Sunday, June 11, 2006

புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள்

புதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள் யார்?

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பெற்றவர்கள். பிற்காலத்தினர் விளங்கியதை விட அவர்கள் மார்க்கத்தை நன்முறையில் விளங்கியிருந்தனர். அவர்களின் விளக்கங்கள் பிற்காலத்தவர்களின் விளக்கங்களை விட ஏற்றுக் கொள்ளச் சிறந்ததாகும். இதில் ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் சமீப காலமாக த.த.ஜ மட்டும் இதனைத் திரித்து வியாக்கியானம் செய்து வருவதை நாம் கண்டு வருகின்றோம்.

நபித்தோழர்களின் நிலைபாடு பற்றி ஜாக்கை விமர்சனம் செய்த த.த.ஜ இதே கொள்கையைக் கொண்ட முற்கால அறிஞர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்துல் வஹ்ஹாப் போன்றோர்களை விமர்சிக்கவில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களை கூறிவருவதுடன் அவர்களின் கொள்கையிலேயே தாங்களும் என்பது போன்று காட்டி வருகின்றது. தாங்கள் 20 வருடமாக இதனையே கூறிவருவதாகவும் ஜாக் மட்டும் கொள்கை மாறிவிட்டதாகவும் கூறி வருகின்றது. நபித் தோழர்களள் பற்றிய இந்த நிலை பாட்டைத் திரித்து ஏதோ நபித்தோழர்களைக் கண்மூடிப் பின்பற்றவேண்டும் என்று ஜாக் கூறியது போன்ற ஒரு மாயையை மக்களிடம் உருவாக்கி வருவது மிகவும் வேதனைக்குரியது.

ஸாக்கிர் நாயக்கையும் பிலால் பிலிப்ஸையும் உமர் ஷரீபையும் கமாலுத்தீன் மதனியையும் நோக்கி சவால் விடும் பி.ஜே அவர்கள் இதே கொள்கையைக் கொண்டிருந்த இப்னு தைமிய்யாவையும் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் இப்னு பாஸையும் விமர்சிப்பதில்லை. ஏன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களையும் தங்களது நூலகங்களிலிருந்து மாற்றுவதில்லை.

மேலும் 20 வருடங்களுக்கு மேலாக இதனையே கூறிவருகின்றோம் என்ற அவர்களது கூற்றிலும் உண்மையில்லை. இது அவர்களின் புதிய நிலை பாடு ஆகவே பல அறிஞர்களாலும் அவர்களது கொள்கை விமர்சிக்கப்படுகின்றது. இது அவர்களின் புதிய நிலை பாடு என்பதற்கான ஏதேனும் சில சான்றுகள்.

"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?" என்பது கடந்த சில ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது. (ஏகத்துவம் செப் - 2005)


அடிக்கோடிட்ட வார்த்தைகளைப் படிப்பவர்களுக்குப்புரியும் ஜக்காத் குறித்த கருத்துவேறுபாடு உலகில் தமிழர்களைத் தவிர எவருக்கும் ஏற்பட்டதில்லை. அது தமிழ் கூறும் முஸ்லிம்களிடம் மட்டும் அதுவும் சில ஆண்டுகளாக (20 வருடங்களுக்கு மேலாகவும் இல்லை) மட்டுமே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த கருத்துவேறுபாட்டுக்கு மூல காரணம் த.த.ஜ வின் மூதறிஞர் என்ற விஷயம் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் குறித்து

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
(ஏகத்துவம் செப் - 2005)


ஆனால் மேற்கண்ட அவர்களது கூற்றுக்கு மாறாக நபித்தோழர்கள் எவ்வளவு மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கீழே படித்தால் புரிந்து கொள்ளலாம்.

குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.

குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது. (ஏகத்துவம் - செப் 2005)


நபித்தோழர்களைக் கண்மூடிப் பின்பற்றக்கூடாது என்னும் கொள்கையைச் சொல்வதற்காக அவர்களிடம் சில விஷயங்களில் ஏற்பட்ட தவறுகளை மிகவும் கண்ணியமாக எடுத்துச் சொல்லியிருப்பார்களானால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் ஜக்காத் விஷயத்தில் நபித்தோழர்கள் கொண்டிருந்த ஒருமித்த நிலைபாட்டை தூக்கி வீச அவர்களிடம் காணப்பட்ட சில்லரைப் பிரச்சினைகளை இமாலயத் தவறுகளாகப் பெரிது படுத்திக் காட்டியவர்கள் போகப்போக அவர்களை விமர்சிப்பதில் தரம் தாழ்ந்து செல்வதைப் பாருங்கள்.

நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.


நீங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை உஸ்மான் (ரழி) அவர்கள் மீறிவிட்டார்களாம். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுவனம் கொண்டு நபி (ஸல்) அவர்களின் திருவாயால் நற்செய்தி கூறப்பட்ட உயிர்த் தியாகி உஸ்மான் (ரழி) அவர்கள் காஃபிர் ஆகி விட்டார்கள் என்றா? (இப்படிப்பட்ட கூற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம்)

உமர் (ரழி), உஸ்மான் (ரழி), ஆயிஷா (ரழி) போன்ற கண்ணியம் மிக்க சஹாபாக்களின் தவறுகளை எடுத்துக்கூறியபின் அதற்கு சான்றாக அவர்கள் ஹதீஸைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறிவிட்டுப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ''நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, ''முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், ''என் இறைவா, என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, ''இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ''நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, ''இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 4740, 6524.

(ஏகத்துவம் - செப் 2005)


சகோதரர்களே! ஒரு விஷயத்தைக் கூறிவிட்டு அது தொடர்பான ஹதீஸையும் கூறினால் அவ்விஷயம் தொடர்பானதே என எவராலும் புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் மார்க்கத்தில் புதியவற்றை உருவாக்கினார்கள் என்று கூறிவிட்டு அதற்கு சான்றாக மேற்கண்ட ஹதீஸ் கூறப்பட்டுள்ளது. ஆம் விமர்சிக்கப்பட் நபித்தோழர்கள் உமர் (ரழி) உஸ்மான் (ரழி) ஆயிஷா (ரழி) இப்னு மஸ்வூது (ரழி) போன்ற கண்ணியம் மிக்க நபித்தோழர்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியபடி சுவனவாசிகள் என்று ஏற்றுக் கொள்வதா? அல்லது த.த.ஜ சமர்ப்பித்த ஆதாரத்தின் அடிப்படையில் "அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்", என்று கூறுவதா? (அல்லாஹ் இவ்வாறு விளங்குவதிலிருந்து காப்பாற்றுவானாக) சிந்தனையுள்ள தவ்ஹீது வாதிகளே! சிந்தியுங்கள்.

20 வருடத்திற்கு மேல்?

ஸஹாபிகளைக் குறித்த இவர்களின் நிலைபாடு 20 வருடங்களுக்கு மேலாக இல்லை இது இவர்களின் புதிய ஏற்பாடுதான் என்பதற்கு மேலும் சில சான்றுகளாக, ஆரம்பத்தில் இவர்கள் ஆசிரியர் குழுவில் இருந்து வெளியான பத்திரிகைகளிலிருந்து சில ஆதாரங்களை சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.

1. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் திருக்குர்ஆனின் ஒரு பகுதியே என்ற சர்ச்சையில்

(புரட்சிமின்னல் ஜூன் 1988 – ஆசிரியர் குழு : கெ. முஹம்மது இக்பால் மதனி, பி.ஜைனுல் ஆபிதீன் உலவி, S. கமாலுத்தீன் மதனி, K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, M.முஹம்மது யூசுப் மிஸ்பாஹி)

ஸஹாபாக்கள் எதைக் குர்ஆன் என்று அறிமுகப்படுத்தினார்களோ அதில் எதனையும் கூட்டவோ குறைக்கவோ நாம் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஹதீஸ்களைப் பொறுத்தவரை ஒரு நபித்தோழரோ பலரோ அதை நபிமொழி என்று அறிவித்திருப்பார்கள். ஆனால் ஒரு வசனத்தைக் குர்ஆனின் ஒரு பகுதி என்று கூற வேண்டுமானால் நபித்தோழர்கள் அனைவரும் அதனைக்குர்ஆன் என்று அறிமுகம் செய்திருக்க வேண்டும். அபூபக்ரு (ரழி) தொகுத்த குர்ஆனும் உஸ்மான் (ரழி) அவர்கள் அதிலிருந்து எடுத்த நகல்களும் ஸஹாபாக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றிருந்தது. குர்ஆனில் இல்லாததைத் தவறாகச் சேர்த்திருந்தால் நபித்தோழர்களில் எவராவது அதனை ஆட்சேபனை செய்திருப்பார்கள். அதுபற்றி சர்ச்சைகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே நபித்தோழர்கள் பெரும் சிரத்தையுடன் தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதி என்பதற்குப் போதுமான சான்றாகும். (ஜூன் 1988 புரட்சிமின்னல்)


நமது கேள்வி : மேற்கண்ட விஷயத்தில் நபித்தோழர்களின் ஒருமித்த கருத்தை ஆரம்ப காலத்தில் ஏற்றுக் கொண்டீர்கள். இப்போது ஜக்காத் விஷயத்தில் அவர்களது ஒட்டு மொத்த கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதேன்? 20 வருடங்களுக்கு மேலாக இதனையே கூறிக் கொண்டிருந்தோம் என்ற கூற்று உண்மையானால் மேற்கண்ட விஷயத்தில் மட்டும் ஸஹாபாக்கள் பின்பற்றத் தகுந்தவர்களாகி விட்டார்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற கூற்றுப்படி ஏன் செயல்படவில்லை?

2. நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? என்ற சர்ச்சையில்

நபி(ஸல்) அவர்கள் தவிர்க்க இயலாத நேரங்களில் நின்று கொண்டு அருந்தியதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவ்வாறு அருந்துவதை அலீ (ரழி) அவர்களும் பார்த்து பொதுவாக நின்று கொண்டு அருந்தலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். தடை செய்யப்பட்ட ஹதீஸ்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கும். நபி (ஸல்) அவர்களின் தடை அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் ஒருபோதும் அதற்கு மாற்றமாக நபித்தோழர்கள் - குறிப்பாக அலீ (ரழி) போன்றவர்கள் செய்யமாட்டார்கள். (புரட்சிமின்னல் - ஜனவரி 1988 பக்கம் 10)


20 வருடங்களுக்கு மேல் இதனையே கூறிவருகின்றோம் என்றவர்கள் 18 வருடங்களுக்கு முன் அவர்கள் இணைந்திருந் பத்திரிக்கையில் எழுதியது இன்றைய இவர்களின் நிலைபாட்டிற்கு முரணாக உள்ளதே? நபியின் கட்டளைக்கு மாற்றமாக ஸஹாபாக்கள் ஒருபோதும் செயல்படமாட்டார்கள் என்றார்கள் அன்று. நபியின் கட்டளைக்கு மாற்றமாக அவர்கள் நடந்தார்கள் என்று அவர்களை விமர்சிக்கின்றார்கள் இன்று.

ஒருவாதத்தை மக்கள் முன் வைத்து விட்டோம் அதனை நிலை நாட்ட வேண்டும். அதற்காக நபித்தோழர்களை அல்லாஹ்வால் பொருந்தி கொள்ளப்பட்ட, நபி (ஸல்) அவர்களின் வாயினால் சுவனம் உண்டு என்று நன்மாராயம் வழங்கப்பட்ட நபித்தோழர்களை விமர்சிக்கும் இவர்கள், எனது தோழர்களைத் திட்டாதீர்கள் என்ற இறைத் தூதரின் கட்டளையையும் மீறி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், "உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்" என்று துணிந்து அவர்களை விமர்சித்துள்ளனர். தவ்ஹீது வாதிகளே சிந்தனை செய்வீர்! இவர்களை அடயாளம் காண்பீர்! நபி (ஸல்) அவர்கள் வழியை அவர்களது தோழர்கள் பின்பற்றியது போன்று பின்பற்றுவீர்! வெற்றி பெறுவீர்!

நன்றி:
மு. அப்துல்காதிர் தஸ்தகீர்
பஹ்றைன்



விமர்சனம்:
விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி

பதில் விமர்சனம்:
தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்!

No comments: