஏனென்றால் அவர் காந்தியைப் போல, பொதுவான மனித சமத்துவத்தை நாடியவர். புத்தர் அம்பேத்கரைக் கவர்ந்ததற்குக் காரணம் இந்த சமத்துவ வேட்கைதான். தலித்தல்லாதவர்களுக்கு எதிரான விரோத உணர்ச்சியை வளர்த்து அதன் மூலம் இதர ஜாதிகளை ஒடுக்கி, தலித் விடுதலையை அடைய வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை. கல்வி, சுயமரியாதை இரண்டின் மூலமும் தலித் விடுதலையை சாதிக்க அம்பேத்கார் முயற்சித்தார். மேல் ஜாதியினரின் மனசாட்சியுடன் பேச காந்தி முயற்சித்துக் கொண்டிருந்தார். தேவர் இந்த தளங்களில் இயங்கியவர் அல்ல. காந்தியைப் போல பொது மனிதராகக் கொண்டாடப்பட வேண்டிய அம்பேத்கர் பெயரைத் தங்கள் சுவரொட்டியில் ஒரு மாணவர் குழு தவிர்ப்பது என்பதே ஜாதி துவேஷ மனப்பான்மையைக் காட்டுகிறது. அதுவும் அவர் உருவாக்கிய அரசியல் சட்டத்தைப் படித்துத் தேறி அதைக் கொண்டே நாளைக்கு வேலை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் மாணவர்கள் இப்படி நடந்து கொள்வது அருவெறுப்பானது.
* மாணவர் மனங்களில் இப்படிப்பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது?
இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.
* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?
ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவெறுக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்தமற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மன நிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ள துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.
* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?
நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.
* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?
ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிக சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கபடுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது.நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி ‘அந்தஸ்து’க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத் தனமோ இயல்பாக்கப்படுகிறது.
* இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ? அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.
* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?
ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளை செய்கிறார்கள். உதாரணமாக தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒவ்வொரு கட்சிப் பிரமுகரும் போட்டி போட்டுக் கொண்டு செல்வது கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக நடக்கிறது. குறிப்பாக அ.தி.மு.க தேவர்கள் கட்சி என்ற பெயர் எடுத்ததும், தி.மு.க அதை உடைத்து தேவர்கள் ஓட்டைப் பெறப் போட்டி போடுகிறது. வெவ்வேறு ஜாதி சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவை திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்கு தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)
பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* பொறுப்பு தவறியதில் கலையின் பங்கு என்ன ?
இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண்மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.
* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?
அருவெறுக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவதுதான் மிக ஆபத்தானது.
சட்டக் கல்லூரி வன்முறைக் காட்சிகளை டி.வியில் பார்த்துவிட்டு பதறுபவர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். (அல்லது வன்முறை மிகுந்த படங்களைப் பார்க்காத இளம்பெண்கள்.) இளைஞர்களைப் பொறுத்த மட்டில் இந்த வன்முறைக் காட்சிகளை பெரிய சலனம் இல்லாமல், சினிமாவில் பார்த்த வன்முறைக் காட்சிகளோடு ஒப்பிட்டுக் கூட பேசிக் கொண்டிருந்தார்கள்.
* இது பெரிய ஆபத்து இல்லையா ?
ஆம். கத்தி, கம்பு எடுத்துத் தாக்குபவனின் வன்முறையை விட, அதை ரசிப்பவன், அதை ஆதரித்து, அறையில் இருந்துகொன்டு பேசுபவன், தான் ஒருபோதும் ஆயுதமெடுத்துத் தாக்கப் போவதில்லை என்றாலும் அதை சரியென்பவன் ஆகியோரின் வன்முறை இன்னும் ஆபத்தானது. உடல் மீது தாக்குதல் நடத்துவது மட்டும் வன்முறை அல்ல. சக மனிதனின் உள்ளத்தின் மீது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தும் வன்முறை மிகக் கொடியது. ரெட்டை கிளாஸ் டீக்கடையில் கூச்சமின்றி மேல் ஜாதி டம்ளரில் டீ குடிப்பதும் வன்முறைதான். பத்து வயது சிறுவன் டேபிள் துடைக்கும் ஓட்டலில் நம் எட்டு வயது மகளுடன் போய் சாப்பிடுவதும் வன்முறைதான். ஒரு சமூக அநீதியில் நம் ஜாதி, நம் மதம், நம் மொழியினர், நம் அன்புக்குரிய தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்காக வாய் மூடியிருப்பதும் நாம் இழைக்கும் வன்முறைதான்.
* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?
ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங்கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம் என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.
* தொடர்ந்து வன்முறைக் காட்சிகளை சன் டிவியும் ஜெயா டிவியும் ஒளிபரப்பிக் கொண்டே இருப்பது இதழியல் தர்மமா? மேலும் இரு ஜாதி மோதல்களை இது தூண்டாதா?
இந்த ஒளிபரப்புகள், முதல் நாள் மட்டுமே, செய்தி என்ற அடிப்படையில் நியாயமானவை. கலைஞருக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே ஒரு பிரச்சினையும் இல்லையென்றால், இப்போது சன் டிவியும் கலைஞர் டி.வி போல சும்மாதான் இருக்கும். சட்டக் கல்லூரி நிகழ்ச்சியில் கடும் தாக்குதலுக்குள்ளானது தலித் மாணவர்களாக இருந்திருந்தால், ஜெயா டி.வி இந்த அளவுக்குத் திரும்பத் திரும்பக் காட்டிப் பிரசாரம் செய்யாது. இந்த வன்முறைக் காட்சிகளால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் நடுத்தர வகுப்பு மனங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தினசரிகளில் படிக்கும் ஒவ்வொரு வன்முறை பற்றிய செய்திக்குப் பின்னாலும் இதே போன்ற காட்சிகள்தான் இருக்கின்றன. தலித்துகள் மீதான, பெண்கள் மீதான, தொழிலாளர் மீதான, ஏழைகள் மீதான அத்தனை வன்முறைகளும் கோரமானவைதான். அவை ஒவ்வொன்றிலும் அரசியல் நிர்வாகங்கள், காவல் துறை ஆகியோரின் கையாலாகாத்தனம், அலட்சியம், மெத்தனம் , உடந்தை எல்லாம் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இது போலவே நம் மனசாட்சியை உறுத்த வேண்டும்.
* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?
வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற ‘எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி‘ என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்பு திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம் சமத்துவம் ஏற்படமுடியும்.
* கடைசியாக ?
கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள். ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சியாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை
முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல.
-------------------------------------------------------------
வேதனைகளுக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு:
அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக்கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

நன்றி: ஞாநி இணையத் தளம்

No comments: