Monday, July 10, 2006

அக்னி 3 ஏவுகணை சோதனை தோல்வி!

3500 கி. மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடியது
வெற்றிகரமாக பறந்த 'அக்னி-3' ஏவுகணை
'திடீர்' கோளாறு காரணமாக நடுக்கடலில் விழுந்தது


பாலசோர், ஜுலை.10-

இந்தியாவின் அதிநவீன 'அக்னி-3' ஏவுகணை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை 'திடீர்' கோளாறு காரணமாக நடுக்கடலில் விழுந்தது.

அக்னி ஏவுகணை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பறந்து சென்று தாக்கக் கூடிய 'அக்னி' ஏவுகணைகளை இந்தியா பறக்க விட்டு வருகிறது. கடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி அக்னி ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சண்டிபூர் கடல் தளத்தில் இருந்து 5 முறை இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

பின்னர் அதே மாவட்டத்தில் தாம்ரா என்ற இடத்தின் அருகில் உள்ள வீலர் தீவுக்கு இந்த ஏவுதளம் மாற்றப்பட்டது. இங்கிருந்து அக்னி-1 மற்றும் அக்னி-2 ஏவுகணைகள் தலா 2 முறை செலுத்தப்பட்டது.

நவீன ஏவுகணை

நேற்று அதி நவீன முறையில், முதன் முதலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'அக்னி-3' ஏவுகணை இந்த தீவில் இருந்து காலை 11 மணி 5 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டே இந்த ஏவுகணை செலுத்தப்பட இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்போது தள்ளி வைக்கப்பட்டு, 2005-ம் ஆண்டுக்கு இந்த ஏவுகணையை செலுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் மீண்டும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஏவுகணை செலுத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன் பிறகுதான் திட்டமிட்டபடி நேற்று இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது. அத்துடன் 1000கிலோ வெடி பொருளை இந்த ஏவுகணை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அணுகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் பறந்து சென்று தாக்கக்கூடியது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

கண் இமைக்கும் நேரத்தில்

இந்த ஏவுகணை பறந்ததை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது "ஏவுகணை செலுத்தப்பட்டதும் பயங்கர சத்தத்துடன் மஞ்சள் புகையை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மேகங்களுக்கு இடையே மறைந்து விட்டது" என்று தெரிவித்தார்.

அதிநவீன கம்ப்ïட்டர் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் சுற்றளவும் கொண்டது ஆகும். வீலர் தீவில் இருந்து செங்குத்தாகப் பாய்ந்து சென்ற இந்த ஏவுகணை மீண்டும் வங்காளவிரிகுடா கடலில் நிகோபார் தீவு அருகே குறிப்பிட்ட இடத்தில் விழும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு இருந்தது. நிகோபார் தீவில் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலில் இருந்தும், ஏவுகணை செலுத்தப்பட்ட இடமான தாம்ரா, சண்டிபூர், அந்தமான் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன 3 ரேடார்கள், 6 எலெக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங், மற்றும் 3 டெலிமெட்ரிக் நிலையங்கள் மூலமும் இந்த ஏவுகணையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திடீர் கோளாறு

இந்த ஏவுகணை 2 பகுதிகளை கொண்டது. ஏவுகணை செலுத்தப்பட்டதும் முதலில் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்தாகச் செல்லும். பின்னர் மீதி தூரத்தை படுக்கை வசத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

திட்டமிட்டபடி முதலில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதும் 12 கி.மீட்டர் தூரம் செங்குத்தாகப் பறந்தது. பின்னர் ஏவுகணையின் 2-வது பகுதி முதல் பகுதியில் இருந்து பிரியவில்லை. திடீரென ஏற்பட்டகோளாறு காரணமாக ஏவுகணை குறிப்பிட்ட இலக்கான நிகோபார் தீவில் சென்று விழாமல் நடுக்கடலிலேயே விழுந்து விட்டது. வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. "ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் இடையிலேயே கடலில் விழுந்து விட்டதற்கான காரணம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ மந்திரி

முன்னதாக ஏவுகணை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி, ராணுவத்தின் அறிவியல் ஆலோசகர் எம்.நடராஜன், 'அக்னி-3' ஏவுகணை திட்ட இயக்குனர் அவினாஷ் சந்திரா, மற்றும் ராணுவத்தளவாடங்கள் ஆராய்ச்சி மைய என்ஜினீயர்கள் 300 பேர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

700 கிலோ மீட்டர் முதல் 800 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய 'அக்னி-1', 2ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக்கூடிய 'அக்னி-2' ஆகிய ஏவுகணைகள் வெற்றிகரமான சோதனைக்குப் பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

ஜனாதிபதி அப்துல்கலாம்

இதுவரை இந்தியா 10முறை அக்னி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

"இந்திய ஏவுகணை வளர்ச்சியின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த வாரம் 3நாள் சுற்று பயணமாக ஒரிசா சென்றிருந்த போது வீலர் தீவுக்கு சென்று ஏவுகணை தளத்தை சுற்றிப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி

No comments: