Sunday, August 07, 2005

ஹிரோஷிமாவில் அணுகுண்டுவீசிய 60-வது ஆண்டு நினைவு தினம்


ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 60-வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை (06-08-2005) அனுஷ்டிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இந்த ஆண்டு அமெரிக்கா சார்பில் எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளாதது குறித்து ஜப்பான் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அழைப்பிதழ் அனுப்பியும் எவரும் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று ஹிரோஷிமா குண்டுவீச்சு நினைவுதினக் குழு தலைவர் பிலிப் மெண்டியோலா லாங் தெரிவித்தார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஹிரோஷிமா குண்டுவீச்சில் பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் குடும்பத்தினர் காலையில் 8-15 மணிக்கு அமைதி நினைவுப் பூங்கா முன்பு கூடி மௌன அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மணி ஒலித்தது. சாலையில் காரில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் தங்கள் செயலை நிறுத்திவிட்டு தலை குனிந்து குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

60 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1945 ஆகஸ்ட் 6. காலை 8.15 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இந்த அணுகுண்டுக்குச் சூட்டப்பட்ட பெயர் "குட்டிப் பையன்' (Little boy). நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீட்டர் உயரத்தில் இந்த அணுகுண்டு வெடித்தது. 3 மீட்டர் நீளமும் 71 செ.மீ அகலமும் கொண்ட இந்தக் குண்டின் எடை 4 டன் ஆகும். 12,500 டன் எடை கொண்ட டி.என்.டி.க்கு (Trinitro tolune - TNT) இணையான வெடிதிறன் படைத்த இந்த அணுகுண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான்வெளியில் நிறைந்தது. காற்றின் வெப்பநிலை 7,000 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 மணித்துளியில் 12,000 மீட்டர் உயரத்திற்கு ராட்சதக் காளானாகக் கதிர்வீச்சுப் புகைமண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாக எரிந்தன. இரும்புத்தூண்கள் உருகி ஓடின. ஹிரோஷிமாவில் இருந்த 76,000 கட்டடங்களில் 68 விழுக்காடு சாம்பலாகின. குண்டு வெடித்த ஒரே நிமிடத்தில் 80,000 மனிதர்கள் இறந்தனர். 70,000க்கு மேற்பட்டவர் காயம் அடைந்தனர். இவர்களில் 60,000 பேர் ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மரணமடைந்தனர்.

மீண்டும் இரண்டு நாள்கள் கழிந்த பின்னர் - ஆகஸ்ட் 9ஆம் நாள் முற்பகல் 11-02 மணிக்கு, "குண்டு மனிதன்' (Fat man) என்று பெயரிடப்பட்ட மற்றோர் அணுகுண்டு நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. நகரின் மையப்பகுதியில் 500 மீட்டர் உயரத்தில் வெடித்த இந்தக் குண்டு 22,000 டன் TNT க்கு இணையான வெடிதிறன் படைத்தது. 3.25 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டிருந்த இந்தக் குண்டின் எடை 4.5 டன் ஆகும். 2,80,000 மக்கள் வாழ்ந்த நாகசாகியில் குண்டு வெடித்ததும் 40,000 மக்கள் உடனடியாக இறந்து போயினர். மேலும் 34,000 பேர் காயமுற்றதாலும், கதிர்வீச்சினாலும் ஓராண்டு முடிவதற்குள் உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், நாகசாகியில் 6.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அக்கினிச் சூறாவளியில் ஹிரோஷிமா தொடர்ந்து ஆறு மணி நேரம் எரிந்தது. தொடர்ந்து கடும் மழை தொடங்கியது. சாதாரண மழையல்ல; பெரும் கதிர்வீச்சு நிறைந்த, எண்ணெய்ப் பசையோடு கூடிய திரவ மழை ஊழித் தாண்டவம் ஆடியது. இதனை வரலாறு கருப்பு மழை (Black rain) என்று பதிவு செய்துள்ளது. இன்று வரையில் அந்தப் பகுதிகளில் புல்கூட முளைப்பதில்லை. பாயும் புனலும் பாழாய்ப் போனது; வீசும் காற்றும் விஷமாய்ப் போனது. பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறந்து வருகிறார்கள்.

நேச நாட்டுப் படைகளிடம் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சி, ஹிட்லர் 1945 ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது படைகளும் சரணடைந்தன. போர் முடிந்து இரு மாதங்களுக்கு மேலான நிலையில் ஜப்பான் மீது, அமெரிக்கா இந்தக் குண்டுகளை வீசியது. முதல் அணுகுண்டின் கோரத் தாண்டவத்தைச் சுழன்றடித்த நெருப்புச் சூறாவளியில் பல்லாயிரவர் கருகியதைக் கண்ட பின்னரும் மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து நாகசாகியின் மீது மற்றோர் அணுகுண்டை வீசிய கொடுமையினை என்னென்று சொல்ல?

புதியதாகக் கண்டுபிடித்த அழிவாயுதமாம் அணுவாயுதத்தைப் பரிசோதித்துப் பார்க்கவும், உலக நாடுகளை அச்சுறுத்தித் தனது மேலாண்மையை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா முற்பட்டது என்பதில் பெருமளவு உண்மை உள்ளது. குண்டு வீச்சில் தமது சொந்தங்களை இழந்து தனிமரமாகிப் போன "சான் கிச்சி டோகே' (San Kichi Toge, 1917 - 1953)என்ற கவிஞர் ""என் தந்தையைத் திருப்பிக் கொடு'' (Give me back my Father) என்ற கவிதையை எழுதியுள்ளார். காலத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து கேட்கும் அவரது கவிதைக் கதறல் இதோ:

என் தந்தையைத் திருப்பிக் கொடு
என் அன்னையைத் திருப்பிக் கொடு
என் தாத்தாவை, பாட்டியைத் திருப்பிக் கொடு
என் பிள்ளைகளை, பெண்களைத் திருப்பிக் கொடு
என்னையே எனக்குத் திருப்பிக் கொடு
மனித குலத்தைத் திருப்பிக் கொடு
ஒவ்வொருவரையும் அவரவர்களிடம் திருப்பிக் கொடு
இந்த வாழ்க்கை நீடிக்கும் வரை அமைதியை எங்களுக்குத் திருப்பிக் கொடு நிரந்தரமான அமைதியைத் திருப்பிக் கொடு
'' ஹிரோஷிமா! ஓ! ஹிரோஷிமா!
உலகப் போரின் உச்சகட்டக் கொடுமையை மனிதகுலத்துக்கு என்றென்றும் நினைவூட்டும் வரலாற்றுச் சோகமே!
உனது சாம்பலில் இருந்து, ஃபீனிக்ஸ் பறவையாக,
நிரந்தரமான உலக அமைதி,
உறுதியாக ஒருநாள் எழுந்து வரும்.

நன்றி: தினமணி (06-08-2005)

No comments: