Saturday, December 16, 2006

மத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்

(தம்)செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (அல்குர்ஆன்: 18:103-105)

ஏர்வாடி தர்காவில் கோலாகல விழா

ஏர்வாடியில் நடந்த கோலாகல விழாவில் ஒளி வெள்ளத்தில் மிதந்து வந்த சந்தனக்கூடால் பரவசமடைந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.

மத நல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்ந்து வரும் ஏர்வாடி தர்காவில், பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு விழா நடந்தது.

வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்த தர்காவின் சுற்றுப்புற பகுதிகளை முத்தரையர் சமூகத்தினர் தாங்கள் கொண்டு வந்த தண்ணீரால் சுத்தம் செய்தனர். சந்தனக் கூடின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் உருவாக்கினர்.

அலங்கரிக்கும் பொறுப்பினை ஆதி திராவிடர்கள் ஏற்றனர். ஊர்வலத்தில் வழிகாட்டுவதற்காக பிடிக்கப்படும் தீப்பந்தங்களுக்கான துணிகளை சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்தனர். அதில் ஊற்றப்பட வேண்டிய எண்ணெய்யை ஆதி திராவிடர்கள் வழங்கினர்.

பல்வேறு சமூகத்தினரின் முதல் மரியாதையை பெற்றுக் கொண்ட சந்தனக்கூடு, சந்தன பேழையை சுமந்து கொண்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தவாறு தைக்காவிலிருந்து வெளியேறியது.

சேனை கட்டிய குதிரைகள் முன்னே செல்ல, அசைந்தாடி வந்த யானையின் பின்னால் அழகோவியமாய் காட்சியளித்த சந்தனக்கூட்டினை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி வரவேற்று தர்காவுக்குள் அழைத்து சென்றனர்.
புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வினை கண்டு களித்த பின்னர் பக்தர்கள் பிரசாத சந்தனத்தை பெற்றவாறு கலைந்தனர்.
விழாவினை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முத்துச்சாமி, எஸ்.பி., திருஞானம் ஆகியோர் தர்கா சென்று வழிபாடு நடத்தினர்.

ஏற்பாடுகளை தர்கா இடைக்கால கமிட்டி செயலர் டாக்டர் ஹமீது அப்துல் காதர், கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் தலைவர் பசீர் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.

செய்தி உதவி: ஓசூர்-ஆன்லைன்.காம்

No comments: