Wednesday, April 06, 2005

ஜாபர் அலியிடம் சில கேள்விகள்!

நேரமின்மை காரணமாக நேசகுமாருடனான விவாதங்களில் பங்குபெற முடியாமலிருந்த என்னை சகோதரர் ஜாபர் விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். சில உண்மைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம்.

திருமறை வசனம் 4:140 சொல்கிறது "(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்" என்று.

நேசகுமாரின் கருத்துக்களை சற்று கவனித்துப் பார்த்தால் அவற்றுள் நிராகரிப்பு, பரிகாசம் ஆகியவற்றை விட, இஸ்லாம் குறித்தான தவறான புரிதல்களும் அது பற்றிய விவாதங்களுக்கு முஸ்லிம்களை அழைப்பதும் புலப்படும்.

இஸ்லாம் குறித்தான அவரது தவறான புரிதல்கள் வாசகர் முன் வைக்கப்படும்போது, முஸ்லிம்கள் அவற்றை இரண்டு வழிகளில் எதிர் கொள்ளலாம்.
1) 'நமக்கென்ன' என்று பேசாமல் இருக்கலாம், அல்லது,
2) அவரது புரிதல்கள் தவறானவை என ஆதாரங்களுடன் கண்ணியமான முறையில் விளக்கலாம்.

முதல் வழியை தேர்ந்தெடுத்தால், நேசகுமாரின் வாதங்களுக்கு யாருமே பதிலளிக்காத சூழ்நிலையில், அவர் சொல்வதே சரி என வாசகர்கள் தீர்மானிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மாறாக, இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்தால் வாசகர்களுல் ஒரு சிலருக்காவது இஸ்லாம் குறித்த சரியான விளக்கங்கள் சென்றடைய வாய்ப்பு இருக்கிறது.

திருமறை வசனம் 16:125 கூறுகிறது: "(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச்சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!"

சகோதரரே! இவற்றுல் நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்?

திருமறை வசனம் 4:140 சொல்கிறது "(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' .

போதுமான விளக்கங்கள் இல்லாமல் திருமறை வசனங்களை பிறர் முன் எடுத்து வைத்து அவை தவறாக விளங்கிக்கொள்ளப் படுவதற்கும், நிராகரிக்கப்படுவதற்கும், பரிகசிக்கப்படுவதற்கும் காரணமாக அமைவது முறைதானா சகோதரரே? சுனாமி பேரிடர் சமயத்தில் நீங்கள் எடுத்து வைத்த வசனங்கள் எத்தகைய விமரிசனங்களுக்கு ஆளானது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையை விட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்து விட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

சகோதரரே! நீங்கள் தமிழ்மணம் மன்றத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் வாதத்தின்படி அங்கு திருமறை வசனங்கள் நிராகரிக்கப்படுகிறது, பரிகசிக்கப்படுகிறது. மேற்கண்ட திருமறை வசனத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு 'சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுபவராக' இருந்தால், தமிழ்மணத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று அறிவித்து விட்டு இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டுமே?உங்களை வெளியேறுங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் முன் வைக்கும் கருத்துக்கள் சரிதானா? என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை யோசனை செய்து பார்க்கத்தான் சொல்கிறேன்.

இயற்கை சீற்றம் இறை சித்தமா? என்ற கேள்வியில் தொக்கி நிற்பது ஈமானின் பலவீனம் என குறிப்பிட்டிருந்தீர்கள். தயவு செய்து தலைப்புடன் நின்று விடாமல் முழு கட்டுரையையும் நிதானமாக படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் இதற்கு தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறேன்.

வஸ்ஸலாம்
- சலாஹுத்தீன்

2 comments:

Sardhar said...

இனிய நண்பர் சலாஹுத்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கப்பூரில் தங்களுடன் செலவழித்த நேரங்கள், எண்ணப் பகிர்வுகளை மிகவும் எண்ணிப் பார்க்கிறேன்.

இறைவனுக்காக கொண்ட நேசத்தினால், சிறிதளவே சந்தித்தாலும் பெரும் பிரிவை உணர்ந்தேன். sardhar at gmail dot com எனும் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

வஸ்ஸலாம்.

Salahuddin said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சர்தார் பாய்,

தங்களை சந்திக்க நேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வேலைப்பளு காரணமாக தங்களுடன் அதிக நேரம் செலவிட முடியாததில் எனக்கும் வருத்தம்தான். நம் சந்திப்பிற்கு காரணமாக அமைந்த 'தமிழ் முஸ்லிம்' வலைப்பதிவின் நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்.

வஸ்ஸலாம்
- சலாஹுத்தீன்