Sunday, September 02, 2007

ஹெச்.ஜி. ரசூலை நீக்கியது சரியா?

கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி முஹமது (ஸல்) அவர்களை எதிரிகள் ஊர்விலக்கம் செய்தனர். ஆனால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய நபி முஹமது (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களையோ, இஸ்லாத்துக்கு விரோதமாக நடந்தவர்களையோ ஊர்விலக்கமோ, மதவிலக்கமோ செய்ததாக நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை. தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்னெப்போதையும் விட அதிகமாக பல கொள்கைப் பிரிவுகள், அமைப்பு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவது, அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைப்பது போன்றவற்றை ஏற்காத பள்ளிவாசல் நிர்வாகிகள், அறிவிப்பு பலகைகளை தொங்கவிட்டு முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜமாஅத் நிர்வாகியாகக் குழுவில் இருந்த போது மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறியவிரும்புகிறோம். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சார நாடு. முஸ்லிம்களிடையே நிலவும் கருத்து மாறுபாடுகளை சகிக்காத முஸ்லிம்கள் மாற்று மதத்தினரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்தக் கோணத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். நான்கு மத்ஹப்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளூம் ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், சுன்னத்துல் ஜமாஅத் பேரவையினரும் குர் ஆன், ஹதீஸ் வழியில் செயல்படுபவர்களை மட்டும் காழ்ப்புணர்வுடன் பார்ப்பது ஏன்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஹெச்.ஜி. ரசூலின் எழுத்துக்களில் 'இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை விட, குர் ஆனில் இறைவனின் கூற்றுடன் முஹமது நபியின் கூற்றும் கலந்துள்ளது என்று எழுதியதும், குர் ஆனின் மாற்றுப் பிரதியாக ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டதும் தான் இஸ்லாமிய விரோதமானவை. இதனைப் புரிந்து கொள்ள குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினருக்குப் போதிய படிப்பில்லை. யார் மீதும் மதவிலக்கமோ அல்லது ஊர் விலக்கமோ செயல்படுத்தக் கூடாது. இது போன்ற வழிகாட்டும் குறிப்பை தமிழ் நாடு வக்ஃப் வாரியம், அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும், அனைத்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

2 comments:

வஹ்ஹாபி said...

ஊர்விலக்கல் என்பது நமது மார்க்க அடிப்படையிலும் நாட்டுச் சட்ட அடிப்படையிலும் தவறானதே.

கட்டுரைக்குத் தொடர்புடைய இன்னொரு பதிவு:
http://wahhabipage.blogspot.com/2007/08/blog-post.html

அருளடியான் said...

வஹ்ஹாபி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் கட்டுரையைப் படித்தேன். தங்கள் படிப்பும், உழைப்பும் வியக்க வைக்கிறது. உங்கள் பணி தொடர துஆ செய்கிறேன்.

அருளடியான்