Monday, September 12, 2005

நன்மையின் வழிமுறைகள்.. (பிரார்த்தனையில்)

பிரார்த்தனையில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் பிரார்த்தனையாகும். நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய திக்ருகளில் மிகச்சிறந்தது

லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருள்:
அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்கு தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரமும் அனைத்துப்புகழும் அவனுக்குரியதே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பத்திற்குரியது, நான்கு (திக்ருகளாகும்) என ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.

ஸுப்ஹால்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்.
பொருள்:
அல்லாஹ் (சகல குறைகளை விட்டும்) மிகத்தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத்தகுதியுள்ள இறைவன் வேறு யாருமில்லை! அல்லாஹ் மிகப் பெரியவன்!

இந்த திக்ருகளையும் வேறு திக்ருகளையும் உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் திரும்பத் திரும்ப அதிகமதிகம் ஓதுவதுடன் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும் உலக முஸ்லிம்களின் வெற்றிக்காகவும் மனம் உருகப் பிரார்த்தியுங்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திக்ருகள் துஆக்களை எல்லாக்காலங்களிலும் அதிகமாக ஓத வேண்டும்.

அவைகளில் சில பின்வருமாறு.

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.
பொருள்:
அல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாளிமீன்.
பொருள்:
வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகிவிட்டேன்.

லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன்னிஃமது வலஹுல்ஃபழ்லு வலஹுத்தனாஉல் ஹஸனு, லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல்காஃபிரூன்.
பொருள்:
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறில்லை. அவன் ஒருவனைத்தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம்! அருட்கொடைகள் மற்றும் பேருபகாரங்கள் அனைத்தும் அவனுக்கே! அழகிய புகழும் அவனுக்குரியதே! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாருமில்லை. கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!

லா ஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி.
பொருள்:
நன்மை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.
பொருள்:
எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக! (2:201)

உயர்வானவனாகிய அல்லாஹ் (தன் திருமறையில் இவ்வாறு) கூறுகின்றான்.
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள். (40:60)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமென திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

No comments: