Sunday, December 11, 2005

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

புரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்

சக்கரியா

அப்துல் நாசர் மதனி என்னும் குடிமகனும் பிற குடிமக்களும் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு ஏழு நீண்ட வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த விஷயத்தில் மதனியின் பெயர் எடுத்துச் சொல்லப்படுவது அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமானவர் என்பதனால் மட்டுமே. மற்ற கைதிகளும் குடியுரிமைகளும் குடும்பங்களும் மனித உறவுகளும் கொண்டவர்களே.

இவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சியமைப்பு, தனது கைகளால் நடத்திக்கொண்டிருக்கும் மறைவற்ற, நம்ப முடியாததென்று தோன்றக்கூடிய, மனித உரிமை மீறýன் இரைகள். நாம் குற்றவாளிகளாக இருந்தாலும் இல்லையென்றாலும் உங்களுக்கோ எனக்கோ இது நேர்ந்திருக்கலாம்; இனி நேராது என்றும் சொல்வதற்கில்லை.

நாம் நம்பிக்கை வைத்திருக்கும் ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்குத் தொட்டால் நொறுங்கிவிடக்கூடியது என்றும் நாம் ஓட்டுப்போட்டு உருவாக்கும் ஆட்சியமைப்புகள் எந்த அளவுக்கு இதயமில்லாதவை என்னும் அச்சம் தரும் உண்மையின் கொடூர உதாரணங்கள்தாம் மதனியும் அவர் கூட்டாளிகளும்.

ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்ட இந்த மனித உரிமை அழிப்புக்கு முன்னால் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் சமூகப் பணியாளர்களும் மெüனமாக நிற்பதைக் காணலாம். கோக்கோகோலா போன்ற முட்டாள் பானத்துக்கு எதிராகச் சிலர் நடத்தும் போராட்ட நாடகங்களைப் பார்க்கும்போது என் ரத்தம் கொதிப்பதும் இந்தக் காரணத்தால்தான். கோக்கோ கோலாவைவிட எத்தனையோ மடங்கு வýமை கொண்ட, பயங்கரங்கொண்ட ஆக்கிரமிப்பாளர்களாகத்தான் நமது ஆட்சியமைப்புகள் பெரும்பாலும் நடந்துகொள்கின்றன. நமது அரசு அமைப்புகளின் வஞ்சனைக்கும் வாக்குறுதி மீறலுக்கும் கபடத்துக்கும் கொடூரத்துக்கும் பக்கத்தில் வர எந்த கோக்கோ கோலாவால் முடியும்? எந்த பெப்ஸியால் முடியும்?

மதனியும் சக கைதிகளும் செய்த குற்றம் என்னவென்று சொல்ல அவர்களைச் சிறை வைத்திருப்பவர்களின் நாவு எழுவதில்லை. அதே சமயம் ஏழு ஆண்டுகளாக அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. மதனி தீவிர நோய்க்கு ஆளாகியிருப்பவர். மற்ற கைதிகளும் அவரவர்களுடைய கடுமையான வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று வைத்துக்கொண்டாலும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதைப் போலவோ அதைவிட அதிகமாகவோ தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்திருக்கிறார்கள். குற்றப் பத்திரிகை வழங்குவதில் மட்டும் அவர்களுக்கு விலங்கு பூட்டிய கரங்களுக்கு பலவீனம். நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக அவர்களை ஆஜர்படுத்துவதில் யாருக்கோ பயம்.

யாருடைய நெஞ்சங்களோ அதை நினைத்து அடித்துக்கொள்கின்றன. ஒருவேளை இந்த நபர்களின் சிந்தனை இப்படியிருக்கலாம்:

கட்டுக்கதைகள் அம்பலமாகும் அந்த பயங்கர நாளை எதிர்கொள்வதைவிட மதனியையும் சக மனிதர்களையும் விலங்குகளைப் போல் கூண்டில் அடைத்து வைப்பதே நல்லது - 'மோத'லுக்கு (என்கவுன்டருக்கு!) இரையாக அவர்களது சடலங்களை செüகரியமான ஒரு நாள் பார்க்கும்வரை. நாம் வாழ்வது இருபத்தி யொன்றாம் நூற்றாண்டின் இந்தியாவிலாம்! சுதந்திரத்தின் ஐம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்த இந்தியாவிலாம்!

இந்தக் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது திருவள்ளுவரின் தமிழ்நாட்டில். சுப்ரமணிய பாரதியின் தமிழ்நாட்டில். பெரியாரின் தமிழ்நாட்டில். தமிழ்நாட்டின் இரண்டு அரசுகள்தாம் இந்தக் கொடூரமான அரசியல் அமைப்புச் சட்டமீறலுக்கும் மனித உரிமை மீறலுக்குமான பொறுப்பைப் பங்கிட்டுக்கொள்கின்றன. அவர்களைக் கைது செய்ததும் குற்றப்பத்திரிகையில்லாமல் இரண்டாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தள்ளியதும் தி.மு.க. அரசு. கலைஞர் கருணாநிதியென்ற பண்பாட்டு நாயகரும் அறிவாளியுமான நபர் முதல்வராக இருந்த அரசு. தி.மு.க. அரசிடமிருந்து இந்தப் பிசாசுத்தனமான மரபை அ.இ.அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டும் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. 'புரட்சித் தலைவி'யும் சந்தேகமில்லாமல் ஆட்சித் திறனில் நிபுணருமான செல்வி ஜெயலýதாதான் முதல்வர். ஆனால், ஜெயலýதாவும் இந்த அவலமான போý நாடகத்தைத் தொடர அவருக்கேயான காரணங்களும் இருக்கலாம். இந்தக் கைதிகளின் வாழ்க்கையை நசுக்கித் தேய்த்து உருவான ரத்தத் திரைக்குப் பின்னால் யாரெல்லாமோ காப்பாற்றப்படுகிறார்கள். யார் யாருடையதோ பாவங்களும் குற்றங்களும் பொய்களும் என்றென்றைக்குமாக மறைக்கப்படுகின்றன. அவர்கள் எந்த அளவுக்கு வýமையானவர்களாக இருக்க வேண்டும்! இல்லையென்றால் இந்த அளவுக்கு வெளிப்படையான அப்பட்டமான அரசியல் சட்ட மீறலுக்கு இரண்டு முதலமைச்சர்களை விளக்குப் பிடிக்கவைக்க அவர்களால் எப்படி முடிந்தது?

இந்தக் கைதிகளின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் 1998இல் கோயமுத்தூரில் எல்.கே. அத்வானி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு. அந்த குண்டுவெடிப்பால் மிக அதிக ஆதாயம் பெற்றது அத்வானியின் கட்சியும் அது தலைமை தாங்கிய முன்னணியுமே என்று தமிழ்நாட்டில் கண்களைத் திறந்து வைத்திருக்கிற எந்தச் சிறுபிள்ளைக்கும் தெரியும்.

சுவாரஸ்யமான, ஆனால் அச்சம் தரக்கூடிய ஒரு புள்ளிவிவரத்தை அண்மையில் காண நேர்ந்தது. பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில் நடந்த குண்டுவெடிப்புகளின் கணக்குகள் அவை. நவீன இந்தியாவின் வரலாற்றில் எந்த ஆட்சிக் காலத்திலும் இந்த அளவு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததில்லையாம். அது மட்டுமல்ல ஒவ்வொரு சம்பவமும் குறிதவறாததும்கூட. அதாவது ஆட்சிப் பீடத்தை அவ்வப்போதைய சிக்கல்களிýருந்து புகைத்திரை மூலம் காப்பாற்றியவை, ஊடகங்களின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசை திருப்பியவை.

தமிழ்நாட்டில் 1998இல் பி.ஜே.பி. துளிர்விட்டதற்குப் பின்னால் என்னென்ன உண்மை வெடிகள் மறைந்திருக்கின்றவென்று யாருக்குத் தெரியும்? அவர்களுக்குத் தமிழ்ச் சூரியனின் கீழே ஓர் இடம் கொடுத்தது கலைஞரின் வலுவான கரங்களாக இருக்கலாம். திராவிடத் தன்மானத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் முற்போக்குக் கொள்கைகளுக்கும் உயர்த்தியிருந்த அந்தக் கரங்கள் ஒருபோதும் செய்யக் கூடாத பாவம் அது. மதனியும் சக கைதிகளும் அனுபவிக்கும் நீதி மறுப்பு, மனித உரிமை மறுப்புப் பற்றி தி.மு.க. அர்த்தமுள்ள மெüனத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.

எல்லா மத நூல்களும் ஒரே குரýல் எடுத்துச் சொல்கிற ஓர் உண்மை: நீதிமானின் சாபம் குலத்தை நாசமாக்கும். ஏழு ஆண்டுகளாகக் குற்றப்பத்திரிகையோ விசாரணையோ இல்லாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள மதனியும் சக மனிதர்களும் குற்றமற்றவர்கள் என்றால் புரட்சித் தலைவி கொடூரமான தார்மீக அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரும். ஒருவேளை இந்த விஷயத்தில் அவர் ஆதரவற்றவராகவும் இருக்கலாம். அவரது கைகளைக் கட்டிப்போடும் வýமையுள்ளவர்கள் இதன் பின்னால் இருக்கலாம். ஆனால், பிரஜைகளின் ரத்தத்தின் பொறுப்பு அரசியின் மீதே படியும். இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன் றும் அணையாத தீச்சுவாலைகளாக, புரட்சித் தலைவி ரட்சிப்புத் தேடும் ஆலயங்களுக்கும் ஆன்மீகச் சன்னி தானங்களுக்கும் உண்மைக்காகச் சாட்சி சொல்லப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கும். நீதியின் சாபத்தைவிட, கண்ணீரின் சாபத்தைவிட அழிவில்லாத இன்னொரு சாபமில்லை.


தமிழில்: சுகுமாரன் நன்றி: காலச்சுவடு டிசம்பர் 2005

1 comment:

Abu Umar said...

தகவலுக்கு நன்றி!