Saturday, September 03, 2005

வக்ஃபுச் சொத்துக்கள் - இறைவழிச் செலவுகள்

நாயனின் நேசம் நன்மை புரிவோர்க்கே!

1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்!
(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (பிறருக்கு) நன்மை செய்யுங்கள்! (பிறருக்கு நன்மை செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.(2:95)

2) அந்த நாள் வருமுன் ...?
விசுவாசம் கொண்டோரே! எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத நாள் வருமுன் உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். (2:254)

3) உயர்தரமானதை உயர்ந்தவன் வழியில்..
விசுவாசிகளே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் உங்களுக்கு பூமியிலிருந்து நாம் வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நல்லவைகளையே தர்மமாகச் செலவு செய்யுங்கள்!

4) புண்ணிய வழிச் செலவு!... பூரணமாய் ... கூலி!
அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அதன் கூலி உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும்.


வக்ஃபுச் சொத்தெழுதும் வரைமுறைகள்

1) உயர்தரமான தோட்டம்
உமர்(ரலி) அவர்கள் "தம்ஃக்" என்றழைக்கப்பட்ட தம்முடைய சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீட்சைத் தோட்டம். அல்லாஹ்வின் தூதரே! நான் பெற்றுள்ள செல்வங்களிலேயே உயர்தரமான "தம்ஃக்" தோட்டத்தைத் தர்மம் செய்திட விரும்புகிறேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், அதன் நிலத்தை எவருக்கும் விற்கக் கூடாது. அன்பளிப்பாகவும் தரக்கூடாது. அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது. அதன் வருவாய் மட்டுமே செலவிடப்படவேண்டும். என்ற நிபந்தனைகளுடன் தர்மம் செய்துவிடு. என்று கூறினார்கள். எனவே உமர்(ரலி) அவர்கள் அதனை தர்மம்(வக்ஃபு) செய்துவிட்டார்கள்.

அது அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான் முறையில்) உண்பதில், அல்லது விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் குற்றமில்லை, என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

பள்ளிக்கென ... நிலம் வக்ஃபு
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது ... "பள்ளிவாசல் கட்டும்படி" கட்டளையிட்டு விட்டு "பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு விலை சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு அவர்கள் "நாங்கள் விலை கூறமாட்டோம்" அல்லாஹ்வின் மீது ஆணையாக அதன் விலையை நாங்கள் "அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி), ஆதாரம் : புகாரி

வக்ஃபுக்கென பண முதலீடு
ஒருவர் ஆயிரம் தீனார் தங்க நாணயங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவரிடம் அதனை முதலீடு செய்து வியாபாரம் செய்யச் சொல்லி அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் தர்மம் செய்கிறார் இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்திலிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா...? அவர் தர்மத்திற்குரியவர்க்ளைக் குறிப்பிடும் போது ஏழைஎளியவர்களுக்கு தர்மம் செய்யும் படி குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவருக்கு அதிலிருந்து உண்ண அனுமதியுண்டா? என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட அவர்கள் "அனுமதியில்லை" என்று தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பாளர் :அனஸ் பின் மாலிக்(ரலி) ஆதாரம் : புகாரி

குதிரை (வாகனம்) வக்ஃபு
உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்தக் குதிரை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காகச் சந்தையில் நிறுத்தி வைத்திருப்பதாக, உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதரிடம் அந்தக் குதிரையை தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நீங்கள் வாங்க வேண்டாம். "உங்கள் தருமத்தை ஒரு போதும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி

வீடு வக்ஃபு
அனஸ்(ரலி) ஒரு வீட்டை வக்ஃபு செய்தார்கள். (மதீனாவிற்கு) வரும் போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். (தானும் பயன்படுத்த உரிமை உண்டு என நிபந்தனையிட்டிருந்ததால்) ஸுபைர்(ரலி) அவர்கள் தம் வீடுகளைத் தர்மம் செய்தார்கள். தமது பெண் மக்களில் விவாகரத்து செய்யப்பட்ட ஒரவருக்கு "நீ இதில் தீங்கிழைக்காமலும், தீங்குக்கு ஆளாகமலும் தங்கலாம். மறுமணம் செய்து தன்னிறைவு பெற்று விட்டால் இதில் தங்க அனுமதியில்லை" என நிபந்தனை விதித்தனர்.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), புகாரி

கிணறு வக்ஃபு
யார் "ரூமா" என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர் வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃபு செய்து) விடுகிறாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும். என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் அதை விலைக்கு வாங்கி தூர் வாரி வக்ஃபாக ஆக்கினார்கள். அறிவிப்பாளர் : அபூ அப்திர் ரஹ்மான்(ரலி), ஆதாரம் : புகாரி

போர்நிதி வக்ஃபு
எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார் படுத்துகின்றாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூற, உஸ்மான்(ரலி) அவர்கள் (பொருளுதவி செய்து) அப்படையைத் தயார் செய்ய உதவினார்கள். அறிவிப்பாளர்: அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம் : புகாரி
வக்ஃபு நிர்வாகமுறை

உமர்(ரலி) அவர்கள் "வக்ஃபு" செய்த போது "இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து(எடுத்து) உண்பதில் தவறில்லை" எனக் குறிப்பிட்டார்கள். "வக்ஃபு" செய்தவரே கூட அதை நிர்வாகமும் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம், ஆக (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு. அறிவிப்பாளர் : அபூ அப்திர்ரஹ்மான், ஆதாரம்: புகாரி

தொகுப்பு : அதிரை உமர்
யுனிகோடு பதிவு: அபூ உமர்

No comments: