Monday, December 12, 2005

லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள்

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள் சிக்கினர்: 7 பேர் உடனடி சஸ்பெண்டு
புதுடெல்லி, டிச. 12-

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு லஞ்ச விவகாரம் சூறாவளி போல இன்று கிளம்பி உள்ளது.
இந்த தடவை லஞ்ச ஊழலில் சிக்கி இருப் பவர்கள் பாரதீயஜனதா, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்களாகும். இவர்களை பிரபல இந்தி செய்திச்சானலான "ஆஜ்தக்'' டி.வி. பொறி வைத்து பிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி உள்ளது.

பாராளுமன்ற எம்.பி.க்கள் இதுவரை காரியம் சாதித்து கொடுக்கத்தான் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வாங்கி வருவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மக்கள் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கும் கூட அவர்கள் கையை நீட்டி பணம் வாங்குகிறார்கள் என்பதை முதன் முதலாக ஆஜ்தக் டி.வி. படம் பிடித்து இன்று வெட்ட வெளிச்சம் ஆக்கி விட்டது.

ஆஜ்தக் டி.வி.யின் சிறப்பு குழு ஒன்று மிகவும் துணிச்சலாக செயல்பட்டு இந்த லஞ்ச பேர்வழிகளை வீடியோவில் படமாக்கியது. எம்.பி.க்களின் இத்தகைய செயல்பாடு, பா.ஜனதா, காங் கிரஸ் தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:-

பாராளுமன்றத்தில் தினமும் முதலில் கேள்வி நேரம் நடைபெறும். ஒரு மணி நேரம் இந்த கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படுவதுண்டு. அப்போது முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளிடம் இருந்து பதில் பெறலாம்.
ஆனால் கேள்வி நேரத்தில் என்ன கேள்விகள், யாரிடம் கேட்கப் போகிறோம் என்பதை எம்.பி.க்கள் தெளிவாக முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட வேண்டும். அந்த கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதில் அளிப்பார்கள்.

அந்த கேள்வி-பதில் தொடர்பாக எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் துணைக் கேள்விகள் கேட்கலாம் அதற்கும் மந்திரி பதில் அளிப்பார்.

உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட கேள்விகளைதான் எழுப்புவார்கள். இப்படி கேள்வி கேட்பதற்கு கூட சில எம்.பி.க்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற வேண்டும் என்ற நோக்கத்துக்காக எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து கேள்வி கேட்க வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இவை தவிர சபையில் சில கேள்விகளை கேட்க தொழில் அதிபர்கள் லஞ்சம் கொடுப்பதுண்டு.
எம்.பி.க்களின் இந்த லஞ்ச வேட்டையை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த ஆஜ்தக் டி.வி. முடிவு செய்தது. கேள்வி கேட்பதற்கு தயவு தாட்சண்யம் இல்லாமல், கூசாமல் லஞ்சம் வாங்கும் அரசியல் வாதிகள் யார், யார் என்று அலசி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 11 எம்.பி.க்கள் லஞ்ச பெருச் சாளிகளாக இருப்பது தெரிய வந்தது.

லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களை கையும் களவுமாக `பொறி' வைத்து பிடிக்க அவர்கள் தீர்மானித்தனர். இதற்காக சிறப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் சாதாரண நபர்கள் போல சென்று குறிப்பிட்ட எம்.பி.க்களை அணுகினார்கள்.

"பாராளுமன்றத்தில் எங்களுக்காக கேள்விகள்கேட்க வேண்டும். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று அப்பாவியாக கேட்டனர். அவர்களை நம்பிய எம்.பி.க்கள் பேரம் பேசினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் தங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தர வேண்டும் என்று எம்.பி.க்கள் கேட்டதாக தெரிகிறது.

இதை டி.வி. நிருபர்கள் குழு ஏற்றுக் கொண்டது.

சமீபத்தில் ஒரு நாள் ஆஜ்தக்குழு குறிப்பிட்ட 11 எம்.பி.க்களை பணத்துடன் சந்தித்தது. என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ரசீதுடன் பணக் கட்டுக்களையும் கொடுத்தனர். எம்.பி.க்களும் அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டனர்.

இதை ஆஜ்தக் குழுவின் ஒரு பிரிவு மிக துணிச்சலாக ரகசியமாக வீடியோவில் படம் பிடித்தது. சில நிமிடங்களே இந்த காட்சிகள் ஓடுகிறது. `ஆஜ்தக்' டி.வி. இன்று இந்த காட்சிகளை ஒளிபரப்பியது.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய காட்சிகளைப் பார்த்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நாடெங்கும் இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் யார், யார்? என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

நீண்ட ஆய்வுக்குப்பிறகு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள் பெயர் விவரம் தெரியவந்தது. இதில் 6 எம்.பி.க்கள் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
3 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவராவார்.

லஞ்சம் வாங்கிய சிக்கி உள்ள 11 எம்.பி.க்களின் பெயர் விவரம் வருமாறு:-
1.அன்னா சாகேப் பாட்டீல் (மராட்டியம்), 2. ஒய்.ஜி. மகாஜன் (மராட்டியம்), 3. பிரதீப் காந்தி (சத்தீஷ்கர்), 4. சுரேஷ் சந்தல் (இமாசல பிரதேசம்), 5. சந்திர பிரதாப்சிங் (மத்திய பிரதேசம்), 6. மேல் சபை எம்.பி. சந்திரபால்சிங் லோதா (ஒரிசா), (இவர்கள் 6 பேரும் பா.ஜனதாவை சேர்ந் தவர்கள்.)

7. ராம்சேவாக் சிங் (குவாலியர்) இவர் காங்கிரஸ் எம்.பி., 8. மனோஜ்குமார் (ஜார்க்கண்டு),(இவர் ராஷ்டீரியா ஜனதா தளம் எம்.பி.).

9. நரேந்திர குமார் குஸ்வகா (உத்தரபிரதேசம்), 10. லால்சந்திரா (உத்திரபிரதேசம்), 11. ராஜாராம் பால் (உத்திர பிரதேசம்) (இவர்கள் மூவரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள்).
பா.ஜனதா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய தகவல் அறிந்ததும் மூத்த தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் 6 பா.ஜனதா எம்.பி.க்களை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். இதை பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று டெல்லியில் நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:-
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும், ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று இப்போது நமது நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கி இருப்பது வெட்கக் கேடானது. இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய பிரச்சினை குறித்து நான் இன்று காலை சபாநாயகர் சோம்நாத் சாட்டரஜியை தொடர்பு கொண்டு பேசி னேன். எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழு விசாரணை நடத்தும். இதை மிக முக்கிய மான பிரச்சினையாக அலசவ உத்தரவிட்டுள்ளேன்.

தேவைப்பட்டால் நாங்கள் இதுபற்றி பாராளுமன்ற உரிமைக்குழுவுக்கும் பரிந்துரை செய்வோம். இன்னும் இது தொடர்பாக எனக்கு முழுமையான விவரம் வரவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் இந்த பிரச்சினைக்கு விடை காணப்படும்.
இவ்வாறு எல்.கே.அத்வானி கூறினார்.

பா.ஜனதாவின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் லஞ்சம் வாங்கிய தன் கட்சி உறுப்பினரை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. காங்கிரஸ் எம்.பி. நீக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் பொது செயலாளர் அம்பிகாசோனி நிருபர்களிடம் தெரிவித்தார்.

4 comments:

அபூ ஸாலிஹா said...

மக்கள் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கும் கூட லஞ்சமா? வெட்கக்கேடு! மீடியாவும் அவ்வப்போது இது போன்ற விஷயங்களை வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் 'தவறு' செய்பவர்களை 'சரியான' முறையில் தண்டிக்காதவரை இனியும் இவை தொடரும் போலத்தான் தெரிகிறது.

இது சம்பந்தமான மற்றொரு பதிவு இங்கே!

Abu Umar said...

அருளடியான்,
உங்கள் பதிவில் Paragraph இடைவெளி அற்று காணப்படுவதை சரிசெய்யக்கூடாதா?

புதிதாக பதிவு இடும்போது, Edit html என்ற இடத்தில் Paste செய்த செய்தியை Paragraph இடைவெளி சரிசெய்து பதிவது நல்லது.

சுட்டுவிரல் said...

இந்த சபையின் நாயகனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்று சபாநாயகர் சொல்லியிருக்கிறார்.

பரிதாபத்துக்குரியவர்கள் வாக்களித்த பொதுமக்கள் தான்

அருளடியான் said...

காங்கிரஸ் தலைவரும் வர்ணாசிரம வெறியருமான பார்ப்பனர் (தீரர்?) சத்தியமூர்த்தி, எம்.பியாக இருந்த போது தொழிலதிபர்களுக்குச் சார்பாக பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க அவர்களிடம் இலஞ்சம் வாங்கியுள்ளார். இதனை அவரே பாரத தேவி என்ற காங்கிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

செய்தி: புரட்சி பெரியார் முழக்கம்