Friday, April 15, 2005

புகைத்தடுப்புச் சட்டங்கள்

புகைப்பழக்கம் பரவுவதற்கு எதிரான பன்னாட்டுப் பிரச்சாரம் முனைப்புப் பெறும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

புகைப்பழக்கத்தால் வரும் நோய்களால் உலகில் ஆண்டுக்கு அரைகோடிப்பேர் இறக்கிறார்கள், இந்த எண்ணிக்கை இன்னும் பதினைந்து ஆண்டுகளில் ஒருகோடிவரை உயரலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

அதிலும் குறிப்பாக, இப்படி இறப்பவர்களில் பெரும்பாலானோர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவலை தரத்தக்க விஷயம்.

போன மாதம் புகைப்பழக்கத்துக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

முக்கிய பொதுஇடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பது போன்ற ஏற்கனவே உள்ள பல்வேறு சட்டங்களை இந்த நாடுகள் செயல்படுத்த வேண்டும். மேலும் பீடி, சிகரெட் தயாரிப்பவர்கள் அந்தந்தப் பாக்கெட்டுகள்மீது கடுமையான எச்சரிக்கைகளை அச்சிட வேண்டும்; விளையாட்டுப்போட்டிகள் நடத்த பீடி, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஸ்பான்சர் விளம்பரம் பெறுவதைத் தவிர்க்கவேண்டும் என்பன இந்த உடன்படிக்கையில் உள்ள விஷயங்கள்.

இவை இந்த நிறுவனங்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கும் விஷயங்கள்தான். இந்த உடன்படிக்கையில் இந்தியா, இலங்கை, பிரிட்டன் உள்ளிட்ட 168 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா போன்ற சில நாடுகள் கையெழுத்திட்டாலும் இதனை முழுமையாக ஏற்கவில்லை.

நன்றி: பி.பி.சி, லண்டன்

புகைப்பழக்கத்தை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்துவதற்கு இச்சட்டங்கள் உதவாது. வேண்டுமானால் அதிகரிப்பது குறையலாமே தவிர, இப்பழக்கத்தை மக்களிடமிருந்து அகற்ற முடியாது.

சுற்றுப்புறம் சிகரெட் புகையினால் மாசுபடிந்து மனிதர்களுக்கு தோற்றுவிக்கும் ஆஸ்மா போன்ற நோயினால் குழந்தைகளும் முதியோர்களும் பாதிப்படைவதும் அவஸ்தையுறுவதும் சொல்லி மாளாது.

மிகக்கண்டிப்பான வீட்டிலும் கூட ஒழிந்து மறைந்து மாடி போன்ற இடங்களிலும் பள்ளிகளில் கழிவறைகளிலும் தம் அடிப்பதை எல்லோரும் அறிவோம்.

சிறுக சிறுக நிறுத்தலாம் என்று சொன்ன எத்தயோ பேர் எண்ணிக்கையை கூட்டித்தான் இருக்கிறார்கள். காரணம் "சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது" என்ற கதைதான்.

இப்பழக்கத்தினால் தாமும் மற்றவர்களும் பாதிப்படைவதால், இதற்காக இறைவன் நம்மை தண்டிப்பான் என்ற நம்பிக்கையிருந்தால் ஒழிய இப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட வாய்ப்பில்லை.

நண்பர்களே உங்களின் கருத்து என்ன?

No comments: