Tuesday, August 15, 2006

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள இணைய தமிழ் முஸ்லிம் வலைப்பதிவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னும் ஐந்து வாரங்களில் ரமலான் நோன்பு வரப்போகிறது. அதற்கு முன்னதாக, இணையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிப்பதையும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர், அடுத்த அமைப்பை விமர்சிப்பதையும் நாம் நிறுத்தினால் என்ன? இந்த வேண்டுகோளை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது, நடுநிலையான வலைப்பதிவர்களுக்கும் வைக்கிறேன். அது போல, நோன்பு காலங்களில் நம் வீடுகளில் இஃப்தார் விருந்துக்கு மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைக்கலாம். இரவில் தராவீஹ் தொழச் செல்லும் போது மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நாமே வலியச் சென்று ஸலாம் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நகமும், சதையுமாய் இருந்த இரு முஸ்லிம் நண்பர்கள் இப்போது ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை. இதற்கு இயக்கச் சண்டையே காரணம். நண்பர்களுக்குள் வேடிக்கையாகப் பேசும் போதும், மாற்று அமைப்புகளை விமர்சிப்பதை ரமலானில் மட்டுமாவது நிறுத்தித் தான் பார்ப்போமே? அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான். நமக்குள் அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவான். முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நமக்குள் உள்ள கருத்து மோதல்கள் தடையாய் இருக்கக் கூடாதல்லவா? இந்தக் கருத்துடன் உடன்படும் சகோதரர்கள், இப்பதிவை தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மின் அஞ்சல் செய்யலாமே?

4 comments:

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் அருளடியான் அவர்களே,

நமது சமுதாய மக்களின் ஒற்றுமைக்காக வேண்டி வேதனையில் தாங்கள் எழுதிய ஆக்கம் கண்டேன். மிக்க அருமையான ஒரு கோரிக்கை நமது சகோதரர்கள் பரிசீலிக்க வேண்டியது ஆனால் நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய இந்த மடலை படித்து முடிப்பதற்குள் தங்களின் இந்த கோரிக்கைக்கு ததஜ வினர் பதில் அளித்து விட்டார்கள் .

இது தான் மூலை கழுவி விடப்பட்ட ஒரு கூட்டத்தாரின் நிலை...இவர்களை மாத்திரம் வைத்து மொத்த சமுதாயத்தின் உணர்வுகளையும் தீர்மானிக்க இயலாது இன்னும் எத்தனையோ இயக்கங்களும் சகோதரர்களும் மீதம் உள்ளார்கள் தங்களின் கோரிக்கைக்கான அவர்களின் பதிலையும் எதிர்நோக்குவோம்.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் அவர்களின் நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி :

***********************************
//ததஜ தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,

நீங்கள் உங்கள் பகைமையை மறந்து தமுமுகவுடன் ஒன்றிணையலாம் என்று நினைத்தால் அது மாபெரும் தற்கொலைக்கு சமமாகும். இவர்கள் பிஜெ என்ற ஒருவரோடு மட்டும் பிரச்சனை செய்திருந்தால் சகோ.பிஜெ மண்ணித்து ஏற்றால் போதுமானது. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹித் பிரச்சாரத்துக்கு எதிராக எத்தனை எதிர் வேளைகளை செய்தார்கள் என்பது எங்களை விட உங்களுக்கு தெளிவாக தெரியும். ததஜ என்ற உங்கள் அமைப்புக்கு இருக்கும் சிறப்பு தகுதியே நீங்கள் கணக்கு வழக்குகளில் சரியாக இருப்பீர்கள் என்ற தகுதியும் அது போல தவ்ஹித் கொள்கையை உயிராக கொண்டவர்கள் என்ற தகுதியும்தான். ஆனால் நீங்கள் தமுமுகவோடு இணைந்தால் இந்த இரண்டுமே கேள்விக்குறியாகி விடும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இரண்டு வருட பித்ராவை பல லட்சம் வசூலித்து அதற்க்கு இதுவரை பணம் எங்கிருந்து எவ்வளவு வந்தது என்ற கணக்கையும் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பித்ரா வழங்கப்பட்டது என்ற கணக்கையும் வெளியிடாமல் அந்த பணத்தை தவறாக செலவு செய்கிற தமுமுகவோடு தாங்கள் சேரலாமா?.

அது போல சுனாமியை தமுமுகவோடு பல லட்சம் அதிகமாகவே உங்கள் அமைப்பு வசூலித்து அதை முழுவதுமாக ஒரு பைசா பாக்கி இல்லாமல் நீங்கள் விணியோகித்தீர்கள். ஆனால் தமுமுகவோ இதுவரை அந்த பணத்தை விணியோகிக்காமல் மறைத்து வைத்து இடர்மையம் அது இது என்று மழுப்பி கொண்டு தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட தமுமுகவோடு நீங்கள் சேரலாமா???.

நீங்கள் இப்படிபட்ட தமுமுகவோடு இணையமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.//

***********************************

இது தங்களின் பார்வைக்காக இங்கு பதியப்படுகின்றது. இதைப்பற்றிய தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

நன்றி
முகவைத்தமிழன்

அருளடியான் said...

அன்புள்ள முகவைத் தமிழனுக்கு,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் மேற்கண்ட பதில், என் பதிவிற்கானது அல்ல. அது வேறொரு பதிவிற்கான பதில். நீங்கள் 'நாயகன்' என்ற தமிழ் திரைப்படத்தைப் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில், கதாநாயகன் வன்முறை மூலம் மக்களுக்கு நன்மை செய்யலாம் என்ற கொள்கையுடையவன். அவனது மகள், வன்முறையை நிறுத்தி விடுமாறு அவனிடம் கெஞ்சுவாள். அப்போது, கதாநாயகன் தவறு செய்யும் மற்றவர்களைப் பட்டியலிட்டு 'அவர்களை நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துகிறேன்' என்பார். ஏனோ இக்காட்சி என் நினைவில் வந்து தொலைக்கிறது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 'தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை' என்ற வலைப்பதிவில் ரமலான் மாதத்தில் மட்டும் நீங்கள் கருத்து மோதல்களைத் தோற்றுவிக்கும் பதிவுகளைத் தவிர்க்கலாம். அப்பதிவில் கருத்து மோதல்களைத் தோற்றுவிக்கும் மற்றவர்களின் பதிவுகளை அந்த ஒரு மாதத்தில் மட்டுமாவது தவிர்க்கலாம். ரமலானில், குர் ஆனில் இருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விளக்கவுரைகளும், உலக முஸ்லிம்கள் தொடர்பாகவும், இந்திய , தமிழக முஸ்லிம்கள் தொடர்பாகவும் வரும் செய்திகளையும் வெளியிடலாம். பரிசீலியுங்கள். இதற்காக, உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியக் கூடும்.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் அருளடியானுக்கு,

தங்கள் பதிலுக்கு நன்றி, அது வேறு ஒரு பதிவிற்கான பதில்தான் ஆனால் தங்களது கேள்விக்கான பதிலாக அது இருந்ததால் இங்கு பதியப்பட்டது.

//எனக்குத் தெரிந்து நகமும், சதையுமாய் இருந்த இரு முஸ்லிம் நண்பர்கள் இப்போது ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை. இதற்கு இயக்கச் சண்டையே காரணம். நண்பர்களுக்குள் வேடிக்கையாகப் பேசும் போதும், மாற்று அமைப்புகளை விமர்சிப்பதை ரமலானில் மட்டுமாவது நிறுத்தித் தான் பார்ப்போமே?// நீங்கள் கூறியது.

ததஜவினர் எழுதியுள்ளது:

//ததஜ தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
நீங்கள் உங்கள் பகைமையை மறந்து தமுமுகவுடன் ஒன்றிணையலாம் என்று நினைத்தால் அது மாபெரும் தற்கொலைக்கு சமமாகும்.//

தங்கள் தலைமையையே மிரட்டுகின்றார்கள் இவர்கள் எப்படி ரமழானில் இணைவார்கள் என்றுதான் அதை நான் இங்கு பதிந்தேன்.

கருத்து மோதல்களை தோற்றுவிக்கும் பதிவுகளை தவிர்க்கலாம் தான் ஆனால் மார்க்கத்தையே மாற்றும் கருத்துக்களை ஒரு கூட்டத்தினர் கூறும்போது அதை மறுத்து இஸ்லாமிய வழியில் இஸ்லாமிய கருத்தக்களை எடுத்து மக்களை உஷார் படுத்தினால் ஏற்படும் கருத்து மோதல் உங்கள் வட்டத்திற்குள் வருமா?

நீங்கள் கூறுவது போல் ரமழான் வந்து விட்டது இப்போது நம் முஸ்லிம்களிடம் கேம்ப் கேம்பாக ஃபித்ரா மற்றும் ஜக்காத் கேட்டு வருவார்கள் அப்படி வசூலாகும் பணங்களை தங்கள் சுயலாபத்திற்காக ரெஸ்ட்டாரென்ட் மற்றும் எவர் சில்வர் பாத்திர தொழில்களிலும் இன்னும் வலைகுடா நாடுகளிலும் முதலீடு செய்வார்கள் அப்பப்பட்டவர்களிடம் நீங்கள் ஃபித்ரா ஜக்காத் கொடுக்காதீர்கள் என்று எச்சரித்தால் ஏற்படும் கருத்து மோதல் உங்கள் வட்டத்திற்குள் வருமா?


