Sunday, June 25, 2006

அபூஅப்துல்லாஹ்வும் ஜமாத்துல் முஸ்லிமீனும்

சமூக ஒற்றுமைக்கு ஏற்ற வழி என்ன?

முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை, என்பதை சிந்திக்க ஆரம்பித்த சில அறிஞர்கள் அதற்கு இயக்கங்கள் மட்டும் தான் காரணம் என்பது போன்ற சிந்தனையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதை இன்று தமிழகம் முதற்கொண்டு, உலகில் உள்ள அனைத்து பிரிவுகளும் சொல்கின்றன. உண்மையாகவே ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்திலும் இந்த சமுதாயம் ஒன்று சேராதா! என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. ஆனால், இப்படி பிரிவினை கூடாது என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் சிலர் தாங்களும் ஒரு பிரிவில் இருந்து கொண்டுதான் அத்தகைய கருத்து வலியுறுத்துகிறார்கள். இதுதான் மிகவேதனைக்குறியது. தமிழ் நாட்டில் பிரிவினை கூடாது என்று சொல்லக்கூடியவர்களை சுட்டிகாட்டினால் இதை படிக்கக்கூடிய வாசகர்களுக்கு நன்றாக புரியும் என எதிர் பார்க்கின்றேன். இதனால் பிரிவினை கூடாது என விரும்பும் சகோதரர்கள் அது போன்ற பிரிவிலும் இருந்து தூரமாக இருக்க முடியும்.

தமிழ் நாட்டில் அபூ அப்துல்லாஹ் அவர்கள் மிக நீண்ட காலமாக பிரிவினை கூடாது என்று சொல்லி வருகின்றார்கள். இப்படி சொல்லும் அவர்களின் நிலை என்னவென்றால் அவர்களும் ஒரு பிரிவில் இருகின்றார்கள். இதை தக்க ஆதாரங்களுடன் இன்ஷா அல்லாஹ் பார்போம். இதை படிக்கும் சகோதர்கள் இதை தவறு என்று சுட்டி காட்டினாலும் சரி, அல்லது அபூ அப்துல்லாஹ் அவர்களே இதற்கு தக்க பதில் கொடுத்தாலும் சரி, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ளவும் தாயாராக இருக்கின்றோம்.

முதலில் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை பார்த்து விட்டு, அடுத்து அவர்களின் வாதம் எந்த வகையில் தவறு என்பதை பார்போம்.

உலகில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு இயக்கம் மட்டும்தான் இருக்க வேண்டும், அந்த இயக்கமும் ஜமாத்தே முஸ்லிம்(முஸ்லிமீன்) என்றுதான் இருக்க வேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் இந்த சமுதாயத்துக்கு இட்ட பெயர் முஸ்லிமீன்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார் இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன் இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன். - 22:78

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" - 41:33

இந்த இரண்டு வசனத்திலும் இந்த சமுதாயத்துக்கு முஸ்லிம் என பெயரிட்டதாக சொல்கின்றான். இது மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையே நபிமார்கள் தங்களை முஸ்லிம் என்று சொன்னதாக வந்த வசனங்களையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

முஸ்லிமீன் என செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இதைத்தான் எடுத்து வைக்கின்றார்கள். அல்லாஹ் நமக்கு இட்ட பெயர் முஸ்லிம், ஆகையால் முஸ்லிம் அல்லாத பெயர்களில் இருக்க கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கொண்டு இந்த சமுதாயத்தை அறிமுக படுத்தும் போது அது பல பிரிவாகத்தான் காட்டும். ஆகையால், அல்லாஹ் நமக்கு இட்ட பெயரான முஸ்லிம் என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் செயல்பட கூடாது என்று சொல்கின்றார்கள்.

இதை எடுத்து வைத்த அபூ அப்துல்லாஹ் அவர்கள், அவர்களின் தலைமையில் "ஜமாத்துல் முஸ்லிமீன்" என்றும் செயல்படுகின்றார்கள்.

- முதலில் அல்லாஹ் "முஸ்லிம்" என்ற பெயரை மட்டும்தான் இட்டானா? அல்லது வேறு பெயர்களும் இந்த சமுதாயத்துக்கு உண்டா?

- அடுத்து "ஜமாத்துல் முஸ்லிமீன்" என்ற பெயர் மட்டும் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்துமா?

என்ற இந்த இரண்டையும் பார்த்து விட்டால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட "ஜமாத்துல் முஸ்லிமீனுக்கு" சரியான விடை கிடைத்துவிடும்.

அல்லாஹ் "முஸ்லிம்" என்ற பெயரை மட்டும்தான் இட்டானா?

அல்லாஹ் இந்த சமுதாயத்துக்கு "முஸ்லிம்" என்று பெயரிட்டமாறி "முஃமின்" "இபாதல்லாஹ்" என்ற பெயர்களையும் இட்டு இருக்கின்றான்.

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி

மேலும் நபி(ஸல்) சொன்னார்கள்: அல்லாஹ் எதை கொண்டு என்னை ஏவினானோ, அந்த ஐந்து காரியங்களை கொண்டு நான் உங்களை ஏவுகின்றேன். கூட்டமைப்பும் கேட்கிறதும் கட்டுப்படுவதும் ஹிஜ்ரத் செய்வதும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பாதையில் போரடுவதுமாகும். எவன் கூட்டமைப்பை விட்டு ஒரு சான் விலகி செல்கின்றானோ, அவன் அதற்கு திரும்பாதவரையிலும் இஸ்லாத்தை தன்னுடைய கழுத்தை விட்டு கழட்டியவனாவான். மேலும் எவன் அறியாமை அழைப்பை அழைத்தானோ, அவன் நரக கூட்டத்தை சார்ந்தவன்.

(நாங்கள்) கேட்டோம், அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா?

நபி(ஸல்) சொன்னார்கள், அவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே, ஆகையால் முஸ்லிம், முஃமின், இபாதல்லாஹ் என்று எந்த பெயரை சூட்டி அல்லாஹ் உங்களை அழைத்தானோ, அதைக் கொண்டு அழையுங்கள்.

அறிவிப்பாளர் : அல் ஹாரித் அல் அஸிரி(ரலி), நூல்: திர்மிதி-3035,3036, அஹ்மத், இப்ன் குஸைமா, நஸயின் அல் குப்ரா, அபூ யஃலாவின் முஸனத், அல்பானி அவர்களின் ஸஹிஹ் திர்மிதி எண் - 2298

இந்த ஹதீஸ்ஸில் இன்னும் இரண்டு பெயர்களையும் இட்டதாக வந்துள்ளது. இந்த ஹதீஸ் வந்துள்ள முஃமின் என்ற பெயரை வலுபடுத்தும் விதமாக குர்ஆனில் ஒரு வசனமும் உள்ளது.

ஒவ்வொரு நபிமார்களும் அவர்களுடைய சமுதாயத்துக்கு அவர்களில் முதலாவதாக வந்த நபிதான் முதல் முஸ்லிம் ஆவார்கள். இதை குர்ஆனில் பல நபிமார்கள் சொன்னதாக "அன அவ்வலுல் முஸ்லிமீன்" - நான் முஸ்லிம்களில் முதன்மையானவன் என்று வந்துள்ளது. வேறு சில இடங்களில் முஸ்லீமாக மட்டும் மரணிக்க வேண்டும் என்று உபதேசம் மற்றும் துஆக்கள் அடங்கிய வசனங்களை குர்ஆனில் நிறைய இடங்களில் பர்க்கலாம்.

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. -3:67

இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார். யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார் "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்." - 2:132

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர். - 2:133

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). - 6:163

"அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவராக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் நீர் கூறுவீராக). - 39:12

இப்படி பல வசனங்கள் இருந்தாலும் ஒரு வசனத்தில் நான் "முஃமின்" களில் முதன்மையானவன் என்று ஒரு நபி சொல்கின்றார்.

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான் அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான் அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன் நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் முஃமின்களில் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார். - 7:143

அதை அடுத்து ஒரு சமுதாயத்தின் தலைமை வகிப்பவரை அந்த சமுதாயத்தின் தலைவர் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் சரியான முறை, ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவருக்கு அமீருல் முஃமினீன் என்று பெயர். முஃமின் என்பது இந்த சமுதாயத்துக்கு இட்ட பெயர் என்பதால் தான் எந்த ஒரு நபித்தோழர்களும் ஆட்சேபனை செய்யவில்லை.

ஆக இந்த சமுதாயத்துக்கு பல பெயர்கள் இருக்கும் போது, முஸ்லிம் மட்டும்தான் அல்லாஹ் இட்ட பெயர் என்று வாதிட்டு அந்த பெயரின் கீழ் ஒன்று சேறுங்கள் என்று சொல்வது அடிப்படை இல்லாதது. பல பெயர்கள் இருக்கும் போது ஒரு பெயர்தான் அல்லாஹ் இட்டு இருக்கின்றான் என்று சொல்வதும் அல்லாஹ்வின் மீது பொய்சொல்வதாக அமையும்.

"ஜமாத்துல் முஸ்லிமீன்" என்ற பெயர் மட்டும் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்துமா?

இது ஒற்றுமைப் படுத்தாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எப்படி சொல்லி இருக்கின்றார்கள் என்றால்,

யார் ஓர் இமாமிடம் பைஅத் செய்து, அவரிடத்தில் கைபிடித்து, உளமார உறுதி வழங்கிவிட்டாரோ, அவர் இயன்றவரை அந்த இமாமுக்கு கட்டுப்படுவாராக. அவருக்கு போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்த போட்டியாளரின் கழுத்தை துண்டித்து விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஆஸ், நூல்: முஸ்லிம்

அமீருக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுபப்பட்டவரவார் (புஹாரி)

யார் தனது ஆட்சியாளரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்து கொள்ளட்டும், ஏனெனில் யார் ஆட்சியாளரை விட்டு ஒரு சாண் அளவு வெளியேரி விட்டாலும் அவர் அறியாமை கால மரணத்தை தழுவுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் – இப்னு அப்பாஸ் நூல்- முஸ்லிம்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள் (4:59)

இந்த மூன்று நபி மொழிகளும் குர்ஆன் வசனமும் நமக்கு தெளிவாக காட்டுகின்றது, அமீர் மூலமாகத்தான் சமூகத்தை ஒன்று படுத்த முடியும் என்பதை. அதனால்தான் ஒரு அமீருக்கு போட்டியாக இன்னொருவர் வந்தால் அவரைக் கொல்லுங்கள் என்று கட்டளை பிறபிக்கின்றார்கள். ஏனென்றால், இன்னொருவர் வரும்போது சமூகம் பிளவுப் பட்டுவிடும் என்பதுதான்.

அடுத்து அபூ அப்துல்லாஹ் அவர்கள் காலம் காலமாக பிரிவினை கூடாது என்று எழுதி வருகின்றார்கள், முஸ்லிம்களை ஒன்று படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களை அதிகமாக ஆட்கொண்டுள்ளது. இதை அந்நஜாத் என்ற அவர்களின் பத்திரிக்கை வழியாக பார்க்கலாம். "முஸ்லிம் ஜமாஅத்" என்ற கட்டுரை அந்நஜாத்தில் வெளியிடப் பட்டு அதை மீண்டும் தனி பிரசுரமாகவும் மக்களிடம் வினியோகம் செய்யபட்டது. அதன் ஒரு பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கட்டுரையை அந்நஜாத்தில் போட்டதன் மூலம் இதை அபூ அப்துல்லாஹ் அவர்களும் ஆதரிக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.


இது எந்த முஸ்லிம் ஜமாஅத்? அபூ அப்துல்லாஹ் தலைமையில் அமைந்த முஸ்லிம் ஜமாஅத்தா? உலகில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுப்பப்பட்ட நபிமார்களுடன் ஈமான் கொண்டவர்களை இணைத்து இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான சமூக அமைப்பே ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).

1419 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான இக்கூட்டமைப்பிற்கு தலைவராகவும் இருந்து வழி நடத்தி சென்றவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்கள் மறைவிக்கு பின்னர் நான்கு கலிஃபாக்கள் இக்கூட்டமைப்பிற்கு தலைவராக இருந்து வழிநடத்தியதும் அதற்கு பின்னர் ஏற்பட்ட பிரிவினையும் நாம் அறிந்தவையே.

நபி(ஸல்) அவர்கள் மூலமாக இஸ்லாதின் அடிப்படையில் உருவாக்கிய அக்கூட்டமைப்பின் மூலமே சமூக அமைப்பினையும், சமூக ஒற்றுமையும் ஏற்படுத்திட இயலும்.

இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது. இதுவே உண்மையாகும்.

இயக்கங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களில் சொற்பமானவர்களால் ஏற்றுக் கொள்ளபட்டு இருக்கும், எந்த ஒரு இயக்கமும், அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு அந்த இயக்கமே சமூக அமைப்பு என கூறிட முடியாது. எந்த ஊரை வேண்டுமானாலும் எடுத்து பரிசீலித்துப் பாருங்கள்.

இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க தேசிய லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.M சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க S.I.O சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க J.A.Q.H சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க T.M.M.K சார்ந்தது.

இந்த ஊர் முழுக்க முழுக்க தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தது என யாரவது கூறிவிட முடியுமா?

எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?


அபூ அப்துல்லாஹ் அவர்கள் முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)-க்கு தலைவராக இருக்கின்றார்கள். அவர்கள் இயக்கம் என்பதற்கு என்ன வரையரை கொடுக்கின்றார்கள் என்றால், எந்த இயக்கமும் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஏற்று இருப்பார்கள். ஒட்டு மொத்த சமுதாயமும் ஏற்று இருக்காது. அப்படி யாரை ஒட்டு மொத்த சமுதாயமும் ஏற்று இருக்கின்றதோ அது தான் சமூக அமைப்பினை ஏற்படுத்த இயலும். இதில் நாம் கேட்க்கும் கேள்வி என்ன வென்றால்,

அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் ஏற்படுத்த பட்ட முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)-ஐ எந்த எந்த ஊரில் ஒட்டுமொத்த மக்களும் ஏற்று இருக்கின்றார்கள்? விளக்குவார்களா அந்த ஜமாஅத்தை சர்ந்தவர்கள்.

அபூ அப்துல்லாஹ் அவர்கள், உலகில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது ஆசியா கண்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது திருச்சியில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

அல்லது அவர்கள் வாழும் பகுதியில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

குறைந்த பட்சம் அவர்கள் தெருவிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவரா?

இந்த எந்த ஒன்றுக்கும் அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைவர் இல்லையென்றால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் யாருக்குத் தலைவர்?

அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட அவர்கள் தெருவில் உள்ள அவர்கள் குடும்பத்திற்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட அவர்கள் வாழும் பகுதியில் உள்ள சிலருக்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட திருச்சியில் உள்ள சிலருக்கு தலைவர்,

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட சென்னையில் உள்ள சிலருக்கு தலைவர்

அடுத்து அவர்களை தலைவர் என்று ஏற்றுக் கொண்ட தமிழ் நாட்டில் உள்ள சில நுறுபேர்களுக்கு தலைவர்

குறிப்பாக சொன்னால், இன்றைக்கு குர்ஆன் ஹதீஸ் என்று குறைந்த அளவில் மக்களை கூறு போட்டு வைத்து இருப்பவர்களில், குறைந்த எண்ணிக்கையை கொண்ட தலைமை அபூ அப்துல்லாஹ் அவர்களின் தலைமையாக இருக்கலாம்.

எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் உள்ள சொற்பமானவர்களை தன் பக்கம் ஒன்று சேர்க்க இயலாத இயக்கங்கள் எப்படி சமூக அமைப்பினை ஏற்படுத்திட இயலும்.?


