Wednesday, July 26, 2006

சமுதாய ஒற்றுமைக்கு சரியான வழி

அல்லாஹ் இப்புவியில் வாழும் மக்கள் மீது சொரிந்திருக்கும் அருட்கொடைகள் ஏராளம். மக்கள் நேர்வழி பெற வேதங்களை வழங்கி இறைத் தூதர்கள் மூலம் வாழும் முறைகளை தெளிவாக்கி தன் படைப் பினங்கள் இப்புவியில் வாழும் காலமெல்லாம் வல்லோனின் கட்டளைகளை ஏவல் விலக்கல்களை விளங்கி நடக்க வேண்டும். மறுமையில் நல்லடியார்களின் தங்குமிடமாகிய நிரந்தர சுவனத்தைப் பெற வேண்டும் என்ற உயரிய கருணைக் கொண்டு மனிதனுக்கு வழங்கிய அவகாசமே இப்பூவுலக வாழ்க்கை. ஆனால் மனிதனோ தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி மார்க்கம் கூறும் வழிகாட்டுதல்களை துச்சமென மதித்து தூக்கி எறிந்து விட்டு மயக்கும் மனோஇச்சையால் மதி மயங்கி வசந்தமான வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக்குகிறான். நேர்வழி என்று அறிந்த பின்னரும் வழிகேட்டில் வீழ்ந்து இம்மையில் அவன் ஆற்றும் இக்கருமங்களின் பிரதிபலனை மறுமையில் காணவிருக்கிறோம் என்பதை மறந்து செயல்படுகிறான்.

அல்லாஹ் வழங்கிய அருள்மறையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் தெள்ளத் தெளிவாக இச்சமுதாயத்துக்கு விளக்கப்பட்ட பின்னரும் கூட பிரிவுகளில் பிளவுகளில் குளிர் காயும் நிலையையும் பிற சமுதாய மக்களைப் போல ஜாதி குலம் கோத்திரம் என்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பதுடன் ஒருபிரிவு மற்ற பிரிவை தரம் தாழ்த்தி விமர்சிப்பது சண்டையிட்டுக் கொள்வது வரை நடக்கிறது.

இஸ்லாமியர்களைத் தீவிரவாதி என ஊடகங்கள் சித்தரிக்க முற்பட்டிருக்கும் இவ்வேளையில் பிரிவுகளில் ஊறித் திளைக்கும் இச்சமுதாய சகோதரர்கள் மற்றொரு பிரிவினரை நாகூசாமல் தீவிரவாதிகள் என்றும் புல்லுறுவிகள் என்றும் தூற்றும் நிலையைக் காண்கிறோம். மாற்றார் செய்யும் தப்புப் பிரச்சாரங்களுக்கு முறையே பதில் கூற வேண்டிய மார்க்க முன்னோடிகள் கூட இச்செயலை முன்னின்று நடத்துவதுதான் விந்தையிலும் விந்தை.

இப்படி பிளவு பட்டு பல பிரிவுகளாக அமைப்புகளாக ஆகிவிட்ட இந்த சமுதாயம் இனியாவது மேலும் பிளவுபடாமல் இணைந்து ஒற்றுமையாக வாழுமா? என்ற ஆதங்கம் சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இதற்காக என்ன முயற்சிகள் செய்வது?.. அந்த முயற்சிகளின் அடிப்படை எப்படி இருக்க வேண்டும்?.. என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

போலியான ஒற்றுமை நாடகங்கள்..

பிளவு பட்டுப் போன இச்சமுதாயத்தின் முன்னோடிகளில் சிலர் முஸ்லீம்கள் என்ற பெயரளவில் மட்டும் ஒருங்கிணைந்த ஒரு கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இழந்த உரிமைகளைப் பெறுவோம். இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்போம். இனி ஒருபோதும் எங்கள் மேல் எந்த உரிமை மீறலும் நிகழ அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷங்களை முன்னிறுத்தி போலியான ஒற்றுமை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். மாற்றாரின் அரசு பிற சமுதாய மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தம் வலிமையையும் பெருந்திரளான மக்கள் சக்தியையும் காட்டி முஸ்லீம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விட்டனர் என ஊருக்குக் காட்ட நடத்தப்படும் போலி மாயைதான் ஒற்றுமை நாடகம்.

அரசைப் பணியவைக்க ஆளுவோரை மிரட்டகையில் எடுத்த ஆயதம்தான் இந்தப் போலி ஒற்றுமை நாடகம். இந்நாடகத்தால் போலியான பொய்க்கூட்டத்தை உருவாக்க முடியுமே தவிர உள்ளத்தால் ஒன்று பட்டஉயரிய ஒற்றுமை சார்ந்த ஒரு கூட்டத்தை ஒருக்காலும் உருவாக்கவே முடியாது என்பதை இட ஒதுக்கீடு சம்மந்தமாக முதல்வரைச் சந்திக்கும் முன்பு ஒற்றுமை விரும்பிகள் கூறிய கருத்துக்கள் பின்னர் முதல்வரைச் சந்தித்த பின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகள் தொலைக்காட்சி களில் ஒருவரை ஒருவர் கடிந்து கூறிய காரசாரமான கருத்துக்கள் எந்த அளவுக்கு இந்த போலி ஒற்றுமை நாடகம் மக்கள் மத்தியில் முகத்திரை கிழிந்து போனது என்பதற்குச் சான்றுகள். 12அமைப்புகளின் ஒற்றுமைச் சங்கமம் எங்கள் கூட்டம் என்று தம்பட்டமடித்தோர் ஒருவரையொருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டித் தீர்த்து தமது ஒற்றுமையின் வலிமையை ஊருக்கு உணர்த்தினர். அதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையின் தீபங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறிக்கொண்டு களமிறங்கி அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அநாகரீகமாகச்செயல்பட்டன.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல தேர்தல் முடிவுகள் தோல்வியாய் முடிந்ததை மறைக்க முஸ்லீம்கள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்திகள் அல்ல என்ற உயர்ந்த தத்துவத்தைக் கூறி சமுதாயத்தின் முதுகில் குத்திய முன்னோடிகள்தான் இந்த போலி ஒற்றுமைவாதிகள்.

அரசியல் சாக்கடையில் மூழ்கி அழைப்புப் பணியின் அடிப்படையையே மறந்து அண்ணல் நபிகளாரையும் அம்மாவையும் ஒப்பீடு செய்து தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக்கு மார்க்கத்தை தாரை வார்த்த மகான்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் என்றும் நினைவு கூறக்கூடிய பத்ர் உஹது யுத்தங்கள் இந்த அறிவு ஜீவிகளின் தேர்தல் வெற்றியை உரசிப்பார்க்கும் உறைகல்லானது. ஹுதைபியா உடன்படிக்கை அம்மாவுடனான இவர்களின் உடன்படிக்கைக்கு உதாரணமாகிப் போனது. இப்படி ஏகப்பட்ட சாதனைகள் புரிந்த இவர்கள்தான் இந்த போலி ஒற்றுமையின் அடித்தளங்கள்.

உண்மையிலேயே நமக்குள் ஒற்றுமை மலர வேண்டுமானால் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகள் நீங்க வேண்டும். இன்றைய நிலையில் ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தே அவர் எந்த இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர் செய்யும் வணக்க வழிபாடுகளில் பல்வேறு பிரிவுகள். அவர் செய்யக் கூடிய அமல்கள் (காரியங்கள்) செய்யும் முறையில் பல்வேறு வித்தியாசங்கள். இப்படி முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நம்மிடமே இபாதத் அமல் தோற்றம் என்ற ஒவ்வொரு அம்சத்திலும் நாம் கடைபிடிக்கக் கூடிய நடைமுறைகள் முரணானதாக உள்ளது. நம்முடைய தோற்றங்கள் நம்மை அடையாளங் காண என்பதை விட நாம் சார்ந்துள்ள இயக்கங்களை அறிந்துகொள்ள என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டது. ஒற்றுமைக்கு எதிரான வேறுபாடு இத்துடன் முடியவில்லை. அல்லாஹ்வின் ஆலயங்களுக்குத் தொழச் சென்றால் அங்கு 4 மத்ஹபுகளை பின்பற்றாதோர் இப்பள்ளியில் தொழ அனுமதியில்லை என்ற வாசகம் தாங்கிய அறிவிப்புகள் தொங்கவிடப் பட்டுள்ளன. அவர்கள்தான் தவறிழைத்து விட்டார்கள் மற்றவர்கள் அறிவாளிகள் என்று பார்த்தால் இவர்கள் தங்கள் பங்குக்கு கொம்பு சீவி விடும் பணியைக் குறைவின்றிச் செய்பவர்கள் என நிரூபித்தனர். மத்ஹபுகளைப் பின் பற்றுவோர் தரீக்காவாதிகள் முஷ்ரிக்குகள் இமாம்களைப் பின்பற்றித் தொழாதே என்ற மார்க்கத் தீர்ப்பை மக்களுக்குத் தந்து தனிப்பள்ளி தனி ஜமாஅத் தனி நிர்வாகம் என தங்களுக்கென கூட்டம் சேர்க்கும் சமுதாயப் பிளவுக்கு வழிவகுத்தனர்.

இவை ஜமாஅத் அமைப்புகள் இயக்கங்கள் என்ற பெயரால் சமுதாயத்துக்கு கிடைத்த போலி ஒற்றுமை முத்திரைகள். அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதனைகள் பேரழிவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தைத் தாக்கும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை அகற்றும் பணியில் கூட இவர்களின் இயக்கவெறி சராசரி அரசியல்வாதியை விட ஒரு படி மேலே போய் சகோதர இயக்கங்களை .. .. திருடர்கள் கொள்ளையடித்தவர்கள் என கரிந்து கொட்டி தங்கள் காழ்ப் புணர்ச்சியைத் தீர்த்துக்கொள் வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நாங்கள்தான் தஃவாவுக்கு ஒட்டு மொத்த குத்தகை குர்ஆனும் ஹதீஸூம் எங்களின் அடிப்படை என ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்யும் இவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடிய மார்க்க அறிஞர்களை விட மிக மோசமாக ஒத்த கொள்கையையுடைய குர்ஆனை ஹதீஸைப் பின்பற்றக்கூடிய பிற இயக்கங்களைச் சார்ந்த மார்க்க அறிஞர்களுடன் ஒரே மேடையில் அமர்வதைக் கூட தீண்டாமையாக கருதி வெறுத்து ஒதுக்கக் கூடியவர்கள் தேர்தல்களில் அரசியல் பேசும் போது தரீக்காவினை மத்ஹபுகளை ஆதரிக்கும் அவ்லியா விரும்பிகளை அரவணைக்கும் அற்புதம் எழுத்தில் வடிக்க இயலாது. இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகளுடன்தான் இந்த போலி ஒற்றுமை நாடகம் அரங்கேறுகிறது.

ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகள்

பெயருக்கு முஸ்லீமாக இருந்து கொண்டு ஷரீஅத்தின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறிந்திராத சிலர் சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் நிலைகளை இன்றும் நாம் காணலாம். பெண்ணுக்கு மஹர் வாங்கி கல்யாணம் செய்யாமல் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவிட்டு சீதனங்கள் சீர் செனத்தியில் குறை என்று குற்றம் பெருகி விவாகரத்தில் முடிந்த விஷயங்கள் நீதிமன்றங்களில் ஜீவனாம்சம் கேட்டு அலையும் அவல நிலை ஒருபுறம். பெண்கள் பர்தா அணிவது அவர்களுக்கு வழங்கப் பட்ட ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என நம் சமுதாயப் பெண்களிலேயே சில பெயர்தாங்கிகள் பெண்கள் சுதந்திரத்துக்குப் பாடுபடுகிறோம் என்ற கூப்பாட்டுடன் சமூக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கின்றனர். ஆண்கள் ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணை மணந்து மனைவியாக்கும் போது பெண்கள் ஏன் கணவன் இருக்கும் போது மற்றொரு ஆணை மணந்து கணவனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை அறிவுப் பூர்வமானது எனக் கேட்டு சீர்திருத்தக் கருத்துக்களை விதைக்கும் அறிவுஜீவிப் பெண் மணிகள் மற்றொரு புறம். இப்படி பல்வேறு தரப்பிலும் சமுதாய மக்களிடையே ஒற்றுமைக்கு ஊனமேற் படும் நிலைகள் மார்க்கமறியாத மக்களால் நடந்துகொண்டிருந்தாலும் மார்க்கத்தை நன்கு விளங்கிய மார்க்க அறிஞர்கள் கூட ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பணியில் மும்முரமாகத் திகழ்வதைக் கண்டால் ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? என நம்மை திகைக்கவைக்கிறது. இயக்க வெறியில் இந்த அல்லாஹ்வின் பள்ளி யாருக்குச் சொந்தம்? என போட்டியில் இறங்கி நீதிமன்றத்து கதவினைத் தட்டும் பரிதாபநிலை. பள்ளிக்குப் பூட்டு ஒற்றுமை முயற்சிக்கு வேட்டு என்பது இன்றைய சூழ்நிலை.

ஒற்றுமை குலைவதற்குறிய காரணங்கள்..

ஒற்றுமை என்பதன் எதிர்பதம் வேற்றுமை. ஒற்றுமை குலைந்து வேற்றுமை நிலவ முக்கிய காரணியாகத் திகழ்வது கருத்து வேறுபாடு. இதன் பின்னணிகள் அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் இருந்தாலும் ஒற்றுமை குலைய அடிப்படை கருத்து வேறுபாடுதான். ஓற்றுமை தகர்ந்து வேற்றுமை தலை தூக்க 4 கட்ட நிலைகள் நிகழ்கின்றன. அவையாவன:

1. கருத்து சுதந்திரம்
2. எதிர் கருத்து
3. கருத்து திணிப்பு
4. கருத்துப் புறக்கணிப்பு.

இனி முதல் நிலையிலிருந்து இறுதி கட்டம் வரையிலான பரிணாம வளர்ச்சியை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு மார்க்க அறிஞர் ஆய்வில் ஈடுபட்டு ஒரு பிரச்சினைக்குறிய தீர்வை மக்கள் மன்றத்தில் வைக்கிறார். இத்தீர்வுக்கு அவர் தரப்பில் சில நியாயங்களை அவர் குறிப்பிடுகிறார். அவரின் இக்கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள். மறுப்பவர்களும் இருப்பார்கள். ஆய்வு செய்து கூறியவர் யார் என்று பார்க்காமல் என்ன கருத்தைக் கூறுகிறார்? என்று பார்க்க வேண்டும். அது குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றிப்போனால் ஏற்றுக் கொள்வது. இல்லையேல் சரியான கருத்தை அவருக்குத் தெரிவிப்பது. இம்முடிவுதான் ஒற்றுமை நிலைக்க வழிவகுக் கும். ஆனால் நடப்பு நிலைஎப்படியிருக்கிறது? ஆய்வைச் செய்தவர் அவர் தீர்வைச் சொன்னவுடன் இவர் ஒரு சிறந்த மார்க்க மேதை. இவர் சொன்னால் சரியாக இருக்கும். இவர் கூறும் கருத்துக்களை மறுப்பவர்கள் மார்க்கம் அறியாதவர்கள் என்ற நிலை நிலவுகிறது. இதன் விளைவு அந்த அறிஞரின் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகள் சரியாக இருந்த போதும் புறக்கணிக்கப் படுகின்றன. மேலும் யார் மாற்றுக் கருத்து கூறினாரோ அவர் தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிக்கப் படுகின்றார். அவரும் அவரின் தாயார் மனைவி போன்றோர் பகிரங்கமாக அசிங்கமாக தூற்றப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்ட 4 நிலைகளும் சுருக்கமாகக் குறிப்பிட்ட இந்த விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆக ஆய்வின் தீர்வு சரியா தவறா? ஏன்பதைக் கூட விவாதங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்ற சவடால்கள் பிசுபிசுத்துப் போனது. தரீக்காவாதி அவ்லியா விரும்பிகளை நோக்கி விடும் விவாத அறைகூவலில் ஒரு சிறு அளவைக்கூட விவாத விற்பன்னர்கள் ஜக்காத் விஷயத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி இயக்க வெறியில் உழலும் இவர்கள்தான் போலி ஒற்றுமை நாடகத்தின் தூண்கள். மாற்றுக் கருத்துக் கூறுவோரை கண்ணியமின்றி சல்லிக் காசுக்கு சோரம் போனவர்கள், மார்க்கத்தை விட்டு ஓரம் போனவர்கள், கருத்து வாந்தி யெடுத்தவர்கள் என காரசாரமாக விமர்சித்து தங்களைத் தவ்ஹீதின் தென்றல் என வெளிச்சம் போட்டுக் காட்டும் விளம்பர விரும்பிகள்தான் தம்மை சாந்தி மார்க்கம் இஸ்லாத்தின் சகோதரத்துவம் பேணும் நல்லவர்களாக நடித்துவருகிறார்கள். சொல்லப்படுகிற கருத்துக்கு மாற்று கருத்து வராத எந்தப் பிரச்சினையும் நாம் காண்பது அரிது. கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்றுதான் என்பதற்கு கீழ் காணும் ஆதாரங்கள் சான்றுகளாகும்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் கருத்து வேறுபாடுகள்..

வல்ல அல்லாஹ் இப்பூவுலகில் மனிதர்களைப் படைக்க நாடி மலக்குகளிடம் கூறியபோது மலக்குகள் அக்கருத்துக்கு மாற்றமாக தங்களின் ஆட்சேபனையை எப்படித் தெரிவித்தார்கள் என்பதையும் அல்லாஹ் அவர்களுக்கு கூறிய பதிலையும் அருள் மறை ஒளியில் காண்போம்.

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி ''நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்'' என்று கூறியபோது, அவர்கள் ''(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார் கள்; அ(தற்கு இறை)வன் ''நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்'' எனக் கூறினான்.(2:30).

இவ்வசனத்தில் வல்லோன் அல்லாஹ் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறிய மலக்குகளுக்கு
பதிலாக நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் நிச்சயமாக நன்கறிந்தவன் என இரத்தினச்சுருக்கமாகக் கூறுகிறான். (மலக்குகள் தவறிழைக்க மாட்டார்கள். மனிதர்கள் தவறிழைப்பர். தவ்பாச் செய்வார்கள்.)

அல்லாஹ் ஆதமைப் படைத்து பின்னர் அவருக்குச் சிரம்பணியக் கட்டளையிட்ட போது அங்கிருந்த இப்லீஸ் சிரம்பணிய மறுத்ததையும் அவன் ஏன் மறுத்தான் என்பதையும் பார்ப்போம்..

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன் பின், ''ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)'' என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்கு)சிரம் பணிந்தார்கள்; அவன் (மட்டும்) சிரம்பணியக் கூடியவர்களில்ஒருவனாக இருக்கவில்லை..

''நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?'' என்று அல்லாஹ் கேட்டான்; ''நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:11-12).

அல்லாஹ்வின் கட்டளை இப்லீஸால் புறக்கணிக்கப் பட்டதன் காரணத்தை அல்லாஹ்வே தெளிவு படுத்துகிறான். தான் படைக்கப்பட்ட மூலம் மனிதனின் மூலத்தை விடச் சிறந்தது என்ற பெருமை, கர்வம் அவனை சிரம்பணியத் தடுக்கிறது.

(நெருப்புமேல் நோக்கி எரியும். மண் மேல் நோக்கிச் செல்லாது. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் சிரம்பணியக் கூடாது. அதை அல்லாஹ்வே சொன்னாலும் கூட ஏற்கமாட்டேன் என்பது இப்லீஷின் லாஜிக்.)

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இல்லை. அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), 'நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்'' என்று சொல்ல, உமர்(ரலி), 'உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல'' என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக் கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே,

'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது. (புஹாரி :4367 அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி).)

நபி (ஸல் ) அவர்கள் மரணச்செய்தி மக்களிடம் சென்றடைந்த போது நபித் தோழர்களில் சிலர் நபி (ஸல்)அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்று உறுதியாக எண்ணினர். அவர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார்கள்.எவர் நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார் என்று கூறுகிறாரோ அவரைக் கொன்று விடுவேன் எனப் பிரகடனம் செய்கிறார்கள். இந்நிலையில் நபிகளாரின் மரணச் செய்தியறிந்த அபூபக்கர் (ரலி) அங்கு வந்து சரியான கருத்ததைக் கூறியதை கீழ் காணும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.

நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்.(புஹாரி:1241 ஆயிஷா(ரலி)).

மற்றொரு அறிவிப்பில் இச்சம்பவம் குறித்து

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்:

முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்'' (திருக்குர்ஆன் 3:144)

என்றார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். (புஹாரி :1242 இப்னுஅப்பாஸ்(ரலி).

இச்சம்பவத்துக்குப் பின் இறந்த நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது? என்ற பதிய பிரச்சினை தலைதூக்கியது. கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகள் நடந்தன. இந்நிலையில் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபிமார்கள் எந்த இடத்தில் மரணித்தார்களோ அவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியதும் பிரச்சினை தீர்ந்தது என்பதை நபிமொழிகள் நமக்குணர்த்துகின்றன.

அதன் பின் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரை ஆட்சித் தலைவராக்குவது? என்ற புதிய பிரச்சினை தலைதூக்கியது. நபித்தோழர்கள் முஹாஜிர்கள் அன்ஸாரிகள் என இரு பிரிவுகளாகி ஆட்சித் தலைமைக்கு உரிமை கொண்டாடினர்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்'' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)'' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்'' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.
அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது'' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர்தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்'' என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்து விடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்'' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்'' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)'' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்'' என்றார். உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)'' என்று கூறினேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். (புஹாரி :6830 உமர்(ரலி)கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி).

நபிமார்கள் கூட பிரச்சினைகளை அணுகுவதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்பதற்கு கீழ் காணும் நபிமொழி சான்றாகும்.

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட)நபி ஆதமும்(அலை) நபி; மூஸாவும்(அலை) தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, 'உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், 'நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிக்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். 'இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்' என்று இருமுறை கூறினார்கள்'' என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.(புஹாரி: 3409).

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் என்பது ஒரு பிரச்சினையை அணுகும்போது எழுவது இயற்கைதான். ஆனால் அதைத் தீர்த்துக்கொள்வதில் எழும் மற்ற நோய்களாகிய கர்வம் பெருமை இயக்க வெறி சத்தியத்தை மறுத்தல் வழிகேட்டுக்கு அநீதிக்குத் துணைபுரிதல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எழும் பிரச்சினைகளை நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மையில் பார்த்தாலோ பெரும்பான்மையாக உள்ள நாங்கள் சொல்வதுதான் சரி என்று கூறுவதாலோ பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக விரோதமும் வெறுப்பும்தான் வளரும். ஒற்றுமை குலையும். ஆகவே கருத்து வேறுபாடுகள் நீங்க, ஒற்றுமை மலர, இருக்கும் பிரிவுகள் மென்மேலும் கூடாமல் இருக்க, சமுதாயத்தில் சாந்தியும் சமாதானமும் பூத்துக் குலுங்கி சகோதரத்துவம் தழைக்க, அல்லாஹ் கூறும் அழகான வழியைப் பாருங்கள்.

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை விட்டுப் பிரிந்து விடாதீர்கள்.மேலும் அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் நிஃமத்துக்களை (அருட்கொடைகளை) நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(3:103).

இங்கு அல்லாஹ்வின் கயிறு என அருள்மறை வசனம் கூறுவது அல்குர்ஆன் கூறும் உபதேசங்களாகும். ஒற்றுமைக்குச் சான்றாக நபி மொழி கூறும் நல்லுபதேசத்தைக் காணுங்கள்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6064 அபூஹூரைரா (ரலி).

மற்றொரு அறிவிப்பில்

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6065 அனஸ்(ரலி).

அருள்மறைக் குர்ஆனும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனையும் நமக்கு ஒற்றுமை பற்றி வழங்கிய உபதேசங்களைக் கண்டோம். ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே நமக்குள் எழும் பிரச்சினைகள் எதுவாகயிருந்தாலும் கருத்து வேறுபாடுகள் எதுவாகயிருந்தாலும் நாம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் அடிப்படை குர்ஆன் ஹதீஸாக இருக்கவேண்டும். ஒற்றுமைக்குத் தடைக்கல்லாகயிருக்கும் தனிமனித வழிபாடு அகம்பாவம் கர்வம் பெரும்பான்மை அநீதி அட்டகாசம் போன்றவற்றைத் தூர வீசிவிட்டு சொல்வது யார்? என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்? என்பதைப் பார்ப்பதுடன் சொல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்பதை ஆய்ந்து சரி என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் தவறென்றால் அதை கண்ணியமாக நளினமாகச் சுட்டிக் காட்டுவதும் சரியான அணுகுமுறையாகும். இவன் என்ன சொல்வது? இவனை விட நான் என்ன மார்க்க அறிவில் குறைந்தவனா? என்ற வரட்டுக் கௌரவமும் திமிரும் ஆணவப் பேச்சுக்களும் அறிவீனர்களின் நடத்தையாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நமக்குள் இருக்கும் குரோதங்கள் வெறுப்புகள் ஆகியவற்றை நீக்கி ஒற்றுமை மலர வழிவகுப்பானாக. ஆமீன்.

- நெல்லை. இப்னு கலாம் ரசூல்

No comments: