பாவங்களைத் தடுக்கக்கூடிய கேடயம் நோன்பாக இருக்கின்றது. தனிமையிலும் அல்லாஹுவிற்கு அஞ்சும் இறையச்சத்தை அதிகப்படுத்துவது நோன்பு, இரக்க சிந்தனை, மனக்கட்டுப்பாடு போன்ற உயர்பண்புகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் கடமையான நோன்பின் மாதம் ரமலானை எதிர்நோக்கியவர்களாக இருக்கின்றோம்..
நபி(ஸல்) அவர்கள் கடமையான நோன்புகளை நோற்பதோடல்லாமல் ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்புகள் நோற்பது, ஆஷுரா, அரஃபா போன்ற நோன்புகள் நோற்றுயிருக்கிறார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் ஏனைய மாதங்களைவிட அதிகமான நோன்புகள் நோற்றிருக்கிறார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் ரமலானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்தையும் முழுமையாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்தை தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை - அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) அவர்கள், ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்றதன் ரகசியத்தை கீழ்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமலானுக்கும் இடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : உஸாமா(ரலி) , ஆதாரம் : அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா
ஷாஃபான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்றிருக்கிறார்கள். அம்மாதத்தில் அடியானின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. மேலும் ஷஃபான் மாத நோன்புகள் ரமலான் மாத கடமையான நோன்புகளுக்கு ஒரு பயிற்சியாகவும் அமைந்துவிடுகின்றன. பசி, தாகம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மனக்கட்டுப்பாடு அதில் கிடைத்துவிடுகிறது. இந்த அடிப்படையில் நாமும் அம்மாதத்தில் நோன்பு நோற்றால் அல்லாஹ்விடத்தில் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். அல்லது ஒவ்வொரு மாதம் பிறை 13, 14, 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்பதை வழமையாகக் கொண்டிருந்தால் ஷஃபான் மாதமும் பிறை 15 அன்று நோன்பு நோற்பதில் தவறில்லை.
மாறாக நம் நாடுகளில் மக்கள் குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15-ஆம் நாள் இரவு "பராஅத் இரவு" என்று வணங்கி வருகிறார்கள். அன்று இரவு பள்ளியை வர்ண விளக்குகளால் அலங்கரித்து, இரவு முழுவதும் தொழுது, பகலில் நோன்பு நோற்பதை வணக்கமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். "பராஅத்" இரவு அன்று தொழுது வணங்கினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பான், உணவு, பொருளாதாரம் போன்றவைகளை பெருக்கிக் கொடுப்பான் என்று கருதி அன்றுமட்டும் விசேஷமாக தொழுவதும், பகலில் நோன்பு இருப்பதும் நம்முடைய சமுதாயத்தில் சிலர் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
பராஅத் இரவு அன்று மட்டும்தான் அடியானின் அமல்களை அல்லாஹ் காண்கின்றான் என்றும், அன்றுதான் அடியார்களின் உணவு, பொருளாதாரம் மற்றும் அந்த ஆண்டில் மரிப்பவர்கள் மற்றும் பிறப்பவர்களை தீர்மானிக்கின்றான் என்றும் அன்று விசேஷத் தொழுகைகளை தொழுது வருகிறார்கள். அன்று இரவு மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் சூரா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயுள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனத் தவறாகக் கருதிவருகின்றனர். இது முற்றிலும் நபி(ஸல்) அவர்கள் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும் (பித்-அத்தாகும்).
பராஅத் இரவில் தொழுவதும், அன்று பகல் நோன்பு இருப்பதும் சுன்னா என்ற பெயரில் பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும். இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை, பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அஷ்ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஹிழ்ர் அஷ்ஷுகைரி என்ற அறிஞர் தமது அஸ்ஸுனன் வல்முப்ததஆத் அல்முதஅல்லகா பில் அத்காரி வஸ்ஸலாத் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).
இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுவதால் இது ஏற்றுக்கொள்ளப்படாத ஹதீஸாகும். இமாம்களான அஹ்மத்(ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது (தவறானது) என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது அல்மௌழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் மிக மோசமான, வெறுக்கத்தக்க இரு பித்அத்களாகும் என இமாம் நவவி(ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே பராஅத் என்றொரு இரவு இல்லை என்பதும் அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும்; அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என்பதும் நாம் தெளிவாக அறியமுடிகின்றது.. எனவே பராஅத் என்ற அடிப்படையில் நோன்பு நோற்று இன்னும் வேறுபிற அமல்கள் செய்வதைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக!.
Tuesday, September 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment