Tuesday, April 12, 2005

தமிழ் இலக்கணம் கசக்குமா? (பகுதி 1)

பள்ளி பருவத்தில், தமிழ் வாத்தியார் ஒரு வார்த்தையைச் சொல்லி எத்தனை மாத்திரை என்று கேட்டபோது மாத்திரையாய் கசந்த "தமிழ் இலக்கணம்" இப்பொழுது இனிப்பதற்கு காரணம் நானுமொரு இணைய கிறுக்கன் என்பதால்.

அதிகமானோருக்கு பிரச்சினைகள் சந்திப்பிழைகளிலும் ரகர றகர வேறுபாடுகளிலும்தான். படித்ததை எழுதிப்பார்த்தால் நன்றாக மனதில் பதியும் என்பார்கள். அதனால் எழுதிப்பார்க்கிறேன். சிலேட்டில் அல்ல, வலைப்பதிவில்.

நான் மாணவன், நீங்கள் வாத்தியார். தவறு இருந்தால் சொல்லுங்களேன்.

ரகர றகர வேறுபாடுகள்

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு / பாதிப்பங்கு
அறை - வீட்டுப்பகுதி / கன்னத்தில் அடி

ஆர - நிறைய (வயிறார உண்)
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

இரந்தான் - யாசித்தான்
இறந்தான் - செத்தான்

இரை - தீனி / இறைந்துபேசு
இறை - கடவுள் / நீர்இறை

உரை - சொல், பொருள்கூறு
உறை - தலையணை உறை, அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

ஏரி - நீர்நிலை
ஏறி - மேலே போய்

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி, இறைச்சி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம் / வெகுளி

கரை - கடற்கரை
கறை - மாசு

குரை - (நாய் குரைக்கும்)
குறை - குறைபாடு / சுருக்கு

கூரிய - கூர்மையான
கூறிய - சொல்லிய

பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பாரை - கடப்பாரை (Crowbar)
பாறை - கற்பாறை (Rock)

பெரு - பெரிய
பெறு - அடை

பொருப்பு - மலை
பொறுப்பு - உத்தரவாதம்

பொரித்தல் - குஞ்சு பொரித்தல் / வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பொருக்கு - செதிள்
பொறுக்கு - ஒவ்வொன்றாக எடு

மாரி - மழை
மாறி - மாறுதலடைந்து

வருத்தல் - துன்புறுத்தல்
வறுவல் - கிழங்கு வறுவல்

(தொடரலாம்..)

5 comments:

சர்தார் said...

பரபரப்பான செய்திகளினூடே, ரிலாக்ஸ் செய்து அனுபவிக்கும்படியான நல்ல பதிவு.

ரசித்தேன்!

Abu Umar said...


Tamil Grammer Related Links by Google search

இப்னு ஹம்துன். said...

எனக்குத் தேவையான நல்ல பதிவு இது. காரணம், பத்தாவது வரை மொழிப்பாடத்தில் தமிழைப் படிக்கவில்லை. அதனாலோ என்னவோ, தமிழிலக்கணத்தில் மாத்திரை, தேமா, புளிமா வகைகள் எனக்கு வேப்பங்காய். (வேப்பங்காய் நல்லது என்பது எனக்குத் தெரியும்).

அபூ முஹை said...

அபூ உமர், கலக்கிட்டீங்க!

தமிழருவியாய் கொட்டுது!!

Abu Umar said...

அபூ முஹை,
அதெல்லாம் கலக்கவும் இல்லை பிரிக்கவும் இல்லை.
அ.கி. பரந்தாமனார். எம்.ஏ அவர்களின்
"நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" என்ற இலக்கண புத்தகம் படித்துவருகிறேன்.

கிடைக்கும் இடம்:
பாரி நிலையம்
184, பிரகாசம் சாலை
சென்னை - 600 108


நண்பர்களே,
தமிழ் இலக்கணம் கற்றுக்கொள்ள கீழ்கண்ட தளமும் உங்களுக்கு உதவலாம்.
தமிழம்.நெட்

அன்புடன்
அபூ உமர்