ஹஜ் நெருங்கி வருகின்றது சில கூட்டத்தினர் சுய லாபத்திற்காக ஹஜ்செர்வீஸ்களை அமைத்து தமிழ் நாட்டிலிருந்து ஹஜ்ஜீக்கு அழைத்து வருவதற்கு வசூல் ஆரம்பித்து விட்டார்கள் இக்கூட்டத்தினர் 1400 ஆன்டுகளாக மாற்றாமல் இருக்கும் சைத்தானுக்கு கல் எறிவது, தொங்கோட்டம் ஓடுவது போன்றவற்றில் மாற்றம் கொன்டு வந்துள்ளார்கள் இவ்வாறு சில செயல்களை விட்டுவிடுவதால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தில் ஒரு முறை செய்யும் ஹஜ்கூடாது ஆக நல்ல ஹஜ்செர்வீஸ்களை பார்த்து வாருங்கள் என்று சக முஸ்லிம் சமுதாயத்தை எச்சரிப்பதால் ஏற்படும் கருத்து மோதல் உங்கள் வட்டத்திற்குள் வருமா?

சஹாபாக்களை பின்பற்றக்கூடாது அப்படி பின்பற்றினால் அது சஹாபிசம் என்ற ஐந்தாவது மத்ஹபாகும் என்று தலைப்பிட்டு முஸ்லிம்களை வழிகெடுக்க முற்படும் ஒரு கூட்டத்தினரை பற்றி மக்களிடம் எச்சரித்தால் ஏற்படும் கருத்து மோதல் உங்கள் வட்டத்திற்குள் வருமா?

தயவு செய்து மேற்க்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் சகோதரரே?

குறிப்பு : நான் தங்களுக்கு சலாம் கூறியிருந்தேன் ஆனால் நீங்கள் பதில் அளிக்கவில்லை பரவாயில்லை "நாயகன்" பட சிடி யை இட்டு Frame by Frame தேடியதில் மறந்திருக்கலாம். என்னிடம் நீங்கள் 'நாயகன்' என்ற தமிழ் திரைப்படத்தைப் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று கேட்டிருந்தீர்கள் நான் திரைப்படம் எல்லாம் பார்க்க கூடிய ஆள் இல்லை அதற்கு நேரமும் இருப்பதில்லை தியேட்டருக்கு கூட வேறு வேலையாக சென்றுள்ளோமே தவிர படம் பார்ப்பதற்காக அல்ல.

நீங்கள் கூறியது போல் ரமழான் நெருங்கி விட்டது தயவு செய்து படம் பார்ப்பதை குறைத்து கொள்ளுங்கள் அப்படியே பார்த்தாலும் Frame by Frame எல்லாம் ஆராய்ச்சி செய்யாதீர்கள் அதற்கு பதிலாக தயவு செய்து ரமலானில், குர் ஆனையும் ஹதீசையும் படியுங்கள் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியக் கூடும்.

பின் குறிப்பு : அவர்களை நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துகிறேன்' என்று எழுதியிருந்தீர்கள் அது என்ன அர்த்தம் என்று தெறியவில்லை நான் யாரையும் நீ நிறுத்து நான் நிறுத்துகின்றேன் என்று கூறவில்லை நீங்கள் இதை யாராவது இயக்க சார்புடைய சகோதரர்களிடம் கூற வேண்டியது தவறாக என்னிடம் கூறிவிட்டிர்கள் என்று நினைக்கின்றேன். ஐயா நமக்கும் இயக்கங்களுக்கும் நிறைய தூரம் ஐயா!!

நன்றி

முகவைத்தமிழன்

அருளடியான் said...

அன்புள்ள முகவைத் தமிழனுக்கு,

அலைக்கும் ஸலாம்(வரஹ்). நான் தங்களின் முந்தைய பின்னூட்டத்தின் ஸலாத்துக்கு பதில் அளிக்காமைக்கு கவனக்குறைவு தான் காரணம். மன்னியுங்கள். தனிப்பட்ட முறையில் தங்களை தாக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். நோன்பு காலங்களில் தொலைக்காட்சியை செய்திகளுக்காக மட்டும் தான் பார்க்கிறேன். குர் ஆன், ஹதீஸ் நுல்களை ரமலானில் படிக்க நீங்கள் கூறிய அறிவுரைக்கு நன்றி!