என்று அபூ அப்துல்லாஹ் அவர்கள் கேள்வி கேட்டதன் மூலம், அவர்கள் எந்த ஊரில் உள்ள ஒட்டு மொத்த மக்களை தன் பக்கம் சேர்த்து இருக்கின்றார்கள் என்பதை விளக்குவார்களா? இல்லையென்றால் அபூ அப்துல்லாஹ் அவர்கள் வேறு யாருக்கு அமீர்?

இஸ்லாத்தின் சமூக அமைப்பு என்பது உலகம் தழுவியது; ஓர் தலைமை கொண்டது; இதனை எந்த ஒரு தனி நபர் அல்லது குழுவின் முயச்சியாலும் உருவான எந்த ஒரு இயக்கத்தாலும் ஏற்படுத்திட இயலாது.


அப்படி என்றால், அபூ அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் உருவான ஜமாஅத் முஸ்லிமால் மட்டும் உருவாக்கிட இயலுமா?

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) எந்த ஒரு தனி மனிதராலும் அன்று தோன்றிய அமைப்புமல்ல.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) நேன்று சிலர் கூடி தோற்றுவித்த கழகமுமல்ல.

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) இன்று பலர் கூடி உருவாக்கிய இயக்கமுமல்ல.


அபூ அப்துல்லாஹ் அவர்கள் எப்படி தலைவர் ஆனார், என்பதை அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் விளக்குவார்களா?

இல்லை அவரே தன்னை தலைவராக ஆக்கி கொண்டாரா?


கட்டுரையும் குழப்பமும்

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)பிறருக்கு தொல்லை கொடுக்கும் பேரணி கோசங்கள் எழுப்பி பத்திரிக்கையில் விளம்பரம் தேடாமல், விளம்பரத்திற்கு என தனி பத்திரிக்கை நடத்தாமல் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாத்தினை ஏற்று ஒன்றுபட்டு செயல்படுபவர்களையே குறிக்கும்.


உலகத்தேவையை உயர்வென கருதாமல்,
ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாதினை ஏற்றிருப்பவர்கள் இணைந்திருக்கும் கூட்டமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)

இந்த கூட்டமைப்பு இல்லாத ஊர்களில்லை. ஒரே ஒரு தெரு கொண்ட ஊர்களிலும் இக்கூட்டமைப்பு இருக்கவே செய்கின்றது. எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் ஊர் பெயர் எழுதி, அதற்கப்பால் முஸ்லிம் ஜமாஅத் என்று எழுதுவதை நடைமுறையில் காணலாம். முஸ்லிம் மக்கள் மறந்து விட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் சமூக அமைப்பே முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்).


உலகில் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் முஸ்லிம் ஜமாஅத்(அல் முஸ்லிமீன்)தான் என்று கட்டுரையாசிரியர் சொல்கிறார்,

அப்படி என்றால்,

முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) செய்த சொற்பமானவற்றைப் பற்றி பெருமை கொண்டு செயல்பாட்டு பட்டியலை உலகறிய வாசிக்க வேண்டிய தேவையுமில்லை.


இது எந்த முஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்) என்பதை விளக்குவார்களா?

அபூ அப்துல்லாஹ் தன்னுடைய தலைமையில் உள்ளதும், ஒரு பிரிவினைதான் என்பது வெளியில் தெறிந்து விடக்கூடாது என்பதிலும், அவருக்கு பின்னால் இருக்கும் மக்கள் அதை புரிந்துவிடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

மக்களை இன்னும் போட்டு குழப்பிக்கொண்டு இருக்காமல் அபூ அப்துல்லாஹ் அவர்கள் தனது தலைமையில் ஏற்படுத்தப் பட்ட "ஜமாஅத் முஸ்லிமீனை கலைத்துவிட்டு தனக்கென்று தனி இயக்கமில்லாமலும் பிற இயக்கத்தை சாராமலும் அல்லாஹ் சொல்லுகின்றபடி அழைப்புப் பணி செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - 3:104

- முஹையதீன்

No comments: