ஜகாத், சதகா - வேறுபாடுகள்
குர் ஆன், தொழுகையைப் பற்றி வலியுறுத்தும் பெரும்பாலான இடங்களில் ஜகாத்தையும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)
மேற்கண்ட பிரிவுகளைத் தவிர மற்ற தர்மங்கள் சதகா என்னும் வகையைச் சேரும் . ஜகாத்தைப் போலவவே சதகாவும் குர் ஆனிலும், நபிவழியிலும் வலியுறுத்தப்படுகிறது. எனக்குத் தெரிந்த முஸ்லிம் செல்வந்தர்களில் சிலர் சதகா என்னும் வகையைச் சேர்ந்த தர்மங்களை தாராளமாகச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் ஜகாத் பூஜ்யமாகவோ அல்லது போதாததாகவோ உள்ளது. இதனை நியாயப் படுத்தி சுயதிருப்தி அடைகின்றனர். இவர்களுக்கு நாம் எப்படி புரியவைக்கப் போகிறோம்? அது போல ஹஜ்ஜை நிறைவேற்றும் செல்வந்தர்களில் சிலர் ஜகாத் கொடுப்பதில்லை. ஐந்து வேளை தவறாது தொழும் சிலர் ஜகாத் கொடுப்பதில்லை. இவர்கள் இறைவனைப் பற்றி அச்ச உணர்வற்று இருக்கிறார்களா? அல்லது அறியாமையில் இருக்கிறார்களா? நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
Saturday, May 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜகாத் குறித்து எனக்கு ஓர் ஐயம் உள்ளது. தமக்கென ஒரு சம்பாத்தியம் இல்லாத (கணவனையோ, மகனையோ, தந்தையையோ அல்லது சகோதரனையோ சார்ந்திருக்கும்) திருமணமான அல்லது திருமணமாகாத பெண்களின் மீதான ஜகாத் கடமை என்ன?
எடுத்துக்காட்டாக ஒரு பெண்ணிடம் தம் பெற்றோர் கொடுத்த நகையும் கணவன் வாங்கிக்கொடுத்த நகையும் உள்ளன. அவளது இந்த நகை ஜகாத் கடமையாவதை விட அதிகமாக உள்ளது. இதற்கான ஜகாத் கொடுக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?
ஒரு மார்க்க அறிஞர் கூற்றுப்படி இக்கடமை அப்பெண்ணத் தான் சார்ந்தது. இதனை அவளின் கணவன் கொடுக்க அவசியம் இல்லை. கணவன் விரும்பினால் ஜகாத்திற்குரிய தொகையை அன்பளிப்பாக மனைவிக்குக் கொடுக்க அந்தத் தொகையை அவள் ஜகாத்தாக நிய்யத் செய்து அளித்து விடலாம்.
கணவன் இங்கே இளிச்சவாயன் ஆக்கப் படுகிறானா? அல்லது கணவன் மேற்படி ஜகாத் தொகையைக் கொடுக்க மறுத்து விட்டால், அந்த மனைவி, தன் நகைகள் ஜகாத் கடமையாகா நிலை வரும் வரை தனது நகைகளை விற்று ஜகாத் கொடுத்து வர வேண்டுமா?
விபரம் அறிந்த சகோதரர்கள் விளக்குங்கள்.. குர்ஆன் ஹதீஸ் ஒளியில்.. அல்லாஹ் உங்களுக்கு நன்மை செய்வானாக...
//கணவன் விரும்பினால் ஜகாத்திற்குரிய தொகையை அன்பளிப்பாக மனைவிக்குக் கொடுக்க அந்தத் தொகையை அவள் ஜகாத்தாக நிய்யத் செய்து அளித்து விடலாம்.//
மேற்கண்ட கூற்றை "கணவன் விரும்பினால் ஜகாத்திற்குரிய தொகையை அன்பளிப்பாக மனைவிக்குக் கொடுக்க அந்தத் தொகையை அவள் ஜகாத்தாக நிய்யத் செய்து ஜகாத் பெற தகுதியானவருக்கு அளித்து விடலாம்." என்று படிக்கவும்.
அருளடியான் அவர்களுக்கு!
இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட கடமையான - தர்மமாகிய ஜகாத்தை கொடுக்க மறுப்பவர்கள் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். ஜகாத் கொடுக்கும் அளவுக்கு செல்வத்தைப் பெற்றிருப்பவர்கள், அதைக் கணக்கிட்டு வழங்க அவர்களாகவே முன் வரவேண்டும். கட்டாயக் கடமையாக்கியுள்ள தர்மத்தைப் பற்றி தெரிந்தவர்களும் கூட, சில்லறையாகப் பைசாக்களை மாற்றி வைத்துக்கொண்டு, வீட்டு வாசலில் வந்து நிற்கும் ஏழைகளுக்கு 25பைசா 50பைசா என வழங்கிவிட்டு ''நான் என் செல்வங்களின் மீது கடமையான ஜகாத்தைக் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
ஜகாத் பற்றிய அறியாமையும், அறிந்திருந்தும் ஜகாத் கொடுக்கும் முறையில் அறியாமையிலும், இன்னும் தேங்கியிருக்கும் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். அதற்கு ஒரே வழி நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் - அதாவது அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்போம்.
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்) அல்குர்ஆன், 9:34,35
''அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும்.''
நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.'' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (புகாரி)
contivity அவர்களே!
//*கணவன் இங்கே இளிச்சவாயன் ஆக்கப் படுகிறானா?*// உங்களிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி ஆதாரத்துடனும், மேலும் தர்க்க ரீதியாகவும் வலைப்பதிவில் பின்னூட்டம் வழங்கிவரும் நீங்களா இப்படி..?
இன்ஷா அல்லாஹ், நீங்கள் வைத்துள்ளக் கருத்தைப் பற்றியும் அலசுவோம்.
அன்புள்ள அபூ முஹை அவர்களுக்கு,
உங்கள் பதிலுக்கு நன்றி.. அருளடியான் அவர்களுக்கும் நன்றி.. தங்கள் பதிவைப் பயன்படுத்துவதற்கு..
//உங்களிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை.//
இஸ்லாமிய சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி அது.. என்னிடம் பதில் இல்லை.. பல இஸ்லாமிய வலைத்தளங்களிலும் point-blank பதில் இல்லை.. எந்தக் கடுமையான உள்நோக்கத்துடனும் எழுதப்பட்டதன்று அது..
கணவனுக்கு அந்த நகைகளில் ஒரு உரிமையும் இல்லையென்றால் அதற்கு அவன் ஜகாத் கொடுப்பது மட்டும் கடமையாவது என்ன நியாயம்? நமது ஊர்களில் உள்ளது போல் மனைவியின் நகைகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என நினைப்பவர் அல்லர் அந்த நண்பர்.. விளக்கங்களை எதிநோக்கி உள்ளேன்..
Jazak Allah Al-Khair.
நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி) 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்தத்தற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வுடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். ஹதீஸ் எண் 1466 புகாரி)
கணவன், மனைவி இருவருக்கிடையே தர்மங்களை வழங்கிக் கொள்வது உறவினர்களை பேணிக் கொண்டதற்கும், தர்மம் வழங்கியதற்கும் என இரண்டு நன்மைகளுண்டு என்பதை மேற்காணும் ஹதீஸிலிருந்து அறியலாம். ''தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,1426)
ஒரு பெண்ணிடம் தங்க நகைகள் இருந்து ஜகாத் கொடுக்குமளவுக்கு அது மதிப்புப் பெற்றிருந்தால் அதற்கான ஜகாத் தொகையை அந்தப் பெண்தான் கொடுக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எவ்வித வருமானமும் இல்லாத பெண், தனது தங்க ஆபரணங்களுக்கு ஜகாத் கொடுக்கும் கடமையுள்ளது என்பதையறிந்து அதற்கான தொகையை தன் தந்தை, சகோதரர்கள், கணவன் ஆகியவர்களிடமிருந்து ஏற்கெனவே பெறும் அன்பளிப்பு - தர்மம் இவற்றிலிருந்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்தில் ஜகாத் கொடுப்பது கட்டாயக் கடமை என்பதை நன்கறிந்த பெண்கள் ஜகாத் கொடுக்கும் விஷயத்தில் தக்க முன்னேற்பாடுடன் நடந்து கொள்கிறார்கள்.
ஜகாத் கொடுக்குமளவுக்கு தங்க நகைகள் இருந்தும் அதற்கான ஜகாத் கொடுக்க வேண்டும் - இது கட்டாயக் கடமை என்பதையறியாமல் ஜகாத் விஷயத்தில் பொடு போக்காகப் பலப் பெண்கள் இருக்கிறார்கள். (துரதிஷ்டவசமாக இதில் ஆண்களும் அடங்குவர்.) ஜகாத் பற்றி அறியாமல் பாராமுகமாக இருக்கும் மனைவியின் மீது அக்கறை கொள்ளாமல் - அவள் ஜகாத் கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் நமக்கென்ன என்று கணவன் விலகிவிட முடியாது - விலகவும் கூடாது.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன், 66:6)
முஸ்லிமான ஆண்கள், பெண்கள் இருபாலாரையும் அழைத்து திருக்குர்ஆன் இப்படிக் கட்டளையிடுகிறது. ஜகாத் கொடுக்காத செல்வங்களை நரக நெருப்பு என்கிறது இஸ்லாம். மனைவியின் தங்க நகைகள் அதற்கான ஜகாத் தொகைக் கொடுக்கப்படாமல் நெருப்பாகும் நிலைக்கு சென்று விடாமல் கணவன் காப்பாற்ற வேண்டும், அது போல் மனைவியும்.
முஃமின்களே! நன்மையிலும், பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன், 5:2)
//*கணவனுக்கு அந்த நகைகளில் ஒரு உரிமையும் இல்லையென்றால் அதற்கு அவன் ஜகாத் கொடுப்பது மட்டும் கடமையாவது என்ன நியாயம்?*//
மனைவியின் சொத்தில் கணவனுக்குப் பங்குண்டு - கணவன் சொத்தில் மனைவிக்குப் பங்குண்டு இருவருக்கும் மற்றவரின் சொத்தில் - அவர்கள் விட்டுச் சென்றதில் உரிமையுண்டு! (பார்க்க திருக்குர்ஆன், 4:12)
அவரவர் சம்பாதித்தது அவரவருக்கே என்று அல்லாஹ் கூறுகிறான். பெண்களின் சொத்துக்களுக்கு பெண்களே ஜகாத் கொடுக்க வேண்டும். மனைவிக்கு ஜகாத் கொடுக்க, கணவன் அன்பளிப்பாக உதவினால் அது இரட்டிப்பு நன்மை என்று இஸ்லாம் சொல்வதால் வசதியுள்ளவர்கள் இந்த நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விளக்கம் தேவைப்படால் எழுதவும் (அல்லாஹ் மிக அறிந்தவன்)
அன்புள்ள அபூமுஹை அவர்களே,
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.. தனிமடலில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்கள் மின் மடல் முகவரியைத் தர முடியுமா? நீங்கள் கத்தரில் இருப்பதாக ஊகிக்கிறேன். சரியா?
எனது பொது மின்மடல் முகவரி
mailcontivity at gmail dot com
Post a Comment