Sunday, April 17, 2005

அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம்!

பொது மக்களின் ஞாபக சக்தி மிகவும் குறைவு அதைவிடவும் குறைவு அரசியல் வாதிகளின் ஞாபக சக்தி.

1960களில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு அமேரிக்காவுக்கு அதிர வைக்கும் கோரிக்கை ஒன்றை வைத்தது. அமெரிக்கா 1945ல் ஜப்பான் நகரமான ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசியது. மனித சமுதாய வரலாற்றிலே முதன்முதலாக ஒட்டுமொத்த மனித பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் அடாவடி செயலை முழு உலகமும் கண்டித்தது.

அந்த அணுகுண்டை வீசிய பால் டிபேட்ஸ் என்ற அமெரிக்க படைத்தளபதி, ஒரு நாளும் தான் இச்செயலுக்காக எப்போதும் யாரிடமும் பகிரங்கமாக மன்னிப்பையோ அல்லது வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்த தளபதியை தான் 1960ல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்து புதுதில்லிக்கு அனுப்பப்பட்டார். அணுகுண்டை வீசிய படைதளபதியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்ததை கண்டித்து இந்திய கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்க அரசும் இதற்கு செவிசாய்த்து வாபஸ் பெற்றுக்கொண்டது.

அப்போது யாரும் இந்தியாவின் இக்கோரிக்கையால் இருநாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளில் விரிசல் ஏற்படும் என்றும் வெளியுறவு கொள்கைகளின் சுதந்திரம் பாதிக்கப்பட்டதென்றும் கருதவில்லை.

ஆனால் இப்போது மட்டும் நரேந்திர மோடிக்கு கடவுச்சீட்டு (விஸா) அமெரிக்க அரசு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பி.ஜே.பி கட்சியுடன் மற்ற வாய்கிழிய செக்யுலரிசம் பேசும் கட்சிகளும் சேர்ந்து கொண்டு இந்தியதேசத்தின் மான பிரச்சனையாகவும் தேசத்திற்கு நேர்ந்து இழுக்கு போன்றும் மாயை தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த சர்ச்சைக்குள் பிரதமர் மன்மோகன் சிங் வலிய வந்து பாராளுமன்ற அவையிலே அமெரிக்காவின் மேல் அதிருப்தி என்றும் ஜனாநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சருக்கு விஸா மறுப்பு என்பது வேதனையான விஷயம் என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசு சார்பாக வாஷிங்டனை மறு பரிசிலினை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இச்சர்ச்சையில் எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் மௌனமாக இருந்துவிட்டன. கையை கட்டிக்கொண்டு மௌனமாக இவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாஷிங்டன் விஸா வழங்க மறுத்ததை செக்யுலரிசம் விரும்பும் அனைவரும் ஆதரிக்கத்தான் வேண்டும். காரணம் இச்சர்ச்சையில, சட்டஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றவாளிகளை தண்டித்தல், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யாவையும் அடங்கியுள்ளது.

இனவெறி தூண்டும் கிரிமினல்களை தன்னாட்டுக்குள் அனுமதிக்காத செயலை எந்த நாடு செய்தாலும் நம்மை போன்ற மனித உரிமை ஆர்வேலர்கள் வரவேற்கத்தான் வேண்டும். ஏன் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர துடிக்கும் அமெரிக்கா செய்திருந்தாலும் சரியே.

வாஷிங்டன் மோடிக்கு விஸா வழங்க மறுத்திருப்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குறுக்கீடு இல்லை. விஸா வழங்கவோ அல்லது மறுக்கவோ எல்லா நாடுகளுக்கும் உள்ள தனிப்பட்ட உரிமை. வழமையாக இந்தியாவிற்கு வருகை தர விரும்புவர்களின் பல்லாயிர கணக்கான விஸா கோரி வரும் விண்ணப்பங்களை நிராகரித்து கொண்டுதானிருக்கிறது. அதையே தான் அமெரிக்காவும் செய்திருக்கிறது. அமெரிக்காவும் கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர்களோடு செயல்படுபவர்களுக்கும் விஸா வழங்கும் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தது.

வேறெப்போதும் தடி எடுக்காத புதுதில்லி இப்போது மட்டும் மோடிக்கு விஸா வழங்க மறுத்ததை அடிப்படை உரிமையை பறித்தல் என்றும் கொள்கை மீறிய செயல் என்றும் வர்ணித்துள்ளது. விஸா என்பது ஒருவரின் அடிப்படை உரிமையன்று. நவினகால ஹிட்லர் என்று உச்ச நீதி மன்றத்தால் வர்ணிக்கப்பட்ட மோடி, அமெரிக்கா செல்வது தன்னுடைய சொந்த வேலையாக ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்களின் சம்மேளனத்தில் கலந்து கொள்ள தானே தவிர கல்வியாளர்களின் மத்தியில் உரை நிகழ்த்த போகவில்லை.

2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றும், ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தும், இனவெறியர்களை சிறுபான்மையினர் மேல் தூண்டி விட்டும கலவரத்தை கட்டுபடுத்த முடியாமல் பாராமுகமாக நின்ற மோடி அரசின் அட்டூழியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது இந்திய நடுநிலையார்களின் உண்மை கண்டறியும் குழு.

இச்சர்ச்சைக்கு பி.ஜே.பி மேல் அமெரிக்கா கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி என்று சொல்வது முட்டாள்தனம். ஏனென்றால் 2002ல் கலவர உச்சியில் குஜராத் பற்றி எரியும் போது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் வாய் திறக்காமல் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தன. நரவேட்டை முடிந்தப்பின் தன்னை ஜனாதிபதி புஷ்ஷிற்கு நிகராக பீற்றிக்கொண்டவர் தான் மோடி.

அமெரிக்கா தனது மறு அறிக்கையிலும் விஸா வழங்க மறுக்கப்பட்ட முடிவு பி.ஜே.பிக்கோ இந்தியாவிற்கோ எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தியது. தன்னுடைய நடவடிக்கையில் யாதொரு இரட்டை அளவுகோல் இல்லையென்றும் '' மதசுதந்திரத்தை நசுக்குதல் மற்றும் கடுமையாக வரம்பு மீறுதல்' என்ற அடிப்படையிலேயே விஸா வழங்க மறுக்கப்பட்டதென்றும் கூறியது.

இந்தியாவின் மனித உரிமை குழுக்களும் அமேரிக்காவின் மனித உரிமை குழுக்களும் சேர்ந்து மோடியின் இன சுத்தகரிப்பு செயலை http://www.coalitionagainstgenocide.org/ என்ற இணையதளத்தில் தோலுரித்துக் காட்டினார்கள். மேலும் பல வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழுக்கள் ' ''மத துவேஷத்திற்கு திருப்பிவிடப்பட்ட அன்னிய செலவாணி ' என்ற செய்தி அறிக்கையும் தயாரித்து வெளியிட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் க்கு வருகின்ற வெளிநாட்டு பணம் குஜராத் கலவரத்திற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டதென்றும் அலசியது. இனசுத்தகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பு அமெரிக்க கமிஷனின் இரண்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை '' ஒருபக்க சார்புடைய நாடு' என்று அறிவித்தது.

வி.ஆர்.கிருஷ்ணா அய்யர் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் பல இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்ட முழு அறிக்கையைத்தான் அமெரிக்காவின் குடியுரிமை வழங்கல் அமைச்சகம் விஸா வழங்க மறுப்பதற்கு ஆதாரமாக காட்டியது.

மனித இனதிற்கு எதிரான செயலில் ஈடுபட்ட மோடியின் மேல் ஐ.நா சபையின் இனசுத்தகரிப்பு தடை சட்டம் பொருந்தும். கீழ்கண்ட செயல்களில் பகுதியாகவோ முழுமையாகவோ ஏதேனும் ஒன்றை செய்தாலும் என்று அச்சட்டம் கூறுகிறது.

1.ஒரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக கொல்வது...
2. கொடூரமாக உடல் ரீதியான காயத்தை அல்லது மனரீதியான காயத்தை ஏற்படுத்துவது...
3.வாழ்வாதரம் இல்லாமல் அவர்களின் மேல் கடுமையான பாதிப்பை உண்டாக்குவது...

இனசுத்தகரிப்பிலிருந்து சமுதாயத்தை காப்பாற்றுவதும் இனபடுகொலைகளில் ஈடுபடுவோர் எத்தகைய வலிமையுடையவர்களாயிருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிப்பதும் அனைவரின் கடமையாகும். மோடிக்கு ஏற்பட்ட அசிங்கமானது எப்போதே கிடைத்திருக்க வேண்டியது. இறைவன் அநியாயக்காரர்களை சிறிது காலம் விட்டு வைப்பான் இறுதியில் இறைவனின் பிடி இறுக்கமானது. உலகில் மோடியை போன்றவர்கள் எங்கிருந்தாலும் இதே நிலைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே.

சலோபோடன் மிலோசிவிக், பினோட், மோடி போன்ற கொடுங்கோலர்கள் தங்களின் செயலுக்காக வேண்டி விசாரணைக்காக உலகநீதி மன்றத்தின் முன்பு குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டியவர்கள். விஸா மறுப்பு இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றது.

1.குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காலந்தாழ்த்தாமல் நீதி வழங்க வேண்டும்.
2.இத்தகைய சாதீய தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக தேசபக்தியையும் தேசீய சுதந்திரத்தையும் விழுங்கிவிடும் அபாயத்திலிருந்து தடுக்க வேண்டும்.

தேசிய சுதந்திரம் என்பது மக்கள் சுதந்திரம். இதில் சுதந்திரம் என்ற பெயரில் இலை தழை வெட்டுவது போல் மக்களை கொய்வதற்கில்லை.சுயலாபத்திற்காக தேசியம் பேசும் அரசியல்வாதிகள் மக்களின் மறதியில் பிழைப்பு நடத்துகின்றார்கள். நவின அரசியலில் தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி அடைகலமாக இருக்கிறது.

2 comments:

Abu Umar said...

நல்லதொரு கட்டுரையை தந்ததற்கு நன்றி.
உங்களைப்போன்ற எழுத்தாளர்கள்தான் இந்த சமுதாயத்துக்கு தேவை. காவி கயவர்களின் நம்பிக்கையெல்லாம் வரலாற்றை எவரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பதுதான்.

வரலாற்றை புரட்டிபோடும் அக்கயவர்களின் முயற்சியின் அளவுக்குகூட நம்மவர்கள் வரலாறுகளை பதிவதில்லை (உலகுக்கு எடுத்துச்சொல்வதில்லை) என்பதுதான் மனதை அழுத்துகிறது.

என்றைக்கு இந்த சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுமோ அன்றுதான் நாம் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

சர்தார் said...

//இனவெறி தூண்டும் கிரிமினல்களை தன்னாட்டுக்குள் அனுமதிக்காத செயலை எந்த நாடு செய்தாலும் நம்மை போன்ற மனித உரிமை ஆர்வேலர்கள் வரவேற்கத்தான் வேண்டும். ஏன் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர துடிக்கும் அமெரிக்கா செய்திருந்தாலும் சரியே.//

மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. விழிப்புணர்வேற்படுத்தும் இது போன்ற படைப்புகளை தொடர்ந்து தாருங்கள்.

-----------------------